வாழைக்காய் பொடிமாஸ்

தேவையானவை: முற்றிய வாழைக்காய் - இரண்டு, எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய இஞ்சி - சிறிது, பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாழைக்காயைத் தோலுடன் தடிமனான துண்டுகளாக வட்டமாக நறுக்கிக் கொள்ளவும். பிறகு வேக வைத்து ஆறியதும் தோலை உரித்து நன்றாக மசித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், இஞ்சி, பச்சைமிளகாய் தாளித்து மசித்து வைத்துள்ள வாழைக்காயில் கொட்டி உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாகக் கலந்து வைக்கவும். இதை எல்லா சாத வகைகளுக்கும் தொட்டுக் கொள்ளலாம்.
வாழைக்காய் தாளிப்பு

தேவையானவை: முற்றிய வாழைக்காய் - 2, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், புளி - கொட்டைப்பாக்கு அளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிது, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாழைக்காயைத் தோல் சீவி நீளவாக்கில் இரண்டாக வெட்டி, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். புளியைக் கரைத்து வடிகட்டி அதில் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்க வைக்கவும். நன்றாகக் கொதித்ததும், நறுக்கிய வாழைக்காயைப் போட்டு வேக வைத்து வடித்துக் கொள்ளவும். கடாயில், எண்ணெய் `காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து வேக வைத்த வாழைக்காயை சேர்த்து கிளறி இறக்கவும்.
வாழைப்பூ கோலா

தேவையானவை: பொடியாக நறுக்கிய வாழைப்பூ - ஒரு கப், பொட்டுக்கடலை மாவு - அரை கப், அரிசி மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், கரம்மசாலா தூள், மிளகாய்த்தூள் - தலா அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாழைப்பூவை வேக வைத்து மிக்ஸியில் போட்டு நன்றாக அரைக்கவும். அரைத்த விழுதுடன் பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, மிளகாய்த்தூள், கரம்மசாலா தூள் சேர்த்து கெட்டியாகக் கலந்து கொள்ளவும். பிறகு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும். மாலை நேரத்துக்கு ஏற்ற மொறு மொறு டிபன் இது.
வாழைத்தண்டு மோர்க்கூட்டு

தேவையானவை: பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு - ஒரு கப், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் - கால் டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு டீஸ்பூன், தயிர் - ஒரு கப், பச்சைமிளகாய் - 3, தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை -- சிறிது, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: உப்பு சேர்த்து வாழைத்தண்டை வேக வைத்துக் கொள்ளவும். கடலைப்பருப்பை ஊற வைக்கவும். உளுத்தம்பருப்பை சிறிது எண்ணெய் விட்டு வறுத்துக் கொள்ளவும். ஊற வைத்த கடலைப்பருப்புடன், வறுத்த உளுத்தம்பருப்பு, தேங்காய் துருவல், பச்சைமிளகாய், சீரகம், உப்பு சேர்த்து அரைத்து, வேக வைத்துள்ள வாழைத்தண்டில் கொட்டி ஒரு கொதி வந்ததும் இறக்கவும். தேங்காய் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து கொட்டவும். கடைசியில் தயிர் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
வாழைக்காய் வறுவல்

தேவையானவை: முற்றிய வாழைக்காய் - 2, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், அரிசிமாவு - சிறிது, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாழைக்காயைத் தோல் சீவி, வட்ட வட்டமாக மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். அதில் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து 15 நிமிடம் வைக்கவும். பிறகு அரிசி மாவைத் தூவி பிசறவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும், பிசறி வைத்துள்ள வாழைக்காயைப் போட்டு கரகரப்பாக பொரித்தெடுக்கவும். சூடாக சாப்பிட சுவையாக இருக்கும்.
வாழைக்காய் பொரியல்

