நவதானிய அடை
தேவையானவை: இட்லி புழுங்கல் அரிசி - ஒரு கப், கொள்ளு, சோளம், கம்பு, பாசிப்பயறு, கொண்டைக்கடலை, திணை, கேழ்வரகு (அத்தனையும் முளைகட்டியது), காராமணி, கறுப்பு முழு உளுந்து - தலா கால் கப், எண்ணெய், இஞ்சி, மிளகு, காய்ந்த மிளகாய் - காரத்துக்கு ஏற்ப, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: புழுங்கல் அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். காராமணி, முழு கறுப்பு உளுந்து இரண்டையும் தனித்தனியே அரை மணி நேரம் ஊற வைக்கவும். ஊற வைத்த அரிசியுடன் இஞ்சி, மிளகு, காய்ந்த மிளகாய் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். முளைகட்டிய தானியங்கள், காராமணி, உளுந்து எல்லாவற்றையும் ஒன்றாக கரகரப்பாக அரைக்கவும். எல்லா மாவையும் கலந்து தேவையான உப்பு சேர்த்து, கல் நன்கு சூடானதும் மிதமான தீயில் அடை தட்டி, இருபுறமும் சிறிது எண்ணெய் ஊற்றி பொன்னிறமானதும் எடுக்கவும். நவதானிய அடை உடலுக்கு புரத சத்தையும் ஆரோக்கியத்தையும் அள்ளித் தரும்.
முளைக்கீரை அடை
தேவையானவை: இட்லி புழுங்கல் அரிசி - ஒரு கப், இளசான தண்டு இல்லாத முளைக்கீரை - ஒரு சிறு கட்டு, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா கால் கப், காய்ந்த மிளகாய் - 4, இஞ்சி - ஒரு சிறு துண்டு, மிளகு - ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: புழுங்கல் அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பருப்பு வகைகளையும் தனியாக ஊற விடவும். ஊறிய அரிசியுடன் இஞ்சி, மிளகு, காய்ந்த மிளகாய் சேர்த்து கரகரப்பாக அடைமாவு பதத்தில் அரைக்கவும். பருப்பு வகைகளையும் தனியாக அரைக்கவும். அரிசி மாவுடன் அரைத்த பருப்பையும் சேர்த்து உப்பு, பெருங்காயத்தூள் போட்டுக் கலக்கவும். முளைக்கீரையை பொடியாக நறுக்கி சேர்க்கவும். கல் காய்ந்ததும். மிதமான தீயில் ஒவ்வொரு அடையாக தட்டி இருபுறமும் எண்ணெய் விட்டு பொன்னிறமானதும் எடுக்கவும். இந்த அடைக்கு இட்லி மிளகாய்ப்பொடி நல்ல காம்பினேஷன்.
அரிசி அடை
தேவையானவை: இட்லி புழுங்கல் அரிசி - அரை கப், பச்சரிசி - முக்கால் கப், தேங்காய்ப்பால் - ஒரு கப், தேங்காய்த்துருவல் - ஒரு கப், பொடியாக நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை - சிறிதளவு, மிளகு - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: புழுங்கல் அரிசி, பச்சரிசி இரண்டையும் ஒரு மணி நேரம் ஊற விடவும். பிறகு, அரிசியைக் களைந்து மிளகு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். இந்த மாவுடன் தேங்காய்ப்பால், துருவிய தேங்காய், நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து கலந்து, கல் காய்ந்ததும் மிதமான தீயில் வைத்து அடை தட்டி இருபுறமும் எண்ணெய் ஊற்றி வேக விட்டு எடுக்கவும். எல்லா சட்னிக்கும் ஏற்ற அடை இது.
அறுகீரை அடை
தேவையானவை: இட்லி புழுங்கல் அரிசி - ஒரு கப், பாசிப்பருப்பு - கால் கப், பொடியாக நறுக்கிய முருங்கைக்கீரை, பொன்னாங்கண்ணி கீரை, சிறுகீரை - தலா ஒரு கப். காம்பு ஆய்ந்த வல்லாரை - ஒரு கைப்பிடி, பொடியாக நறுக்கிய அகத்திக்கீரை - ஒரு கைப்பிடி, புதினா, கொத்துமல்லி, கறிவேப்பிலை - தலா ஒரு கைப்பிடி, இஞ்சி - சிறு துண்டு, மிளகு - ஒரு டேபிள்ஸ்பூன், பச்சைமிளகாய் - 2, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: புழுங்கல் அரிசி, பாசிப்பருப்பு இரண்டையும் ஒரு மணி நேரம் ஊறவைத்து, களைந்து வடிக்கட்டி இஞ்சி, மிளகு, பச்சைமிளகாய் சேர்த்து கரகரப்பாக அடை மாவு பதத்துக்கு அரைக்கவும். நறுக்கி வைத்துள்ள எல்லா கீரைகளையும் அரைத்த மாவுடன் சேர்த்து உப்பு கலந்து, கல் காய்ந்ததும், அடை தட்டி மிதமான தீயில் வைத்து இருபுறமும் எண்ணெய் விட்டு எடுக்கவும். விருப்பப்பட்டால் எண்ணெய்க்கு பதில் நெய் சேர்த்தும் செய்யலாம். தொட்டுக்கொள்ள எதுவுமே தேவையில்லை. அப்படியே சாப்பிடலாம்.
