சென்னையில் இனி குப்பங்கள் இல்லை! வந்துவிட்டன குபேரர்களின் மாளிகைகள்!
in தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம், நுகர்வு கலாச்சாரம் by வினவு, July 13, 2011 -
அன்று ‘மேல்’ சாதியினர் ‘சுத்தமாக’ வாழ அக்ரஹாரமும், ஊரும் இணைந்து சேரிகளை ஒதுக்குப்புறமாக வைத்தன. இன்று கோடீஸ்வரர்கள் ‘சத்தமின்றி நிம்மதியாக’ வாழ குடியிருப்புகள் உருவாகின்றன. உழைக்கும் மக்கள் வசிக்கும் சேரிப் பகுதிகள் இதற்காகவே அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன.
”இந்தியாவில் உள்ள கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து இருபத்து மூன்றாயிரம். இது 2007ம் ஆண்டு வெளியான புள்ளிவிவரம். இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் 20 சதவிகிதம் வரை அதிகரித்து வருகிறது என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம். இந்தக் கோடீஸ்வரர்களில் சிலர் சென்னையிலேயே வசிக்கிறார்கள். பலர், ஆண்டுக்கு சில மாதங்கள் சென்னையில் வந்து தங்குகிறார்கள்.காரணம், இந்தியாவின் பெரு நகரங்களில் சென்னையும் ஒன்று. விமானநிலையமும், நீர்வழிப் போக்குவரத்தும் ஒருசேர இருப்பது சென்னையின் சிறப்புகளில் ஒன்று. இதனாலேயே பல பன்னாட்டு நிறுவனங்கள் சென்னையில் தங்கள் கிளைகளை தொடங்கியுள்ளன. இன்னும் சில நிறுவனங்கள் தங்கள் கிளைகளை தொடங்குவதற்காக காத்திருக்கின்றன.இந்த நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பில் வசிப்பவர்களும், தனியாக தொழில் செய்யும் தொழில்முனைவோரும் வசிப்பதற்கு சென்னையில் வீடுகள் தேவை. அந்த வீடுகளும், அவர்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தின் தகுதிக்கும் அவர்கள் செய்யும் தொழிலுக்கு ஏற்றபடியும் வசதியாக இருக்க வேண்டும். கூச்சல் இருக்கக் கூடாது. போக்குவரத்து இடைஞ்சல் ஏற்படக் கூடாது. சாதாரண சோப்பு, சீப்பு வாங்கக் கூட அவர்கள் நடக்கக் கூடாது. எல்லாமே அவர்கள் வசிக்கும் இடத்திலேயே கிடைக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்களால் நிம்மதியாக வாழவும் முடியும். தங்கள் வேலைகளில் கவனம் செலுத்தவும் முடியும்.இதனை கருத்தில் கொண்டு ரூபாய் 75 இலட்சத்தில் ஆரம்பித்து ரூபாய் 10 கோடி வரையிலான வீடுகள் சென்னையில் இப்போது உருவாகி வருகின்றன. இந்த வீடுகள் எங்கெங்கு, எந்தெந்த இடத்தில் கட்டப்பட்டு வருகின்றன என்பதை அவர்கள் தங்கள் வேலை நெருக்கடிக்கு மத்தியில் தேட வேண்டி இருக்கிறது. இதற்காக செலவிடும் நேரத்தில் ஆக்கப்பூர்வமாக தொழிலில் கவனம் செலுத்தலாமே என்று நினைக்கிறார்கள். அவர்கள் நினைப்பதிலும் தவறில்லை. ஒவ்வொரு மணித்துளியும் அவர்களுக்கு முக்கியம். பல கோடி ரூபாய்கள் பெருமானமுள்ள பரிவர்த்தனைகளை அந்த நேரத்தில் அவர்களால் முடிக்க முடியும்.