தேவையானவை: வாழைக்காய் - 2, வெங்காயம் - 1, பச்சைமிளகாய் - 3, கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாழைக்காய், வெங்காயம், பச்சைமிளகாய் மூன்றையும் தனித்தனியே பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடலைப்பருப்பை மலர வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து பச்சைமிளகாயைப் போடவும். பிறகு வாழைக்காய், வெங்காயம் இரண்டையும் சேர்த்து வதக்கவும். உப்பு சேர்த்து நன்றாக வதங்கியதும் அதில் வேக வைத்த கடலைப்பருப்பு, தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி இறக்கவும்.
வாழைத்தண்டு பச்சடி

தேவையானவை: நன்றாக நார் எடுத்து பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு - ஒரு கப், பச்சைமிளகாய் - 2, தேங்காய் துருவல் - ஒரு டீஸ்பூன், தயிர் - ஒரு கப், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாழைத்தண்டு, பச்சைமிளகாய், தேங்காய் துருவல், உப்பு எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, பெருங்காயத்தூளை தாளித்து விழுதில் கொட்டி, தயிருடன் கலந்து பரிமாறவும். வாழைத்தண்டை வேகவைக்காமல் பச்சையாக பயன்படுத்துவதால், அதில் உள்ள வைட்டமின் நேரடியாக நமக்குக் கிடைக்கிறது.
வாழைப்பூ பொரியல்

தேவையானவை: சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய வாழைப்பூ - ஒரு கப், பயத்தம்பருப்பு - கால் கப், தேங்காய் துருவல் - சிறிது, எண்ணெய் - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கடுகு - கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், மஞ்சள்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாழைப்பூவுடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேக வைத்து தண்ணீரை வடித்து வைக்கவும். பயத்தம் பருப்பை மலர வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து, வேக வைத்துள்ள வாழைப்பூ, பயத்தம்பருப்பை சேர்த்து நன்றாகக் கிளறவும். கடைசியில் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும். வாழைப்பூவுடன் உப்பு சேர்த்து வேக வைப்பதால், வதக்கும்போது தேவையானால் சிறிது உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.
வாழைக்காய் பொடி

தேவையானவை: தோல் சீவி பொடியாக நறுக்கிய வாழைக்காய் - ஒரு கப், கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வாழைக்காயைப் போட்டு சிம்மில் வைத்து மொறு மொறுப்பாக வதக்கிக் கொள்ளவும். கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் இவற்றை சிறிது எண்ணெயில் வறுத்து, உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும். இந்தப் பொடியுடன், வதக்கி வைத்துள்ள வாழைக்காயை சேர்த்து அரைத்தெடுக்கவும். அரைத்தவுடன் பார்த்தால் மொத்தமாக இருப்பதுபோல் தெரியும். எடுத்து பார்த்தால் உதிர் உதிராக ஆகிவிடும். இதை சாதத்தில் கலந்தும் சாப்பிடலாம். பொரியல் போலவும் தொட்டுக் கொள்ளலாம்.
வாழைக்காய் பொடி தூவல்

தேவையானவை: முற்றிய வாழைக்காய் - இரண்டு, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், புளி - கொட்டைப்பாக்கு அளவு, தனியா - 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, பெருங்காயம் - சிறிது, கடுகு - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, எண்ணெய், உப்பு - தேவையான அளவு,
செய்முறை: வாழைக்காயைத் தோல் சீவி நீளவாக்கில் இரண்டாக வெட்டி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். புளியை நீர்க்கக் கரைத்து அதில் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து, நறுக்கிய வாழைத் துண்டுகளைப் போட்டு வேகவைத்து வடித்து வைத்துக்கொள்ளவும். தனியா, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தை சிறிது எண்ணெயில் வறுத்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, வேக வைத்துள்ள வாழைக்காய் துண்டுகளை சேர்த்து வதக்கவும். இறக்குவதற்கு ஒரு நிமிடத்துக்கு முன் அரைத்த பொடியைப் போட்டுக் கிளறி இறக்கவும்.
வாழைத்தண்டு பொரியல்

