Thursday, August 18, 2011

கப்ரு ஜியாரத் செய்யும் பெண்கள்!



இஸ்லாத்தின் ஆரம்பக்காலக் கட்டங்களில் கப்ருகளுக்கு ஜியாரத் செய்வதை நபி (ஸல்) அவர்கள் முழுமையாகத் தடுத்திருந்தார்கள். பின்னர் ஸஹாபாக்கள் இஸ்லாத்தை ஓரளவு விளங்கிக் கொண்டதும் அவர்களை கப்ருகளை ஜியாரத் செய்யுமாறு கூறினார்கள். அதுவும் ஆண்களுக்குத் தான். பெண்கள் ஜியாரத் செய்வது குறித்து எச்சரித்து, அவ்வாறு செய்யும் பெண்களை சபிக்கவும் செய்தார்கள்.
“கப்ருகளை ஜியாரத் செய்யும் பெண்களை நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்” என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம் : திமிதி, இப்னுமாஜா, அஹ்மத் மற்றும் இப்னு ஹிப்பான்.
ஜியாரத் செய்வதின் நோக்கம்:-
கப்ருகளில் ஜியாரத் செய்யக்கூடிய ஆண்களின் நோக்கம் மறுமையைப் பற்றிய சிந்தனையை வளர்த்துக் கொள்வதற்காக மட்டுமே இருக்கவேண்டும்.
“கப்ருகளை ஜியாரத் செய்யுங்கள், நிச்சயமாக அது உலகப் பற்றை நீக்கும், மறுமையை நினைவு படுத்தும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஸயீதுல் குத்ரி, நூல் : அஹ்மது.
கப்ரில் உள்ளவர்களுக்காக நாம் செய்யவேண்டிய துஆ:-
“முஃமினான மண்ணறைவாசிகளே! உங்களுக்கு ஸலாம் உண்டாகட்டும். நிச்சயமாக நாங்களும் அல்லாஹ் நாடினால் உங்களை மரணம் மூலம் சந்திப்பவர்களே!” அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல்கள் : முஸ்லிம், அஹ்மது, நஸயீ.
“முஃமினான, முஸ்லிமான மண்ணறை வாசிகளே! உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்! நிச்சயமாக, இன்ஷா அல்லாஹ், நாங்களும் உங்களை அடுத்து வருபவர்களே! உங்களுக்கும் எங்களுக்கும் அல்லாஹ்விடம் சுகவாழ்வைக் கேட்கிறோம்” அறிவிப்பவர் : புரைதா (ரலி), நூல்கள்: முஸ்லிம், அஹ்மது, இப்னு மாஜா.
ஜியாரத் செய்யும் போது கவனிக்க வேண்டிய மற்றும் கடைபிடிக்கப்பட வேண்டியவைகள்: -
  • கப்ரு தரைக்கு மேல் உயர்த்தப்பட்டதாக இருக்கக்கூடாது
  • பூசி, மெழுகிய கட்டடமாக இருக்கக்கூடாது
  • கப்ரில் அழுது புலம்புவது கூடாது
  • கப்ரில் உள்ளவர்களிடம் நமது தேவைகளைக் கூறி பிரார்த்திக்கக் கூடாது
  • கப்ரில் உள்ளவர்களுக்காக நாம் அல்லாஹ்விடம் நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த துஆவைச் செய்யவேண்டும்
  • இஸ்லாத்திற்கு மாற்றமான எந்தக்காரியங்களையும் செய்யக்கூடாது
தர்ஹாக்களுக்கு ஜியாரத் செய்யச் செல்லலாமா?
நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்கு ஜியாரத் செய்ய அனுமதி வழங்கியபோது இறந்தவர்களை அடக்கம் செய்யப்படும் இடங்களுக்குச் சென்று அங்கு தான் ஜியாரத் செய்ய அனுமதித்தார்களே தவிர கப்ருகளில் கட்டங்கள் கட்டி, பூசி, மெழுகி இஸ்லாத்திற்கு முரணான காரியங்கள் நடைபெறும் இடங்களுக்குச் செல்லச் சொல்லவில்லை. இது போன்ற இடங்களுக்குச் சென்று வருவது நபி (ஸல்) அவர்களின் கட்டளையை மீறுபவர்களுக்குத் துணைபோவது போலாகும் என்பதை பின்வருபவைகள் விளக்குகின்றது.
