First Published : 03 Feb 2011 02:02:20 AM IST
இந்திய மாணவர்களின் கால்களில் ரேடியோ டாகிங் கூடாது என்று கண்டனம் தெரிவித்து கடந்த நான்கு நாள்களாக இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரும்கூட இது முறையல்ல என்று அமெரிக்க அரசின் நடவடிக்கையை விமர்சனம் செய்துள்ளார். பல்வேறு கட்சிகளின் இளைஞர் பிரிவுகள் அமெரிக்கத் தூதரகங்களை முற்றுகையிடும் போராட்டங்களையும் நடத்தின.
இதனால் எந்தவிதமான மாற்றங்களும் ஏற்படவில்லை என்பதுடன் -இது பொதுவான நடைமுறைதான், இவர்களை நாங்கள் குற்றவாளிகள்போல நடத்தவில்லை, ஆனால் கண்காணிக்கிறோம்-என்று அமெரிக்க அரசு விளக்கம் அளித்திருக்கிறது. விசா இல்லாதவர்களைப் பிடித்து சிறையில் அடைப்பது, அவர்களை நாடு கடத்துவது ஆகிய வழக்கமான நடவடிக்கைகளில் ஈடுபடாமல், விசாரணை முடியும்வரை அவர்கள் எந்த இடத்துக்கும் சுதந்திரமாக நடமாட அனுமதித்திருப்பதன் அடையாளம்தான் இந்த ரேடியோ டாகிங் என்று விளக்கமும் அளித்திருக்கிறது.
ரேடியோ டாகிங் எனப்படும் சிறு கருவியை உடலோடு கட்டி வைப்பதன் மூலம், அவர்கள் எங்கே சென்றாலும் அவர்களைக் கண்காணிக்க முடியும். சாதாரணமாக, காட்டு விலங்குகள் எங்கெல்லாம் போகின்றன என்று கண்டறியும் ஆய்வுகளின்போது அந்த விலங்குகளின் கழுத்தில் கட்டப்படும் கருவி போன்றது இது. அதாவது இந்திய மாணவர்களை ஒரு விலங்குபோல ஆக்கியிருக்கிறார்கள்.
அமெரிக்கா போன்ற ஒரு நாட்டில், அதிலும் உலகம் முழுவதிலும் அமெரிக்கர்களுக்குத் தீவிரவாதிகளால் ஆபத்து இருப்பதாகச் சொல்லப்படும் வேளையில், தங்கள் நாட்டுக்கு முறைகேடாக விசா பெற்று வந்தவர்கள் குறித்து எச்சரிக்கை உணர்வுடன் அமெரிக்கா செயல்படுவதை நாம் குற்றம் சொல்வதற்கில்லை. ஆனால், தற்போது இந்த நிலைமைக்கு ஆளானவர்கள் நாடற்ற மனிதர்கள் அல்லர். இவர்கள் சொந்த நாடும் முகவரியும் உள்ள மாணவர்கள். இவர்கள் பெற்றுள்ள கல்வி விசா முறையற்றதாக இருக்கலாம். ஆனால், அதற்குக் காரணம் இவர்கள் அல்ல. இந்த உண்மைகளைக் கருத்தில் கொண்டாகிலும் அமெரிக்க அரசு இந்த மாணவர்களை, மனிதர்களாக நடத்தவும், விதிவிலக்காகக் கருதி, ரேடியோ டாகிங் முறையைத் தவிர்க்கவும் செய்திருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை.
அமெரிக்கத் தூதரகங்கள் மூலம் நடத்தப்படும் கல்விக் கண்காட்சியில் பங்கு கொண்டு தரமானதும் அரசின் அங்கீகாரம் பெற்றதுமான பல்கலைக்கழகங்கள் எவை என்று அறிந்து அவற்றுக்கு விண்ணப்பம் செய்தால் இத்தகைய நிலைமை ஏற்படாது என்பது அமெரிக்கா முன்வைக்கும் வாதம். ஆனால், இது எத்தனை மாணவர்களுக்கு சாத்தியம். மேலும் அமெரிக்காவில் படிப்பதுதான் ஒரு இளைஞனின் உயரிய குறிக்கோள் என்பது போன்ற பிரமையை ஏற்படுத்தி இருப்பதுகூட, அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் குற்றம்தானே?