தேவையானவை: நார் எடுத்து பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு - ஒரு கப், பயத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன். உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, நீர் மோர், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாழைத்தண்டை பொடியாக நறுக்கி, மோர் கலந்த நீரில் போடவும். அந்த நீரிலேயே பயத்தம் பருப்பை போட்டு ஊறவிட்டு, தண்ணீரை நன்றாக வடித்து அலசிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டு தாளித்து, அதில் வாழைத்தண்டு, பயத்தம்பருப்பு கலவையை சேர்த்து வதக்கவும். பிறகு உப்பு சேர்த்து நன்றாக வேகவிடவும். இரண்டும் சேர்ந்து வெந்ததும், தேங்காய் துருவலைப் போட்டுக் கிளறி இறக்கவும்.
வாழைப்பூ உசிலி

தேவையானவை: பொடியாக நறுக்கிய வாழைப்பூ - ஒரு கப், கடலைப்பருப்பு, துவரம்பருப்பு - தலா கால் கப், காய்ந்த மிளகாய் - 3, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, காய்ந்த மிளகாய் மூன்றையும் அரை மணிநேரம் ஊற வைத்து உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும். வாழைப்பூவுடன், மஞ்சள்தூள், சிறிது உப்பு சேர்த்து வேக வைத்து வடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, சிறிது பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து அதில் அரைத்து வைத்துள்ள பருப்பு விழுதைப் போட்டு சிம்மில் வைத்து உதிர் உதிராக வரும்படி கிளறவும். பிறகு அதனுடன், வேக வைத்துள்ள வாழைப்பூவை சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.
வாழைக்காய் வதக்கல்

தேவையானவை: பொடியாக நறுக்கிய வாழைக்காய் - ஒரு கப், புளி - கொட்டைப்பாக்கு அளவு, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன். உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, பெருங்காயத்தூள் போட்டு தாளிக்கவும். அதில் பொடியாக நறுக்கிய வாழைக்காய், உப்பை போட்டு, புளியைக் கெட்டியாக கரைத்து ஊற்றி மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக வதக்கி இறக்கவும். காரக்குழம்பு சாதத்துக்கு தொட்டுக்கொள்ள சூப்பர் காம்பினேஷன்!
வாழைப்பூ மசியல்

தேவையானவை: பொடியாக நறுக்கிய வாழைப்பூ - ஒரு கப், துவரம்பருப்பு - கால் கப், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், புளி - கொட்டைப்பாக்கு அளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், கடுகு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய், பச்சைமிளகாய்- தலா 2, கறிவேப்பிலை - சிறிது, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: புளியை ஒரு கப் தண்ணீரில் கரைக்கவும். இந்த புளித் தண்ணீரில் உப்பு போட்டு, வாழைப்பூவை சேர்த்து வேக வைக்கவும். துவரம்பருப்பில் மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் குழைய வேக விடவும். வாழைப்பூ வெந்தவுடன் அதில் வெந்த பருப்பை அதில் சேர்க்கவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, பெருங்காயத்தூள், சிறிதளவு துவரம்பருப்பு, காய்ந்த மிளகாய், பச்சைமிளகாய், கறிவேப்பிலை இவற்றைத் தாளித்து வாழைப்பூ கலவையில் சேர்த்து நன்றாகக் கொதித்ததும் இறக்கவும்.
வாழைத்தண்டு பக்கோடா

தேவையானவை: நார் எடுத்து பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு - ஒரு கப், கடலை மாவு - அரை கப், அரிசி மாவு - கால் கப், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய மல்லித்தழை - சிறிது, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு, பெருங்காயத்-தூள், நறுக்கிய வாழைத்தண்டு, மல்லித்தழை எல்லாவற்றையும் சிறிது நீர் ஊற்றி கெட்டியாக பிசைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்-ததும் சிறு சிறு பக்கோடாக்-களாக போட்டு பொரித்து எடுக்கவும்.
வாழைத்தண்டு சாம்பார்