கார அடை
தேவையானவை: இட்லி புழுங்கல் அரிசி - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 6, இஞ்சி - ஒரு சிறு துண்டு, பூண்டு - 4 பல் (தோல் உரித்தது), மிளகு - 2 டேபிள்ஸ்பூன், பாசிப்பருப்பு, துவரம் பருப்பு - ஒரு கப், முளைகட்டிய கொண்டைக்கடலை - ஒரு கப், கறிவேப்பிலை நறுக்கியது - சிறிதளவு, பெருங்காயத்தூள் - சிறிதளவு, நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: புழுங்கல் அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்துக் களைந்து, தண்ணீர் வடித்து, காய்ந்த மிளகாய், பூண்டு, மிளகு, இஞ்சி சேர்த்துக் கரகரப்பாக அடை மாவு பதத்துக்கு அரைத்துக் கொள்ளவும். துவரம்பருப்பு, பாசிப்பருப்பையும் அரை மணிநேரம் ஊறவைத்து முளைகட்டிய கொண்டைக்கடலையுடன் சேர்த்து கரகரப்பாக கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். இரண்டு மாவையும் ஒன்றாக சேர்த்து உப்பு போட்டுக் கலக்கவும். கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து மாவை நன்கு கலக்கவும். கல் காய்ந்ததும், மிதமான தீயில் வைத்து அடை தட்டி, இருபுறமும் சிறிது எண்ணெய் விட்டு பொன்னிறமானதும் எடுக்கவும். காரமும் மணமும் நிறைந்த இந்த கார அடை ருசியாக இருக்கும். தொட்டுக்கொள்ள வெண்ணெய், வெல்லம் இருந்தால் போதும்.
தக்காளி அடை
தேவையானவை: பழுத்த தக்காளி - 4 முதல் 5, புழுங்கல் அரிசி - ஒன்றரை கப், இஞ்சி - 1 துண்டு, காய்ந்த மிளகாய் - மூன்று, மிளகு - 2 டேபிள்ஸ்பூன், பூண்டு - 4 பல், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து தண்ணீர் வடித்து இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய், மிளகு சேர்த்து அரைக்கவும். சிறிது அரைபட்டதும் தக்காளியை நறுக்கிப் போட்டு அரைக்கவும். இந்த மாவில் உப்பு சேர்த்து கலந்து, கல் காய்ந்ததும், அடைக்கு ஊற்றி இருபுறமும் எண்ணெய் விட்டு மிதமான தீயில் வேக விட்டு எடுக்கவும். தக்காளியின் புளிப்பும் லேசான இனிப்பும் இஞ்சி, பூண்டு, மிளகு வாசனையும் கலந்து கட்டி ருசிக்க வைக்கும். இதற்கு, தேங்காய் சட்னி ஏற்ற சைட் டிஷ்!
கொள்ளு அடை
தேவையானவை: புழுங்கல் அரிசி - ஒரு கப், முளை கட்டிய கொள்ளு - ஒரு கப், இஞ்சி - சிறு துண்டு, காய்ந்த மிளகாய் - 4, கறுப்பு எள் - 2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: புழுங்கல் அரிசியை ஒரு மணிநேரம் ஊற வைக்கவும். அரிசியுடன் முளைகட்டிய கொள்ளு, இஞ்சி, காய்ந்த மிளகாய் சேர்த்து கரகரப்பாக அரைத்து உப்பு, கறிவேப்பிலை, கறுப்பு எள்ளை (மண் போக நன்றாக களையவும்) சேர்க்கவும். கல் காய்ந்ததும், மிதமான தீயில் வைத்து அடை தட்டி இருபுறமும் சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் எடுக்கவும். கொள்ளும் எள்ளும் சேர்ந்து கமகமக்கும் வாசனையுடன் வித்தியாசமான சுவையில் இருக்கும் இந்த அடை.
