செய்திகள் - உலகச் செய்திகள் |
வியாழன், 18 ஆகஸ்டு 2011 19:48 |
லெபனானைப் பூர்வீகமாக கொண்ட வஸ்ஸாம் அஜாகீர் (Wassam Azaqeer) தற்போது பனிமலைகள் சூழ்ந்த நாடாகிய 'கிரீன் லேண்ட்' (Greenland) எனும் இடத்தில் வசித்து வரும் ஒரே முஸ்லிம் ஆவார். இவர் இந்த ரமலானில் நாள்தோறும் 21 மணி நேரம், முழு ஈடுபாட்டுடன் நோன்பு* நோற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கிரீன்லேண்ட் என்பது உலகிலேயே மிகப் பெரியத் தீவு. இது வட அட்லாண்டிக் மற்றும் ஆர்டிக் பெருங்கடலுக்கு மத்தியில் அமைந்துள்ள 'டென்மார்க்' நாட்டின் ஒரு சுய ஆட்சி மாநிலமாகும். பிரபல அரபுத் தொலைக் காட்சி ஒன்றின் செய்தியின்படி, வஸ்ஸாம் அஜாகீர் என்பவர் பல ஆண்டுகளாக கிரீன்லேண்டில் வசித்து வரும் அரபு முஸ்லிம் ஆவார். "அரேபிய கொலம்பஸ்" என்று அழைக்கபடும் இவர் கடுமையான சூழ்நிலையில் இங்கு வசித்து வருவது மட்டுமின்றி 'கிரீன்லேண்டில்' உள்ள நுயூக் நகரத்தில் வெற்றிகரமாக தொழில் புரியும் ஒரே முஸ்லிம் தொழிலதிபராகவும் திகழ்கின்றார். வஸ்ஸாம் அஜாகீர், நியூக்கில் சுயமாக உணவகம் ஒன்றை நிர்வகித்து வருகிறார். அதில் நாள்தோறும் சுமார் 200 வாடிக்கையாளர்கள்வரை வருகை புரிந்து பயனடைகின்றனர். இந்த ஆண்டு ரமலான் மாதம் கோடைக் காலத்தில் வந்துள்ளதால்( சூரிய உதயத்திற்கு முன்பிலிருந்து சூரிய அஸ்தமனம் வரை) அவர் நாள்தோறும் 21 மணி நேரம் நோன்பிருக்க வேண்டியுள்ளது. மாலையில் நோன்பு துறந்த பின்னர் அவருக்குப் உணவுக்கு ஏற்பாடுகள் செய்து நோன்பிருக்க சுமார் இரண்டு மணி நேரமே கிடைக்கிறது. மேலும் இதில் அவர் "மஃக்ரிப்" எனும் மாலைத் தொழுகை மற்றும் "இஷா" எனும் இரவு தொழுகையும் தொழ வேண்டியுள்ளது. இந்த மாநிலத்தில் தாம் மட்டுமே அல்லாஹ்வின் கட்டளையின்படி நோன்பு நோற்கக் கூடிய, தொழக் கூடிய முஸ்லிமாக இருப்பதைத் தாம் பெருமைக்குரியதாக கருதுவதாக வஸ்ஸாம் கூறுகிறார். மேலும் ரமலான் மாதத்தில் தமது பூர்வீக நாடாகிய லெபனானுக்குச் செல்லும் எண்ணம் சில நேரங்கள் அவருக்கு ஏற்படுவதுண்டு. ஆனால் அவ்வாறு அவர் சென்று விட்டால் தான் வசிக்கும் இந்த கிரீன் லேண்டில், அல்லாஹ்வைத் தொழுது நோன்பு நோற்கக் கூடியவர் யாரும் இருக்க மாட்டார் என்பதால் அந்த எண்ணத்தை கைவிட்டு விட்டதாக உணர்ச்சி ததும்பக் கூறுகிறார். *குறிப்பு : "நோன்பு" என்பது சூரிய உதயத்திற்கு முன்பிலிருந்து சூரிய அஸ்தமனம்வரை உண்ணாமல் பருகாமலும் தாம்பத்திய உறவிலும் ஈடுபடாமல் இரு(ப்பதன் மூலம் இறையச்சம் ஏற்பட வழி வகு)க்கும் முஸ்லிம்களின் முக்கியமான கடமையும் வணக்கமும் ஆகும். இது உலகமெங்கும் ஆங்காங்கேயுள்ள பகல் பொழுதின் அளவின்படி சராசரியாக சுமார் 14 முதல் 16 மணி நேரம் இருக்கிறது. கிரீன்லேண்டின் பகற் பொழுது என்பது, சூரிய உதயத்திலிருந்து அஸ்தமனம் வரை சுமார் 21 மணி நேரம் நீடிக்கிறது. மூலம் : ஸியாஸத் |
Tuesday, August 23, 2011
ரமளானில் 21 மணி நேரம் நோன்பு நோற்கும் முஸ்லிம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment