Monday, January 3, 2011

கடந்து போன நாட்களில், நடந்து வந்த நினைவுகள்!

Aloor Shanavas

FRIDAY, DECEMBER 31, 2010

கடந்து போன நாட்களில், நடந்து வந்த நினைவுகள்!
சென்னைக்கு நான் வந்து இன்றோடு 12 ஆண்டுகள் ஆகிறது.
முதல் இரண்டு ஆண்டுகள் எந்தப் பரிணாமமும் இல்லாமல் சராசரியாக சுற்றிக் கொண்டிருந்தேன். வாழ்வாதாரத்தைத் தேடி மாநகர வீதிகளில் அலைந்து திரியும் ஆயிரமாயிரம் இளைஞர்களில் நானும் ஒருவன் என்பதைத் தவிர, அப்போது எனக்கு வேறு எந்த அடையாளமும் இருந்ததில்லை.

கன்னியாகுமரி மாவட்டத்தின் கலை இலக்கியத் தளத்திலும், சமூகப் போராட்டக் களத்திலும் நான் பெற்ற கொஞ்ச அனுபவங்கள், சென்னையில் எனது இலக்கைத் தீர்மானிக்க உதவின. நாகர்கோவில் அகில இந்திய வானொலியின் இளைய பாரதம் நிகழ்ச்சிக்காக கவிதைகள் வழங்கிய அறிமுகத்தோடு, 2001 ஆம் ஆண்டு சென்னை வானொலி நிலையத்தில் நான் காலடி எடுத்து வைத்தேன்.

மனிதநேயப் பண்பாளர் தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களின் அன்பைப் பெற்றேன். அப்போது தீபாவளி நேரம். தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளை தயாரிக்கும் பணிகள் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஒலிப்பதிவுக் கூடத்திற்குள் பிரபலங்கள் வந்து சென்ற வண்ணமிருந்தனர். பழம்பெரும் நடிகர் வி.கே.ராமசாமி வந்தார். நகைச்சுவை நடிகர் வடிவேலு வந்தார். ஒரு மாலை வேளையில் கவிஞர் வைரமுத்து வந்தார். அவரைப் பார்த்த உடன் எனக்கு உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. வைரமுத்துவின் கவிதைகளால் ஈர்க்கப்பட்டு அவரது தீவிர ரசிகனாக இருந்த எனக்கு, முதல் முறையாக அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தவுடன் செய்வதறியாது திகைத்தேன். ஒரு புன்முறுவலோடும், சில வார்த்தைகளோடும் அவர் என்னைக் கடந்து போனார்.

பிரபலங்களை அடிக்கடி சந்திக்கும் களமாக வானொலி நிலையம் இருந்ததால் அங்கே பணியாற்றுவது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த சந்திப்புகள் தந்த போதையில் நான் அதிகம் மயங்கிக் கொண்டிருந்தேன். எப்படியாவது வானொலி நிலையத்தில் நமது இருப்பை நிரந்தரமாக்கிக் கொள்ள வேண்டும் என்று துடித்தேன். அதே சம காலத்தில் நான் தமுமுக வின் தீவிர அபிமானியாகவும் இருந்தேன். குமரிமாவட்ட தமுமுக மாணவரணி பொறுப்பாளராக நான் செயலாற்றியதனால், மாநில மாணவரணி செயலாளராக இருந்த அண்ணன் அன்சாரியுடன் எனக்கு நல்ல நட்பு இருந்தது. அவரை சந்திக்க மண்ணடியிலுள்ள தமுமுக அலுவலகத்திற்கு அடிக்கடி செல்வேன். அப்போதுதான் பேராசிரியர் ஹாஜா கனியுடன் நட்பு ஏற்பட்டது.
பின்னர் அன்சாரி ஒருநாள் என்னை தமுமுக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்களிடம் அறிமுகப்படுத்தினார். அப்போது 'ஒற்றுமை' பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது. அதில் நான் எழுதிய ஒரு கவிதையும் வெளியாகியிருந்தது. அதை நினைவூட்டி பேராசிரியரிடம் அன்சாரி என்னை அறிமுகப்படுத்தினார். அந்த சந்திப்புக்குப் பின் ஒற்றுமை இதழில் பணியாற்றும் சூழல் மலர்ந்தது. பின்னர் 'உணர்வு' இதழ் வரை அது தொடர்ந்தது. உணர்வு ஆசிரியர் பிஜே அவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. உணர்வு மற்றும் ஒற்றுமை இதழ்களுக்கான பேட்டிகள் எடுக்க தமிழகத்தின் முக்கிய தலைவர்கள் மற்றும் மதசார்பற்ற சக்திகளை சந்தித்தேன்.
அதே காலகட்டத்தில் அண்ணன் பாக்கர் அவர்களின் 'மீடியா வேல்ட்' நிறுவனத்தின் சார்பில் 'இந்த வாரச் செய்திகள்' என்னும் நிகழ்ச்சி 'வின் டிவி'யில் ஒளிபரப்பானது. எனது ஊடக ஆர்வத்தை அறிந்து கொண்ட பிஜே, என்னை செய்தி வாசிக்கச் செல்லும்படி தூண்டினார். நான் துணிந்து செய்தி வாசித்தேன். காட்சி ஊடகத்துடனான எனது உறவு அன்றிலிருந்து தொடங்கியது. அப்போது நண்பர் CMN.சலீம் அவர்களுடன் இணைந்தும் பல்வேறு காட்சி ஊடகப் பதிவுகளை செய்து வந்தேன். ஒரே நேரத்தில் அச்சு ஊடகத்திலும், காட்சி ஊடகத்திலும் செயலாற்றும் சூழல் அமைந்ததமையால் நான் வானொலியை அடியோடு மறந்தேன்.
2002 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில் பங்கேற்க கொழும்பு சென்றேன். எனது முதல் வெளிநாட்டுப் பயணம் அது. தமிழகம் மற்றும் இலங்கையை சார்ந்த இலக்கியவாதிகளுடன் நட்பு ஏற்பட்டது. அகதி முகாம்களில் அல்லல்படும் இலங்கை முஸ்லிம்களின் நிலையைப் பதிவு செய்தேன். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் நூர்தீன் மசூர் ஆகியோரை பேட்டி எடுத்தேன். எனது இலங்கைப் பயண பதிவுகள் அனைத்தும் ஒற்றுமை இதழில் முகப்போவியமாக வெளிவந்தது.