வாழைப்பூ அடை
தேவையானவை: புழுங்கல் அரிசி - ஒரு கப், பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு - தலா அரை கப், வாழைப்பூ - ஒன்று, காய்ந்த மிளகாய் - 4, பெரிய வெங்காயம் -1, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: புழுங்கல் அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு, துவரம்பருப்பை தனித்தனியே அரை மணி நேரம் ஊற வைக்கவும், வாழைப்பூவை ஆய்ந்து உள்ளே இருக்கும் நரம்பை நீக்கி பொடியாக நறுக்கி, உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் வேக விடவும். ஆறியதும் நன்கு பிழிந்து வைத்துக் கொள்ளவும். ஊற வைத்த அரிசியுடன் வெங்காயம், காய்ந்த மிளகாய் சேர்த்து அரைக்கவும். பருப்பு வகைகளைத் தனியாக அரைக்கவும். எல்லா மாவையும் கலந்து வெந்த வாழைப்பூவை போட்டு, சிறிது உப்பு சேர்த்து கலக்கவும். கல் காய்ந்ததும் அடைக்கு ஊற்றி இருபுறமும் எண்ணெய் ஊற்றி வேகவிட்டு எடுக்கவும். வெங்காய வாசமும் வாழைப்பூவின் ருசியும் ஒன்ஸ்மோர் கேட்க வைக்கும்.
வெஜிடபிள் அடை
தேவையானவை: இட்லி புழுங்கல் அரிசி - முக்கால் கப், காரட், முள்ளங்கி - தலா 1 (தோல் சீவி துருவிக் கொள்ளவும்), சிறிய பீட்ரூட், பிஞ்சு பீர்க்கங்காய் - தலா 1 (தோல் சீவி பொடியாக நறுக்கவும்), வறுத்த வேர்க்கடலை, பொட்டுக்கடலை - தலா ஒரு கப், காய்ந்த மிளகாய் - 1, சோம்பு - ஒரு டீஸ்பூன், பூண்டு - 4 பல், மிளகு - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு,
செய்முறை: அரிசியை ஒரு மணி நேரம் ஊற விட்டு பூண்டு, காய்ந்த மிளகாய், சோம்பு, மிளகு சேர்த்து அடைமாவு பதத்தில் அரைக்கவும். இந்த மாவில், துருவிய காரட், முள்ளங்கி, பொடியாக நறுக்கிய பீட்ரூட், பீர்க்கங்காயை சேர்க்கவும். வேர்க்கடலையை ஒன்றிரண்டாக உடைத்து மாவுடன் சேர்க்கவும். பிறகு பொட்டுக்கடலையைப் போட்டு, சிறிது உப்பு சேர்த்து மாவை நன்கு கலந்து கொள்ளவும். கல் காய்ந்ததும் மிதமான தீயில் அடையை தட்டி இருபுறமும் எண்ணெய் விட்டு பொன்னிறமாக வேக விட்டு எடுக்கவும். காய்கறி - கடலை கலவையில் டேஸ்ட்டியாக இருக்கும் இந்த வெஜிடபிள் அடை.
வாழைத்தண்டு அடை
தேவையானவை: புழுங்கல் அரிசி - முக்கால் கப், தனியா - ஒரு டேபிள்ஸ்பூன், பூண்டு - 4 பல், சோம்பு - ஒரு டீஸ்பூன், இஞ்சி - ஒரு துண்டு, காய்ந்த மிளகாய் - மூன்று, இளசான வாழைத்தண்டு - ஒரு சிறு துண்டு, முளைகட்டிய பாசிப்பயறு, கொண்டைக்கடலை - தலா ஒரு கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு,
செய்முறை: புழுங்கல் அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். வாழைத்தண்டின் தோல் சீவி, நார் எடுத்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஊற வைத்த அரிசியுடன் தனியா, பூண்டு, சோம்பு, இஞ்சி, காய்ந்த மிளகாய் சேர்த்து கரகரப்பாக அடைமாவு பதத்தில் அரைத்துக் கொள்ளவும். முளைகட்டிய பயிறு, கொண்டைக்கடலையை தனியாக அரைத்துக் கொள்ளவும். இரண்டு மாவையும் ஒன்றாகக் கலந்து, நறுக்கிய வாழைத்தண்டு, உப்பு சேர்க்கவும். கல் காய்ந்ததும் மிதமான தீயில் அடை மாவை ஊற்றி இருபுறமும் எண்ணெய் விட்டு வெந்ததும் எடுக்கவும். அவையில் பிரமாதப் படுத்தும் இந்த வாழைத்தண்டு அடை.
