அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகதுஹு...
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....
துனிசியாவின் தேசிய மலர் மல்லிகை. துனிசிய புரட்சிக்கு 'மல்லிகை புரட்சி' என்று முதன்முதலில் தன் வலைப்பதிவில் பெயரிட்டவர்... பிரபல ஊடகவியலாளரும் ஒரு பிரபல துனிசிய பதிவருமான ஜியாத் அல் ஹானி..! இந்த புரட்சி பற்பல வருடங்களாக உள்ளுக்குள் கனன்று கொண்டே இருந்த நெருப்புதான்.
1956-ல் பிரான்ஸ் அரசு துனிசியாவிற்கு சுதந்திரம் கொடுத்து ஆட்சியை சுதந்திரம் கேட்ட ஒரு கட்சி RCD (Constitutional Democratic Assembly) -யின் தலைவர் ஹபீப் பொற்குய்பாவிடம் ஒப்படைத்து சென்றது. இவர் அதிபரானார். 1975-ல் இந்த கட்சி அரசு இவரை 'காலமுள்ளகாலம் வரை அதிபராக' நியமித்தது. பின்னர், 1987-ல் இவர் புத்தி சுவாதீனமற்று போய்விட்டதால், அப்போதைய பிரதமர் ஜைனுல் ஆபிதீன் பின் அலி அதிபரானார். முதலில் எதிர்க்கட்சி என்றபெயரில் உள்ள அனைவரையும் 'அப்புறப்படுத்தினார்'. அப்போது நன்கு வளர்ந்திருந்த பிரதான எதிர்க்கட்சியான 'நஹ்டா' என்ற இஸ்லாமிய கட்சிதான் அரசின் முக்கிய அழித்தொழிப்பு இலக்கு. அதன் தலைவர் ரஷித் கொன்னோச்சி நாட்டைவிட்டு தப்பியோடிவிட்டார். (23 ஆண்டுகள் கழித்து முந்தாநாள்தான் நாடு திரும்பியுள்ளார்)
அதன் பின்னர், அதிபர் அலி தேர்தலில் நின்றார். பல கட்சி போட்டி, மும்முனை போட்டி, இருகட்சி தேர்தல் மாதிரி அல்லாமல் இது ஒரு கட்சி தேர்தல் முறை. இவரின் பிரபலமான 'நமக்கு நாமே ஓட்டளிப்பு திட்டப்படி'...
99,27% ஓட்டுக்கள் 1989 தேர்தலிலும்,
99,91% ஓட்டுக்கள் 1994 தேர்தலிலும்,
99,45% ஓட்டுக்கள் 1999 தேர்தலிலும்,
99,49% ஓட்டுக்கள் 2004 தேர்தலிலும்,
89,62% ஓட்டுக்கள் 2009 தேர்தலிலும் பெற்று அமோக வெற்றி ஈட்டி தொடர்ந்து அதிகாரத்தில் அதிபராய் இருந்தார். முக்கியமான விஷயம் என்னவெனில் இவர் கட்சி ஒரு தொகுதியில் கூட தோற்றதில்லை..! இப்படிப்பட்ட ஒரு உன்னத மக்கள் ஆதரவு பெற்ற அதிபரை, ஒட்டுமொத்த மக்களும் சேர்ந்து ஓராண்டுக்குள் நாட்டை விட்டே வெளியேற்றியது உண்மையானால், அந்த அனைத்து தேர்தலிலும் அதிபர் 'வெற்றி(?)பெற்றது' எப்படி உண்மையாக இருக்கும்..?
2005-ல், உலக காட்சி ஊடகங்கள் மற்றும் ஐநா-வின் நேரடி மேற்பார்வையில் நேர்மையாக நடைபெற்ற பாலஸ்த்தீன ஜனநாயக தேர்தலில், எதிர்பாராத வகையில் ' மேற்கத்தியரின் நண்பர்கள்' ஃபதாவிற்கு, பதிலாக 'எதிரிகளான-பயங்கரவாத' ஹமாஸ் வெற்றி பெற்று விட அனைத்து வாக்குறுதிகளுடன் சேர்த்து மொத்த தேர்தலையே குப்பைத்தொட்டியில் வீசி எறிந்து 'இது செல்லாது' என்று அழுகுணி ஆட்டம் ஆடிய 'உலக ஜனநாயக காவலர்'களான அமெரிக்கா, இங்கிலாந்து, இஸ்ரேல் மற்றும் பலர், இன்று வரைக்கும் இந்த துனிசிய ஜனநாயக தேர்தல் படுகொலை பற்றி மூச்சு விட்டதில்லை. மாறாக, மற்ற அரபுலக நாடுகளுக்கு துனிசியா ஒரு முன்மாதிரி நாடு என்றுதான் பலமாக பலமுறை பாராட்டி இருக்கிறார்கள்.