தேவையானவை: வாழைத்தண்டு - 1, துவரம்பருப்பு - அரை கப், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், புளி - எலுமிச்சை அளவு, தேங்காய் துருவல் - ஒரு டீஸ்பூன், தனியா - 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், கடுகு, வெந்தயம், பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5, எண்ணெய் - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாழைத்தண்டை நார் எடுத்து வட்டமாக நறுக்கிக் கொள்ளவும். புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வைக்கவும். துவரம்பருப்புடன் மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் குழைய வேக வைக்கவும். தனியா, கடலைப்பருப்பு, வெந்தயம், உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் எல்லாவற்றையும் வறுத்து தேங்காய் துருவலை சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும். புளித் தண்ணீரில் உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து கொதித்தவுடன் அதில் வாழைத்தண்டை போடவும். தண்டு வெந்ததும் அரைத்த விழுதை ஊற்றி கொதிக்கவிடவும். நன்றாகக் கொதித்ததும், அதில் வெந்த பருப்பை போடவும். கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி இறக்கவும்.
வாழைக்கச்சல் பொரியல்

தேவையானவை: பிஞ்சு வாழைக்காய் - 2, பயத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 1, கடுகு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பயத்தம்பருப்பை மலர வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து அதில் வாழைக்கச்சலைப் பொடியாக நறுக்கிப் போடவும். வாழைக்கச்சல் வெந்ததும் அதில் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கிளறவும், பிறகு, வேக வைத்துள்ள பயத்தம்பருப்பை சேர்க்கவும். கடைசியாக தேங்காய் துருவலை சேர்த்துக் கிளறி இறக்கவும்.
வாழைக்காய் கடலைக் கூட்டு

தேவையானவை: கொண்டைக்கடலை - கால் கப், நறுக்கிய வாழைக்காய் - அரை கப், துவரம்பருப்பு, பயத்தம்பருப்பு - கால் கப், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், புளி - நெல்லிக்காய் அளவு, சாம்பார் பொடி - ஒரு டீஸ்பூன். எண்ணெய் - ஒரு டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, மல்லித்தழை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பயத்தம்பருப்பையும் துவரம்பருப்பையும் மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக குக்கரில் வேக வைக்கவும். கடலையை முதல்நாள் இரவே ஊறவைத்து மறுநாள் அதையும் குக்கரில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். புளியை ஒன்றரை கப் தண்ணீரில் கரைத்து உப்பை போட்டு அதில் வாழைக்காயை வேக வைக்கவும். பிறகு கடலை, சாம்பார் பொடியை சேர்க்கவும். நன்றாகக் கொதித்ததும், வெந்த பருப்பை போட்டு கொதிக்க வைத்து இறக்கி அதில் கடுகு, கறிவேப்பிலை, மல்லித்தழை தாளித்துக் கொட்டவும்.
வாழைக்காய் கோஃப்தா

தேவையானவை: வாழைக்காய் - 1, கரம்மசாலா தூள் - கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் - அரை கப், இஞ்சி - ஒரு துண்டு, ஏலக்காய் - 2, பொடித்த முந்திரி - 2 டீஸ்பூன், தயிர் - ஒரு கப், பச்சைமிளகாய் - 3, மல்லித்தழை - சிறிது, பால் - அரை கப், தேங்காய் துருவல் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாழைக்காயை வேக வைத்து தோலுரித்துக் கொள்ளவும். அதில் உப்பு சேர்த்து கரம்மசாலா தூள் போட்டு நன்றாகப் பிசைந்து உருட்டி எண்ணெயில் பொரித்து வைத்துக் கொள்ளவும். தேங்காய் துருவல், பச்சைமிளகாய், இஞ்சி மூன்றையும் அரைத்து கரைத்துக் கொள்ளவும். கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வெங்காயத்தைப் போட்டு வதக்கி, அதில் தேங்காய் கரைசலை சேர்க்கவும். பிறகு பால், ஏலக்காய் சேர்த்து கொதிக்க விடவும். உப்பு சேர்த்து, கடைசியாக கடைந்த தயிரை சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கி, முந்திரியை வறுத்துப் போடவும். இதில் பொரித்து வைத்துள்ள கோஃப்தாக்களை போட்டு, மல்லித்தழை தூவி பரிமாறவும்.
வாழைப்பூ-முருங்கைக்கீரை துவட்டல்