ஆல்வள்ளி அடை
தேவையானவை: இட்லி புழுங்கல் அரிசி - முக்கால் கப், மிளகு - 10, இஞ்சி - ஒரு சிறு துண்டு, காய்ந்த மிளகாய் - இரண்டு, தக்காளி - 1, பெரிய ஆல்வள்ளிக் கிழங்கு - 1, நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: புழுங்கல் அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து இஞ்சி, காய்ந்த மிளகாய், மிளகு, தக்காளி சேர்த்து அடைமாவு பதத்தில் அரைக்கவும். ஆல்வள்ளிக் கிழங்கை தோல்சீவி துருவி, அரைத்த மாவுடன் சேர்க்கவும். இதில் சிறிது உப்பு சேர்த்து கல் காய்ந்ததும், அடை மாவை ஊற்றி, இருபுறமும் எண்ணெய் விட்டு வெந்ததும் எடுக்கவும். வித்தியாசமான கலவையுடன் ஆரோக்கியத்துக்கும் ஏற்றது இந்த ஆல்வள்ளிக்கிழங்கு அடை.
உலர்பழ அடை
தேவையானவை: புழுங்கல் அரிசி - ஒரு கப், அத்திப்பழம் - 4 துண்டுகள், பேரீச்சம்பழம், பாதாம்பருப்பு, பிஸ்தா, செர்ரிப்பழம், முந்திரிப்பருப்பு - தலா 10, காய்ந்த திராட்சை - 2 டேபிள்ஸ்பூன், அல்பக்கோடாப்பழம் - 6, நெய் - தேவையான அளவு.
செய்முறை: புழுங்கல் அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும். தோல் நீக்கிய பாதாம்பருப்பை ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும். பிஸ்தா, முந்திரிபருப்பை தனியாக அரைக்கவும். அத்திப்பழம், பேரீச்சை, செர்ரிப்பழம், அல்பக்கோடா, திராட்சை எல்லாவற்றையும் சேர்த்து அரைத்து, மாவுடன் கலந்து, கல்லில் சிறு அடையாக தட்டி, இருபுறமும் நெய் விட்டு வெந்ததும் எடுக்கவும்.
அவல் அடை
தேவையானவை: புழுங்கல் அரிசி - அரை கப், கெட்டி அவல் - ஒரு கப், பார்லி - கால் கப், இஞ்சி - ஒரு துண்டு, மிளகு - 2 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியை ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். அவலை தண்ணீர் ஊற்றி ஊற விடவும். அரிசியை அரைத்து சிறிது மசிந்ததும் ஊற வைத்த அவல், பார்லியுடன் சேர்த்து இஞ்சி, மிளகு, வெங்காயம் சேர்த்து அரைக்கவும். உப்பு சேர்த்து மாவை கலக்கவும். கல் காய்ந்ததும் மாவை ஊற்றி இருபுறமும் எண்ணைவிட்டு வெந்ததும் எடுக்கவும். அவலும் பார்லியும் உடலுக்கு மிகவும் நல்லது.
பேபிகார்ன் அடை
தேவையானவை: கோதுமை ரவை - ஒரு கப், புழுங்கல் அரிசி - அரை கப், இஞ்சி - சிறு துண்டு, மிளகு - ஒரு டேபிள்ஸ்பூன், பச்சைமிளகாய் - 1, பேபிகார்ன் - ஒரு பாக்கெட் (எண்ணிக்கையில் 20), சிவப்பு, மஞ்சள், பச்சை என மூன்று கலர் குடமிளகாய் - தலா 1, நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கோதுமை ரவையும் அரிசியும் சேர்த்து ஊற விடவும். இஞ்சி, மிளகு, பச்சைமிளகாய் சேர்த்து அடைமாவு பதத்தில் அரைக்கவும்.அரைத்தமாவில் குடமிளகாய்களைப் பொடியாக நறுக்கி சேர்க்கவும். பேபிகார்னை பொடியாக நறுக்கி மாவுடன் கலந்து தேவையான உப்பு சேர்த்து கலக்கவும். கல் காய்ந்ததும் மிதமான தீயில் அடை தட்டி, இருபுறமும் எண்ணெய் விட்டு வெந்ததும் எடுக்கவும். கம கம வாசனையுடனும், அபார ருசியுடன் இருக்கும் இந்த பேபிகார்ன் அடை.
காராமணி அடை
தேவையானவை: இட்லி புழுங்கல் அரிசி - ஒரு கப், சிவப்பு காராமணி - அரை கப், இஞ்சி - சிறு துண்டு, காய்ந்த மிளகாய் - 2, கறுப்பு முழு உளுந்து - ஒரு கப், நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். காராமணியையும், கறுப்பு முழுஉளுந்தையும் தனியாக ஊற விடவும். ஊற வைத்த அரிசியுடன் இஞ்சி, காய்ந்த மிளகாய் சேர்த்து அரைக்கவும். கறுப்பு உளுந்து, காராமணியை தனியாக அரைக்கவும். அரைத்த இரண்டு மாவையும் உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். கல் காய்ந்ததும் மிதமான தீயில் அடை தட்டி இருபுறமும் எண்ணெய் விட்டு வெந்ததும் எடுக்கவும். கரகர மொறுமொறு காராமணி அடை ரெடி!
