Monday, August 8, 2011

முதல்வரின் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறோம் !




தமிழக அரசு தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையில் நான்கு விஷயங்கள் குறிப்பிடத்தக்கனவாக இருக்கின்றன. அரசு மற்றும் அரசு உதவித்தொகை பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி அளவில் மாணவர்கள் இடைநில்லாமல் கல்வியைத் தொடர ஊக்கத்தொகை அறிவிப்பு; ரூ.5,000 கோடியில் 2,500 கி.மீ. சாலை மேம்பாடு; ரூ.1,800 கோடியில் சென்னை பெருநகருக்காக புதிய குடிநீர் சேமிப்பு ஏரிகள், ரூ.745 கோடியில் 104 ஏரிகள் புனரமைப்பு ஆகிய நான்குமே இன்றைய காலத்தின் கட்டாயம்.
தமிழகத்தில் பத்தாம் வகுப்புத் தேர்ச்சிபெறும் மாணவர்கள் அனைவரும் பிளஸ் 2 படிப்பில் சேருவதில்லை. அதேபோன்று பிளஸ் 2 தேர்ச்சிபெறும் அனைத்து மாணவர்களும் உயர்கல்வியைத் தொடர்வதில்லை. ஒவ்வொரு அடுக்கிலும் இந்த எண்ணிக்கை குறைந்து போகிறது. இதிலும்கூட குறிப்பாக, தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு முடிக்கும் மாணவர்கள் பிளஸ் 2 தேர்ச்சிபெற்று கல்லூரியில் சேர்ந்து உயர்கல்வியைத் தொடர்வது 99 விழுக்காடாக இருக்கும். ஆனால், அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களில் சுமார் 50 விழுக்காட்டினர் கல்லூரியில் சேர்ந்தால் அதுவே பெரிய சாதனை.

