Thursday, August 4, 2011

உளூவின் சட்டங்கள்.


அமல்கள் யாவும் எண்ணங்களைப் பொறுத்தே' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உமர் பின் கத்தாப் (ரலி) நூல்கள்: புகாரீ 1, முஸ்லிம் 3530. நிய்யத் என்பதை முஸ்ம்களில் சிலர் தவறாக விளங்கி வைத்துள்ளனர். உளூ, தொழுகை, நோன்பு போன்ற கடமைகளை நிறைவேற்றும் போது சில அரபிச் சொற்களைக் கூறுவது தான் நிய்யத் என்று கருதுகின்றனர்.நிய்யத் என்ற சொல்லுக்கு வாயால் மொழிதல் என்று பொருள் இல்லை. மனதால் நினைத்தல் என்பதே அதன் பொருளாகும். முன் கைகளைக் கழுவுதல். நீ உளூச் செய்யும் போது இரு முன் கைகளையும் கழுவி தூய்மையாக்கினால் உனது சிறு பாவங்கள் விரல் நுனியிருந்து வெளியேறுகின்றன' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அம்ர் பின் அபஸா (ரலி) நூல்: நஸயீ 147. வாயையும், மூக்கையும் சுத்தம் செய்தல். நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு உளூச் செய்தார்கள் என்பதற்கு உஸ்மான் (ரலி) அவர்கள் செயல் விளக்கம் அளித்த போது, 'தமது இரு கைகளையும் மூன்று தடவை கழுவி விட்டு, (தண்ணீர் எடுத்து) வாய் கொப்புளித்து, மூக்கையும் சுத்தம் செய்தார்கள்' என்று கூறப்பட்டுள்ளது. நூல்: புகாரீ 160, 164. அலீ (ரலி) அவர்கள் உளூச் செய்வதற்குரிய தண்ணீரை எடுத்து வரச் செய்து, வாய்கொப்பளித்து, மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தி,இடது கையால் சுத்தம் செய்தார்கள். பின்னர் 'இது தான் நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்த முறையாகும்' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்து கைர் நூல்கள்: நஸயீ 90, அஹ்மத் 1078, தாரமீ 696. முகத்தைக் கழுவுதல். நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்த முறையை அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் விளக்கும் போது, தமது கையைப் பாத்திரத்தில் நுழைத்து மூன்று முறை முகத்தைக் கழுவினார்கள். அறிவிப்பவர்: யஹ்யா நூல்: புகாரீ 186. நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்யும் போது தண்ணீரைக் கொண்டு தமது தாடியைக் கோதிக் கழுவுவார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: அஹ்மத் 24779. இரு கைகளையும் முழங்கை வரை கழுவுதல். நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்த முறையை உஸ்மான் (ரலி) அவர்கள் விளக்கும் போது, முகத்தையும், மூட்டு வரை இரு கைகளையும் மூன்று தடவை கழுவினார்கள். அறிவிப்பவர்: ஹும்ரான் நூல்: புகாரீ 160. தலைக்கு மஸஹ் செய்தல். நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்த முறையை அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் விளக்கும் போது, கையை (பாத்திரத்தில்) நுழைத்து இரு கைகளையும் தலையில் வைத்து முன் பக்கத்திலிருந்து பின் பக்கம் கொண்டு வந்து பின்னர் பின்பக்கமிருந்து முன் பக்கம் கொண்டு வந்தார்கள். இவ்வாறு ஒரு தடவை செய்தார்கள். அறிவிப்பவர்: யஹ்யா நூல்: புகாரீ 186. காதுகளுக்கு மஸஹ் செய்தல். நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்த போது தலைக்கும், தமது ஆட்காட்டி விரல்களைக் காதுகளின் உட்பகுதியிலும், கட்டை விரலை காதுகளின் வெளிப்பகுதியிலும் வைத்து காதுகளுக்கும் மஸஹ் செய்தார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) நூல்: நஸயீ 101. இரண்டு கால்களையும் கழுவுதல். நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்த முறையை உஸ்மான் (ரலி) அவர்கள் விளக்கும் போது, இரு கால்களையும் கரண்டை வரை மூன்று தடவை கழுவினார்கள். அறிவிப்பவர்: ஹும்ரான் நூல்: புகாரீ 160. உளூச் செய்யும் தொட்டியிலிருந்து மக்கள் உளூச் செய்து கொண்டிருந்த போது அவ்வழியே சென்ற அபூஹுரைரா (ரலி) அவர்கள் (எங்களைப் பார்த்து) 'உளூவை முழுமையாகச் செய்யுங்கள். குதிகால்களைச் சரியாகக் கழுவாதவர்களுக்குக் கேடு தான்' என்று நிச்சயமாக முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள்' என்றார்கள். அறிவிப்பவர்: முஹம்மத் பின் ஸியாத் நூல்: புகாரீ 165.

No comments:

Post a Comment