தலையங்கம்
First Published : 04 Feb 2011 12:07:00 AM IST
Last Updated : 04 Feb 2011 02:57:05 AM IST
முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா கைது செய்யப்பட்டிருப்பது சிலருக்குத் திகைப்பையும், பலருக்கு வியப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக, தமிழக முதல்வர் தில்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கையும், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியையும் சந்தித்துப் பேசிவிட்டுத் திரும்பி வந்த மூன்றாவது நாளே முன்னாள் அமைச்சரும், திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினருமான ஆ. ராசா கைது செய்யப்பட்டிருப்பதுதான் வியப்புக்குக் காரணம்.
1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில், இந்த இழப்புக்கு அன்றைய அமைச்சராக இருந்த ஆ. ராசாவும், தொலைத்தொடர்புத் துறை செயலராக இருந்த சித்தார்த்த பெஹுராவும், அமைச்சரின் தனிச் செயலராக இருந்த ஆர்.கே. சண்டோலியாவும் மத்திய புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டிருப்பதும், தொடர்ந்து விசாரணைக்கு உள்படுத்தி அவர்களிடமிருந்து மேலும் பல உண்மைகளை வெளிக்கொணர முயற்சிப்பதும் தேவையான நடவடிக்கைகள். நியாயமாகப் பார்த்தால், இந்த முறைகேடு வெளியானபோதே, மத்திய புலனாய்வுத் துறை முனைப்புடன் செயல்பட்டு, வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, அமைச்சரையும், உயர் அதிகாரிகளையும் கைதுசெய்யக் குடியரசுத் தலைவரின் அனுமதி கோரியிருக்க வேண்டும்.
ஆரம்பத்திலிருந்து பிரதமர் முனைப்புக் காட்டினாரா என்றால் இல்லை. 2009 அக்டோபர் மாதம் மத்திய புலனாய்வுத்துறை தகவல் மற்றும் தொலைத்தொடர்புத் துறை அலுவலகங்களைச் சோதனையிட்டதே, அப்போதாவது கைது செய்து விசாரணையை முடுக்கிவிட்டதா என்றால் இல்லை. மூன்றாண்டு தாமதத்துக்குப் பிறகு, விசாரணையை உச்ச நீதிமன்றம் தனது நேரடிக் கண்காணிப்பில் எடுத்துக் கொண்ட பிறகு, இப்போது மத்திய புலனாய்வுத் துறை முனைப்புடன் செயல்படுகிறது என்று சொன்னால், கடந்த மூன்றாண்டுகளாக அந்த அதிகாரிகளை அடக்கி வாசிக்கச் சொல்லிக் கட்டுப்படுத்தி வைத்திருந்தது யார் என்கிற கேள்விக்கே ஒரு தனி விசாரணையை முடுக்கிவிட வேண்டும்.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுப் பிரச்னையில், முதன்முதலில் எச்சரிக்கை ஒலியை எழுப்பியது பிரதமர்தான். சட்ட அமைச்சகமும், நிதியமைச்சகமும் பல சந்தேகங்களை எழுப்பிய நிலையில், நிதானமாக, எல்லா பரிமாணங்களையும் சிந்தித்தபின் முடிவெடுக்கும்படி, அன்றைய தகவல் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசாவை எச்சரித்தவர் பிரதமர் மன்மோகன் சிங். இதில் முறைகேடு நடைபெறுவதற்கான சாத்தியம் இருக்கிறது என்பதை உணர்ந்ததால்தானே அப்படி ஓர் எச்சரிக்கையை எழுப்பினார் பிரதமர். பிரதமரின் எச்சரிக்கைக் கடிதத்துக்கு அமைச்சர் அளித்த விளக்கம் மரியாதைக் குறைவாக இருக்கிறது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கே உரைக்கின்றபோது, பிரதமர் தனது அமைச்சரின் மரியாதைக் குறைவான பதிலை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டது ஏன், எதற்காக என்கிற கேள்விகள் ஒருபுறம் இருக்கிறது.
உரிமம் அளிக்கப்பட்ட விதம், படிக்காத பாமரனுக்கே சந்தேகத்தை ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது. உரிமம் பெற்ற நிறுவனங்களின் பின்னணி சந்தேகத்துக்கு உரியதாக இருக்கிறது.