இந்நிலையில், இத்தகைய ஊக்கத் தொகை இந்த மாணவர்கள் பிளஸ் 2 வரை கட்டாயமாகத் தொடர்ந்து படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தும் என்பது நிச்சயம். பிளஸ் 2 படிப்பை முடிக்கும்போது இந்த மாணவர்களுக்கு இந்தத் தொகை வங்கி மூலமாக வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. தமிழக முதல்வர் மனதுவைத்தால், கல்லூரியில் சேரும் மாணவர்களுக்குக் கூடுதலாக நிதிஒதுக்கி, அவர்கள் உயர்கல்வியைத் தொடரவும் ஊக்கப்படுத்த முடியும்.
பிளஸ் 2 முடிக்கும் மாணவர்களுக்கு ரூ.2,000 ஊக்கத் தொகை அளிக்கும் திட்டத்தின் நீட்சியாக, இம்மாணவர்கள் உயர்கல்விக்காக கல்லூரியில் சேர்ந்தால், கட்டணத்துக்காக அரசு ரூ.5,000 செலுத்தும் என்று முதல்வர் அறிவிப்பாரெனில், அரசுப் பள்ளிகளில் படித்து பிளஸ் 2 தேர்ச்சிபெறும் அனைவருமே கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆர்வம் காட்டுவார்கள் என்பது நமது கருத்து.
இன்றைய மாணவர்களிடம் இலவச மடிக்கணினி கொடுத்தால் அவர்களில் பெரும்பாலோரின் ஆர்வம், திரைப்படங்களைப் பதிவிறக்கம் செய்து பார்த்துக் கொண்டிருப்பதாகத்தான் இருக்கிறது என்பதை நடைமுறையில் பார்க்க முடிகிறது. இலவச மடிக்கணினி அளிப்பதைக் காட்டிலும், மாணவர்களின் கல்விக் கட்டணத்தில் ரூ.25,000 வரை அரசு ஈடுசெய்யும் என்றால், தமிழ்நாட்டில்
பிளஸ் 2 முடித்த அனைத்து மாணவர்களும் பயனடைவார்கள். மடிக்கணினி, மாணவர்களின் மனதை கட்டுப்பாடின்றித் திசைதிருப்பும். ஆனால், கல்விக் கட்டணமாகச் செலுத்தினால், பெற்றோரின் நிதிச்சுமையைக் குறைத்து மகிழ்விக்கும் என்பதை முதல்வரின் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறோம்.
மேலும், மடிக்கணினி வாங்குவதில் முறைகேடு, கணினியின் தரத்தில் குறைபாடு என்று தேவையில்லாமல் அரசின் மீதும், ஆட்சியின் மீதும் அபவாதம் ஏற்படுவதும் இதன்மூலம் தடுக்கப்படும்.
அடுத்து, 2,500 கி.மீ. சாலையை மேம்படுத்த ரூ.5,000 கோடி ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலக வங்கியுடன் சேர்ந்து இத்திட்டத்தை செயல்படுத்துவதாக அறிவித்துள்ளனர். தற்போது தங்க நாற்கரச் சாலை நடைமுறைக்கு வந்தபின்னர், அந்த வழித்தடத்தின் பழைய சாலைகளைப் பராமரிக்காமல் புறக்கணித்து வருகின்றனர். பழைய சாலைகள் நன்றாக, சீராக இருந்தால், நாற்கரச் சாலையில் சுங்கக்கட்டணம் செலுத்த மனமின்றி, பழைய வழித்தடத்தில் சென்றுவிடக்கூடும் என்பதுதான் காரணம். இதற்காகவே அச்சாலைகளை நினைத்தாலே அஞ்சுகிற அளவுக்குப் பராமரிப்பு இல்லாமல் வைத்திருக்கிறார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது. இது உண்மையல்ல என்றே வைத்துக் கொண்டாலும், அந்தந்த ஊர் மக்கள் இந்தச் சாலைகளைப் பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். நாற்கரச் சாலையுடன் பிரிந்து இணையும் பழைய வழித்தடங்களையும் மேம்படுத்தி, பராமரிக்கப்பட வேண்டிய அவசியம் இருக்கிறது.
மீன்பிடி தடைக் காலத்தில் ரூ.4,000 உதவித்தொகை கூடுதலாக வழங்கவும், வனவிலங்குகளால் இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் கருணைத்தொகை வழங்கவும் எடுத்துள்ள முடிவு வரவேற்கத்தக்கது. ஆனால், எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ.2 கோடியாக உயர்த்தியிருப்பது தேவையில்லாதது. வீண் என்றே சொல்லிவிடலாம்.
ரூ.173 கோடி உபரி பட்ஜெட் என்பது நிம்மதியைக் கொடுத்தாலும், அரசு வருவாயில் கணிசமான பகுதி, சுமார் ரூ.17,810 கோடி, மதுபானங்கள் மூலம் கிடைக்கும் என்பதும், இது கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூ.3,500 கோடி அதிகம் என்பதும், மனதை நெருடுகிறது. சாயக்கழிவு ஆலைகளில் நானோ தொழில்நுட்பம் குறித்து ஆய்வுசெய்துவர குஜராத்துக்கு குழுவை அனுப்பவுள்ள தமிழக முதல்வர், குஜராத் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் இருந்தாலும் எப்படி கடனில்லா மாநிலமாகத் திகழ்கிறது என்பதையும் கொஞ்சம் அறிந்துவரச் செய்தால் அடுத்த நிதிநிலை அறிக்கைக்குப் பயன்படக்கூடும். மக்கள் இந்த அரசிடமிருந்தும், குறிப்பாக முதல்வரிடமிருந்தும் அளவுக்கு அதிகமாகவே எதிர்பார்க்கிறார்கள். முதலில் குறிப்பிட்டதுபோல, ஒரு சில நல்ல அம்சங்கள் இருந்தாலும், மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அம்சங்களோ, பழைய ஆட்சியிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இந்த ஆட்சி இருக்கும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்துவதாகவோ இந்த நிதிநிலை அறிக்கை இல்லை. கடந்த ஆட்சி மக்களின் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் இழந்ததற்கான அடிப்படைக் காரணங்களான தெருவெல்லாம் பெருகிவிட்ட டாஸ்மாக் கடைகளும், பார்களும்; வரைமுறையில்லாத தனியார் பள்ளிகள் மற்றும் தனியார் பஸ்களின் கட்டண வசூல்; மக்களை முகம் சுளிக்கவைத்த மணல் கொள்ளை;
இலவச விரயங்கள் போன்ற எதையும் இந்த நிதிநிலை அறிக்கை கட்டுப்படுத்த முயற்சி எடுக்கவில்லை என்கிற குறை இதயத்தை நெருடுகிறதே
THANK S BY ..தினமணிதலையங்கம்: ஏதோ இருக்கிறது, அவ்வளவே... 
First Published : 08 Aug 2011 01:36:23 AM IST

Last Updated : 08 Aug 2011 03:37:59 AM IST

No comments:

Post a Comment