ஓதுவோம் வாருங்கள் இப்னு அஹ்மது |
குர்ஆன் ஓதுதல் என்றதும் நமது மனத்திரையில் ஓடும் காட்சி.. சிறுவர்கள் புடைசூழ மதரஸாக்களில் ஹஜ்ரத்துகள் கையில் கம்போடு ஓதிக் கொடுக்கும் காட்சிதான். நம்மில் எத்தனையோ பேர் தம் குழந்தைகளை குர்ஆன் கற்க மதரஸாக்களுக்கு அனுப்புகிறோம். நம்மையும் நம் பெற்றோர்கள் அனுப்பினார்கள். காலங்கள் உருண்டோட.. நாம் மதரஸாக்களில் கற்ற குர்ஆனை சிறுகச் சிறுக மறந்துவிடுகின்றோம். வேறு சிலரோ குர்ஆன் ஓதத் தெரியாமலேயே அந்நியப்பட்டுவிடுகின்றனர்.
நம்மில் பலரிடம் குர்ஆன் ஓதுங்கள் என்று கூறினால் நேரமில்லை என்றோ, சுத்தமில்லை என்றோ கூறி விலகி விடுகிறோம். சில பள்ளிகளில் இமாம் இல்லாத நேரம் இமாமத் செய்ய நடக்கும் போட்டா போட்டியே(?!) இதற்குச் சான்று. "இமாமத் செய்யுங்க பாய்" என்று சொன்னால், அந்தத் தகுதியெல்லாம் நம்மிடம் இல்லை என்று கூறக்கூடிய நம்மவர்கள், இறைமறையை கற்பதிலும், கற்ற மறையை ஓதுவதிலும் ஏன் பாராமுகம் காட்டுகிறார்கள். இறைமறையை கற்றல், ஓதுதல் போன்றவற்றின் சிறப்புகளை அவர்கள் அறிவார்களேயானால், நிச்சயமாக குர்ஆன் ஓதுவதில் ஆர்வம் காட்டுவார்கள். நபி(ஸல்) கூறினார்கள்: குர்ஆன் ஓதுங்கள்! நிச்சயமாக குர்ஆன் கியாமத் நாளில் தன் தோழர்களுக்குப் பரிந்துரை செய்யக்கூடியதாக வரும். (முஸ்லிம்: அபூ உமாமா (ரலி))
இறைமறையை நாம் ஓதும்போது மறுமை நாளில் அது நமக்கு பரிந்துரை செய்கிறது. நரக நெருப்பை விட்டும் அது நம்மை காப்பாற்றுவதாக அமைகிறது. இன்னும் நன்மைத் தட்டு கனக்க காரணமாகிறது. மேலும் பல்வேறு நன்மைகளை நமக்கு கிடைக்கச் செய்கிறது.
நபி(ஸல்) கூறினார்கள்: அல்லாஹ்வின் அருள்மறையான குர்ஆனிலிருந்து ஓர் எழுத்தை ஒருவர் ஓதுவரானால், அவருக்கு ஒரு நன்மை உண்டு. அந்த ஒரு நன்மை பத்து மடங்கு கொண்டதாகும். அலீப், லாம், மீம் ஓர் எழுத்து என்று நான் கூறமாட்டேன். மாறாக அலிப் ஒர் எழுத்தாகும், லாம் ஓர் எழுத்தாகும், மீம் ஓர் எழுத்தாகும். (மூன்றும் மூன்று எழுத்துகளாகும். அம்மூன்றையும் ஒருவர் ஓதினால் ஒவ்வொன்றுக்கும் பத்து நன்மைகள் வீதம் முப்பது நன்மைகளைப் பெறுவார்). (திர்மிதி: அப்துல்லாஹ் பின் மஸ்வூது (ரலி))
தாழ்வு மனப்பான்மை வேண்டாம்குர்ஆனை கற்றுக் கொண்டிருக்கும் அல்லது அரைகுறையாய் ஓதத் தெரிந்த எத்தனையோ பேர் தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களாக, நமக்கு அவ்வளவாக ஓதவராது பாய்! என்று கூறுபவர்களாக இருக்கிறார்கள். நாம் தினமும் ஓதாத பட்சத்தில் அரைகுறையாக ஓதும் நிலை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். நாம் அடிக்கடி ஓதி எப்படியாவது நம் ஓதுதலை திருத்திக் கொள்ள வேண்டும் என முயற்சித்து அடிக்கடி ஓதினால் நிச்சயமாக நாம் மிகப் பெரும் காரிகளாகலாம். மேலும் நமக்கு குர்ஆன் ஓத வராது என்ற தாழ்வு மனப்பான்மையை நீக்கி திக்கினாலும் பரவாயில்லை நான் முயற்சி செய்வேன் என்று உறுதி பூண வேண்டும்.