பாசிப்பருப்பு வெங்காய அடை
தேவையானவை: பாசிப்பருப்பு - ஒரு கப், பச்சரிசி - கால் கப், பச்சைமிளகாய் - 3 அல்லது 4, வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்), இஞ்சி - சிறு துண்டு, மல்லித்தழை - கால் கப், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசி, பாசிப்பருப்பை நன்றாகக் களைந்து 3 மணி நேரம் ஊற விடவும். இதனுடன் மற்ற எல்லாவற்றையும் சேர்த்து விழுதாக அரைக்கவும். தேவையான உப்பு சேர்த்து மாவைக் கலந்து கல் காய்ந்ததும் மிதமான தீயில் வைத்து பொன்னிறமாக எடுக்கவும். நிமிடம் வேக விடவும். ஆறியதும் நன்கு பிழிந்து வைத்துக் கொள்ளவும். ஊற வைத்த அரிசியுடன் வெங்காயம், காய்ந்த மிளகாய் சேர்த்து அரைக்கவும். பருப்பு வகைகளைத் தனியாக அரைக்கவும். எல்லா மாவையும் கலந்து வெந்த வாழைப்பூவை போட்டு, சிறிது உப்பு சேர்த்து கலக்கவும். கல் காய்ந்ததும் அடைக்கு ஊற்றி இருபுறமும் எண்ணெய் ஊற்றி வேகவிட்டு எடுக்கவும். வெங்காய வாசமும் வாழைப்பூவின் ருசியும் ஒன்ஸ்மோர் கேட்க வைக்கும்.
மசாலா அடை
தேவையானவை: புழுங்கல் அரிசி - ஒரு கப், பட்டை - 1, லவங்கம் - 4, ஏலக்காய் - 4, சோம்பு, கசகசா - தலா 4 டீஸ்பூன், ரோஜா மொட்டு - சிறிதளவு, பூண்டு - 4 பல், இஞ்சி - சிறு துண்டு, மிளகு - ஒரு டேபிள்ஸ்பூன், பிரிஞ்சி இலை - 1, பாசிப்பருப்பு - அரை கப், காய்ந்த மிளகாய் - 4, நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு,
செய்முறை: அரிசியுடன் பாசிப்பருப்பை ஊற வைத்து, இஞ்சி, பூண்டு, மிளகு, காய்ந்த மிளகாய் சேர்த்து அரைக்கவும். மசாலா சாமான்களை வெறும் கடாயில் வறுத்து மிக்ஸியில் பொடித்து, அரைத்த மாவுடன் சேர்த்து அடை வார்க்கவும். வறுத்த மசாலா சாமான்களை அரிசியுடன் சேர்த்தும் அரைக்கலாம்.
பப்பாளி அடை
தேவையானவை: புழுங்கல் அரிசி - ஒரு கப், முற்றிய பெரிய பப்பாளிக்காய் - 1, பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், பாசிப்பருப்பு - அரை கப், இஞ்சி - ஒரு துண்டு, சீரகம் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியுடன் பாசிப்பருப்பையும் ஊற வைத்து, இஞ்சி சேர்த்து அரைக்கவும். பப்பாளிக்காயை தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அரைத்த மாவுடன் நறுக்கிய பப்பாளித்துண்டுகளைப் போட்டு வெங்காயம், சீரகம், பெருங்காயத்தூள், தேவையான உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். கல் காய்ந்ததும், மிதமான தீயில் அடை தட்டி, இருபுறமும் எண்ணெய் விட்டு வெந்ததும் எடுக்கவும்.
கோங்கூரா அடை
தேவையானவை: புழுங்கல் அரிசி - ஒரு கப், பாசிப்பருப்பு - அரை கப், வெங்காயம் - 1, இஞ்சி - ஒரு துண்டு, மிளகு - 2 டீஸ்பூன், பூண்டு - 4 பல், கோங்கூரா கீரை - அரை கப், தேங்காய்த்துருவல் - ஒரு கப், நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியுடன் பாசிப்பருப்பையும் ஊற வைத்து இஞ்சி, மிளகு, பூண்டு, வெங்காயம், தேங்காய்த்துருவல், கோங்கூராகீரை எல்லாவற்றையும் சேர்த்து அரைக்கவும். தேவையான உப்பு சேர்த்து நன்கு கலந்து, கல் காய்ந்ததும், மிதமான தீயில் வைத்து அடை வார்த்து இருபுறமும் எண்ணெய் விட்டு வெந்ததும் எடுக்கவும். புளிப்பும் காரமும் வெங்காயத்தின் மணமும் சேர்ந்து சூப்பர் சுவையில் இருக்கும் கோங்கூரா அடை!