கப்ருகளை வணங்குவதும், அதனிடம் கையேந்தி நிற்பதும் நபி (ஸல்) அவர்களின் காலத்திற்கு முன்பிருந்தே இருந்துவரும் பழக்கமாகும். நபி (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த யூதர்களும், கிறிஸ்தவர்களும் தங்களுக்கு முன்னால் வாழ்ந்த நபிமார்கள் மற்றும் நல்லடியார்களின் கப்ருகளில் கட்டடம் எழுப்பி, இன்று நம்மவர்கள் தர்ஹாக்களில் செய்வதைப் போல அதில் விளக்கு ஏற்றி, அதை பூசி, மெழுகி பூஜை போன்ற சடங்குகள் செய்து அவர்களின் நினைவு நாட்களில் திருவிழாக்கள் (கந்தூரிகள்) நடத்தி வந்தனர்.
கற்களையும், சிலைகளையும், கப்ருகளையும், இறந்தவர்களையும் வழிபடும் மக்களின் அறியாமை என்னும் இருளை அகற்றி சத்தியத்தின் அறிவு என்னும் ஒளியை பரப்ப வந்த நபி (ஸல்) அவர்கள், கப்ருகளின் மேல் கட்டடங்கள் (தர்ஹா, மஸ்ஜிதுகள்) எழுப்பி, அதில் விளக்கு ஏற்றி, பூசி, மெழுகி, கந்தூரி நடத்துபவர்களைக் கடுமையாக சபித்ததோடல்லாமல் அந்த உயர்த்தப்பட்ட கப்ருகளை அலி (ரலி) அவர்கள் மூலமாக இடித்துத் தரைமட்டமாக்கினார்கள். இதுபற்றி நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கைகள் அடங்கிய ஹதீஸ்கள் சிலவற்றைக் காண்போம்.
அவ்லியாக்களின் கப்ருகளில் மஸ்ஜிதைக் கட்டுபவர்கள் அல்லாஹ்வின் சாபத்திற்குரியவர்கள்:-
ஹதீஸ் ஆதாரம்:- “யஹுதிகளையும், நஸாரக்களையும் அல்லாஹ் சபிப்பானாக. ஏனெனில் அவர்கள் தங்களின் நபிமார்கள் மற்றும் நல்லவர்களின் கப்ருகளை மஸ்ஜிதாக ஆக்கிக்கொண்டனர்” (நூல் : புகாரி)
அவ்லியாக்களின் கப்ருகளில் தர்ஹாக்களை எழுப்புபவர்கள் அல்லாஹ்வின் படைப்பினங்களிலேயே மிகவும் கெட்டவர்கள் ஆவார்கள்:-
ஹதீஸ் ஆதாரம்:- “அவர்களில் நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து மரணித்து விடும் போது அவரது கப்ரில் வணங்குமிடத்தை ஏற்படுத்தி விடுகின்றனர். இவாகளின் வடிவங்களையும் அதில் அமைத்து விடுகின்றனர். கியாம நாளில் அல்லாஹ்விடத்தில் அவர்கள்தான் படைப்பினங்களில் மிகவும் கெட்வர்கள்” அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் புகாரி மற்றும் முஸ்லிம்.
அவ்லியாக்களின் கப்ருகளில் சந்தனம் போன்றவற்றைப் பூசக்கூடாது:-
ஹதீஸ் ஆதாரம்-1:- “கப்ருகள் பூசப்படுவதை நபி (ஸல்) அவர்கள் தடுத்தனர்” அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), ஆதார நூல்கள் : அஹ்மத், முஸ்லிம், நஸயீ மற்றும் அபூதாவுத்.
ஹதீஸ் ஆதாரம்-2:- “கப்ருகள் பூசப்படுவதையும், அவற்றில் எதனையும் எழுதப்படுவதையும் அவற்றின் மீது கட்டடம் (தர்ஹா) எழுப்பப்படுவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடுத்தனர்” அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), ஆதார நூல் : திமிதி.
அவ்லியாக்களின் கப்ருகளில் கந்தூரி விழாக்கள் நடத்தக்கூடாது:-
ஹதீஸ் ஆதாரம்:- “எனது கப்ரை (கந்தூரி) விழாக்கள் நடக்கும் இடமாக ஆக்கிவிடாதீர்கள். உங்கள் வீடுகளையும் கப்ருகளாக ஆக்கிவிடாதீர்கள். நீங்கள் எங்கிருந்த போதும் எனக்காக ஸலவாத்து சொல்லுங்கள். அது என்னை வந்தடையும்” அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: அபூதாவுத்.
அவ்லியாக்களின் கப்ருகளை வணங்கும் இடமாக ஆக்கக்கூடாது:-
ஹதீஸ் ஆதாரம்-1 :- “யஹுதிகளும், நஸராக்களும் தங்கள் நபிமார்களின் கப்ருகளை வணங்குமிடங்களாக ஆக்கிக்கொண்டனர். அல்லாஹ் அவர்களைச் சபிப்பானாக” அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம்.