ஏன்? என்ன காரணம்? அதிபர் அலியின் ஆட்சிமுறை மற்றும் இஸ்லாமிற்கு எதிராக அவர் இயற்றிய சட்டங்கள்தான் காரணம். ஒரு குஜராத் முஸ்லிமிற்கு கூட துனிசியாவில்... ஒருநாள் கூட வாழ பிடிக்காது. அப்படி என்னென்ன கடும் சட்டங்கள் அவை?
முதலில் மக்கள் யாரும் எங்கும் பொதுக்கூட்டம் போட முடியாது.
பத்திரிக்கைகள் காட்சி ஊடகங்களின் செய்திகள் உட்பட அனைத்தும் அரசு தணிக்கை செய்யப்பட்ட பின்னரே வெளிவரும்.
வீடுகளிலும் கூட்டமாகவோ குழுவாகவோ இஸ்லாமிய பிரச்சாரம் செய்ய முடியாது.
ஒரு முஸ்லிம்... ஒரே ஒரு பள்ளிவாசலை மட்டுமே பயன்படுத்த முடியும். ஐடி கார்டு பஞ்சிங் சிஸ்டம் உள்ளது. அவர் வேறு பள்ளிவாசல் சென்று தன் கார்டை தேய்த்தால் பள்ளிவாசல் கதவு திறக்காது. அதாவது மக்களுக்குள் புதியபழக்கம் ஏற்படாமல் தடுக்க இந்த ஏற்பாடு..!
தொழுகை நேரம் மட்டுமே பள்ளிவாசல் கதவு லாக் சிஸ்டம் திறந்திருக்க அனுமதி.
கொடுக்கப்பட்ட நேரத்திற்கு அதிகமாக பூட்டப்படாமல் தொழுகையில் ஈடுபட்டால் அடி-உதை.
வெள்ளிக்கிழமை ஜும்மா சொற்பொழிவில் கூட இமாம் அதிபரின் சாதனைகள் திட்டங்கள் பற்றி மட்டும்தான் புகழ்ந்து பேச வேண்டும்.
தொழுகைக்கு அழைக்க பாங்கு சொல்வதற்கும் கூட தடை.
ஒரு கணவன் இரண்டாவது திருமணம் செய்ய தடைச்சட்டம்.
கருக்கலைப்புக்கு ஆதரவாக அதை செய்ய வலியுறுத்தி சட்டம்.
நாட்டின் கடற்கரையை ஐரோப்பிய, அமெரிக்க மியாமி பீச் போல அனைத்து ஆபாச கூத்துக்களுக்கும் மதுக்கேளிக்கைகளுக்கும் திறந்து விடப்பட்டது.
பெண்களின் இஸ்லாமிய ஹிஜாப் ஆடைமுறைக்கு நாடெங்கும் தடை. மீறி அணிந்தால் தண்டனை.
முஸ்லிம் ஆண்கள் தாடிவைக்க, தொப்பி, தலைப்பாகை அணிய தடை. மீறினால் தண்டனை.
சிறைவாசிகள் குர்ஆன் ஓத, தொழ, நோன்புவைக்க தடை.
இஸ்ரேலுடன் கூட்டணி போட்டு அவர்களின் தூதரகம் துனிசியாவில் திறப்பு.
எங்கும் லஞ்சம், ஊழல், அதிகார துஷ்பிரயோகம், அடக்குமுறை, ஒடுக்குமுறை, மனித உரிமை மீறல், காட்டுமிராண்டி தர்பார்.
அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு... (முக்கியமாய் அவர்கள் அனைவரும் அதிபரின் மனைவி மக்கள் மற்றும் உறவினர்) எக்கச்சக்க வருவாய்... எந்தளவு என்றால், நாட்டின் கடனை விட இவர்களின் இலாபம் அதிகம் எனும் அளவிற்கு..! (உபயம் விக்கிலீக்ஸ்)
வேலையின்மை, வறுமை என சாமானிய மக்கள் பசித்திருக்க, அதிபர் தன் ஆடம்பர உல்லாச பங்களாவில் புசித்திருக்க... நீண்ட காலமாய் கனன்று கொண்டிருந்த இந்த தீக்கங்கு திடீரென்று பற்றி எரிய ஆரம்பித்தது எப்போதெனில்... ஒரு வேலையில்லா பட்டதாரி தன் வயிற்றுப்பிழைப்பிற்காக பழக்கடை திறக்க, 'அதற்கு அரசு அனுமதி இல்லை' எனக்கூறி கடையை முதலுடன் காவலர்கள் மற்றும் அதிகாரிகள் நாசம் பண்ண, வெறுத்துப்போன இளைஞன் தனக்குத்தானே தீ வைத்துக்கொண்ட போதுதான்..!