பரங்கி அடை
தேவையானவை: புழுங்கல் அரிசி - ஒரு கப், கடலைப்பருப்பு, துவரம்பருப்பு - தலா கால் கப், உளுத்தம்பருப்பு - 4 டீஸ்பூன், பிஞ்சு பரங்கிக்காய் - 1 (பால் பிஞ்சு பந்து அளவில் இருக்கும்), இஞ்சி - சிறு துண்டு, பூண்டு - 4 பல், காய்ந்த மிளகாய் - 2, நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியையும் பருப்பு வகைகளையும் தனித்தனியே ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய அரிசியுடன், இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய் சேர்த்து அரைக்கவும். பருப்பை தனியாக அரைத்து இரண்டு மாவுகளையும் ஒன்றாக சேர்க்கவும். பரங்கிப்பிஞ்சை பொடியாக நறுக்கி மாவுடன் கலந்து தேவையான உப்பு சேர்க்கவும். கல் காய்ந்ததும், மிதமான தீயில் அடையைத் தட்டி இருபுறமும் எண்ணெய் விட்டு வெந்ததும் எடுக்கவும்.
ராஜ்மா அடை
தேவையானவை: புழுங்கல் அரிசி - ஒரு கப், ராஜ்மா - அரை கப், இஞ்சி - சிறு துண்டு, பாசிப்பருப்பு - ஒரு கப், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், பச்சை வேர்க்கடலை - ஒரு கப், மிளகு - 2 டேபிஸ்பூன், நறுக்கிய வெங்காயம் - ஒரு கிண்ணம், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியுடன் ராஜ்மா சேர்த்து ஊற வைக்கவும். ஊறியதும், தண்ணீர் வடித்து இஞ்சி, மிளகு சேர்த்து அரைக்கவும். பாசிப்பருப்பு, வேர்க்கடலை, உளுத்தம்பருப்பையும் ஊறவைத்து தனியாக அரைத்து எல்லா மாவையும் சேர்த்துக் கலக்கவும். உப்பு, நறுக்கிய வெங்காயம் சேர்த்து கலந்து கல் காய்ந்ததும், மிதமான தீயில் அடை தட்டி, வெந்ததும் எடுக்கவும். மிகவும் சத்து நிறைந்தது இந்த ராஜ்மா அடை.
முடக்கத்தான் கீரை அடை
தேவையானவை: புழுங்கல் அரிசி - ஒரு கப், பச்சரிசி - அரை கப், வெந்தயம் - 2 டேபிள்ஸ்பூன், கொடியாக இருக்கும் முடக்கத்தான் கீரை - ஒரு கைப்பிடி, இஞ்சி - சிறு துண்டு, பெருங்காயத்தூள் - சிறிது, பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: புழுங்கல் அரிசி, பச்சரிசி பாசிப்பருப்பு, வெந்தயம் எல்லாவற்றையும் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து வடிகட்டி இஞ்சி சேர்த்து அரைக்கவும். சிறிது மசியும்போது முடக்கத்தான் கீரையை ஆய்ந்து நறுக்கி மாவுடன் சேர்த்து அரைக்கவும். எல்லா மாவையும் சேர்த்து கலந்து உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து கலக்கவும். கல் காய்ந்ததும் மிதமான தீயில் அடையை வார்த்து இருபுறமும் எண்ணெய் விட்டு பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.
கேழ்வரகு அடை
தேவையானவை: கேழ்வரகு, புழுங்கல் அரிசி - தலா ஒரு கப், பொடியாக நறுக்கிய இஞ்சி - சிறிதளவு, மிளகு - 2 டேபிள்ஸ்பூன் (ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளவும்), தேங்காய் - 2 துண்டுகள் (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்), காய்ந்த மிளகாய் - 4, புதினா - ஒரு கைப்பிடி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கேழ்வரகை கல் நீக்கி அரிசியுடன் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவிடவும். பிறகு களைந்து காய்ந்த மிளகாய் சேர்த்து அடைமாவு பதத்தில் அரைக்கவும். இதில் தேங்காய் துண்டுகள், இஞ்சி, மிளகு சேர்க்கவும். புதினாவை பொடியாக நறுக்கி எண்ணெயில் வதக்கிப் போடவும். தேவையான உப்பு சேர்த்து கலந்து அடை தட்டி, இருபுறமும் எண்ணெய் விட்டு வெந்ததும் எடுக்கவும். உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்ற அடை.
