பெட்ரோல், டீசல் விலை குறைக்க மாநில அரசு முடிவு
தினமலர்
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2011,23:24 IST
மாற்றம் செய்த நாள் : பிப்ரவரி 23,2011,01:34 IST
தமிழகத்தில் நடக்க உள்ள சட்டசபை தேர்தலையொட்டி, பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதற்கான முயற்சி நடந்து வருகிறது.
இந்தியாவில், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எண்ணெய் வகைகளுக்கு, விற்பனை வரியை அந்தந்த மாநிலங்களே நிர்ணயிக்கின்றன. மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தான், பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றிற்கு அதிகளவு விற்பனை வரி வசூலிக்கப்படுகிறது. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு, தமிழக அரசு, விற்பனை வரியாக, 30 சதவீதமும், டீசலுக்கு, 21.43 சதவீதமும் விதிக்கிறது. இதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.18ம், டீசலுக்கு ரூ.8ம் விற்பனை வரியாக வசூலிக்கப்படுகிறது. இந்த வரியை பெட்ரோலுக்கு, 20 சதவீதமாகவும், டீசலுக்கு, 11.43 சதவீதமாகவும் குறைக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது, தமிழக அரசு, விற்பனை வரியை குறைத்தால், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ஆறு ரூபாய் வரை குறையும்; டீசல், ஒரு லிட்டருக்கு நான்கு ரூபாய் வரை குறையும்.இது தொடர்பாக எண்ணெய் நிறுவனங்களிடமும், விற்பனைவரித்துறை அதிகாரிகளிடமும் தமிழக அரசு பேசி வருகிறது என, தமிழக பெட்ரோல், டீசல் பங்க் உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன், இந்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிடலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
- நமது சிறப்பு நிருபர் -
No comments:
Post a Comment