in இராணுவம், சிறுபான்மையினர், போராடும் உலகம், போலீசு by சந்தனமுல்லை, April 20, 2011 -
இந்த கடிதத்தை உனக்காக எழுதுகிறேன். உனக்கு என்னைத் தெரியாது. ஆனால், சில மாதங்களாக உன்னை எனக்குத் தெரியும். சில நாட்களாக உன்னைப் பற்றிய நினைவுகளும்….
ஒமர் கய்யாம் பட்,
இந்த கடிதத்தை உனக்காக எழுதுகிறேன். உனக்கு என்னைத் தெரியாது. ஆனால், சில மாதங்களாக உன்னை எனக்குத் தெரியும். சில நாட்களாக உன்னைப் பற்றிய நினைவுகளும்….துஃபைலும், ஜூபைரும் மற்றும் வாமிக், ஜாவீத்…இனாயத் மற்றும் உன்னோடு கூட, இறந்துபோன இன்னும் சிலரது நினைவுகளும்… ஆமாம், நீ இறந்துவிட்டாய், ஒமர். இல்லையில்லை.. கொல்லப்பட்டாய்….
சில மாதங்களுக்கு முன்புதான் – கடையை மூடியிருந்த ஷட்டரின் மீது தலையை மோதியடிக்கப்பட்டு மயக்கமானாய். பின்னர் காவல்நிலையத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டாய். காவல்துறையினராலும், சிஆர்பிஎஃப் போலீசினாலும் பந்தாடப்பட்டு, கிட்டதட்ட 51 மணிநேர சித்திரவதைக்குப் பிறகு நீ இறந்து போனாய். இறக்கும்போது உனக்கு17 வயதுதான். பதினொன்றாவது வகுப்பைக் கூட தாண்டியிருக்கவில்லை நீ, ஒமர்.
உனது இறப்பு காஷ்மீரைத் தாண்டி வசிப்பவர்களுக்கு பத்தோடு பதினொன்று நூற்றுக்கணக்கில் இறந்துபோனவர்களுள் நீயும் ஒரு ஆள்.
அந்த வெள்ளிக்கிழமை, மசூதியில் பிரார்த்தனை செய்துவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தாய். உனக்குச் சில மீட்டர்கள் முன்னால் சென்று கொண்டிருந்த மக்களை பின் தொடர்ந்து நீயும் சென்றாய். அவ்வளவுதான். காவல்துறையினரும், சிஆர்பிஎஃப்பும் சூழ்ந்து கொண்டு தடிகளால் உன்னைத் தாக்கினார்கள். அடிகளாலும் உதைகளாலும் உன்னை மூர்க்கமாய் கிழித்தெறிந்தார்கள்.
உன்னுடைய தந்தை கய்யாம், ஜெயிலில் நீ கழித்த கடைசி மணித்துளிகளை – மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது நீ சொன்ன வார்த்தைகளை நினைவுகூர்கிறார், ஒமர்.
நீ உயிருடன் இருந்த அந்த கடைசி நிமிடங்களில் என்ன நினைத்தாய், ஒமர்?
ஏன் உனக்கு அது நிகழ்ந்திருக்க வேண்டும்? எனக்கும் தெரியவில்லை.
நீ ஏன் அவ்வளவு கொடூரமாக மரணத்தை நோக்கி துரத்தப்பட்டாயென்று? சில நிமிடங்களில் உன் வாழ்க்கை சின்னாபின்னமாக்கப்பட்டதென்று? உன் தந்தையிடமிருந்தும் உன் மூன்று தமக்கைகளின் வாழ்விலிருந்தும் நீ ஏன் இப்படி அபாண்டமாக பறிக்கப்படவேண்டும்?
நீ ஏன் அவ்வளவு கொடூரமாக மரணத்தை நோக்கி துரத்தப்பட்டாயென்று? சில நிமிடங்களில் உன் வாழ்க்கை சின்னாபின்னமாக்கப்பட்டதென்று? உன் தந்தையிடமிருந்தும் உன் மூன்று தமக்கைகளின் வாழ்விலிருந்தும் நீ ஏன் இப்படி அபாண்டமாக பறிக்கப்படவேண்டும்?
ஒமர், நீ யார் மீதும் கல்லெறியவில்லை. கோஷமிட்டுச் சென்றவர்களின் பின்னால் நீ சென்றாய், அவ்வளவுதான். உனது மரண ஊர்வலத்தில் ஆண்களும் பெண்களும் மாரடித்து கதறியபடி சென்ற கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
உனது நண்பர்கள் சில்லிட்டுப்போன உன்னுடலை மாறி மாறி சுமந்தனர். உன் மரணம் அவர்களது ஆத்திரத்தைக் கிளறியது. ஒவ்வொரு படுகொலையும் போராட்டத்தை தட்டியெழுப்புகிறது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த வந்த காவல்துறையினரை நோக்கி கல்லெறியத் தூண்டியது. உன்னுடலை புதைக்குமட்டும் அமைதியாயிருக்கும்படி மன்றாடிய பெரியவர்களுக்காக கண்களில் நீர் வழிய அந்தக் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டனர், அந்த இளைஞர்கள்.