2003 ஆம் ஆண்டு குஜராத் இனப்படுகொலைகளுக்கு எதிரான எனது 'தோட்டாக்கள்' கவிதைத் தொகுப்பு நூல் வெளியானது. தமிழகத்தின் பிரபல கவிஞர்கள் மற்றும் திரைப்பட பாடலாசிரியர்கள் அனைவரையும் சந்தித்து அவர்களிடம் இந்துத்துவ மதவெறிக்கு எதிரான கவிதைகளை எழுதிப் பெற்று நூலாகத் தொகுத்தேன். அப்போதுதான் 'சமநிலைச் சமுதாயம்' இதழ் தொடங்கப்பட்டது. அதன் நிறுவனரான ஜாபர்தீன் ஹாஜியாருடன் எனக்கு நல்ல நட்பு இருந்தது. இலங்கைக்கு ஒரே விமானத்தில் நாங்கள் பயணம் செய்யும்போது ஏற்பட்ட நட்பு அது. அவரும் எனது இதயத்திற்கு இனிய கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களும் இணைந்து தொடங்கிய பத்திரிகை என்பதால் நான் சமநிலையில் எழுத ஆரம்பித்தேன். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பொடாவிலிருந்து விடுதலை ஆனவுடன் அவரை சந்தித்து ஒரு சிறப்புப் பேட்டி எடுத்தேன். சமநிலையில் அது முகப்போவியமாக வெளிவந்தது.
சமநிலை ஆசிரியர் ஜாபர் சாதிக் பாக்கவியுடன் நட்பு துளிர்த்தது. அவரது கைவண்ணத்தில் எனது தோட்டாக்கள் தொகுப்பு மிகச் சிறப்பான வடிவம் பெற்றது. பின்னர் தி.நகர் சர்.பிட்டி தியாகராயர் கலையரங்கில் பேராசிரியர்.ஜவாஹிருல்லாஹ் தலைமையில்,
கவிக்கோ, அ.மார்க்ஸ், பெரியார்தாசன், திரு.வீரபாண்டியன், சா.பீட்டர் அல்போன்ஸ் ஆகிய அறிஞர்கள் பங்கேற்க மிகச் சிறப்பான வெளியீட்டு விழா நடைபெற்றது. சாதி வெறியர்களால் உடலில் மல நீர் ஊற்றப்பட்டு இழிவு படுத்தப்பட்ட, கீழ உரப்பனூர் முத்துமாரி என்னும் தலித் சகோதரியின் கரங்களால் நூலை வெளியிடச் செய்து, கோவை கலவரத்தில் மகனை இழந்த ஹசனார் அவர்களை பெற்றுக்கொள்ளச் செய்தேன்.
தோட்டாக்கள் தொகுப்பின் போது கவிஞர் கனிமொழி அவர்களுடன் எனக்கு நல்ல நட்பு ஏற்பட்டது. நூல் வெளியானவுடன் அதை கனிமொழிக்கு நேரில் வழங்கினேன். அவர் மூலம் கலைஞர் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அறிவாலயத்தில் கலைஞரை சந்தித்தேன். தோட்டாக்களை கொடுத்தேன். அதன் வடிவமைப்பை பார்த்து பாராட்டினார். 'கனி சொன்னதும் நான் யாரோ பெரிய ஆளுன்னு நெனச்சேன்..நீ ரொம்ப சின்னப் பையனா இருக்கியய்யா' என்று வியந்தார். எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.
2004 ஆம் ஆண்டு 'கல்ப் ஏசியா விஷன் நெட்வொர்க்' சார்பில், வின் டிவியில் ஒளிபரப்பான வளைகுடா செய்திகள் நிகழ்ச்சியில் செய்தி வாசிப்பாளராக செயலாற்றினேன். அதன் மூலம் எனக்கு மிகப்பெரும் ஊடக வெளிச்சம் கிடைத்தது. தொடர்ந்து 'தீபங்கள்' என்னும் நிகழ்ச்சியை இயக்கினேன்.
நாகூர் ஹனிபா, தோப்பில் மீரான், கவிக்கோ, வலம்புரி ஜான், பிரபஞ்சன், ஈரோடு தமிழன்பன், பெரியார் தாசன், மேத்தா, இன்குலாப் என ஏராளமான ஆளுமைகளின் வாழ்க்கைப் பயணத்தை காட்சி வடிவில் பதிவு செய்தேன்.
அதே ஆண்டில் தமுமுகவில் இருந்து பிஜே வெளியேறினார். அவர் வெளியேறியதை மகிச்சியோடு வரவேற்றேன். தமுமுக முழுக்க முழுக்க அரசியல் சக்தியாய் பரிணாமம் அடைய வேண்டும் என்று அதிகம் விரும்பினேன். தமுமுகவின் 'உணர்வு' இதழை அவர் அபகரித்து சென்றதால் தமுமுகவுக்கென ஒரு பத்திரிகை தேவைப்பட்டது. நண்பர் சாதிக் பாஸா தனது 'மக்கள் உரிமை' இதழை இயக்கத்திற்காக கொடுத்தார். மக்கள் உரிமையை உருவாக்கவும் அதை மக்கள் மயப்படுத்தவும் இயன்ற அளவு முயற்சி எடுத்தேன். பின்னர் காட்சி ஊடகத்திலும் தமுமுகவின் குரல் ஒலிக்க வேண்டும் என்பதால் அதற்கான ஆக்கப்பூர்வ பணிகளை பேராசிரியரின் வழிகாட்டுதலோடு மேற்கொண்டேன்.

