First Published : 18 Aug 2011 01:08:42 AM IST
Last Updated : 18 Aug 2011 05:24:48 AM IST
நன்றிதினமணி
தலையங்கம்:யார்-பொறுப்பு?
தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் இரண்டு மாதங்களே இருக்கும் நிலையில், பட்டாசுத் தொழிற்சாலைகள் மிக வேகமாகப் பணியாற்றினால்தான் பணம் ஈட்ட முடியும் என்பது தவிர்க்க முடியாதது. எந்தத் தொழிலாக இருந்தாலும், எவ்வளவுதான் பணம் அல்லது பணியாணை கிடைத்தாலும், ஓரளவுக்கு மேல் உற்பத்தி வேகத்தை முடுக்கிவிட்டால், அது முதலுக்கே மோசமாகத்தான் முடியும். அதற்குப் பட்டாசு தயாரிப்பும் விதிவிலக்கல்ல.
ஆகஸ்ட் 13-ம் தேதி, விருதுநகர் பகுதியில் மத்தாப்புத் தயாரிப்பின்போது ஏற்பட்ட விபத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளதையடுத்து, இந்த ஆண்டு தமிழ்நாட்டில் இதுவரை பட்டாசு தயாரிப்பு விபத்துகளில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. ஆண்டுதோறும் விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சராசரியாக 20 ஏழைகள் இத்தொழிலில் தங்கள் உயிரைப் பலி கொடுக்கிறார்கள். 2009-ம் ஆண்டில் 23 விபத்துகளில் 33 பேர் இறந்தனர். 2010-ம் ஆண்டு 20 சம்பவங்களில் 20 பேர் இறந்துள்ளனர்.
இத்தகைய விபத்துகள் நடைபெற்றவுடன், அந்தந்த மாவட்டத்தில் வெடிமருந்துகளைக் கையாளும் தொழிற்கூடங்களுக்கு அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்வதும், விதிமுறைகளை மீறிய தொழிற்கூடங்களுக்கு நோட்டீஸ் அனுப்புவதும் காலங்காலமாகத் தொடர்கிறது. ஆனால், எந்தவிதமான மாற்றமும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.
இத்தகைய விபத்துகள் நடைபெற்றவுடன் அதிகாரிகள் சொல்லும் முதல் வார்த்தையே, "உரிமம் இல்லாமல் பட்டாசு தயாரித்தபோது, விபத்து நடந்தது' என்பதுதான். விபத்து நடந்த தொழிற்கூடம் உரிமம் பெற்றது என்று ஊருக்கே தெரியும் அளவுக்கு ஓரளவு பெரிய நிறுவனம் என்றால், மனிதத் தவறுகளால் விபத்து என்பார்கள். அதாவது, தொழிலாளர்கள்தான் இந்த விபத்துக்குக் காரணம் என்பதை உறுதி செய்துகொள்ளும் விதமாகத்தான் இந்த வார்த்தை ஜாலங்கள் இருக்கும். இவை தொழிற்க்கூடங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கவும், விபத்தின் அடிப்படைக் காரணங்களைத் திசைதிருப்புவதற்காகவும் கையாளப்படும் உத்திகள்.
உரிமம் இல்லாமல் பட்டாசு தயாரிப்பு நடைபெறும் அளவுக்கு அதிகாரிகள் மெத்தனமாக இருந்தது ஏன்? எந்தக் காரணத்தால் அந்தப் பகுதியில் திடீர் ஆய்வுகள் நடத்தி, இத்தகைய உரிமம் இல்லாத பட்டாசுத் தொழிற்சாலைகளை முடக்காமல் இருந்தார்கள்? முதலில், உரிமம் இல்லாமல் பட்டாசு தயாரிப்பு நடப்பதைத் தடுக்காத குற்றத்துக்காகச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாகப் பணிநீக்கம் செய்யப்பட வேண்டாமா? உரிமம் இல்லாதவர்களுக்கு, வெடிமருந்துகள் மட்டும் எப்படிக் கிடைக்கிறது? இந்தக் கேள்விகளை அரசிடம் யாரும் கேட்பதில்லை.
இது மனிதத் தவறு என்றால், அது எத்தகைய தவறு? அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படவில்லையா? பயிற்சி பெறாதவர்களை ஏன் அந்தப் பட்டாசுத் தொழிற்சாலை பணியில் அமர்த்தியது? அல்லது பயிற்சி இருந்தும், பாதுகாப்புக்கான வசதிகளை அந்தத் தொழிற்சாலை செய்யத் தவறியதுதான் காரணமா? இதுபற்றியும் அரசு கேட்பதில்லை. இறந்தவர் குடும்பத்துக்கும், காயமடைந்தவர்களுக்கும் இழப்பீடு அறிவிக்கப்படும் வேகம், விசாரணைகளில் இருப்பதில்லை.