இன்று குர்ஆனை நல்ல முறையில் ஓதும் அத்தனை பேரும் ஆரம்ப காலத்தில் திக்கித் திக்கி ஓதியவர்கள்தான் என்பதையும் நம் மனதில் கொள்ள வேண்டும். ஆக திக்கித் திக்கி ஓதுவது குற்றமல்ல. நன்மைகளில் எந்த குறைபாட்டையும் ஏற்படுத்தாது. இன்னும் சொல்லப் போனால் நன்மைகள் தான் அதிகமாகக் கிடைக்கும்.
நபி(ஸல்) கூறினார்கள்: குர்ஆனைத் திறமையாக நன்முறையில் ஓதுபவர் நல்லோர்களான சங்கைமிகு மலக்குகளுடன் சுவர்க்கத்தில் இருப்பார். குர்ஆனை (இயலாமையால்) கஷ்டப்பட்டவராகத் திக்கித் திக்கி ஓதுகிறவருக்கு இரண்டு நற்கூலிகள் உண்டு. (ஆதாரம் : புகாரி, முஸ்லிம் : ஆயிஷா (ரலி))
பொருளறிந்து உள்ளச்சத்தோடு ஓதுதல்நாம் இன்று குர்ஆனை நாம் பொருளறியாது சம்பிரதாயமாக ஓதி, இறந்தவர்களுக்கு பார்சல் செய்யும் பொருளாக மட்டுமே பாவித்து வருகிறோம்.
எந்த யாஸீன் சூராவை பார்சல் செய்வதற்கு பயன்படுத்துகிறோமோ அந்த யாஸீன் சூராவின் 70 ஆவது வசனத்தில்...
(இது) உயிரோடிருப்பவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறது. நிராகரிப்பவர்களுக்குத் (தண்டனை உண்டு என்ற) வாக்கை உண்மையென உறுதிப் படுத்துகிறது. (அல்-குர்ஆன் (36:70))
உயிரோடு இருப்பவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யவே இறைவன் குறிப்பிடுகின்றான். நாம் இதை பொருளறியாது சம்பிரதாயமாக ஓதினால் எப்படி இறைவனின் எச்சரிக்கையை புரிந்து கொள்ளமுடியும். எவ்வாறு நமக்கு அச்சம் ஏற்படும். மேலும் திருமறையில்..
அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். (அல்-குர்ஆன் 4:82)
என்று இறைவன் கேட்கிறான். எனவே பொருளறியாது ஓதும் பட்சத்தில் கருத்துக்கள் புரியாது. சிந்திக்கவும், ஆராய்ச்சி செய்யவும் இயலாது. இதே போல்...
