Thursday, August 4, 2011

நோன்பாளிகளின் கவனத்திற்கு!



நன்மைகளை கொள்ளையடிக்கும் மாதம். 'ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் (தொழுது) வணங்குகிறவரின் முன்னர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்!' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூ ஹுரைரா(ரலி) , நூல்: புகாரி : 2008) 'ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்ததும் நோன்பு நோற்கிறவர் (அதற்கு) முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்! லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நின்று வணங்குகிறவரின்இ முன்னர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்!' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர்:அபூஹு​ரைரா(ரலி),நூல்: புகாரி : 2014) புனிதமிகு இந்த ரமலானிலே செய்யும் நல்லறங்களுக்கு நிகராக வேறு எந்த நாட்களிலும் கிடைக்காத மகத்தான பரிசுகள் இறைவனிடமிருந்து கிடைக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளார்கள். நம்மில் அதிகமானோர் அதற்காக நம் ஓய்வு, உறக்கம் கூட மறந்து அல்லாஹ்வுக்காக செய்யவேண்டிய அமல்களில் ஈடுபடுவது மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்றாலும், இன்னும் சில பேர் இந்த ரமலானில்கூட இறைவழிபாடுகளின் விஷயத்தில் அலட்சியம் செய்பவர்களாக இருப்பதைக் காண்கிறோம். கடைகளில் தள்ளுபடி விலையில் பொருட்களை வாங்குவதற்கு அந்த கூட்ட நெரிசலிலும் நாம் காட்டும் ஆர்வம், அல்லாஹ்வின் இந்த மகத்தான நற்கூலியை அடைவதில் காட்டுவதில்லை. ஒவ்வொரு நன்மையும் அது போன்ற பத்து மடங்கு முதல் எழுநூறு மடங்குகளுக்கு நிகரானது. நோன்பு எனக்குரியது; அதற்கு நானே கூலி வழங்குவேன். நோன்பு நரகிலிருந்து காக்கும் கேடயமாகும் என்று உங்கள் இறைவன் கூறுகின்றான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி); நூல்:முஸ்லிம் ஆக‌ ரமலானில் நாம் ஒரு நாள் செய்யும் நல்லறங்கள் அல்லாஹ்விடத்தில் 10 முதல் 700 நாட்கள் செய்யும் நல்லற‌ங்களுக்கு நிகரானதாக இருக்கிறது. டிவி, இன்டர்நெட், செல் போன்கள், மற்ற பொழுது போக்குகள் மூலம் முடிந்தவரை நோன்பிருக்கும் நேரத்தை செலவழிப்பதில் முனைப்பாக‌ இருக்கும் நம் மக்கள், அல்லாஹ்வின் அளப்பரிய அருளைத் தேடுவதில் முனைப்புக் காட்டாமல், ரமலானின் நாட்களை வீணாக்கிக் கொண்டிருப்பது வேதனையான விஷயம்தான்! அடுத்த நொடி என்ன நடக்கும் என்று சொல்ல முடியாத நமக்கு, அடுத்த ரமலானை நாம் அடைவோம் என்பதில் யாரும் எந்த உத்திரவாதமும் கொடுக்க இயலாது. ஆகவே தொழுகையை சரியான முறையில் கடைப்பிடிப்பது, குர்ஆன் ஓதுதல், அதிகமதிகம் பிரார்த்தனையில் ஈடுபடுவது, இஸ்லாத்தின் ஒவ்வொரு அம்சங்களையும் பயான் கேட்பதின் மூலமோ, குர்ஆன்/ஹதீஸ் சம்பந்தமான இணையங்களைப் படிப்பதின் மூலமோ(எதன் மூலமாவது)அறிந்துக் கொள்வதில் ஆர்வத்துடன் ஈடுபடுவது, அல்லாஹ் நமக்கு பெருக்கித் தருவான் என்ற எண்ணத்தில் மனமுவந்து தாராளமாக தான தர்மங்கள் செய்வது, உங்களைப் போன்ற நோன்பாளிகளுக்கு உங்களால் இயன்றளவு நோன்பு திறக்க கொடுத்து உதவுவது மற்றும் பொதுநல சேவைகள் என மறுமைக்குரிய நற்காரியங்களை அதிகப்படுத்திக் கொள்ளவேண்டும். அன்புள்ள சகோதர சகோதரிகளே! கடந்த நாட்கள் கடந்ததாக இருக்கட்டும்; இனி மீதமிருக்கும் நாட்களிலாவது நம்மால் முடிந்த நல்ல அமல்களில் நம்மை ஈடுபடுத்திக்கொள்ள முயற்சி செய்வோம்மாக இன்ஷாஅல்லாஹ்.
Length: ‎0:50

No comments:

Post a Comment