உரிமம் பெற்றவர்கள் அடுத்த சில வாரங்களிலும் மாதங்களிலும் தலைசுற்றலை ஏற்படுத்தும்விதத்தில் கோடிக்கணக்கான ரூபாய்விலைக்குத் தங்களது உரிமத்தை மறுவிற்பனை செய்திருப்பது, முறைகேடு நடந்திருப்பதை பட்டவர்த்தனமாகத் தெளிவுபடுத்துகிறது. இதைப்பற்றி அடுத்த சில நாள்களிலேயே ஊடகங்களில் விமர்சனங்கள் எழுகின்றன. ஆனால், இது எதுவுமே தெரியாததுபோல, பிரதமர் மன்மோகன் சிங் மௌனம் காத்தது ஏன்? சொல்லப்போனால், ஆ. ராசாவின் செயலில் எந்த முறைகேடும் இல்லை என்று நற்சான்றிதழ் வழங்கி அவரை கௌரவித்தாரே, ஏன்?
ஆ. ராசாவைக் கைது செய்ததன் மூலம் அரசு, ஊழலுக்கு எதிராக முனைப்புடன் நடவடிக்கை எடுக்கிறது என்கிற தோற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று மத்திய அரசு நினைக்கிறது என்பது காங்கிரஸ் கட்சியின் பத்திரிகைத் தொடர்பாளரது விளக்கத்திலிருந்து தெரிகிறது. மேலும், திமுகவுடனான கூட்டணியில் இருந்து விலக முடியாத சூழலில், ஆ. ராசாவின் கைதைக் காரணம் காட்டித் தமிழகத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்குக் கூடுதலான இடங்களைப் பெற காங்கிரஸ் முயற்சிக்கக் கூடும்.
ஆ. ராசாவின் கைது என்பது இந்த அரசியல் லாபங்கள், பேரங்கள் போன்றவைகளுக்கு அல்லாமல், வேறு பல திசைகளில் அதிர்வுகளை ஏற்படுத்த வேண்டும். சுதந்திர இந்தியாவில் அரங்கேறிய மிகப்பெரிய முறைகேடு 2ஜி ஸ்பெக்ட்ரம் என்கிற அலைக்கற்றை ஒதுக்கீட்டு விவகாரம். முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட்டு, இந்த முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்த, நேராகவும் மறைமுகமாகவும் இதில் ஈடுபட்ட, இதனால் பயன்பட்ட அனைவருமே சட்டத்தின்முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். ஆ. ராசா வெறும் அம்புதான். இதன் பின்னணியில் செயல்பட்டவர்கள் பலர் உண்டு என்பதைத் தமிழக முதல்வர் கருணாநிதி, 'ராசா ஒருவரால் இவ்வளவு பெரிய முறைகேடைத் தனியாக எப்படிச் செய்திருக்க முடியும்?' என்கிற கேள்வியை எழுப்பி உறுதிப்படுத்தி இருப்பதை நினைவில்கொள்ள வேண்டும்.
சிறிது நாள்களுக்கு முன்னால்தான், இப்போதைய தகவல் தொலைத்தொடர்பு அமைச்சர் கபில் சிபல் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டால் அரசுக்கு இழப்பே ஏற்படவில்லை என்று வாதாடினார். பிரதமர் எதுவுமே முறைகேடாக நடக்கவில்லை என்று விசாரணை தொடங்கும் முன்னரே நற்சான்றிதழ் வழங்கினார். இதன் அரசியல் பின்னணி வெளிவர வேண்டுமானால் நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணையும் நடந்தால்தான் சாத்தியம். இனியும் அதை மறுப்பது அரசுக்கு அழகல்ல.
ஆ. ராசாவின் கைது வெறும் தொடக்கம்தான். இதன் பின்னணியில் இருந்தவர்கள் அனைவரும் அடையாளம் காட்டப்பட்டு தண்டிக்கப்பட்டால் மட்டும் போதாது. இந்த ஒதுக்கீட்டால் உரிமம் பெற்றவர்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட வேண்டும். அடைந்த லாபத்தை அரசு கைப்பற்றி கருவூலத்தில் சேர்க்க வேண்டும். அதுதான் முடிவாக இருக்கும்!
No comments:
Post a Comment