Wednesday, February 2, 2011

எல்லாம் குழந்தைகளுக்காக...
Post under கட்டுரை நேரம் 12:00 இடுகையிட்டது பாலைவனத் தூது
வெள்ளைமுடி, கன்னத்தில் சுருக்கம், மெலிந்த தேகம், உடமை என்று சொல்லிக் கொள்ள வியாதிகள், குடும்பத்தை பிரிந்து வெகு தொலைவில்... இரவு பகல் பாராமல், வெயில், குளிர் என வேற்றுமை பாராட்டாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பலரை நாம் தினந்தோறும் கண்டுவருகிறோம்.

சம்பாதிப்பதே அரை சாண் வயிற்றுக்குதான் என்றாலும் இவர்களில் பலர் நேரத்திற்கு உணவருந்துவதில்லை. மாத இறுதியில் கிடைக்கும் சம்பளத்திற்காக முன்பின் தெரியாதவர்களிடம் ஏச்சுகளையும் பேச்சுகளையும் கேட்கும் அவலம்... இவை அனைத்தையும் இவர்கள் சகித்து செல்வதற்கு எதற்காக?

நான் நன்றாக வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும், விதவிதமான உடைகளை அணிய வேண்டும், உலகை சுற்றி வர வேண்டும் என்பதற்காகவா? இக்கேள்விக்கு பலரும் அளித்த பதில் ஒன்றுதான்.. 'எல்லாம் என் குழந்தைகளுக்காக, அவர்கள் நன்றாக வாழ வேண்டும் என்பதற்காக'.தன்னுடைய குழந்தைகள் எப்படி வாழப்போகிறார்கள் என்பதை இவர்களில் பலரும் கண்ணால் காண்பது கூட கிடையாது. தன்னுடைய வயதான காலத்தில் தன்னை இவர்கள் கவனிப்பார்களா என்பதற்கும் உத்தரவாதம் கிடையாது. வியர்வையை சிந்தும் இவர்கள் அதற்கான பலனை அனுபவிப்பது இல்லை. இருந்த போதும் 'எல்லாம் குழந்தைகளுக்காக'. இதைத்தான் ஆங்கிலத்தில் அழகாக கூறுவார்கள், 'Fathers work for their children' என்று. இவ்வாறு குழந்தைகளுக்கு உழைக்கும் ஒவ்வொருவரும் தன்னுடைய பார்வையை சற்று விசாலமாக்கினால் எப்படி இருக்கும்?

இன்று நம்முடைய சமுதாயத்தின் நிலையை சற்று கண் முன் கொண்டு வருவோம். வறுமை, கல்வியின்மை, வரதட்சணை, ஊடகங்களில் இருட்டடிப்பு, போலி என்கௌண்டர், இனப்படுகொலை, மஸ்ஜித் இடிப்பு... என சொல்லிக்கொண்டே போகலாம். இதனை தீர்க்க நாம் என்ன செய்துள்ளோம். இதனை கேட்டவுடன் பலரும் தரும் பதில், 'இதெல்லாம் உடனே தீர்க்க கூடிய விஷயங்கள் இல்ல, நாம என்ன செய்ய முடியும்?.'

அழகான ஒரு வரலாற்று நிகழ்வு இத்தருணத்தில் நினைவுக்கு வருகிறது. முஸ்லிம்களின் தலைமையான கிலாஃபத்தை ஒழிக்க வேண்டும் என்பதற்காக ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகள் திட்டம் தீட்டிக் கொண்டிருந்த நேரம். இதற்காக சில இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அருமையான பயிற்சிகள். இறுதியாக திட்டத்தை விளக்கியவன் கூறினான், 'இது இருநூறு ஆண்டு திட்டம்'. கூட்டத்தில் இருந்த ஒரு இளைஞன் கேட்டான், 'இருநூறு ஆண்டுகள் கழித்து நான் இதனை அனுபவிக்க போவது இல்லை. அப்படியிருக்கும் போது நான் எதற்காக இந்த வேலையை செய்ய வேண்டும்?' இதற்கு அந்த தலைவன், இவர்களின் தியாகத்தால் இஸ்லாம் எவ்வாறு கீழிறக்கப்பட்டு ஆங்கிலேயர்களின் கை மேலோங்கும் என்பதை விளக்கி விட்டு கூறினான், 'Fathers work for their children'. தீட்டிய திட்டத்தை நிறைவேற்றினார்கள், கிலாஃபத்தை ஒழித்தார்கள்.

தற்போது நமது நிலை என்ன? தனி வாழ்வில் சுயநலத்தை விரும்பாத நாம் பொதுவாழ்விலும் அதனை பின்பற்ற தயங்குவது ஏன்? நான்கு நபர்கள் ஒன்று சேர்ந்தால் ஒரு குடும்பத்தின் வறுமையை போக்கலாம். வசதியின்றி தவிக்கும் மாணவர்களின் படிப்பிற்கு வழிவகை செய்யலாம். இளைஞர்கள் முன்வந்தால் வரதட்சணையை இல்லாமல் ஆக்கலாம். ஆக்கப்பூர்வமாக சிந்திப்பவர்கள் ஒன்றிணைந்தால் ஊடகத்தை நமதாக்கலாம். சமுதாயம் சிறிது முன்வந்தால் பாசிசத்தை பின்னுக்கு தள்ளலாம்... இப்படி கூறிக்கொண்டே செல்லலாம்.

இதில் சிலவற்றின் பலனை நாம் அனுபவிக்காவிட்டாலும் நமது சந்ததிகள் அதனை அனுபவிப்பார்கள். எங்களின் முன்னோர்கள் எதையும் செய்யவில்லை என்ற பழிச்சொல்லில் இருந்தும் தப்பிக்கலாம்.

சிந்ததைகளுக்கு செயல்வடிவம் கொடுக்கும் நேரமிது.
ஏர்வை ரியாஸ்
http://paalaivanathoothu.blogspot.com/

No comments:

Post a Comment