காட்சி ஊடகத்தில் சமூக உரிமைகள் பற்றிய பதிவுகளோடு, கலை இலக்கியம் பண்பாடு சார்ந்த நிகழ்ச்சிகளையும் கலந்து வழங்க வேண்டும் என்ற ஆர்வத்தின் வெளிப்பாடாய் 2005 ஆம் ஆண்டு இறுதியில் 'மீடியா ஸ்டெப்ஸ்' என்ற நிறுவனத்தைத் தொடங்கினேன்.
எல்லாத் திருநாள்களிலும் சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்கும் தொலைக்காட்சிகள் முஸ்லிம்களின் திருநாள்களை கண்டுகொள்வதில்லை என்பதனால் அதை மாற்றுவதற்கு, ஜெயா டிவியில் தியாகத் திருநாள் சிறப்பு நிகழ்ச்சியை வழங்கினேன். முஸ்லிம்கள் குறித்து முஸ்லிமல்லாத மக்களுக்கு சரியான புரிதலை ஏற்படுத்தும் வண்ணம் விறுவிறுப்பான நிகழ்ச்சியாக அது அமைந்தது.

2006 ஆம் ஆண்டில் எனக்கு குறும்படங்கள் பற்றிய அறிமுகம் ஏற்பட்டது. இட ஒதுக்கீட்டின் அவசியத்தை வலியுறுத்தும் ஒரு குறும்படத்துக்கான கதையை எழுதிவிட்டு அதை படமாக்கும் முயற்சியை மேற்கொண்டேன். அத்துறை குறித்த ஆழமான அறிவு கொண்ட நண்பர் கெங்கை குமார் அவர்களை சந்தித்து எனது குறும்படக் கதையை கூறினேன். அவர் கதையை கேட்டுவிட்டு இதை குறும்படமாக எடுப்பதைவிட ஆவணப்படமாக எடுத்தால் நன்றாக இருக்கும் என்றார். அதை எப்படி எடுக்க வேண்டும் என்ற வழிமுறைகளையும் சொல்லித் தந்தார்.அவரது கருத்தையே எனது சகோதரர் சியாதும் எதிரொலித்தார். பின்னர் ஆவணப்படங்கள் குறித்து நிறைய வாசித்தேன். நிழல் திருநாவுக்கரசு அவர்களை சந்தித்தேன். அவர் பயனுள்ள தகவல்களைத் தந்தார். முழுவீச்சில் களமிறங்கி படப்பிடிப்பு செய்தேன். நண்பர் புதுமடம் அனீஸ் அதற்குத் துணை நின்றார்.சென்னை பிலிம் சேம்பரில் 'பிறப்புரிமை' ஆவணப்படத் திரையிடலும், வெளியீடும் நடைபெற்றது.செய்தித் துறை அமைச்சர் பரிதி இளம் வழுதி படத்தை வெளியிட்டார். அரசியல் தலைவர்களும், சமூக
ஆர்வலர்களும் பங்கேற்று சிறப்பித்தனர். பிறப்புரிமை படத்தின் குறுந்தகட்டை எல்லா முக்கிய தலைவர்களையும் சந்தித்து கொடுத்தேன். படத்தைப் பற்றி அனைத்துப் பத்திரிகைகளும் விமர்சனம் எழுதின.
'நிழல்' இயக்கத்தின் சார்பில் திருப்பூரில் நடைபெற்ற விழாவில் பிறப்புரிமைக்கு விருது வழங்கப்பட்டது. பருத்திவீரன் பட வேலைகளில் மூழ்கியிருந்த இயக்குநர் அமீர் அவர்கள் நெருக்கடியான நிலையிலும் திருப்பூருக்கு வந்து நிகழ்வில் பங்கேற்று விருது வழங்கி சிறப்பித்தார்.