ஆனாலும் நீ கேட்கலாம், உமர்….ஏன் எங்களுக்கு மட்டும் இப்படி? ஏன் எங்கள் பெண்களுக்கு மட்டும் இப்படி? எதற்காக நாங்கள் இவ்வளவு அடக்குமுறைகளை அனுபவிக்க வேண்டும்? எதற்காக அப்பாவி மக்களை கொலை செய்ய வேண்டும்? எதற்காக எங்களது அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படவேண்டும்?
கேள்விகள் நன்றாகத்தான் இருக்கின்றன, ஒமர்!
இந்த நாட்டில் பலர், அதிகாரம் கொண்ட சிலர் காஷ்மீர்தான் இந்தியாவின் தேசிய ஒருமைப்பாடு என்றும், அங்கிருக்கும் ஐந்து வயதுக்குழந்தை கூட தீவிரவாதி என்றும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இதைக் கேட்டு நீ நகைக்கிறாய்தானே, ஒமர். புரிந்து கொள்ளமுடிகிறது.
இந்த நாட்டில் பலர், அதிகாரம் கொண்ட சிலர் காஷ்மீர்தான் இந்தியாவின் தேசிய ஒருமைப்பாடு என்றும், அங்கிருக்கும் ஐந்து வயதுக்குழந்தை கூட தீவிரவாதி என்றும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இதைக் கேட்டு நீ நகைக்கிறாய்தானே, ஒமர். புரிந்து கொள்ளமுடிகிறது.
இதோ, இப்போது உன்னைப் போல பலரும் பலியிடப்பட்ட பின்னர் இரும்புக் கரங்களின் மூலம் அமைதி திரும்பியிருப்பதாகச் சொல்கிறார்கள்.. எல்லோரும் தேசபக்தியை, ஒற்றுமையை உலகுக்கு உணர்த்த இந்தியாவுக்காக கிரிக்கெட் பார்க்கத் துவங்கிவிட்டார்கள். தேசநலன் என்பதும் மக்களின் நலன் என்பதும் பிசிசிஐயின் குழுக்கள் விளையாடும் கிரிக்கெட் பந்தில்தான் உள்ளதே தவிர அரசியல் ஆர்ப்பாட்டங்களில் அல்ல என்றே நினைக்கிறார்கள்.
இலட்சக்கணக்கான போலீசையும் ராணுவத்தையும் குவித்துவிட்டு பழைய நிலைமை திரும்பியிருப்பதாக கூறிக்கொள்கிறது அரசு. விடுதலையைக் கேட்கும் மக்களிடம் இப்படித்தான் நடந்து கொள்கிறது அதிகார வர்க்கம்.
ஜம்மு மற்றும் காஷ்மீரிலிருந்து வரவழைக்கப்பட்ட 44 மாணவர்களிடம் ப,சிதம்பரம் ”முன்னேற்றம் தேவையெனில் அமைதி மிகவும் முக்கியம்” என்று அறிவுறுத்துகிறார், நாட்டின் மற்ற பாகங்களுக்கு கிடைக்கும் எல்லா வசதி வாய்ப்புகளும், முன்னேற்றத் திட்டங்களும் காஷ்மீர் மக்களுக்கும் கிடைக்க வேண்டுமெனில் அங்கு அமைதி நிலவுவது மிகவும் முக்கியம் என்று அவர்களிடம் அழுத்திச் சொல்லுகிறார்.
நாட்டின் மறுகாலனியாக்கத்திற்கு உங்கள் விடுதலை உணர்வும், சுயநிர்ணய உரிமைகளும் நல்லதல்லவே!
எது வசதி வாய்ப்பு? எது முன்னேற்றம்?
நாட்டின் அத்தனை வளங்களையும் பட்டா போட்டு பன்னாட்டு முதலாளிகளுக்கு விற்பதுதான் முன்னேற்றமா? பழங்குடி மக்களை அடக்கி ஒடுக்குவதுதான் வசதி வாய்ப்பா? இந்திய ஜனநாயகம் என்றும் இறையாண்மை என்றும் சொல்லிக் கொள்வதற்கு அர்த்தம்தான் என்ன?
மிலே சுர் மேரா துமாரா என்றும் ஹம் சப் ஏக் ஹென் என்றும் பாடல்களை சொல்லித் தருகிறார்களே, அவையெல்லாம் உண்மையில் என்ன? உரிமைக்கான ஒவ்வொரு போராட்டமும் நசுக்கப்பட்டு, துப்பாக்கியின் முனையில் அன்றாட வாழ்க்கையை கழிக்க வேண்டியதுதானா?