முஸ்லிம்கள் இவ்வுலகில் வாழ்வதே மறுமைப்பேருக்காகத்தான். ஆனால், எவ்வளவோ மோசமான நிலையிலும் அம்மக்கள் சமாளித்து இவ்வுலகில் வாழக்கற்றிருந்தாலும், இப்போது 'முதலுக்கே மோசம்' என்பதுபோல, "உனது இந்நாட்டில் வாழ்வதை விட எனக்கு நரகம் எவ்வளவோ மேல்" என்று மருத்துவமனைக்கு பார்க்க வந்த அதிபரிடம் சொல்லாமல் சொல்லிவிட்டது அந்த இளைஞனின் தற்கொலை..!
முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் இறுதிப்பேருரை !
[[[ ஒ... மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் கருப்பு நிற (அபிசீனிய) அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் (அவரது சொல்லைக்) கேட்டு நடங்கள்; (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்! (ஹதீஸ்: ஸுனன் நஸயி 4192, ஜாமிவுத் திர்மிதி1706) ]]] —இதில் இருக்கிறதே அழகிய முன்மாதிரி..!
ஒருவேளை அந்த முஸ்லிம் தலைவர் அல்லாஹ்வின் வேதத்தைக்கொண்டு மக்களை வழி நடத்தாமல், நபிவழியை பேணி வாழாமல், தன் மனம்போன போக்கில், அமெரிக்கா/பிரான்ஸ் சொல்வதை எல்லாம் கேட்டுக்கொண்டு ஹலாலை ஹராமாக்கி, ஹராமை ஹலாலாக்கி, மக்களை துன்புறுத்தி துப்பாக்கிச்சூடு நடத்தி கொன்று குவித்துக்கொண்டு, இஸ்லாத்திற்கு எதிரான போக்கில் அடக்குமுறையினால் சர்வாதிகார ஆட்சி நடத்தினால்???
அந்த கேடுகெட்ட ஆட்சியாளர்களுக்கு கட்டுப்படவோ கீழ்ப்படியவோ அவசியமில்லை என்பதுதானே இஸ்லாமிய அடிப்படைவாதம்..!
'இனியும் பொறுமையுடன் இருந்தால்...முஸ்லிம்கள் என்ன... நாம் மனிதர்களே இல்லை' என்ற இறுதி நிலையில்தான் துனிசியா மக்களின் கிளர்ச்சி, இணையமும், உள்நாட்டு ஊடகமும் முற்றிலும் தடை செய்யப்பட்ட நிலையில், சேட்டிலைட் சேனலான அல்ஜசீரா மூலம் மாபெரும் எழுச்சியாக உருவெடுக்கப்பட்டு எல்லா மக்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு, புரட்சியாக மாறி அதிபரை பதவி இறங்க கோர வைத்தது.
மேலும், எங்கோ ஓர் இடத்தில் இரு ராணுவ வீரர்கள் புரட்சியாளர்களுடன் இணைந்து கட்டித்தழுவி முத்தமிடும் விடியோ கிளிப்பிங்கையும், இரு காவலர்கள் மக்கள் புரட்சியை பார்த்து ஆனந்தக்கண்ணீர் வடித்து அழுத விடியோ கிளிப்பிங்கையும் திரும்பத்திரும்ப அல்ஜசீரா டிவி போட்டுக்காட்டி, "ஓ மக்களே, உங்களுக்கு பின்னால் போலிசும் மிலிட்டரியும் உள்ளன, தைரியமாக போராடுங்கள்" என்ற கருத்து மக்கள் மனதில் ஊன்றப்பட்டது. இது இருதரப்பினரையும் சகோதரர்களாய் பார்க்க வைத்தது.
இதற்கெல்லாம் மகுடம் வைத்தது போல ராணுவம் புரட்சியாளர்களுடன் சேர்ந்து காவலர்களை எதிர்க்கவும் புரட்சி முழுமைபெற்று, அதிபர் தம் குடும்பத்துடன் நாட்டை விட்டு ஓட வைத்த பெரும் மக்கள் புரட்சியாக மலர்ந்து 'மல்லிகை புரட்சி' எனும் பெயரில் வெற்றிகரமாய் இனிதே நிறைவுற்றது..! அதுவரை நாட்டை கொள்ளையடித்து சேமித்து வைத்திருந்த 1500 கிலோ எடையுள்ள தங்கக்கட்டிகளுடன் அதிபர் குடும்பம் தப்பியது மட்டுமே சிறு சறுக்கல்.