சாபுதானா அடை
தேவையானவை: புழுங்கல் அரிசி - ஒரு கப், நைலான் ஜவ்வரிசி - அரை கப், காரட் துருவல் - ஒரு கப், குடமிளகாய் - 1, பாசிப்பருப்பு, துவரம் பருப்பு - தலா ஒரு கப், முளைகட்டிய கொள்ளு - ஒரு கப், இஞ்சி - சிறு துண்டு, மிளகு - 2 டேபிள்ஸ்பூன், பச்சைமிளகாய் - இரண்டு, எலுமிச்சம்பழம் - 1, நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: ஊற வைத்த புழுங்கல் அரிசியுடன் இஞ்சி, மிளகு, பச்சைமிளகாய் சேர்த்து அரைக்கவும். ஜவ்வரிசியை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு அரை மணி நேரம் ஊற விடவும். தண்ணீரை உறிஞ்சி பொல பொல வென்று ஆகிவிடும். பாசிப்பருப்பு, துவரம் பருப்பு, தனியாக ஊற விடவும். ஊறிய பருப்புவகைகளுடன், முளைகட்டிய கொள்ளு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். எல்லா மாவையும் ஒன்றாக கலந்து தேவையான உப்பு சேர்த்து, கல் காய்ந்ததும் மிதமான தீயில் அடை மாவை ஊற்றி இருபுறமும் எண்ணை விட்டு, எடுப்பதற்கு முன், குடமிளகாயைப் பொடியாக நறுக்கி, காரட் துருவலுடன் சேர்த்து கலந்து ஜவ்வரிசியுடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து (புளிப்புக்கு தகுந்தாற்போல்) அடையின் மேல் தூவி ஒரு நிமிடம் வைத்து எடுக்கவும். கலர்ஃபுல் கலக்கல் அடை இது!
மாங்காய் இஞ்சி மாகாணி அடை
தேவையானவை: புழுங்கல் அரிசி - ஒரு கப், மாங்காய் இஞ்சி - 4, மாகாணிக்கிழங்கு - 2, இஞ்சி - சிறு துண்டு, பூண்டு - 4 பல், காய்ந்த மிளகாய் - 2, முளைகட்டிய கொண்டைக்கடலை - ஒரு கப், பாசிப்பருப்பு - அரை கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியையும், பாசிப்பருப்பையும் தனித் தனியே ஒரு மணி நேரம் ஊற விடவும். மாங்காய் இஞ்சியை தோல் சீவிக் கொள்ளவும். மாகாணிக்கிழங்கை தண்ணீரில் ஒரு மணி நேரம் போட்டு தோல் சீவி பொடியாக நறுக்கவும். ஊற வைத்த அரிசி, பருப்பு, கொண்டைக்கடலை, மாகாணித்துண்டுகள், இஞ்சி, மாங்காய் இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய் எல்லாவற்றையும் சேர்த்து கலந்து அடை பதத்துக்கு அரைத்து தேவையான உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். கல் காய்ந்ததும், மிதமான தீயில் அடை தட்டி இருபுறமும் எண்ணெய் விட்டு வெந்ததும் எடுக்கவும். எளிதில் ஜீரணமாகும் அடை இது.
நோன்பு அடை
தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், காராமணி - 4 டேபிள்ஸ்பூன், இஞ்சி - சிறு துண்டு, பச்சைமிளகாய் -1, கடுகு - 1 டீஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு கப், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பச்சரிசியை சிவக்க வறுத்து நைஸாக அரைத்து சலித்துக் கொள்ளவும். காராமணியை வறுத்து ஊற வைத்து குழையாமல் வேக வைத்துக் கொள்ளவும். பச்சைமிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் ஒரு பங்கு மாவுக்கு ஒரு பங்கு தண்ணீர் என்ற அளவில், தண்ணீர் கொதிக்கும்போது மாவை சிறிது சிறிதாக தூவி தேவையான உப்பு சேர்த்து கெட்டியாகக் கிளறவும். பிறகு, கடுகுடன் இஞ்சி சேர்த்து வதக்கி மாவில் போட்டு தேங்காய் துருவல், பெருங்காயத்தூள், வெந்த காராமணியை மாவில் போட்டு நன்கு பிசைந்து சிறு அடைகளாக தட்டி, இட்லி தட்டில் எண்ணெய் தடவி குக்கரில் வைத்து பத்து நிமிடம் வேக விட்டு எடுக்கவும்.