தேவையானவை: பொடியாக நறுக்கிய வாழைப்பூ - ஒரு கப், முருங்கைக்கீரை - ஒரு கப், தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 1, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து, அதில் முருங்கைக்கீரையை நன்றாக அலசி போடவும். வாழைப்பூவில் சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து வடியவிடவும். தண்ணீர் வடிந்ததும், அதை வதங்கிக் கொண்டிருக்கும் முருங்கைக் கீரையுடன் போடவும். சிறிது உப்பு சேர்த்து நன்றாக வதக்கி, கடைசியில் தேங்காய் துருவலையும் போட்டு வதக்கி இறக்கவும்.
வாழைப்பழ அப்பம்

தேவையானவை: கனிந்த வாழைப்பழம் - 2, மைதாமாவு, கோதுமைமாவு - தலா அரை கப், அரிசிமாவு - ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், வெல்லம் - அரை கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், துண்டுகளாக்கிய முந்திரி - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: வெல்லத்தை ஒரு கப் தண்ணீரில் 10 நிமிடம் கொதிக்கவிட்டு வடிகட்டி வைத்துக் கொள்ளவும். ஆறியதும் அதில் மைதாமாவு, கோதுமைமாவு, அரிசிமாவு, ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல், முந்திரி, கடைசியாக வாழைப்பழத்தை நன்றாக மசித்து அதில் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்து வைத்துக் கொள்ளவும். பிறகு அப்பக்குழியில் எண்ணெய் விட்டு சிறு அப்பங்களாக செய்து எடுக்கவும். அப்பக்குழி இல்லாதவர்கள், கடாயில் எண்ணெய் ஊற்றி ஒவ்வொரு அப்பமாக செய்யலாம்.
வாழைப்பூ துக்கடா

தேவையானவை: நரம்பு நீக்கிய வாழைப்பூ - ஒரு கப், கடலைமாவு - அரை கப், அரிசிமாவு, சோளமாவு, - ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் - சிறிதளவு, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், சமையல்சோடா - ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாழைப்பூவை நீளமாக அப்படியே ஒரு அகன்ற பாத்திரத்தில் போடவும். அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கடலைமாவு, அரிசிமாவு, சோளமாவு, பெருங்காயம், உப்பு, சமையல் சோடா, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் எல்லாம் சேர்த்துப் பிசறி, கடைசியாக சிறிது நீர் தெளித்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் வாழைப்பூ கலவையை சேர்த்து உதிர் உதிராக பொரித்தெடுக்கவும். பார்ப்பதற்கு அழகாகவும் சாப்பிட சுவையாகவும் இருக்கும்.
வாழைப்பழ அல்வா

தேவையானவை: கனிந்த வாழைப்பழம் - 2, ரவை - அரை கப், நெய் - கால் கப், சர்க்கரை - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், முந்திரி துண்டுகள் - சிறிது.
செய்முறை: கடாயில் நெய் ஊற்றி ரவையை நன்றாக சிவக்க வறுத்துக் கொள்ளவும். கால் கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து, வறுத்த ரவையில் விட்டுக் கிளறவும். கெட்டியானதும் வாழைப்பழத்தை நன்றாக மசிந்து அதில் சேர்க்கவும். பிறகு சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து ஒட்டாமல் கெட்டியாக வந்ததும் இறக்கவும். நெய்யில் முந்திரியை வறுத்து, அதில் சேர்க்கவும். அசத்தலான சுவையில் இருக்கும் இந்த அல்வா.
வாழைத்தண்டு துவையல்

