பறவைகளும் விலங்கினங்களும் மனிதர்களைப் போன்ற சமுதாயங்களே!
இவ்வுலகத்தில் ஊர்ந்து திரியும் விலங்கினங்களும் மற்றும் பறவைகளும் சமுதாயங்களாக (Communities) வாழ்கின்றன என்று அவைகளைப்பற்றி ஆராய்ச்சி செய்பவர்கள் கூறுகிறார்கள்.
உதாரணமாக ஊர்வனவற்றில் எறும்பை எடுத்துக் கொண்டால், இவைகள் மனித சமுதாயத்தின் குணாதிசயங்களுக்கு மிகவும் நெருக்கமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
மனித சமுதாயத்தைப் போலவே எறும்புகளுக்கும் மன்னர், அமைச்சர், இராணுவ வீரர்கள், பணியாட்கள், அடிமைகள் இருப்பதாக அந்த ஆய்வுகள் கூறுகின்றன. அவைகள் தங்களுக்குள் உணவு பண்டங்களை பண்டமாற்றம் செய்து கொள்வதற்காக அவைகளுக்கு சந்தைகளும் இருப்பதாக கூறப்படுகிறது.
அல்லாஹ் கூறுகிறான்: -
“இறுதியாக, எறும்புகள் நிறைந்த இடத்திற்கு அவர்கள் வந்த போது ஓர் எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி:) ‘எறும்புகளே! நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்; ஸுலைமானும் அவருடைய சேனைகளும், அவர்கள் அறியாதிருக்கும் நிலையில் உங்களை நசுக்கி விடாதிருக்கும் பொருட்டு (அவ்வாறு செய்யுங்கள்)’ என்று கூறிற்று. (அல்-குர்ஆன் 27:18)
ஸுலைமான் நபி (அலை) அவர்களுடைய படைகள் தங்களை மிதித்து விடக்கூடும் என்று எறும்புகள் பேசிக் கொண்டதாகக் கூறும் குர்ஆன் வசனங்களை பார்த்து, ‘எறும்புகள் எவ்வாறு பேசிக்கொள்ளும்?’ எனக் கேலி செய்தவர்கள் தங்கள் மூக்கின் மேல் விரல் வைத்து ஆச்சரியப்படும் அளவுக்கு எறும்புகளின் குணாதிசயங்கள் மனித சமுதாயத்தின் குணாதிசயங்களோடு ஒத்திருக்கின்றன.
பறவைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்த ஆராய்ச்சியாளர்கள் பறவைகளும் தனித்தனி சமுதாயங்களாகவே வாழ்வதாக கூறுகிறார்கள். அவைகள் தங்களுக்குள் பேசி மகிழ்கின்றன, விளையாடுகின்றன, அன்பு செலுத்தி காதல் செய்கின்றன, உழைத்து, வேட்டையாடி தங்கள் குடும்பத்தை, குஞ்சுகளை காப்பாற்றுகின்றன. மேலும் பறவைகள் மிகவும் ஆச்சரியமான குணாதிசயங்களைப் பெற்றுள்ளன. சில கடல் பறவைகள் பல்லாயிரக்கணக்கான மைல் தூரம் பறந்து சென்று இரை தேடிவிட்டு, பிறகு தங்களின் இனப்பெருக்கத்திற்காக தாம் பிறந்து வளர்ந்த இடத்திற்கு அவைகள் சென்ற அதே பாதையிலேயே ஒவ்வொரு ஆண்டும் திரும்பி வருவதாக பறவைகளின் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இவைகளையெல்லாம் படைத்த அந்த அகில உலகத்தின் இரட்சகனாகிய அல்லாஹ்வோ, 1400ஆண்டுகளுக்கு முன்னரே பறவைகளும் தங்களுக்குள் பேசிக் கொள்வதாகவும், அவற்றுக்கும் மொழிகள் இருப்பதாகவும் தன்னுடைய திருமறையிலே கூறுகின்றான்.
“பின்னர், ஸுலைமான் தாவூதின் வாரிசானார்; அவர் கூறினார்: ‘மனிதர்களே! பறவைகளின் மொழி எங்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது; மேலும், நாங்கள் எல்லா விதப் பொருள்களிலிருந்தும் (ஏராளமாக) அளிக்கப்பட்டுள்ளோம்; நிச்சயமாக இது தெளிவான அருள் கொடையாகும். (அல்குர்ஆன்: 27:16)
இவ்வாறு பறவைகளும் விலங்கினங்களும் மனதர்களைப் போலவே தகவல் பரிமாற்றங்களைச் செய்வதோடு சமுதாயங்களாக வாழ்ந்து வருகின்றன். இதையே மனிதர்களையும் அவைகளையும் படைத்த அல்லாஹ் கூறுகின்றான்: -
“பூமியில் ஊர்ந்து திரியும் பிராணிகளும், தம் இரு இறக்கைகளால் பறக்கும் பறவைகளும் உங்களைப் போன்ற இனமேயன்றி வேறில்லை; (இவற்றில்) எதையும் (நம் பதிவுப்) புத்தகத்தில் நாம் குறிப்பிடாமல் விட்டுவிடவில்லை; இன்னும் அவை யாவும் அவற்றின் இறைவனிடம் ஒன்று சேர்க்கப்படும்” (அல்குர்ஆன்: 6:38)
அல்லாஹ்வே முற்றிலும் அறிந்தவன்.
Posted by kuthub at 10:27 PM
No comments:
Post a Comment