பெசரட் அடை
தேவையானவை: புழுங்கல் அரிசி - ஒரு கப், பச்சரிசி - கால் கப், பாசிப்பருப்பு - முக்கால் கப், இஞ்சி - ஒரு துண்டு, காய்ந்த மிளகாய் - 2, தேங்காய்த்துருவல் - ஒரு கப், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: புழுங்கல் அரிசி, பச்சரிசி, பாசிப்பருப்பை சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து இஞ்சி, காய்ந்த மிளகாய், தேங்காய்த்துருவல் சேர்த்து அடைமாவை விட சற்று நைஸாக அரைத்துக் கொள்ளவும். பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து கலக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து இருபுறமும் எண்ணெய் விட்டு பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும். பாசிப்பருப்பு மணத்துடன் பெசரட் அடை ருசியாக இருக்கும்.
முருங்கைக்கீரை அடை
தேவையானவை: புழுங்கல் அரிசி - ஒரு கப், முருங்கைக்கீரை - அரை கப், மொச்சை - ஒரு கப், பாசிப்பருப்பு - அரை கப், இஞ்சி - சிறு துண்டு, பூண்டு - 4 பல், காய்ந்த மிளகாய் - இரண்டு, முருங்கைப் பிஞ்சு - 10 (இளஞ்சிவப்பு கலரில் மெல்லிய கொடி போல இருக்கும்), பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், நெய் - தேவையான அளவு.
செய்முறை: அரிசியை ஊற வைத்துக் கொள்ளவும். மொச்சை, பாசிப்பருப்பையும் சேர்த்து ஊற விடவும். ஊற வைத்த அரிசி, பருப்புடன், இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய் சேர்த்து அடைமாவு பதத்துக்கு அரைக்கவும். முருங்கைக்கீரை, முருங்கைப் பிஞ்சை பொடியாக நறுக்கி, சிறிது நெய்யில் வதக்கி மாவுடன் சேர்க்கவும். வெங்காயத்தைப் போட்டு மாவை நன்றாகக் கலந்து தேவையான உப்பு சேர்த்து கல் காய்ந்ததும் மிதமான தீயில் அடை தட்டி, இருபுறமும் நெய் விட்டு வெந்ததும் எடுக்கவும். முருங்கைப் பூவிலும் இந்த அடை செய்யலாம்.
வெள்ளரிக்காய் அடை
தேவையானவை: புழுங்கல் அரிசி - ஒரு கப், முளைக்கட்டிய பாசிப்பயறு, கொண்டக்கடலை - தலா அரை கப், வெள்ளரிக்காய் தோல்சீவி பொடியாக நறுக்கியது - முக்கால் கப், காய்ந்த மிளகாய் - 4, இஞ்சி - சிறு துண்டு, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - சிறிது, நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: புழுங்கல் அரிசியை ஊற வைத்து, அதில் பாசிப்பயறு, கொண்டைக்கடலை, காய்ந்த மிளகாய், இஞ்சி சேர்த்து அரைக்கவும். முக்கால் பங்கு அரைந்ததும், நறுக்கிய வெள்ளரிக்காயை மாவுடன் கலந்து உப்பு சேர்த்து அடைமாவு பதத்துக்கு அரைத்து நன்கு கலக்கவும். கறிவேப்பிலை சேர்த்து, கல் காய்ந்ததும், மிதமான தீயில் அடையை தட்டவும். இருபுறமும் எண்ணெய் விட்டு வெந்ததும் எடுக்கவும்.
கீரைக்கிழங்கு அடை
தேவையானவை: புழுங்கல் அரிசி - ஒரு கப், பாசிப்பருப்பு, துவரம்பருப்பு - தலா அரை கப், சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 1, ஆல்வள்ளிக் கிழங்கு - 1, பெரிய நெல்லிக்காய் - 3, நறுக்கிய முருங்கைக்கீரை - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 4, இஞ்சி - சிறு துண்டு, பூண்டு - 4 பல், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: ஆல்வள்ளிக் கிழங்கையும் சர்க்கரைவள்ளிக் கிழங்கையும் வேக வைத்து தோல் உரித்துக் கொள்ளவும். பாசிப்பருப்பு, துவரம்பருப்பை ஊற வைக்கவும். நெல்லிக்காயை சீவி கொட்டையை நீக்கவும். அரிசியை ஊற வைத்து களைந்து தண்ணீரை வடித்து, ஊற வைத்த பருப்பு, நெல்லிக்காய், வேக வைத்த கிழங்கு, இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய் சேர்த்து கரகரப்பாக அடைமாவு பதத்தில் அரைத்துக் கொள்ளவும். முருங்கைக்கீரை, உப்பு சேர்த்து கலந்து, கல் காய்ந்ததும் அடை தட்டி எண்ணெய் விட்டு முறுகலாக வெந்ததும் எடுக்கவும். கீரை, கிழங்கு என மாறுபட்ட சுவையில் மணக்கும் இந்த அடை.
No comments:
Post a Comment