எனவே அவர்களது நலனை கருத்தில் கொண்டு சென்னை மாநகரில் கட்டப்பட்டு வரும் வசதியான வீடுகள் குறித்த விவரங்களை ஒரே இடத்தில் இரு நாட்களுக்கு கண்காட்சியாக வைக்க முடிவு செய்தோம். இதன் மூலம் அவர்கள் அலையாமல், நேரத்தை வீணாக்காமல் ஒரே கூரையின் கீழ் தங்களுக்கு வேண்டிய இல்லங்களை தேர்ந்தெடுக்கலாம். இதற்காகத்தான் இந்த ‘லக்சரி ஹோம் 2011′ கண்காட்சி. மொத்தம் 30 பில்டர்கள் இந்தக் கண்காட்சியில் பங்கேற்கிறார்கள். ஹிர்கோ (Hirco), ட்ரூ வேல்யூ ஹோம்ஸ் (True Value Homes), இன்ஃப்யூயன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் (Influence Infrastructure) , ஃபோனிக்ஸ் ஹோடு டெவலப்பர்ஸ் (தி வில்லேஜ்) (Phoneix Hodu Developers) , லேண்ட்மார்க் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் Landmark constructions, மார்க் ப்ராபர்டிஸ் Marg Properties… போன்ற சர்வதேச அளவில் புகழ்பெற்ற பில்டர்களும் இந்தக் கண்காட்சியில் கலந்துக் கொள்கிறார்கள் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம். சென்னையின் மிக உயரமான குடியிருப்பு, தண்ணீருக்கடியில் அமைக்கப்பட்ட உடற்பயிச்சி கூடம், எல்லாமே தயாராக வைக்கப்ட்டுள்ள ”பிளக் அண்டு பிளே (Plug and play)” வீடுகள், விளையாடிக் களிக்க பிரத்தியேகமான கடல் – நீர்நிலை ஆதாரங்களை ஒட்டிய குடியிருப்புகள் உள்ளிட்ட ரூபாய் 3 ஆயிரம் கோடி மதிப்பிலான வீடுகள் குறித்த விவரங்கள் காட்சிக்கு வைக்கப்படுகின்றன.ஜூலை 9, 10 ஆகிய இரு நாட்களும் காலை 10 மணி முதல் இரவு 8.30 மணி வரை சென்னை நந்தம்பாக்கம் டிரேட் செண்டரில் இக் கண்காட்சி நடைபெறும். உயர் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களுக்காகவும், கோடீஸ்வரர்களுக்காவும் இந்த எக்ஸ்போ நடத்தப்படுவதால் 3 முதல் நான்காயிரம் பார்வையாளர்கள் வரை வருவார்கள் என எதிர்பார்க்கிறோம்…”
ஜூலை 5 அன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் ஐபால் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் எம்.டி.யான சக்தி, இத்தகவலை தெரிவித்தார். இந்த செய்தியாளர்கள் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டவர்கள் ஆங்கில தினசரி மற்றும் ஆங்கில காட்சி ஊடகங்களை சேர்ந்த நிருபர்கள் மட்டுமே. தமிழ் நாளிதழ்களின் வாசகர்களுக்கு இந்த ஒசத்தியான ஒய்யாரமான வீடுகள் தேவையில்லை என்று நினைத்திருக்கலாம்.
என்றாலும் சென்னையின் ஷாப்பிங் மால்களிலும், தி.நகர், அண்ணா நகர், போர்ட் க்ளப், பழைய மகாபலிபுரம் சாலை, கடற்கரைச் சாலை ஆகிய இடங்களிலும் இக் கண்காட்சி குறித்த பேனர்களை வைத்திருந்தார்கள்.
முரசொலி மாறனின் முன்முயற்சியால் ஆரம்பிக்கப்பட்ட சென்னை டிரேட் செண்டரில், உள்ளடங்கியிருக்கிறது கன்வென்ஷன் செண்டர் (கூட்டரங்கம்). இங்குதான் இந்த ‘லக்சரி ஹோம் 2011′ நடைபெற்றது.
வெயிலில் நனைந்தபடி அந்த கன்வென்ஷன் செண்டரை அடைந்தால், 2004-ம் ஆண்டு நவம்பர் 1 அன்று மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், இக்கட்டத்தை திறந்து வைத்தார் என்ற கல்வெட்டை பார்க்கலாம். அங்கிருந்து அந்தக் கூட்டரங்கின் வாசலை மேற்கூரையின் நிழலில் நடந்தபடி தொடலாம். ஆனால், உள்ளே நுழைய நான்கைந்து படிக்கெட்டுகள் ஏற வேண்டும். சிவப்புக் கம்பளத்தை மிதித்து ஏறும்பொழுதே உள்ளிருந்து குப்பென்று தாக்குகிறது குளிர்.
கறுப்பு கோட், சூட், வெள்ளைச் சட்டை, கறுப்பு டை அணிந்த இளைஞர்களும், கறுப்பு ஸ்கர்ட், கறுப்பு கோட், டை, வெள்ளைச் சட்டை அணிந்த இளைஞிகளும் புன்னகையுடன் வருபவர்களை வரவேற்று இடப்பக்கமுள்ள ரிசப்ஷனுக்கு அழைத்துச் செல்கிறார்கள். அங்கு அச்சடிக்கப்பட்ட ஒரு காகிதம் நீட்டப்படுகிறது.