தீவிரவாதம் காரணமாக மிக நெருக்கடியும் கண்காணிப்பும் இருக்கும் இந்த நாளிலும்கூட, உரிமம் இல்லாமல் பட்டாசு தயாரிக்க முடியும் என்பதே தமிழகத் தொழிற்துறைக்கு மிகப்பெரும் அவமானம் சேர்க்கும் விவகாரம். உரிமம் பெற்றுள்ள பட்டாசுத் தொழிற்கூடங்கள்தான் இத்தகைய உரிமம் பெறாத நபர்களிடம் வெடிமருந்துகளைக் கொடுத்து, அயல்பணி ஒப்பந்தம் செய்துகொள்கின்றன என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், இந்த அயல்பணி ஒப்பந்தம் அளித்தால் அதை முறையாகச் செய்ய ஏன் அதிகாரிகள் ஊக்குவிப்பதில்லை? பட்டாசு மற்றும் தீக்குச்சித் தொழிற்சாலைகளில் அதிகாரிகள் கேட்டது கிடைக்கும் என்ற நிலைமைதான் இத்தொழிற்கூட உரிமையாளர்களுக்கு எந்த அளவுக்கும் விதிகளை மீறலாம் என்கிற தைரியத்தைக் கொடுக்கின்றன.
பட்டாசு உறையின் மீது குறிப்பிடப்படும் விலைக்கும், கடைகளில் விற்பனை செய்யப்படும் விலைக்கும், கொள்முதல் விலைக்கும் பல மடங்கு வேறுபாடு இருக்கிறது. இதன் லாபமும் சில நூறு மடங்காக இருக்கிறது. ஆனால், அதன் பலன் இந்தப் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களுக்கு இதுநாள்வரை கிடைத்ததில்லை. பட்டாசுத் தொழிற்சாலைகளும், விற்பனையாளர்களும் பெரும் லாபம் சம்பாதிக்க முடிகிறது. ஆனால், தொழிலாளர்கள், உயிரைப் பணயம் வைத்துத் தயாரித்தாலும், பெறுகின்ற பலன் மிகக் குறைவுதான்.
பட்டாசுத் தொழிற்கூடங்கள் தென் மாவட்டங்களில் பல ஆயிரம் குடும்பங்களில் வாழ்க்கைக்கு ஒளியேற்றியுள்ளன என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அது சுரண்டப்பட்ட மங்கலான வெளிச்சம் என்பதும் அதைவிட மிகத் தெளிவு. பட்டாசு தயாரிப்பு போலவே, பட்டாசு விற்பனையும் எந்த அளவுகோலுக்கும், விதிமுறைக்கும் கட்டுப்படாமல் இருப்பதுதான், இத்தொழிலின் சாபக்கேடு என்றும் சொல்லலாம்.
பட்டாசு தயாரிப்பு தொழிலுக்கான பாதுகாப்பு முறைகளில் அரசு சமரசம் செய்துகொள்ளாமல், தவறு நேரும்போது அந்தப் பகுதிக்குப் பொறுப்பான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதவரை விபத்துகள் நடந்துகொண்டேதான் இருக்கும்.
பட்டாசு தயாரிப்பு, தீக்குச்சி தயாரிப்புத் தொழில்களில் தொழிலாளர் அமைப்புகள் உள்ளன. இவர்கள் தொழிலாளர்களின் கூலி நிர்ணயத்தில் செலுத்தும் அதிக கவனத்தை, தொழிற்கூடத்தின் பாதுகாப்பு விதிகள் மீறப்படுவதைச் சுட்டிக் காட்டுவதிலும், அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்வதிலும் காட்டுவதில்லை. இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. இந்தியாவில் தொழிலாளர் ஒற்றுமையைவிட, தொழிலதிபர்கள் ஒற்றுமையே "பலே பாண்டியா'வாக இருக்கிறது.
குடியாத்தத்தில் உள்ள தீக்குச்சித் தொழிற்கூடத்தில் விபத்துக் காலத்தில் வெளியேற அவசர வழி இல்லாத தொழிற்சாலைகளுக்கு உரிமத்தை நீட்டிக்க வேலூர் மாவட்ட நிர்வாகம் மறுத்துவிட்டது. நியாயமான காரணம். நிர்வாகம் அராஜகம் செய்வதாகத் தொழிற்கூடங்கள் வேலைநிறுத்தம் செய்தன. கடைசியில் தொழிலாளர் அமைப்புகள் போய் மாவட்ட நிர்வாகத்திடம் பேசி, ""தொழிலாளர்கள் பாதுகாப்பாக இல்லாவிட்டாலும், குடும்பம் பசியில்லாமல் இருக்க வேண்டும், ஆகவே அனுமதி கொடுங்கள்'' என்று தொழிலதிபர்களுக்காக வாதாடும் நிலைமையும் உருவானது.
வலிமை உள்ளவன் வைத்ததுதான் சட்டம் என்கிற நிலைமையும், தவறுகள் நடந்தால் அதற்கு அதிகாரவர்க்கத்தைப் பொறுப்பேற்க வைப்பதில்லை என்கிற நிலைமையும் தொடரும்வரை, அப்பாவிகள் உயிரிழப்பார்கள். அவர்களுக்கு இழப்பீடு தரப்படும். தவறுகள் திருத்தப்படாமல் தொடரும்!
No comments:
Post a Comment