இன்னும் அவர்கள் (சிந்தித்துப்) படிப்பினைகள் பெறுவதற்காக இந்த குர்ஆனில் திட்டமாக(ப் பல்வேறு) விளக்கங்களைக் கூறியுள்ளோம்; எனினும், (இவை யாவும்) அவர்களுக்கு (உண்மையிலிருந்து) வெறுப்பைத் தவிர (வேறெதையும்) அதிகப்படுத்தவில்லை! (அல்-குர்ஆன் 17:41)
அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்களுடைய இருதயங்கள் ((இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டுவிட்டனவா? (அல்-குர்ஆன் 47:24)
என்று வல்ல இறைவன் கூறுகின்றான். குர்ஆன் ஓதியதின் முழுப் பலனை நாம் பெற முடியாதவர்களாகி விடுகிறோம். இன்று எத்தனையோ மாற்று மத சகோதரர்கள் குர்ஆனை தனது தாய்மொழியில் பொருளறிந்து படித்து அதன் கருத்துக்களால் கவரப்பட்டும், கருணை நாயனின் நல்லுபதேசங்களையும், அறிவியல் உண்மைகளை ஆராய்ந்தும் இஸ்லாத்தின்பால் அணிவகுப்பதை அன்றும், இன்றும் நாம் கண்கூடாகக் கண்டு வருகிறோம்.
மேலும் திருக்குர்ஆனை நாம் பொருளறிந்து ஓதும்போது உள்ளச்சம் ஏற்படுகிறது. இறைவன் குர்ஆனில் கூறியுள்ள ஏவல், விலக்கல்களை புரிந்துகொண்டு நமது வாழ்வில் ஒரு மாற்றம் ஏற்படுகிறது. இதயத்தில் சாந்தி ஏற்படுகிறது. அதே நேரத்தில் திருக்குர்ஆன் ஓதிய முழுமையான நன்மைகளையும் ஈட்டித்தருகிறது.
நபி(ஸல்) கூறினார்கள்: நிச்சயமாக அல்லாஹ் இந்தக் குர்ஆனைக் கொண்டு எத்தனையோ கூட்டத்தாரின் அந்தஸ்துகளை உயர்த்துகிறான். இன்னும் இந்தக் குர்ஆனைக் கொண்டு (அதனை உதாசீனப்படுத்தும்) எத்தனையோ கூட்டத்தாரைத் தாழ்த்துகிறான். (முஸ்லிம்: உமர் பின் கத்தாப்(ரலி))
இந்த குர்ஆனின் பொருளறிந்து அதனை செயல்படுத்தும் சமுதாயத்தினரை இறைவன் நேர்வழிப்படுத்தி இம்மை மற்றும் மறுமை வாழ்வில் உயர்த்துகிறான். சஹாபாக்களின் வாழ்க்கையே இதற்குச் சான்று. அதேபோல பொருள் அறியாது சாஸ்டாங்கமாக ஓதி வரும் இன்றைய காலத்தில் உள்ள சமுதாயத்தின் நிலையை அல்லாஹ்வே மிக்க அறிந்தவன். இன்று நாம் குர்ஆனை ஓதுகின்றோம், நமது மனதில் ஏதாவது மாற்றம் நிகழ்கிறதா?! பொருளறியாதவரையில் எவ்வாறு மாற்றங்களையும், செயல்பாடுகளையும் எதிர்பார்க்கமுடியும்? பொருளறிந்து ஓதும் போதும் சுவனத்தின் வர்ணணைகளைப் படிக்கின்ற போதும் நாம் இத்தகைய சுவனத்தை அடைய வேண்டும் என்கிற ஆர்வம் நமது உள்ளத்தில் ஏற்படுகிறது. அதேபோல் நரகத்தைப் பற்றி எச்சரிக்கையைப் படிக்கும் போது, இந்த உலக நெருப்பைவிட மறுமையில் வல்ல நாயன் ஏற்படுத்தியிருக்கும் நெருப்பு மிகக் கடுமையானது என்ற பயம் நம் மனதில் ஏற்பட்டு ஏவல், விலக்கல்களை நடைமுறைப்படுத்தும் ஆர்வம் மேலிடுகிறது.
இந்த உள்ளுணர்வு ஏற்பட்டதன் காரணமாகவே சஹாபா பெருமக்கள் வெற்றியடைந்தனர். அபூபக்கர்(ரலி) போன்றோர் தொழுகையில் குர்ஆனை ஓதும்போது அழுதுவிடக்கூடியவர்களாக இருந்தனர். இம்மையில் முன்பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட நபி(ஸல்) அவர்கள் குர்ஆனின் 4:41 ஆவது வசனத்தை ஓதும்போது அவர்களின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியதை புகாரி, முஸ்லிமில் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்களின் அறிவிப்பில் காணமுடிகிறது.