பெயர், விலாசம், வேலை பார்க்கும் இடம், விலாசம், வயது, பிறந்த தேதி, ஆண்டு வருமானம், மின்னஞ்சல் முகவரி, வீட்டு தொலைப்பேசி எண், கைப்பேசி எண், மத்திய சென்னையா தென் சென்னையா வட சென்னையா கிழக்கு சென்னையா மேற்கு சென்னையா… எந்த இடத்தில், ரூபாய் 75 இலட்சம் முதல் ரூபாய் 10 கோடி வரை எவ்வளவு தொகையில் வீடு வேண்டும், இந்த எக்ஸ்போ நடைபெறும் விஷயத்தை ஆங்கில செய்தித் தாள் மூலம் தெரிந்துக் கொண்டீர்களா அல்லது ஆங்கில காட்சி ஊடகம் மூலம் அறிந்தீர்களா அல்லது எஃப்.எம். ரேடியோ மூலம் தகவல் அறிந்தீர்களா அல்லது பேனர்களை பார்த்து தெரிந்துக் கொண்டீர்களா ஆகிய விவரங்களை அக்காகிதத்தில் பூர்த்தி செய்து ரூபாய் நூறுடன் அங்கு தர வேண்டும். எந்நேரமும் புன்னகைக்கும் ரிசப்ஷன் பெண், ‘ப்ளீஸ்…’ என உள்ளே நுழைய வழி காட்டுகிறார். அங்கே ததும்பியிருந்த அமைதி நம்மைப் போன்ற பாமரரை குறைந்த பட்சம் எழுபது இலட்ச ரூபாய் வீட்டை காணுவதற்கு கூட தகுதியற்றோரை ரொம்பவே அச்சுறுத்தியது.
அது நீளமான, ஆயிரம் பேர் அமர்ந்து கூட்டம் நடத்தக் கூடிய ஒரு ஹால். வலப்பக்கம் பத்தடிக்கு ஒன்று வீதம் அக்வஃபீனா குடிநீர் வைக்கப்பட்டிருக்கிறது. ஹாலின் மறுமுனையில் துரித உணவகம். ஸ்நாக்ஸ், டிபன்கள் அங்கு விற்கப்படுகின்றன. இரண்டு அக்வஃபீனா குடிநீரை கடந்ததும் வலப்பக்கம் செல்வதற்கான ஒரு வழி அன்புடன் வரவேற்கிறது. அங்கும் கறுப்பு சூட், வெள்ளைச் சட்டை.
வலுக்கட்டாயமாக நம்மீது சூழும் அந்தப் புன்னகைகளை கடந்து உள்ளே நுழைந்ததும் விரிகிறது கண்காட்சி. முப்பதடி நீளமும், நூற்றி இருபதடி அகலமும் கொண்ட அந்த இடத்தை நான்கு தெருக்களாக பிரித்திருக்கிறார்கள். நீலக்கம்பள கார்பெட்டில் கால்கள் புதையப் புதைய நடக்கலாம். 30 பில்டர்களும் அவரவர் வசதிக்கு ஏற்ப கடை விரித்திருக்கிறார்கள். அக்கடைகளும் அவரவர் கட்டிக் கொண்டிருக்கும் வீட்டு மாதிரிகளை பிரதி எடுத்திருக்கின்றன. ஒவ்வொரு கடையிலும் ஆண்களும் பெண்களும் சம அளவில் அமர்ந்திருக்கிறார்கள். அனைத்துப் பெண்களுக்கும் அதிகபட்சம் இருபத்தைந்துக்குள்ளேயே வயதிருக்கும். ஆனால், ஆண்கள் மட்டும் விதிவிலக்கு. வழுக்கை விழுந்த, நரைத்த தலைமுடிகள் இருந்தாலும் பரவாயில்லை என அவர்கள் அமர வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஆண்களின் டிரெஸ் கோட் கோட், சூட். ஆனால், பெண்களை கோட், சூட் தவிர இழுத்துப் பிடிக்கும் ஜீன்ஸ், ஷர்ட்டிலும், ஸ்கர்ட், ஷர்ட்டிலும் பார்க்க முடிகிறது. எந்த வாடிக்கையாளர் அவர்களது கடைகளை கடந்தாலும் எழுந்து நிற்கிறார்கள். நுனி நாக்கில் அமெரிக்கன் இங்கிலீஷும், பிரிட்டன் இங்கிலிஷும் சரளமாக தவழ்ந்து வருகின்றன. வாடிக்கையாளர்களாக வருபவர்களும் சரி, பில்டர்ஸ் சார்பாக பேசுபவர்களும் சரி, ‘ம்…’ என்ற தமிழ் வார்த்தைகளைக் கூட பயன்படுத்தவில்லை. ‘அச்சா…’ என்பதை ஆங்காங்கே கேட்க முடிந்தாலும் ‘ஓ… ஈசிட்… மை குட்னஸ்… வாவ்… எக்சலண்ட்…’ என்ற வார்த்தைகளையே திரும்பத் திரும்ப கேட்க முடிந்தது. கேட்பவர்களுக்கும், சொல்பவர்களும் அலுக்கவேயில்லை. என்ன இருந்தாலும் மேன்மக்களது இல்லங்களை விற்கும் கண்காட்சியல்லவா! அங்கு நாசுக்கான நாகரீகம் பழகியவர்களுக்கு மிகவும் சாதாரணமான ஒன்றாக இருந்தது. பட்டிக்காட்டான் மிட்டாய்க்கடையை பார்த்தது போல இருந்தது அநேகமாக நான் மட்டும்தான்.