அதன் மறுபக்கம்
ஓட்டம் எடுத்த அதிபர் ஒவ்வோர் நண்பத்துவ நாடாய் சென்று யாரும் இடமளிக்கா நிலையில் இறுதியில் சவூதியில் தஞ்சம்..! என்ன கொடுமை..? எந்த பாங்கு ஒலியை கேட்கக்கூடாது என்று நினைத்தாரோ அதையே ஐந்து வேலை கேட்கும் ஒரு நாட்டில், முஸ்லிம்கள் மட்டுமில்லாமல் மற்ற சமய மக்களையும் ஹிஜாப் ஆடை பேணச்சொல்லும் ஒரு நாட்டில் மனைவியுடன் அதிபர் தஞ்சம் புகுந்திருக்கிறார். இதுதான் காலத்தின் கோலம்..!
அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராகவோ அல்லது அவர்களின் நண்பர்களுக்கு எதிராகவோ, பொதுவாக முஸ்லிம்கள் எந்த எதிர்ப்பு செயலை செய்தாலும்... மேற்கத்திய ஊடகங்களால் அதற்கு இஸ்லாமிய சாயம் பூசப்படும். ஆனால், இந்த பிரம்மாண்ட புரட்சிக்கு "இஸ்லாமிய புரட்சி" என்றோ "முஸ்லிம்களின் எழுச்சி" என்றோ மறந்தும் கூட சொல்லவில்லை.
அதேபோல், இஸ்லாமிய நாடுகளில் ஏதும் ஒரு துப்பாக்கிச்சூடோ, மரண தண்டனையோ அரசால் நிகழ்ந்தால் உடனே அதை 'இஸ்லாமிய அடிப்படைவாதம்', என்பர். ஒரு நாட்டின் ராணுவத்திற்கு எதிராக முஸ்லிம்கள் போராடினால் அவர்களுக்கு 'இஸ்லாமிய பயங்கரவாதிகள்' என்றும் பெயரிடுவர். இங்கே இதெல்லாம் காணோம். காரணம் 'மல்லிகை' என்ற முகமூடியுடன் அவ்வளவு சுத்தமாக தெளிவாக 'இஸ்லாமிய புரட்சி' நடந்திருக்கிறது.
தற்போது இடைக்கால அதிபராய் பதவி ஏற்றவறும் மற்றும் ஆளும் இடைக்கால அரசிலும் ஜைனுல் ஆபிதீன் பின் அலியின் அதே (RCD) கட்சியினர்தான் உள்ளனர். அதாவது கதவு வழியாக கழுத்தைப்பிடித்து வெளியே தள்ளப்பட்டோர் ஜன்னல் வழியாக மீண்டும் உள்ளே வந்திருக்கின்றனர். இது நிச்சயம் நிலைக்காது. பெருவாரியான மக்களுக்கு அந்த கொள்ளைகூட்ட கட்சியே பிடிக்க வில்லை. முழுமையான மாறுதலே சரியான முடிவாக இருக்கும்.
ஏனெனில், முன்னர் தடை செய்யப்பட்ட 'நஹ்டா' என்ற இஸ்லாமிய இயக்கத்தின் தலைவர் இப்போது மீண்டும் துனிசியா வந்துள்ளார். வெவ்வேறு நாடுகளில் இருந்த அந்த இயக்கத்தினரும் தாயகம் திரும்புவதால் இயக்கம் மீண்டும் வலுப்பெறுகிறது. ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களால் விமான நிலையத்தில் 'அல்லாஹு அக்பர்' என்ற முழக்கங்களுடன் நேற்று முன்தினம் வரவேற்கப்பட்ட ரஷித் கொன்னோச்சி அளித்த பேட்டியில், "நான் அரபுலகம் அனைத்துக்குமாய் திரும்பி இருக்கிறேன். நான் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை. அனால், ஜனநாயகத்தை ஸ்திரப்படுத்துவதிலும், கட்சிகளை தடை செய்வதை நிறுத்தி, அதன்மூலம் ஒருகட்சி தேர்தல் முறையை மாற்றி இனி பல கட்சி தேர்தல் முறையை நிறுவி, ஊழலையும் அடக்குமுறையையும் தகர்ப்பதிலும் உதவுவதே லட்சியம்" என்று கூறினார்.
98% முஸ்லிம்கள் வாழும் நாட்டில், 'Secular Rule' என்ற பெயரில் முஸ்லிம்களுக்கு எதிரான சர்வாதிகார ஆட்சி வீழ்ந்தது. நிச்சயம் இது அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுக்கும் முக்கியமாக இஸ்ரேலுக்கும் பெரிய அடி. இன்ஷாஅல்லாஹ், இனிதான் துனிசியா முஸ்லிம்களின் நாடாக மாறக்கூடும்.
நன்றி : சகோ. : முஹம்மத் ஆஷிக் Source****knr.blogspot.com
No comments:
Post a Comment