அழகிய குரலில் நிறுத்தி நிதானமாக ஓதுவதுகுர்ஆன் ஓதும் போது நிறுத்தி நிதானமாக, அவசரப்படாமல் ஓதவேண்டும். அவசரப்படுத்துவது ஷைத்தானின் செயல் என்பதைக் கருத்தில் கொண்டு, என்னுடைய இறைவன் எனக்கு அறிவிக்கிற உபதேசத்தை நான் வாசிக்கின்றேன் என்ற உள் அச்சத்தோடு ஓத வேண்டும். நபி(ஸல்) அவர்கள் குர்ஆனை ஓதும்போது ஒவ்வொரு ஆயத்தாக நிறுத்தி ஓதுபவர்களாக இருந்தார்கள். இன்று நம் நிலை விசித்திரமானது. ரமலான் காலங்களில் எப்படியாவது 30 நாட்களில் குர்ஆனை முடித்துவிட வேண்டும் என்ற ஆர்வக்கோளாரில் போட்டி நிலவுகிறது. ஏன் தராவீஹ் தொழுகையில் கூட விரைவு வேக மௌலவிகள், ஹாபிழ்கள் வரவழைக்கப்பட்டு அதிவேகமான தொழுகைகள் நடைபெறுகின்றன. இன்னும் சில நண்பர்களுடன் உரையாடும் போது என் மகன் ரமலானில் இரண்டு முறை குர்ஆன் ஓதி முடித்துவிட்டான் என்றெல்லாம் புகழாரம் சூடும் பெற்றோர்களையும், நண்பர்களையும் பார்க்கின்றோம். திருக்குர்ஆனை நிதானமாக ஓதவேண்டும். அதே நேரத்தில் நல்ல கிராஅத்துடன் ஓதுவது சாலச் சிறந்தது.
இஷாத் தொழுகையில் நபி (ஸல்) அவர்கள் வத்தீனி வஸ்ஸைத்தூனி ஸுராவை ஓதினார்கள். அவர்களைவிட அழகான, இனிமையான குரலை எங்குமே நான் கேட்டதில்லை. (புகாரி, முஸ்லிம்: பராவு பின் ஆஸிப் (ரலி))
நபி(ஸல்) அவர்கள் (அபூமூஸாவே) நீர் நபி தாவூது (அலை) அவர்களின் குடும்பத்தினரின் இசைக் கருவிகளில் ஒன்றைக் (இனிய குரலை) கொடுக்கப்பட்டுவிட்டீர். (அபூமூஸா அல்அஷ்அரீ(ரலி)
குர்ஆனை மிக அழகிய இனிமையான குரலில் ஓதக் கூடியவர்களாக இருந்தார்கள்) ((ஆதாரம் : புகாரி, முஸ்லிம் அறிவிப்பாளர் : அபூ மூஸா அல் அஷ்அரி(ரலி))
முஸ்லிமின் மற்றொரு அறிவிப்பில், நபி (ஸல்) அவர்கள் அபூ மூஸா அல்அஷ்அரி (ரலி) அவர்களிடம், நேற்றிரவு நான் உமது கிராஅத்தைக் கேட்பதை நீர் பார்த்திருந்தால் மகிழ்ச்சியடைந்திருப்பீர் எனக் கூறினார்கள்.