அனைத்துக் கடைகளின் சுவற்றிலும் ஒட்ட வைக்கப்பட்டிருந்த வால்வ் மவுண்டட் டிவிகளில் அவரவரது வீடுகள் குறித்த விவரங்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் இந்தியிலும் மாறி மாறி ஒலித்துக் கொண்டிருந்தன. சின்னத்திரை மற்றும் பெரியத்திரை நட்சத்திரங்கள் அல்லது மாடல்கள் அந்தந்த இடங்களை இசையின் மீது பயணம் செய்தபடி பெருமையுடன் அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தார்கள். குறிப்பிட்ட இடைவெளியில் வாஸ்து நிபுணர் ஒருவர் தோன்றி, நவகிரகங்களின் வழியாக அந்த இடத்தின் சிறப்பை விளக்கிக் கொண்டிருந்தார். இந்த விளம்பர ஒலிகள் அடுத்தக் கடையை ஒருபோதும் அடையவில்லை என்பதையும் பார்க்க முடிந்தது. பத்து கோடி ரூபாயாக இருந்தாலும் வாஸ்துவுக்கு எந்த குறையுமில்லை என்று சீமாட்டிகள் சிலிர்த்துக் கொண்டனர்.
அனைத்து பில்டர்ஸின் கடை வாசல்களிலும் கட்டப்பட்டு வரும் வீடுகள் குறித்த விவரங்கள் அடங்கிய காகிதத்தை கொடுக்கிறார்கள். வழுவழு தாளில் வண்ணப் புகைப்படங்களுடன் அச்சடிக்கப்பட்டிருக்கும் அவற்றை காகிதம் என்று குறிப்பிடுவதை விட, புத்தகம் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். நீச்சல் குளம், பூங்கா, உடற்பயிற்சி கூடங்கள், சூப்பர் மார்கெட், வங்கிகள், பள்ளிகள், பியூட்டி பார்லர்கள், யோகா மையங்கள்… ஆகியவை இல்லாமல் எந்த வீடும் கட்டப்படவில்லை என்பதை அனைத்து பேம்லெட்ஸையும் வாசித்தபோது புரிந்தது. நேர்பேச்சில் 24 மணிநேர மின்வசதி உண்டு என்பதை அனைத்து பில்டர்களும் தவறாமல் குறிப்பிடுகிறார்கள். ஒவ்வொரு வீட்டுக்கும் குறைந்தது இரு கார்கள் நிறுத்தக் கூடிய அளவுக்கு பார்கிங் வசதிகள் உண்டு. குடிதண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைக்குமா, லாரியில் தண்ணீர் வாங்க வேண்டிய அவசியம் வருமா… போன்ற கேள்விகளை ஏதோ மனிதக் கழிவுகளை மிதித்துவிட்ட உணர்வுடன் எதிர்கொள்கிறார்கள். லாஸ் விகாசில் சீட்டுக்கட்டு கிடைக்குமா என்று கேட்டு விட்டோமோ?
அங்கிருந்த பில்டர்களில் அடுக்கு மாடி குடியிருப்பு வீடுகளை விற்பவர்கள் இரண்டு அல்லது மூன்று பேர்தான் இருப்பார்கள். மற்றவர்கள் அனைவரும் பெண்த்ஹவுஸ், வில்லா, ரோ ஹவுஸஸ் ஆகியவற்றை விற்பனை செய்பவர்களே. இவர்கள் தவிர, வேகேஷன் ஹோம்ஸ் விற்பவர்களையும் பார்க்க முடிந்தது. அனைவருமே ஐரோப்பிய அல்லது அமெரிக்க மாதிரிகளில் இல்லங்களை கட்டி வருவதாக குறிப்பிடுகிறார்கள். அதற்கான மாதிரிகளையும் புகைப்படங்களில் காட்டுகிறார்கள். சிலர் கட்டப்பட்டு வரும் வீடுகளின் ப்ளு பிரிண்டை சுவற்றில் பெரிதுப் படுத்தி மாட்டியிருந்தார்கள். அடுக்குமாடி குடியிருப்புகள் மட்டுமே வீடு ஒன்றுக்கு 800 சதுர அடி என்று ஆரம்பிக்கின்றன. மற்றவை அனைத்தும் வீடு ஒன்றுக்கு 2 ஆயிரம் முதல் 5 ஆயிரம் சதுர அடிகளில் உருவாகுபவை. 2க்கும் மேற்பட்ட படுக்கையறைகளும், ஒவ்வொரு படுக்கையறையிலும் ‘அட்டாச்டு’ பாத்ரூமும் அனைத்து வீடுகளிலும் உண்டு.