உனது நுரையீரல் நொறுங்கியதாலும், மூளைச்சாவினாலும் நீ இறந்துபோனதாக உனது மருத்துவமனை சான்றிழ் கூறுகிறது. கேள்விகள் ஒமர், உன் முகம் எழுப்பும் அத்தனை கேள்விகள்… என்னை துளைத்தெடுக்கின்றன, ஒமர் கய்யாம்! உன்னைப்போல எத்தனை பேர், விளையாடும்போதும், ஜீலம் நதிக்கரையில் அமர்ந்திருக்கும்போதும், பள்ளிக்கூடம் விட்டு வரும்போதும், தோட்டங்களுக்குச் சென்றிருக்கும்போதும்…. எத்தனையெத்தனை ஒமர்கள்?
இந்தப் படுகொலைகள் ஒவ்வொன்றிற்கும் பதில் சொல்லும் கடமை இந்த நாட்டிற்கு இருக்கிறது, ஒமர். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற மக்களின் கோரிக்கைக்கு இன்னும் பதிலில்லை.
இந்தியாவின் மானப்பிரச்சினையும், தேசபக்தியும் வெளிப்பட வேண்டியது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் அல்ல, ரத்தம் சொட்ட சொட்ட மடிந்து போன, வன்முறையால் அடக்கி ஒடுக்கப்பட்ட உங்கள் ஒவ்வொருவரின் சாவுக்கான பதிலிலும்தான்…
இறந்து போன 102 பேருக்கு தலா 5 லட்சங்கள் தருவதாக அரசாங்கம் அறிவித்திருக்கிறது. இந்த 5 லட்சங்களுக்கு என்ன அர்த்தம்? நம்பிக்கைக் கீற்றாய், தங்களின் கண்ணுக்குக் கண்ணாய் தாய்க்கும்- தந்தைக்கும் இருந்தவர்களை இந்த இழப்பீடு திரும்பிக் கொண்டுவந்துவிடுமா?
திரும்பவும் கேள்விகள் ஒமர்….கேள்விகளே என்னைச் சூழ்ந்திருக்கின்றன!
சோபோரில் நடந்த அமைதியான ஊர்வலத்தில் ராணுவத்தின் துப்பாக்கிச்சூடால் தன்மகனை இழக்கக் கொடுத்த அந்த தந்தை சொன்னதை நினைவு கூர்கிறேன், ஒமர். அவர் இழப்பீட்டுத் தொகையை பெற மறுத்துவிட்டார், டீத்தூள் வாங்கச் சென்ற தன் மகன் அமைதியான வழியில் எதிர்ப்பைக் காட்ட நடத்தப்பட்ட ஊர்வலத்தால் ஈர்க்கப்பட்டு கலந்துக்கொண்டிருக்கிறான். இடையில் புகுந்த ராணுவம் நிராயுதபாணியாய் நின்றவர்களை – அப்பாவி பொதுமக்களை அதிரடியாய் சுட்டிருக்கிறது. அப்படிக் கொன்றவர்களிடமிருந்தே என் மகனின் தியாகத்துக்கு விலை பேச மாட்டேன் என்று அவர் இழப்பீட்டுத் தொகையை பெற மறுத்துவிட்டார், ஒமர்!
உங்கள் குடும்பத்தினர் உணரும் அந்த வெற்றிடத்தை ஒருநாளும் இந்த பணம் ஈடு செய்யாது. வலிகளையும் போக்காது. விசாரணைக்கு எடுத்துக்கொண்ட 1321 வழக்குகளில் 54ஐ மட்டும் எடுத்துக்கொண்டு மற்றவழக்குகளை தள்ளுபடி செய்துவிட்டது அரசு. இதில் எட்டாயிரம் காஷ்மீர் மக்கள் காணமல் போனது கணக்கிலேயே வராது.ராணுவத்தின் அடக்குமுறைக்கு சாட்சியாக மரித்த மக்களின் பெயர்களை முறையாகக்கூட பதிவு செய்யவில்லை,அரசாங்கம்.
ஆமாம், ஒமர், உங்கள் சுயநிர்ணய உரிமையை இந்த அரசாங்கம் பறித்திருக்கிறது. எங்கள் கண்களால் நாங்கள் இதைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
உங்கள் ஒவ்வொருவரின் உயிரை, வாழ்வை காக்கத் தவறிய அரசாங்கம், தனது இறையாண்மையை, பிச்சையிடுவது போல இந்த தொகையைக் கொடுத்து உறுதிப்படுத்திக்கொள்கிறது. ஒமர், தான் செய்த பல்லாயிரக்கணக்கான கொலைகளை மூடி மறைத்து, ரத்தக்கறை படிந்த தனது கைகளை பொதுவில் சுத்தப்படுத்திக்கொள்கிறது இந்த அரசாங்கம். ஆம், அப்பாவி சிறுபிள்ளைகளை – அவர்களின் கனவுகளோடு உரிமைகளையும் ஒருசேரக் கொடூரமாகச் செய்த கொலைகளை…
No comments:
Post a Comment