பிறப்புரிமைக்கு கிடைத்த விருது எனக்கு அதிக உற்சாகத்தை அளித்தது. விருது பெற்ற கையோடு கோவை சிறைக்குச் சென்று அப்துல் நாசர் மதானியை சந்தித்தேன். அவருடனான அந்த நீண்ட சந்திப்பு என்னை உசுப்பியது. சிறையிலிருந்து நான் வெளியே வந்த அடுத்த நொடியிலிருந்து 'கைதியின் கதை' ஆவணப்படத்திற்கான வேலைகள் வேகம் பெற்றன. கேரளாவுக்கு விரைந்தேன். மதானியின் பெற்றோரையும், மனைவியையும், கட்சியினரையும் சந்தித்து கருத்துக்களைப் பதிவு செய்தேன். இந்தியாவின் தலை சிறந்த நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யரை எர்ணாகுளத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தேன். இயலாத நிலையிலும் எழுந்திருந்து ஒரு போர் வீரனைப்போல கருத்துப் பதிவு செய்தார் அவர்.
2007 ஆம் ஆண்டு, காவல்துறையின் கடும் நெருக்கடிக்கு இடையே, சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் 'கைதியின் கதை' வெளியீட்டு விழா நடைபெற்றது. எனது நேசத்திற்குரிய அண்ணன் தொல்.திருமாவளவன் அவர்கள் வெளியிட, அன்பு அண்ணன் செ.ஹைதர் அலி அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். பேராசிரியர்.அ.மார்க்ஸ், இயக்குநர் அமீர், பாரதி கிருஷ்ணகுமார்,
நிழல்.திருநாவுக்கரசு ஆகியோர் கருத்துரை நிகழ்த்தினர். மிகவும் உணர்ச்சிப் பூர்வமான விழாவாக அது அமைந்தது. 'பிறப்புரிமைக்கு' கிடைத்ததை விட கூடுதலான ஊடக வெளிச்சம் 'கைதியின் கதைக்கு' கிடைத்தது.
பின்னர் தொழில் ரீதியிலான முயற்சிகளில் ஈடுபட்டதனால் சுமார் இரண்டு ஆண்டுகள் எந்தவொரு படைப்பையும் என்னால் வெளியிட முடியவில்லை. என்றாலும், பதிவு செய்யப்படாத பல முக்கிய விசயங்களை காட்சி வடிவில் ஆவணப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் என்னுள் சுழன்று கொண்டே இருந்தது. குறிப்பாக காயிதே மில்லத் குறித்து ஒரு விரிவான ஆவணப்படம் செய்ய வேண்டும் என்று நீண்ட நாளாகவே எனக்குத் தோன்றியது. அதற்கான முயற்சிகளை நான் பலமுறை மேற்கொண்டும் பயனளிக்கவில்லை.