தேவையானவை: பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு - ஒரு கப், உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, புளி - கொட்டைப்பாக்கு அளவு, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் அரை டீஸ்பூன் எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் போட்டு வறுத்து, தனியாக வைத்துக் கொள்ளவும். மறுபடியும் அரை டீஸ்பூன் எண்ணெய் விட்டு, வாழைத்தண்டை ஒரு நிமிடம் வதக்கிக் கொள்ளவும். வறுத்து வைத்துள்ள பருப்புக் கலவையைப் பொடித்து அதில் வாழைத்தண்டு, உப்பு, புளி சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். சுவையான துவையல் ரெடி!
குறிப்பு: தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். வாழைத்தண்டில் தண்ணீர் இருப்பதால் அரைப்பதற்கு நீர் அதிகம் தேவைப்படாது.
வாழைக்காய் கிரேவி

தேவையானவை: பனீர் சைஸில் துண்டுகளாக நறுக்கிய முற்றிய வாழைக்காய் - ஒரு கப், தக்காளி - 3, நறுக்கிய வெங்காயம் - அரை கப், புதினா, மல்லித்தழை - சிறிதளவு, பச்சைமிளகாய் - 2, மிளகாய்த்தூள், கரம்மசாலா தூள் - தலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கடுகு, சீரகம் - தலா கால் டீஸ்பூன், எலுமிச்சை சாறு, சர்க்கரை - தலா அரை டீஸ்பூன், தேங்காய்ப்பால் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு, இஞ்சி - சிறிது.
செய்முறை: கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் வாழைக்காயைப் பொரித்து எடுத்துக் கொள்ளவும். தக்காளி, வெங்காயம், இஞ்சி, பச்சைமிளகாய், மல்லித்தழை, புதினா இவற்றை லேசாக வதக்கி அரைத்துக் கொள்ளவும். வாழைக்காயை வறுத்து எடுத்த அதே எண்ணெயில் கடுகு, சீரகம் தாளித்து அரைத்த தக்காளி, வெங்காய விழுதை சேர்க்கவும். சற்று வதங்கியதும், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம்மசாலா தூள், உப்பு, சர்க்கரை எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக வதங்கியதும், வறுத்த வாழைக்காயை சேர்க்கவும். எல்லாம் சேர்ந்து கிரேவி பதத்தில் வந்ததும், தேங்காய்ப்பால் சேர்த்து இறக்கவும். கடைசியில் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
வாழைக்காய் கட்லெட்

தேவையானவை: முற்றிய வாழைக்காய் - 1, துருவிய பீட்ரூட், கேரட் - தலா கால் கப், பொடியாக நறுக்கிய வெங்காயம், மல்லித்தழை, புதினா - சிறிதளவு, பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய் - தலா அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள், மசாலாத்தூள் - தலா அரை டீஸ்பூன், கார்ன்ஃப்ளார் - ஒரு டீஸ்பூன், பிரெட் தூள் - ஒரு கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாழைக்காயைத் தோலுடன் பெரிய துண்டுகளாக நறுக்கி, தண்ணீரில் வேக வைத்து, தோலுரித்து நன்றாக மசித்துக் கொள்ளவும். கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அதில் நறுக்கிய பச்சைமிளகாய், இஞ்சி, புதினா, மல்லித்தழையைப் போட்டு, வெங்காயத்தை சேர்க்கவும். சற்று வதங்கியதும் கேரட், பீட்ரூட் துருவலை சேர்த்து வதக்கவும். மசித்து வைத்துள்ள வாழைக்காயை சேர்க்கவும். பிறகு, உப்பு, மசாலாத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும். கெட்டி பதத்தில் வந்ததும், ஒரு டீஸ்பூன் கார்ன்ஃப்ளாரை சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாக கரைத்து ஊற்றவும். கடைசியாக பிரெட் தூளை சேர்த்து கிளறி இறக்கவும். இதை கட்லெட் வடிவத்தில் செய்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும். எண்ணெய் ஒத்துக்கொள்ளாதவர்கள் தோசைக்கல்லில் இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு எண்ணெய் விட்டு ரோஸ்ட் ஆனதும் எடுக்கவும். சாஸ§டன் சாப்பிட சுவையாக இருக்கும்.
செவ்வாழை மில்க்ஷேக்