வீடு என்றால் பாத்ரூம் இருக்கிறதா என்ற சம்பிரதாய தேவைகளைத் தாண்டி நாம் எப்போதும் சிந்திப்பதில்லை. கொஞ்சம் வசதியிருந்தால் பூஜை அறை…இங்கோ சரளமாக லிவிங் ரூம் டெகரேஷன் என்ன ஸ்டைல், டைனிங் ஹாலின் தீம் என்ன, டிராயிங் ரூமின் ஹார்மனி வண்ணம் என்ன என்று என்னவெல்லாமோ போட்டுத் தாக்குகிறார்கள். அவர்களது மொழி நமக்கு புரிந்திருக்க வேண்டுமென்றால் நாமும் அத்தகைய வீடு ஒன்றில் வாழ்ந்திருக்க வேண்டும். இல்லையேல் ‘இல்லிட்ரேட்’தான்.
இந்தக் கண்காட்சி மேட்டுக்குடியினருக்காக என்பதால் எந்த உள்நாட்டு – வெளி நாட்டு வங்கியும் அங்கு வீட்டுக் கடன் தருவதாக கடை விரிக்கவில்லை. சேர்த்த பணத்தை செலவழிக்க சிரமப்படுபவர்களுக்கு கடன், இன்ஸ்டால்மென்ட், வங்கி, சுலப தவணை, குறைந்த வட்டி என்று எதுவுமே தேவையில்லை. கட்டப்பட்டு வரும் குடியிருப்புப் பகுதிகளுக்கும் ‘தபோவனம்’, ‘ஆஸ்ரமம்…’ என்று பாரத பண்பாட்டின் அடியொற்றி பெயர்களை சூட்டியிருக்கிறார்கள். ஐரோப்பிய மாடல் வீடுகளென்றாலும் பெயரென்னவோ சுதேசிதான். என்ன ஒரு நாட்டுப்பற்று!
சென்னையில் முதல் முறையாக கட்டப்பட்டு வரும் 5 நட்சத்திர வீடுகள் குறித்த அரங்கு நடுநாயகமாக இருந்தது. சென்னை கடற்கரைச் சாலையில், தாஜ் ஃபிஷர்மென் கோவ் கடந்து, 2 கி.மீ. தூரம் சென்றால், 3 ஏக்கர் பரப்பளவில் 4500 முதல் 5500 சதுர அடி வரையிலான 22 வீடுகள் உருவாகி வருகிறதாம். வீட்டுக்குள்ளேயே தரையில் ‘பா’ வடிவில் நீரும் அதனுள் தங்க மீன்களும் இருக்குமென்றும், இதன் மீது கண்ணாடி தரை பதிக்கப்பட்டிருக்குமென்றும் சொன்னார்கள். இதன் மாதிரியை தங்கள் அரங்கிலேயே உருவாக்கி காண்பிக்கவும் இவர்கள் தவறவில்லை. நீச்சல் குளத்தில் நீந்தியபடி அல்லது மூழ்கியபடி இங்கு உடற்பயிற்சி செய்ய முடியும். ‘இன்ஃப்ளுயன்ஸ்’ சார்பில் இந்த ஐந்து நட்சத்திர வீடுகள் உருவாகின்றன. ஒரு வீட்டின் மதிப்பு ரூபாய் 10 கோடி.
கால்கழுவுவதற்கு குட்டி வாளியை எடுத்துக் கொண்டு அடி பம்பிற்கு சென்று வரிசையில் நின்று வாழ்க்கையை ஓட்டும் நாகரிகமற்ற பரதேசிகளின் நாட்டில் என்ன ஒரு கற்பனை! இந்தக் கற்பனை வளம் உள்ளதால்தானே அம்பானியால் ‘ஆன்டிலியா‘ மாளிகையை ரசித்து ரசித்து கட்ட முடிந்திருக்கிறது? யார் சொன்னார்கள் இந்தியர்களுக்கு ரசனைக் குறைவென்று?
அனைத்து அரங்குகளிலும் வாடிக்கையாளருடன் அமர்ந்து பேசுவதற்கான குஷன் சோஃபா செட் போட்டிருக்கிறார்கள். சிலர் கண்ணாடியாலான மேஜை நாற்காலிகளை நிரப்பியிருக்கிறார்கள். எந்தக் கண்ணாடி மேஜையிலும் கைவிரல் கூட பதியாத அளவுக்கு வேலைப் பார்க்கிறார்கள்.
