Tuesday, August 2, 2011

சாலை விபத்து முதலுதவி மருத்துவர்கள் சொல்வது என்ன?



சாலை விபத்து ஏற்படும்போது அதிகமாக பாதிப்புக்குள்ளாவது கைகளும் கால்களுமே! அதற்கான முதலுதவி முறைகள் குறித்து மருத்துவர்கள் சொல்வது என்ன?

சாலை விபத்தின்போது கை மற்றும் கால்களில் நான்கு விதமான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

1. எலும்பு முறிவு (Fractures)

2. உறுப்புகள் இடம் பெயர்தல் (Dislocation)

3. உறுப்புகள் அறுந்து துண்டாதல் (Amputation) 

4. திறந்த காயங்கள் (Open Wounds)

முறிவு ஏற்பட்ட இடத்தில் அதிகமாக வலி இருப்பது, அந்த இடத்தைத் தொடும்போது கூச்சம் இருப்பது, வீக்கம் மற்றும் நிற மாற்றம் காணப்படுவது, தனியாக எலும்புகள் அசைவது என இவை அனைத்தும் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்பதற்கான அறிகுறிகள். எலும்புகள் தனியாக அசைந்தால் கையையோ, காலையோ ஆட்டிப் பார்க்கக் கூடாது. குறிப்பாக முறிந்த எலும்புகளை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவர முயற்சிக்கவே கூடாது.

முறிவு ஏற்பட்டு இருக்கும் நிலையில் அவரது எலும்புகளை அசையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதற்குக் கட்டுத்துணிகளைக் கொண்டு கட்டு கட்டலாம்!
கட்டு கட்டும் முறைகள்
எலும்பு முறிவு ஏற்பட்டவருக்கு எக்காரணத்தைக் கொண்டும் முறிவு ஏற்பட்டுள்ள இடத்தின் மேல் நேரடியாகக் கட்டு கட்டக் கூடாது.

மரப்பட்டையோ அல்லது ஸ்கேலோ வைத்துக் கட்டுப்போடலாம். சட்டையோ அல்லது சுடிதார் துப்பட்டாவோ எது கிடைக்கிறதோ, அதை முக்கோண வடிவில் மடித்துக் கட்டுப் போடலாம். இதனால் கை அசைவதைத் தடுக்க முடியும். விரல்களில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பின் பேனாவை வைத்துக்கூட கட்டுப் போடலாம்.
உறுப்புகள் இடமாற்றம்
சாலை விபத்தின்போது உறுப்புகள் இடம் பெயர்தலும் அதிகம் உண்டு. இது போன்று உறுப்புகள் இடம் பெயர்ந்து காணப்பட்டால் உறுப்புகள் மேலும் அசையாவண்ணம் கட்டி, மருத்துவமனைக்குக் கொண்டு செல்வது அவசியம்!
உறுப்புகள் அறுந்து துண்டாதல்
இது மிகவும் ஆபத்தானதாகும். விபத்தின்போது உறுப்புகள் அறுந்து துண்டாகித் தனியாக விழுந்துகிடந்தால் அதைப் பத்திரமாக மருத்துவமனைக்குக் கொண்டுவர வேண்டும். துண்டான பகுதியை ஒரு பிளாஸ்டிக் உறையில் போட்டு மூடி, அதை ஐஸ் பாத்திரத்தில் வைத்து மருத்துவமனைக்குக் கொண்டு வருவது நல்லது. துண்டான பாகத்தை நேரடியாக ஐஸ் பெட்டியில் வைக்கக் கூடாது.

எக்காரணத்தைக் கொண்டும் டிரை ஐஸில் வைக்கக்கூடாது. துண்டான பாகத்தை ஒட்ட வைக்க முடியுமா, முடியாதா என்று யோசிக்காமல் அதைப் பத்திரமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்வது முக்கியம். துண்டானது போக மீதம் உள்ள பகுதியை நல்ல தண்ணீரில் கழுவுவது மிகவும் அவசியம்.
திறந்த காயங்கள்
உறுப்புகள் துண்டானாலோ அல்லது உடைந்து போனாலோ மிகவும் கவனம் தேவை. இது போன்ற நேரங்களில் சாலைகளில் கிடக்கும் குப்-பைகளில் உள்ள கிருமிகள் காயங்களின் வழியே உடலில் நுழைந்து பாதிப்பை ஏற்படுத்தும். அடிபட்ட இடத்தில் தூசி, தும்புகள் ஒட்டிக்கொண்டு இருந்தால் அவற்றை ஜாக்கிரதையாக அகற்றிவிட வேண்டும்!


No comments:

Post a Comment