ஹதீஸ் ஆதாரம்-2 :- “உங்களுக்கு முன்னர் வாழ்ந்தவர்கள் தங்கள் நபிமார்களின் கப்ருகளையும், நல்லடியார்களின் கப்ருகளையும் வணங்குமிடமாக ஆக்கிவிட்டனர். அறிந்து கொள்க! கப்ருகளை வணங்குமிடமாக ஆக்கிவிடாதீர்கள்! அதை நான் தடுக்கிறேன்” அறிவிப்பவர் : அப்துல்லாஹ் அல்பஜலி (ரலி), நூல் : முஸ்லிம்.
தர்ஹாக்களைக் கட்டுபவர்கள் வேண்டுமானால் நாங்கள் அவ்லியாக்களை வணங்குவதற்காக கட்டவில்லை என்று கூறலாம். ஆனால் இவைகள் எல்லாம் அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்ய வேண்டிய வணக்கங்கள் என குர்ஆனும், ஹதீஸும் கூறுகிறது: -
  • நேர்ச்சை ஒரு வணக்கமே, அதை அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்யவேண்டும் (2:265)
  • பிரார்த்தனை (துஆ) ஒரு சிறந்த வணக்கமாகும் (72:18, 2:186, 3:135, 27:62)
  • முறையிடுதல், மன்றாடுதல் மற்றும் உதவி தேடுதல் ஒரு வணக்கமாகும் (1:4 மற்றும் திர்மிதி)
  • அறுத்துப்பலியிடுதல் ஒரு வணக்கமாகும் (6:162, 108:2 மற்றும் முஸ்லிம்)
  • பயபக்தியும் ஒரு வணக்கமாகும் (2:197, 2:2, 2:194)
  • பேரச்சமும் ஒரு வணக்கமாகும் (2:40, 2:150, 2:223, 2:231)
இறைவனுக்கு மட்டுமே செய்யவேண்டிய வணக்கங்களான இவைகள் அனைத்தும் அந்த தர்ஹாக்களில் நடைபெறுவதால் அதுவும் வணங்குமிடமாகவே உள்ளது.
அவ்லியாக்களின் கப்ருகளின் மீதுள்ள கட்டடங்களை தரைமட்டமாக்குவதற்கு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டாகள்:-
ஹதீஸ் ஆதாரம்:- “‘உயரமாக்கப்பட்ட எந்த கப்ரையும் தரைமட்டமாக்காமல் விடாதே!’ என்று நபி (ஸல்) அவர்கள் எனக்குக் கட்டளையிட்டார்கள் என்று அலி (ரலி) அவர்கள் கூறினார்கள்” அறிவிப்பவர்: அபுல் ஹய்யாஜ் அல் அஜதி (ரலி), நூல்கள் : அபூதாவுத், நஸயீ, திமிதி, அஹ்மத்.
எனவே சகோதர சகோதரிகளே, நபி (ஸல்) அவர்களால் இந்த அளவிற்கு கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ள கப்ருகளில் கட்டடம் எழுப்பி அதில் செய்யப்படும் அனாச்சாரங்கள் எப்படியோ இஸ்லாத்தின் எதிரிகளால் நமது மார்க்கத்தில் புகுத்தப்பட்டுவிட்டது. இஸ்லாத்தைப் பற்றி மார்க்கம் போதிக்கும் தவ்ஹீது பற்றிய போதிய தெளிவு இல்லாத பாமர முஸ்லிம்ள் இதில் ஈடுபட்டு, இறைவனிடமிருந்து என்றுமே மன்னிப்பு கிடைக்காத இணை வைத்தல் என்னும் கொடிய பாவத்தைச் செய்த குற்றவாளியாகின்றனர். அல்லாஹ் நம் அனைவரையும் இதுபோன்ற செயல்கள் புரிவதிலிருந்து காப்பாற்றி நமது பாவங்களை மன்னித்து, அவனுடைய நல்லடியார்கள் வாழ்ந்து சென்ற நேரான வழியை நமக்கு காட்டி அருள் புரிவானாகவும். ஆமின். 
 
SOURSE :PThanks by 
Mohamed Subuhan Sultan
Instrument Engineer - Maintenance
Al-Jubail Fertilizer Company (Al Bayroni)
A SABIC AffiliateP.O. Box 31961
Jubail Industrial City 31961, Kingdom of Saudi Arabia
M + 966 5 4462 5733, T +966 [3] 340-6492 (From 7.30 am till 4 pm)
F +966 [3] 340 6121
Skype Id: mohdsubuhan, URL: www.mohdsubuhan.blogspot.com

No comments:

Post a Comment