தொகுப்பு கட்டுரை
நன்றி;
நன்றி;
26 Jul 2011
அப்துர் ரஹ்மான் இப்னு முபாரக் (ரஹ்) என்ற மிகப் பெரிய மார்க்க அறிஞர் ருத்தூஸ் என்ற பகுதிக்குச் செல்லும்பொழுது ரிக்கா என்ற இடத்தில் தங்குவது வழக்கம்.
அப்படி ரிக்காவில் தங்கும்பொழுதெல்லாம் அவர்களுக்கு ஓர் இளைஞர் பணிவிடை செய்து வந்தார். அத்தோடு அப்துர் ரஹ்மான் இப்னு முபாரக் (ரஹ்) அவர்களிடம் நபிமொழிகளையும் கற்று வந்தார்.
ஒருமுறை இப்னு முபாரக் (ரஹ்) அவர்கள் ரிக்கா வந்தபொழுது அந்த இளைஞரைக் காணவில்லை. அவர் எங்கே என்று விசாரித்தபொழுது அந்த இளைஞர் ஒருவரிடம் 10,000 திர்ஹம்கள் கடன் வாங்கியிருந்ததாகவும், அதனைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் போனதாகவும், அதனால் கடன் கொடுத்த மனிதர் புகார் கொடுத்ததன் பேரில் அவர் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் அந்த அறிஞர் கேள்விப்பட்டார். அச்சமயம் அப்துல்லாஹ் இப்னு முபாரக் (ரஹ்) அவர்களிடம் அந்தப் பணம் இருந்தது.
உடனே கடன் கொடுத்தவரைக் கண்டறிந்து அன்றிரவு தன்னை வந்து பார்க்குமாறு அழைத்தார் அறிஞர். கடன் கொடுத்தவர் வந்தபொழுது அந்தப் பணத்தைக் கொடுத்து அந்த இளைஞரைச் சிறையிலிருந்து விடுவிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
அத்தோடு இன்னொரு முக்கியமான வாக்குறுதி ஒன்றையும் வாங்கினார். அதாவது தான் தான் இந்தப் பணத்தைக் கொடுத்தேன் என்பது தங்கள் இருவரைத் தவிர வேறு யாருக்கும் மரணம் வரை தெரியக்கூடாது, குறிப்பாக அந்த இளைஞருக்குத் தெரியக்கூடாது என்பதே அந்த வாக்குறுதி. அந்த வாக்குறுதி ஒப்பந்தத்தில் இருவரும் கையெழுத்திட்டார்கள்.
மறுநாளே அந்த இளைஞனர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். அவரிடம் இப்னு முபாரக் (ரஹ்) அவர்கள் என்ன நேர்ந்தது என்று கேட்டார். நடந்ததைக் கூறிய அவர், “யாரோ ஒரு நல்ல மனிதர் அந்தப் பணத்தைக் கொடுத்து என்னை விடுவித்திருக்கிறார்” என்று சொன்னார். இதனைக் கேட்ட அறிஞர் உதவி செய்தது தான் தான் என்பது அந்த இளைஞருக்குத் தெரியாதது குறித்து நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.
இப்படி வலது கரம் கொடுப்பது இடது கரத்திற்குத் தெரியக்கூடாது என்ற அளவிற்கு அப்துல்லாஹ் இப்னு முபாரக் (ரஹ்) அவர்களைப் போன்ற அந்த முந்தைய சமுதாயத்தவர்கள் வாழ்ந்துள்ளார்கள்.
இதனைத்தான் அல்லாஹ் தன் திருமறையில் இப்படிக் கூறுகின்றான்:
அல்லாஹ்வின் பாதையில் எவர் தங்கள் செல்வத்தைச் செலவிட்ட பின்னர், அதனைத் தொடர்ந்து அதைச் சொல்லிக் காண்பிக்காமலும், அல்லது (வேறு விதமாக) நோவினை செய்யாமலும் இருக்கின்றார்களோ அவர்களுக்கு அதற்குரிய நற்கூலி அவர்களுடைய இறைவனிடத்தில் உண்டு. இன்னும் அவர்களுக்கு எத்தகைய பயமுமில்லை. அவர்கள் துக்கமும் அடையமாட்டார்கள். (திருக்குர்ஆன் 2:262)
எம்பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “மூன்று நபர்களிடம் நாளை மறுமை நாளில் அல்லாஹ் பேசவும் மாட்டான், பார்க்கவும் மாட்டான், அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். அவர்களுக்குக் கடும் வேதனையும் அளிக்கப்படும். அவர்களாவன: 1. தான தர்மம் செய்து விட்டு அதனை மக்களிடம் சொல்லிக் காட்டுபவன். 2. கரண்டைக்குக் கீழே ஆடைகளைத் தொங்க விடுபவன். 3. தனது பொருளை விற்பதற்காக பொய்ச் சத்தியம் செய்பவன்.“ (முஸ்லிம்)
No comments:
Post a Comment