அடுக்குமாடி வீடுகளோ அல்லது வில்லாவோ அனைத்துமே ‘ஃபர்னிஷிட் ஹவுஸ்’. கதவுகள் ஐரோப்பிய மரங்களாலும், சோஃபாக்கள் ஐப்பான் தயாரிப்பாகவும், கட்டில்கள் ஜெர்மன் உருவாக்கமாகவும், மார்பிள் சுவிட்சர்லாந்து மேக்கிங்காகவும் இருக்கின்றன. இந்த அலங்காரங்களுக்கு ஏற்ற தகுதியை இந்தியப் பொருட்கள் இன்னும் பெறவில்லை என்பது ஒரு பிரச்சினையல்ல. மேலும் இந்தப் பொருட்களை அழகாக பாரமரிக்கும் பணியை செய்வதென்னவோ சென்னை சேரி மனிதர்கள்தான். அதைச் செய்வதற்கும் வெளிநாட்டிலிருந்து வெள்ளையான பணியாட்களை நம்மவர்கள் கொண்டு வரமாட்டார்களா என்ன?
இந்தக் குடியிருப்புகள் அனைத்தும் சென்னை கடற்கரைச் சாலை, பழைய மகாபலிபுரம் சாலை, பள்ளிக்கரணை, ஓரகடம், குரோம்பேட்டை, நல்லம்பாக்கம், மணப்பாக்கம், மேடவாக்கம், காரப்பாக்கம், ஈகாட்டூர், கொட்டிவாக்கம், காலவாக்கம்… ஆகிய பகுதிகளிலேயே அமைந்துள்ளன. ஏரிக்கரையில் அல்லது பசுமை சூழவே கட்டப்பட்டு வருகின்றன. மீனவ மக்களின் கருவாட்டு குப்பையால் ‘அழகற்று’ கிடக்கும் கிழக்கு கடற்கரை இனி இந்தத் தங்க மாளிகைகளால் அழகு பெறும். குப்பங்களின் அசுத்தத்தை இனி இங்கு காண இயலாது.
1189 சதுர கி.மீ. தூரமுள்ள சென்னையில், ஒரு சதவிகிதத்துக்கும் குறைவாக இருக்கும் கோடீஸ்வரர்களுக்காக, பெரும் பகுதி நிலப்பரப்பில் உருவாகி வரும் குடியிருப்புகள் இவை. இந்த இடங்கள்தான் நாளை ‘ஒளிரும் சென்னை’யின் அடையாளமாகப் போகிறது.
2007ம் ஆண்டு வெளியான இந்திய கோடீஸ்வரர்களின் புள்ளிவிவரத்தை சொல்லி புளாங்கிதம் அடைந்த ஐபால் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் எம்.டி.யான சக்திக்கு 2001ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் விவரம் தெரியாதா என்ன?
தெரியும். அவருக்கு மட்டுமல்ல… இந்த இடங்களில் வீடுகளை வாங்கி குடியிருக்கப் போகிறார்களே ‘மில்லியனர்கள்’… அவர்களுக்கும் இந்த விவரம் நன்றாகவே தெரியும்.
- சென்னைப் பெருநகரில் குடியிருக்கும் 3 சதவிகிதத்தினரின் குடும்ப வருமானம் மாதம் ரூபாய் 250க்கு கீழேதான் என்பதையும், 9 சதவிகித குடும்பங்களின் மாத வருமானம் ரூபாய் 501க்கு கீழ் என்பதையும், 38 சதவிகிதத்தினரின் மாத வருமானம் ரூபாய் 1101 கீழே என்பதையும் நன்றாகவே அறிவார்கள். 72 சதவிகித குடும்பங்கள் நலிவடைந்த மற்றும் குறைந்த வருவாய் குடும்பங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இது 2001ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது தெரிய வந்த உண்மைகள்.
- அதுமட்டுமல்ல, சென்னை நகரில் 9.62 லட்சம் குடியிருப்புகளும், பெருநகரங்களில் 16 – 19 இலட்சம் குடியிருப்புகளும் இருப்பதாக அதே கணக்கெடுப்பு குறிப்பிடுகிறது. இதில் மாநகரப் பகுதியில் மட்டும் 2 இலட்சத்து 5 ஆயிரத்து, 20 குடியிருப்புகள் அறைகள் அற்ற ‘வீடு’களாகவும், ஓர் அரை குடியிருப்புகள் 3 இலட்சத்து 18 ஆயிரத்து, 325 என்றும், இரு அறை குடியிருப்புகள், 2 இலட்சத்து 51 ஆயிரத்து, 659 என்றும்…
- 29.2 சதவிகித குடியிருப்புகள் மட்டும்தான் தனிப்பட்ட கழிப்பிட வசதிகளை கொண்டுள்ளன. 48.3 சதவிகித குடியிருப்புகள் பொதுக் கழிப்பிடங்களை கொண்டுள்ளன. 22.5 சதவிகிதத்தினர் கட்டணக் கழிப்பிடம் அல்லது திறந்தவெளியை பயன்படுத்துகின்றனர் என்றும்…
- பொதுக் கழிப்பிட ஏற்பாடு 1086 பேருக்கு ஒரு மலம் கழிக்கும் இருக்கை எனவும், 2817 பேருக்கு ஒரு சிறுநீர் கழிக்கும் இருக்கை எனவும் இருப்பதாக ‘கணக்கெடுப்பு’ சொல்கிறது.