குர்ஆன் ஓதுபவரின் மறுமை நிலை மிக்க மகத்தானதுநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (கியாமத் நாளில்) குர்ஆனை உடையவரிடம், "நீர் குர்ஆனை ஓதுவீராக! அந்தஸ்தால் உயருவீராக, உலகில் எவ்வாறு அதனை நிறுத்தி அழகாக (தஜ்வீதுடன்) ஓதினீரோ அது போன்றே இங்கும் ஓதுவீராக. நீர் ஓதும் கடைசி ஆயத்தின் இடத்தில் உம் அந்தஸ்து உள்ளது" எனக் கூறப்படும். (எவ்வளவு ஆயத்துகள் ஓதுகிறாரோ அவ்வளவு தூரத்துக்கு அவரது அந்தஸ்துகள் சுவர்க்கத்தில் உயர்த்தப்படும்) - (அபூதாவூது, திர்மிதி: அப்துல்லாஹ் பின் அம்ர் இப்னு ஆஸ்(ரலி))
திருக்குர்ஆனை மனனம் செய்வதுஇன்று எத்தனையோ ஹாபிழ்கள் வாழ்கின்றனர். 6 வயது சிறுவர்கள் எல்லாம் முழுக் குர்ஆனையும் மனதில் சுமந்து நிற்பதைக் கண்டு நாம் பூரித்துவிடுகிறோம். இச்சூழலில் நம் நிலை என்ன? நாம் முஸ்லிம்களாகவே பிறந்துவிட்ட காரணத்தினால் எப்படியும் சுவர்க்கம் சென்றுவிடலாம் என்ற ஷைத்தானின் சூழ்ச்சியில் நல்ல அமல்கள் செய்வதில் பாராமுகம் காட்டுகிறோம். குறிப்பாக குர்ஆன் மனனம் செய்வது போன்றது.
குர்ஆனை ஓரளவு ஓதத் தெரிந்தவர்கள், தொழுகைளை பேணக்கூடியவர்கள் கூட குர்ஆன் மனனம் செய்வதில் பின் தங்கியே இருக்கின்றோம்! தினம் தினம் தொழுகின்றோம், ஆனால் சூரத்துன் நாஸ், சூரத்துல் இஹ்லாஸ், சூரத்துல் ஃபலக் போன்ற சிறிய சிறிய சூராக்களையே ஓதி தொழக்கூடிய எத்தனையோ தொழுகையாளிகளைக் காண்கிறோம். என்ன காரணம்? ஏன் இவர்கள் திருக்குர்ஆனை மனனம் செய்ய ஆர்வம் கொள்வதில்லை? என்பதை அல்லாஹ்வே அறிவான்.
நபி(ஸல்) கூறினார்கள்: குர்ஆனை அடிக்கடி ஓதி அதனைப் பேணிப்பாதுகாத்து வாருங்கள். முஹம்மதின் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அந்த அல்லாஹ்வின் மீது சத்தியமாக! (திரும்பத் திரும்ப ஓதி அந்தக் குர்ஆனைப் பாதுகாக்க வில்லையென்றால்) அந்தக் குர்ஆன், கயிற்றால் கட்டப்பட்டிருந்த ஓட்டகை கட்டிலிருந்து விலகி விரண்டோடுவதைவிட மிக வேகமாக (உங்கள் உள்ளங்களிலிருந்து விலகி) விரண்டோடிவிடும். (ஆதாரம் : புகாரி, முஸ்லிம். அறிவிப்பாளர் : அபூமூஸா அல் அஷ்அரீ (ரலி))
எனவே திருக்குர்ஆன் நம் வேதம் என்பதை மனதில் கொண்டு அதனை நம் இதயத்தில் சுமந்தவர்களாக மாறவேண்டும். அப்போதுதான் திருக்குர்ஆன் நம் மனதில் குடி கொண்டு நமது உள்ளத்தை இறை அச்சமுள்ளதாக்கும்.
அன்புச் சகோதர சகோதரிகளே..
குர்ஆன் தெளிவான வேதம். இம்மை மற்றும் மறுமையில் வெற்றியடைய குர்ஆனைக் கற்றுணர்ந்து அதனை அழகிய முறையில் மனனம் செய்து சிறந்த காரிகளாகவும், ஹாபிழ்களாகவும் மாறுவதோடு அல்லாமல் கற்றவற்றைக் கொண்டு நல்ல அமல்கள் நம்வாழ்வில் நடைமுறைப்படுத்தியும், அதை நம் குடும்பத்திலும், மற்றவர்களுக்கும் எத்திவைத்து வாழ அல்லாஹ் அருள் புரிவானாக! PLEASE READ THIS IS USEFUL LING www.tanzil.net
|
No comments:
Post a Comment