அமெரிக்காவில் படிக்க வந்த நாள் முதலாகவே தனியார் நிறுவனங்களில் பகுதி நேர வேலை செய்து சம்பாதிக்கலாம், கல்விக் கட்டணம் மிகக் குறைவு, பாடத்திட்டமோ ரொம்ப எளிது, தேர்வுகள் எளிமையானவை என்றெல்லாம் விளம்பரப்படுத்தி, மாணவர்களை அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்கள் கவர்ந்திழுக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றன. வருமானத்தில் துண்டு விழக்கூடாது என்பதற்காக, விதிமுறைகளை மீறிக் கல்வி விசா அளிக்கின்றன இப்பல்கலைக்கழகங்கள். இதற்குப் பலியானவர்கள்தான் தற்போது பிரச்னையில் சிக்கியுள்ள 1550 மாணவர்கள். இவர்களில் 90 விழுக்காட்டினர் இந்தியர்கள் என்பதால் நாம் துடிதுடிக்கிறோம்.
விதிமுறைகளை மீறிய பல்கலைக்கழகத்தை மூடிவிட்டதால், சட்டத்தின் கடமை செய்யப்பட்டுவிட்டதாக அமெரிக்க அரசு கருதுகிறது. ஆனால், அங்கு படித்த மாணவர்களின் கதி என்ன? அவர்கள் இத்தனைக்காலம் படித்த படிப்பு முடிக்கப்படாமலேயே திரும்ப வேண்டியதுதானா? அவர்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும் என்கிற கடமை அவர்களுக்குக் கிடையாதா?
இந்தியாவில், தரமான கல்வி வழங்காத பொறியியல் கல்லூரிகள் மூடப்படும்போது, அதில் பயின்றுவந்த மாணவர்கள் இந்தக் கல்லூரி எந்தப் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்றுள்ளதோ அதே பல்கலைக்கழகத்தில் இணைவு பெற்றுள்ள மற்றொரு கல்லூரியில் கல்வியைத் தொடர அனுமதிப்பது வழக்கம். அதேபோன்று, அமெரிக்காவில் டிரைவேலி பல்கலைக்கழகம் மூடப்பட்டாலும், தற்போது மாணவர்கள் படிக்கும் படிப்புக்கு இணையான படிப்பு எந்தப் பல்கலைக்கழகத்தில் உள்ளதோ அங்கு சேர்ந்து பயில அவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும். இதனால் கல்விக் கட்டணத்தில் செலவு அதிகரிக்கும் என்பது நிச்சயம். முறையாக விசாரிக்காமல் இப்படிப்பட்ட பல்கலைக்கழகத்தில் சேர்ந்ததற்கு தண்டனையாக அதிகக் கட்டணம் செலுத்திப் படிக்க வேண்டியதுதான்.
சற்று மாற்றி யோசித்துப் பார்ப்போம். இந்தியாவிலோ அல்லது வேறு ஏதாவது ஒரு நாட்டிலோ ஒரு பல்கலைக்கழகத்தில் படிக்கும் அமெரிக்க மாணவர்களுக்கு இதுபோல ரேடியா டாக் அணிவிக்கப்பட்டிருந்தால், இராக்குக்கு ஏற்பட்ட நிலைமை நமக்கு ஏற்பட்டிருக்காதா?
ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி நிலைதான் நமக்கு என்கிறது அமெரிக்கா. இந்திய அரசும் இதுபோன்ற அவமானங்களை மென்று விழுங்குகிறது. சுயமரியாதைப் பாடம் எடுக்க பெரியார்தான் பிறந்து வர வேண்டும்.
No comments:
Post a Comment