இந்நிலையில் 2009 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற எனது திருமண வரவேற்பில் வாழ்த்துரையாற்றிய திருமாவளவன் அவர்கள் எனது ஆவணப்பட முயற்சிகளைக் குறித்து விரிவாகப் பேசினார். அந்த விழாவில் பங்கேற்க வந்திருந்த நண்பர் அன்சாரி அவர்கள் அண்ணன்.திருமாவின் உரையை கூர்ந்து கவனித்தார். பின்னர் அன்சாரியை நான் சந்தித்தபோது காயிதே மில்லத் ஆவணப்படம் குறித்து பேசுகின்ற வாய்ப்பு ஏற்பட்டது. அவர் மனமகிழ்ச்சியோடு படத்தை தயாரிக்க முன்வந்தார். சென்னை சவேரா ஹோட்டலில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி ஆவணப்பட அறிவிப்பை வெளியிட்டோம்.
காயிதே மில்லத் ஆவணப்பட பதிவுக்காக களமிறங்கிய நாள்முதல் கடும் நெருக்கடிகளை சந்திக்க வேண்டிவந்தது. எனது முதல் இரண்டு படங்களை விட இதை உருவாக்குவதில் அதிக காலமும், உழைப்பும் தேவைப்பட்டது. ஒரு வழியாக அது இலக்கை நெருங்கிக் கொண்டிருக்கிறது. கூடவே காயிதே மில்லத் பற்றிய அழகிய நூலையும் உருவாக்கி உள்ளேன். இறையருளால் அவற்றின் வெளியீட்டு விழாவை சிறப்பாக நடத்த ஆர்வமாக இருக்கிறேன்.

கடந்த பத்தாண்டுகளில் எனது சுழற்சி பல்வேறு பரிணாமங்களைப் பெற்றுள்ளது.தீவிர இயக்கவாதியாக இருந்த நான் இன்றைக்கு தீவிர இயக்க எதிர்ப்பாளனாக மாறியுள்ளேன்.முஸ்லிம் சமூகத்தின் அரசியல் எழுச்சியின் நம்பிக்கை கீற்றுகளாக நான் யாரைக் கருதினேனோ அவர்களுடனேயே இன்று முரண்பட்டு நிற்கிறேன். அவர்களின் தொலைநோக்கற்ற செயல்களினால் அவநம்பிக்கை அடைந்துள்ளேன். நான் பங்கெடுத்த களங்களில் எனக்கு உடன்பாடு இல்லாத விசயங்களை தெளிவாக எதிர்த்துள்ளேன். நல்லவைகள் எங்கிருந்தாலும் ஆதரித்தும் வருகிறேன்.

2001 முதல் 2010 வரை இந்த சென்னை வாழ்க்கையில் நெகிழ்ச்சியாகவும், நெருக்கடியாகவும் தேதிகள் கிழிந்திருக்கின்றன. இனி வரும் நாட்கள் மகிழ்ச்சியாக இல்லாவிட்டாலும் மனநிறைவாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இலக்குகளை எட்டிப் பிடிக்கும் எனது வேட்கையின் சூட்டில் என்னைக் கவிழ்க்கும் சதிகள் பொசுங்க வேண்டும் என வேண்டுகிறேன். பலங்களுக்கு ஈடாக என்னுள் பரவிக்கிடக்கும் பலவீனங்களை முற்றிலுமாக ஒழிக்க விளைகிறேன்.

ஆண்டொன்று போனால் வயதொன்று போகிறது.
இளமையை இழந்து முதுமையை சுமக்கும் நிலையை நாம் அடைந்து கொண்டிருக்கிறோம்.
ஒவ்வொரு புத்தாண்டிலும் நாம் நமது ஆயுளை இழக்கிறோம். இழப்பு எப்படி கொண்டாட்டமாக இருக்க முடியும்? எனவே கொண்டாட்டங்களை விட்டுவிட்டு
நம்மை நாமே மீளாய்வு செய்யவும், அடுத்தக் கட்ட நகர்வுக்கு திட்டமிடவும் முயற்சி செய்வோம்.

அன்புடன்
ஆளூர் ஷாநவாஸ்
31 -12 -2010 ,சென்னை.
Posted by Aloor Shanavas at 2:40 PM Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Google Buzz

No comments:

Post a Comment