- சென்னை பெருநகரில் உள்ள 1731 குடிசைப் பகுதிகளில், 1473 பகுதிகள் மேம்படுத்தப்பட்ட குடிசைப் பகுதிகளாகவும், 242 பகுதிகள் ஆட்சேபகரமான இடங்களில் அமைந்துள்ளவையாகவும் இருக்கின்றன. இவைகளில் பெரும்பகுதி நீர்வழி துறையோரங்களில், சாலையோரங்களில், அமைந்துள்ளன. இந்த ஆட்சேபகரமான குடிசைப் பகுதிகளில் 71 ஆயிரத்து 840 குடியிருப்புகளில், 3 இலட்சத்து 92 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். ஆற்றுடன் இணைப்பு கால்வாய் ஓரங்களில் 5288, ஆற்றோரங்களில் 30,922, சாலையோரங்களில் 22,769, கடற்கரைப் பகுதிகளில் 16,519 என குடியிருப்புகள் ஆட்சேபகர பகுதிகளில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
- சென்னை நகர மக்கள் தொகையில் குடிசை பகுதிகளில் வசிப்பவர்களின் எண்ணிக்கை 40 சதவிகிதம். இவர்களின் வசிப்பிடத்தின் மொத்தம், சென்னை நகர பரப்பளவில் சுமார் 6 சதவிகிதம் மட்டுமே. குடிசைப் பகுதிகளில் ஒவ்வொரு குடியிருப்புகளிலும் சராசரியாக 7 பேர் தங்குகின்றனர். இங்கு வாழும் உழைக்கும் மக்களில் 84.12 சதவிகிதத்தினர் கட்டுமானம், ஆட்டோ, வீட்டு வேலை, சிறு வியாபாரம், இதர சிறு வேலைகள், முறைசாரா தொழில்களில் ஈடுபடுபவர்களாக உள்ளனர். இவர்களில் 78.47 சதவிகிதத்தினர் தங்கள் வேலை இடங்களுக்கு நடந்தே செல்கின்றனர். 45.09 சதவிகித குடும்பங்கள் குடிசைப் பகுதிகளிலும், வாடகை குடித்தனங்கள். முதலாளிகள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் என்ற மேட்டுக்குடி சென்னைக்கு தேவையான பணிகளை இந்த சேரி மக்கள்தான் செய்கிறார்கள். இவர்களின்றி எழில்மிகு சென்னை சாத்தியமில்லை.
இவையெல்லாம் 2001ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது அறிய வந்தவை. இன்று இந்த எண்ணிக்கையும், சதவிகிதமும் அதிகரித்திருக்கும். இது கண்டிப்பாக சென்னையில் முதன்முதலில் ‘லக்சரி ஹோம் 2011′ கண்காட்சி நடத்தியவர்களுக்கும் தெரியும். ஆயிரம் சதுர அடி முதல் 5500 சதுர அடி வரை வீடு வாங்கித் தங்கப் போகிறவர்களுக்கும் தெரியும். ஏனெனில் ஏழைகளிடமிருந்து சுரண்டப்பட்ட பணத்திலிருந்தும், அவர்களது இருப்பிடங்களை பிடுங்கியும்தான் ரூபாய் 75 இலட்சத்தில் ஆரம்பித்து ரூபாய் 10 கோடி வரையிலான இந்த வீடுகள் கட்டப்படுகின்றன.
மறுகாலனியாதிக்கத்தின் விளைவு இது. உலகமயம், தாராளமயம் அறிமுகப்படுத்தப்பட்டது முதல் பணக்காரர்கள், மேலும் பணக்காரர்களாகவும், ஏழைகள், மேலும் ஏழைகளாகவும் மாறி வருவது அதிகரித்து வருகிறது. அதனால்தான் ”இந்தியாவில் உள்ள கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து இருபத்து மூன்றாயிரம்.இது ஆண்டுதோறும் 20 சதவிகிதம் வரை அதிகரித்து வருகிறது என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்…” என வெட்கமின்றி செய்தியாளர்கள் கூட்டத்தில் சொல்ல முடிகிறது. இந்த இருபது சதத்திற்கு போட்டியாக விவசாயிகளும், சிறு தொழில்களும், நெசவும் போண்டியாகும் கணக்கு அதிகரிப்பது ஏன்? குப்பன், சுப்பனிமிடமிருந்து எடுத்துத்தான் குபேரர்கள் உருவாக முடியும். குபேரபுரியும் எழ முடியும்.
அன்று ‘மேல்’ சாதியினர் ‘சுத்தமாக’ வாழ அக்ரஹாரமும், ஊரும் இணைந்து சேரிகளை ஒதுக்குப்புறமாக வைத்தன. இன்று கோடீஸ்வரர்கள் ‘சத்தமின்றி நிம்மதியாக’ வாழ குடியிருப்புகள் உருவாகின்றன. உழைக்கும் மக்கள் வசிக்கும் சேரிப் பகுதிகள் இதற்காகவே அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன.