தேவையானவை: செவ்வாழைப்பழம் - 2, பால் - 2 கப், சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன். ஏதேனும் எஸன்ஸ் - ஒரு சொட்டு.
செய்முறை: பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கவும். இதனுடன் சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அரைத்து, கடைசியாக பாலையும் சேர்த்து ஒரு முறை சுற்றி எடுக்கவும். கடைசியில் எஸன்ஸ் சேர்க்கவும். இது வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான பானம்.
நேந்திரம்பழப் புட்டு

தேவையானவை: நேந்திரம்பழம் - 1, பதப்படுத்திய அரிசிமாவு - ஒரு கப் (அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து, வடிய விட்டு, காய்ந்த துணியில் பரத்தி 5 நிமிடம் கழித்து மிக்ஸியில் மாவாக அரைக்கவும். இந்த மாவை லேசாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்), சர்க்கரை - ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - சிறிது.
செய்முறை: அரிசிமாவுடன் சிறிது உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து பிசறி ஒரு துணியில் மூட்டை கட்டி ஆவியில் வேக வைத்து எடுக்கவும். இந்த மாவை கையால் நன்றாக அழுந்த தேய்த்து சர்க்கரை, ஏலக்காய்த்தூள், நறுக்கிய நேந்திரம் பழம் சேர்த்து நன்றாக கலக்கவும். பழப் புட்டு பலே ஜோர்!
வாழைக்காய் போண்டா

தேவையானவை: வாழைக்காய் -- 2, பொடியாக நறுக்கிய வெங்காயம் - கால் கப், பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய், மல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு, கடுகு, பெருங்காயத்தூள், சமையல் சோடா - தலா கால் டீஸ்பூன், கடலைமாவு - ஒரு கப், அரிசிமாவு - கால் கப், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாழைக்காயைத் தோலுடன் பெரிய துண்டுகளாக நறுக்கி வேக வைத்து மசித்துக் கொள்ளவும். கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு தாளித்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், மல்லித்தழை, கறிவேப்பிலை, இஞ்சி, பச்சைமிளகாய், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும். அதில், மசித்து வைத்துள்ள வாழைக்காய், சிறிது உப்பு சேர்த்து நன்றாக கிளறி உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும். கடலைமாவு, அரிசிமாவு, சமையல் சோடா, உப்பு, பெருங்காயத்தூள் எல்லாவற்றையும் சேர்த்து தண்ணீர் விட்டு கெட்டியாக தோசைமாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். அதில் உருட்டி வைத்துள்ள வாழைக்காயைத் தோய்த்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
வாழைப்பழ பாயசம்

தேவையானவை: பழுத்த பூவன் வாழைப்பழம் - 2, பால் - 2 கப், சர்க்கரை - கால் கப், மில்க்மெய்ட் - கால் கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்.
செய்முறை: வாழைப்பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பாலை நன்றாக சுண்டக் காய்ச்சவும். அதில் நறுக்கி வைத்துள்ள வாழைப்பழத்தை சேர்த்து சர்க்கரையைப் போடவும். எல்லாம் சேர்ந்து கொதித்ததும் ஏலக்காய்த்தூள், மில்க் மெய்ட் சேர்த்து இறக்கவும். வாழைப்பழம் விரும்பாத குழந்தைகள்கூட இதை விரும்பி சாப்பிடுவர். சர்க்கரை பிடிக்காதவர்கள் வெல்லம் சேர்த்துக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment