Tuesday, August 23, 2011

ரமளான் இரவுத் தொழுகை !



printEmail
தொடர்கள் இஸ்லாமிய தொடர்கள்
வெள்ளி, 11 செப்டம்பர் 2009 23:51
Thanks by http://www.satyamargam.com
ரமளான் இரவுத் தொழுகைமீண்டும் ஒரு ரமளான்: பிறை 21
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ரமளானில் நோன்பு நோற்றோம். ரமளானில் ஏழு நாட்கள் மீதமிருக்கும் வரை நபி (ஸல்) எங்களுக்குத் தொழுகை நடத்த வில்லை. இருபத்தி மூன்றாம் நாள், இரவின் மூன்றில் ஒரு பகுதி நேரம் வரை எங்களுக்குத் தொழ வைத்தார்கள். அதன்பிறகு (சில நாட்கள்) தொழ வைக்கவில்லை. ரமளானில் மூன்று நாட்கள் எஞ்சியிருக்கும் போது மீண்டும் எங்களுக்குத் தொழ வைத்தார்கள். தம் குடும்பத்தினரையும், மனைவியரையும் அதில் பங்கெடுக்கச் செய்தார்கள். ஸஹர் நேரம் முடிந்துவிடுமோ என்று நாங்கள் அஞ்சும் அளவுக்கு நீண்ட நேரம் தொழ வைத்தார்கள். (அறிவிப்பவர்: அபூதர் (ரலி) நூல்கள்: நஸயீ, இப்னுமாஜா).
ஸஹர் நேரம் தவறிவிடுமோ என்று அஞ்சும் அளவுக்கு அவர்கள் தொழுகை நடத்தியுள்ளார்கள், இஷா முதல் ஸஹர் வரை நபியவர்கள் ஒரேயொரு தொழுகையை தொழுதிருக்கிறார்கள் என்றால் அது தஹஜ்ஜுத் தொழுகைதான் என்பதற்கு வேறெந்தச் சான்றும் தேவையில்லை. ஏனெனில் நம்மைப் பொருத்தவரை சுன்னத்தான தஹஜ்ஜுத் தொழுகை என்பது நபிகள் நாயகம் அவர்கள் தவறாமல் (ரமளான் அல்லாத காலங்களிலும்) நிறைவேற்றி வந்த ஒரு தொழுகையாகும். இந்தத் தொழுகையை விடுத்து நபி(ஸல்) அவர்கள் மற்றொரு சிறப்பான தொழுகையை தொழுது கொண்டிருந்தார்கள் என எவரும் கூற முன் வரமாட்டார்கள்.  இதிலிருந்து ரமளானுக்கென்று தனியாக ஒரு தொழுகையை அவர்கள் தொழவில்லை என்பதை இது தெளிவாக விளக்குகிறது.
உமர்(ரலி) அவர்களுடன் நாங்கள் ஓர் இரவு ரமளானில் பள்ளிவாசலுக்குச் சென்றோம். மக்கள் பல்வேறு குழுக்களாக இருந்தனர். சிலர் தனியாகவும், வேறு சிலர் கூட்டாகவும் தொழுது கொண்டிருந்தனர். உமர்(ரலி) அவர்கள் "இவர்களை ஒரே இமாமின் பின்னே தொழுமாறு நான் ஏற்பாடு செய்வது நல்லது" என்று எண்ணி அவ்வாறு செயல்படுத்தினர். உபை பின் கஃபு (ரலி) அவர்களை இமாமாக ஏற்பாடு செய்தார்கள். பின்பு மற்றோரு இரவு பள்ளிக்கு வந்து மக்கள் ஒரே இமாமைப் பின்பற்றித் தொழுவதைக் கண்டார்கள். "இந்தப் புதிய ஏற்பாடு நன்றாக இருக்கிறது. இப்போது தொழுதுவிட்டுப் பிறகு உறங்குவதைவிட உறங்கிவிட்டு இரவின் இறுதியில் தொழுவது மிகவும் சிறந்ததாகும்" என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான், நூல்: புகாரி ).
உமர்(ரலி) அவர்களின் இந்தக் கூற்றும் ரமளானுக்கு என்று விஷேசத் தொழுகை எதுவும் கிடையாது என்பதை அறிவிக்கிறது. "இப்போது தொழுதுவிட்டு உறங்குவதைவிட, உறங்கிவிட்டு இரவின் இறுதியில் தொழுவது சிறந்தது" என்ற அவர்களின் கூற்றிலிருந்து இத்தொழுகை இரவின் இறுதிப்பகுதியில் நபிகள் நாயகம் தொழுது வந்த தஹஜ்ஜுத் தொழுகை என்பதனையும் விளங்கலாம். "இரவின் ஆரம்பம் முதல் இறுதிவரை ஒரே தொழுகைதான். ஆரம்ப நேரம் ஒரு தொழுகை, இறுதி நேரம் ஒரு தொழுகை" என்று இரண்டு தொழுகைகள் கிடையாது என்பதும் இதிலிருந்து தெளிவாகின்றது.
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் அன்றாடம் இரவு தொழுதுவரும் தஹஜ்ஜுத் தொழுகைதான் ரமளானிலும் உள்ளது. ரமளானுக்கென்று தனித் தொழுகை எதுவும் கிடையாது என்பது இதன் மூலம் சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவாகிறது.
மேற்கண்ட ஹதீஸில் உமர்(ரலி) அவர்கள் உபைத் பின் கஃப் (ரலி) அவர்களை இமாமாக நியமித்ததாகக் கூறப்படுகின்றது. இது தொடர்பாக மற்றொரு ஹதீஸில்,
உபைத் பின் கஃப் (ரலி) அவர்களையும் தமீமுத் தாரி (ரலி) அவர்களையும் மக்களுக்கு 11 ரக் அத்துகள் தொழ வைக்குமாறு உமர்(ரலி) அவர்கள் கட்டளை இட்டார்கள். (ஆதாரம்: முஅத்தா).
உமர் (ரலி) அவர்கள் 11 ரக் அத்கள் தொழ வைக்குமாறு இமாமை நியமனம் செய்தது 20 ரக்அத் கொண்ட தராவீஹ் என்ற தனித்தொழுகை கிடையாது என்பதைத் தெளிவாக்குகிறது.
அப்படி என்றால் ரமளானுக்குரிய சிறப்பு என்ன என்ற கேள்வி எழலாம். எல்லா நாட்களிலும் இந்தத் தொழுகையைத் தொழவேண்டும் என்றாலும் ரமளானில் இந்தத் தொழுகைக்கு அதிக அளவு ஆர்வமூட்டப்பட்டுள்ளது. "யார் ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்நோக்கியும் நின்று வணங்குகிறாரோ அவரது முன்பாவங்கள் மன்னிக்கப் படுகின்றன" என்ற கருத்தில் பல ஹதீஸ்கள் உள்ளன.
இது போன்ற ஹதீஸ்கள் யாவும் ரமளானில் நின்று வணங்குவதில் ஆர்வமூட்டுகின்றன. நபி (ஸல்) அவர்கள் பதினோரு ரக் அத்துகளைக் கொண்டு சில வேளைகளில் இரவு முழுவதும் நின்று வணங்கியுள்ளதால் அவ்வாறு வணங்குவதையே அது குறிக்கும். நபி (ஸல்) அவர்கள் 11 ரக் அத்துகளே நின்று வணங்கியுள்ளதால் அதையே நாமும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
- தொடரும், இன்ஷா அல்லாஹ்.
ஆக்கம்: உம்மு ஸாலிஹா.

No comments:

Post a Comment