சென்னை நகர நிலப்பரப்பில் வெறும் 6 சதவிகித இடத்தில் மட்டுமே சென்னை நகர மக்கள் தொகையில் 40 சதவிகிதத்தினர் வசிக்கிறார்கள். ஆனால், சென்னை நகர மக்கள் தொகையில் ஒரு சதவிகிதத்துக்கும் குறைவான எண்ணிக்கையில் உள்ளவர்கள் வசிக்க பல சதவிகித நிலப்பரப்புகள் கையகப்படுத்தப்படுகின்றன.
வேலைக்கு சென்றால் சிறுநீர் கழிக்கக் கூட இடமில்லாமல் அலையும் மக்கள் வாழும் நாட்டில் பொதுக்கழிப்பிடங்கள அதிகம் உருவாகவில்லை. ஆனால் மேன்மக்கள் சாலை நெரிசலில் சிக்கிவிடக்கூடாது என்று சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரை 1,300 கோடி ரூபாயில் உயர் விரைவு பறக்கும் சாலை; கடற்கரையோரம் ஆயிரம் கோடி ரூபாயில் அதி உயர் விரைவு சாலை; அடையாறு ஆறு பக்கிங்காம் கால்வாய்; மாம்பலம் கால்வாய்; கூவம் ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் 3 ஆயிரம் கோடி ரூபாயில் ஆற்றோர வட்டச் சாலைகள்; பறக்கும் ரயில்; மெட்ரோ ரயில்; சாலைகள் விரிவாக்கம்; கூவம் நதியை அழகுபடுத்தும் திட்டம் எனப் பல ஆயிரம் கோடிகளில் சென்னையானது ‘சிங்காரச் சென்னை’யாக மாற்றப்பட்டு வருகிறது.
இந்த வளர்ச்சிக்கு இடையூறாக, பல ஆண்டுகளாக – பல தலைமுறைகளாக – இப்பகுதிகளில் வாழ்ந்துவரும் அடித்தட்டு உழைக்கும் மக்களை விதிமுறைகளுக்கு மீறி குடியிருப்பதாகச் சொல்லி அரசாங்கம் கட்டாயமாக வெளியேற்றி, குன்றத்தூர் – திருப்பெரும்புதூர் நெடுஞ்சாலையில், குன்றத்தூரில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் நல்லூர்… பழைய மகாபலிபுரம் சாலையில் துரைப்பாக்கத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் கண்ணகி நகர்… பெருங்களத்தூர் அருகே எருமையூர் கூட்டு ரோடு செல்லும் வழியில் தாம்பரத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் கன்னடபாளையம்… என மனித நடமாட்டம் இல்லாத புறநகர் பகுதிகளில் குடியமர்த்தி வருகிறது.
ஆனால், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டு போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி வரும் ஒரு நட்சத்திர விடுதியை குறித்தோ அல்லது சென்னை தியாகராய நகர் உள்பட பல்வேறு பகுதிகளில் விதிமுறைகளை மீறி, புறம்போக்கு நிலத்தை ஆக்ரமித்து கட்டப்பட்டிருக்கும் துணிக்கடைகள், வணிக வளாகங்கள், கல்யாண மண்டபங்களை குறித்தோ அரசு கண்டுக் கொள்ளவேயில்லை. இத்தனைக்கும் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டிருக்கும் இந்த வணிக வளாகங்களை அகற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது!
அதேபோல் நீர்நிலை பகுதிகளை ஆக்கிரமித்திருக்கிறார்கள் என்று சொல்லி அடையாறு ஆறு, பக்கிங்காம் கால்வாய், கூவம் ஆற்று கரைகளில் வசித்து வந்த மக்களை வெளியேற்றிய அரசாங்கம், சென்னையை விட்டு 40 கிலோ மீட்டர் தூரத்தில், இன்னொரு நீர் பிடிப்பு நிலத்தில்தான் அம்மக்களை குடியமர்த்தியுள்ளது.
வீடு என்பதற்கு இந்து மதத்தில் ‘வீடுபேறு’ என்ற பொருள் உண்டு. அதாவது சொர்க்கம் புகுதல். இதையே இன்னொரு பொருளிலும் புரிந்துக் கொள்ளலாம். அது மரணித்தல் அல்லது அழித்தல்.
ஆம், கோடீஸ்வரர்கள் சொர்க்கத்தில் வசிக்க, அடித்தட்டு உழைக்கும் மக்கள் மரணிக்கிறார்கள். ஏனெனில் இருவருமே வசிப்பது ‘வீடு’களில்…
______________________________________________
- வினவு செய்தியாளர்
___________________________
No comments:
Post a Comment