Saturday, January 29, 2011

தேவையற்ற நிகழ்ச்சி ! இலவச விளம்பரம் தரலாமா?

பிரிவினைவாதிகளுக்கு இலவச விளம்பரம் தரலாமா?

அருண் நேருFirst Published : 29 Jan 2011 01:25:18 AM IST

மனதை ஒருமுகப்படுத்தி, அமைதி காத்து, எதிர்காலம் குறித்து ஆழ்ந்து சிந்தனை செய்வதற்கான நேரம் இது என்று கடந்த வாரம்தான் எழுதியிருந்தேன்; குடியரசு தினத்தில் இக்கட்டுரையை எழுதும் நேரம் ஒன்றல்ல, இரண்டல்ல ஏராளமான பிரச்னைகள் அணிவகுத்து நிற்கின்றன.
எதிர்மறை நிகழ்வுகளால் வீழ்த்தப்படுவதை நாம் விரும்புவதே இல்லை; ஜனநாயகம் என்றாலே அரசியல் ரீதியிலான மோதல்கள் தவிர்க்க முடியாதவையே என்றாலும் சில பிரச்னைகளில் நமக்கு நாமே கடிவாளம் போட்டுக்கொள்வது நல்லது.
காஷ்மீர் தலைநகர் லால்செüக்கில் தேசியக் கொடியை ஏற்ற பாரதிய ஜனதாவின் இளைஞர் பிரிவு மேற்கொண்ட முயற்சி தேவையற்ற நிகழ்ச்சி.
கடந்த 30 ஆண்டுகளாக காஷ்மீரில் நடந்துவரும் சம்பவங்களைப் பார்க்கும்போது, காஷ்மீரத்துடன் தொடர்புள்ள என்னைப் போன்றவர்களுக்கு 30 வயது கூடியதைத் தவிர, வேறு எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடவில்லை.
இப்போது காஷ்மீரில் புதிய தலைமுறை ஆட்சிப் பொறுப்புக்கு வந்திருக்கிறது. அது நன்றாகவே நிர்வகிக்கிறது என்பதே என்னுடைய கருத்து.
1980 முதல் 1990 வரையிலான காலகட்டமே கொந்தளிப்பானது. ஷேக் அப்துல்லா காலமாகிவிட்டார், அவருக்குப் பிறகு புதிய தலைமை உருவாக வேண்டிய நேரம் என்பதால் அந்தக் கொந்தளிப்பு தவிர்க்க முடியாததாக இருந்தது.
பரூக் அப்துல்லா அரசியலில் தன்னை நிலைப்படுத்திக்கொள்ள நேரம் தேவைப்பட்டது. 1984-ல் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே மிகப்பெரிய மாறுதல்கள் ஏற்பட்டன. நம்முடைய அரசியல் ஞானத்துக்கு ஏற்ப நாம் இதுகுறித்துப் பல்வேறு விளக்கங்களை இப்போது கூறிக்கொள்ளலாம், ஆனால் அன்றைய நிலைமை அப்படித்தான் இருந்தது.
மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் முப்தி முகம்மதும் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லாவும் மத்திய அரசிலும் காஷ்மீர் அரசிலும் பங்கேற்று நாட்டுக்கும் மாநிலத்துக்கும் பெருமைகளைச் சேர்த்தனர்.
கடந்த 30 ஆண்டுகளில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மாற்றங்கள் குறிப்பிடத்தக்கவை. இந்த 30 ஆண்டுகளில் இந்தியா தன்னைப் பொருளாதார வல்லரசாக வலுப்படுத்திக்கொண்டு வந்தது. பாகிஸ்தானோ குழப்பத்திலும் பூசலிலும் பிளவுபட்டு நிற்கிறது.
வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசிலும் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் முதல் ஐந்தாண்டு காலத்திலும் இப்போதும் பாகிஸ்தானுடன் உறவை சுமுகமாக்கிக்கொள்ள நாம் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம், இத்தகைய சூழ்நிலையில் ஸ்ரீநகரில் தேசியக் கொடியை ஏற்ற பாஜக மேற்கொண்ட முயற்சியில் நியாயமே இல்லை.
ஜம்முவில்தான் பாரதிய ஜனதாவுக்கு செல்வாக்கு இருக்கிறது, காஷ்மீரப் பள்ளத்தாக்கில் அதற்கு ஆதரவே கிடையாது. எனவே, பாஜகவின் கொடி யாத்திரை ஜம்முவில் உள்ள தொண்டர்களுக்கு வேண்டுமானால் உற்சாகத்தை அளித்திருக்கலாமே தவிர, தேசிய அளவில்கூட கட்சிக்கு இதனால் மிகக் குறைந்த அளவில்தான் செல்வாக்கு கூடும். இந்தச் சூழ்நிலையில் ஜம்முவில் வன்செயல்கள் ஏற்பட்டிருப்பது துரதிருஷ்டவசமானது, இதனால் கெடுபலன்கள்தான் அதிகம்.
ஆனால், பொதுவாகப் பார்க்கும்போது ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று தெரிகிறது. மாநில அளவில் தேசிய மாநாட்டுக் கட்சியும் மக்கள் ஜனநாயகக் கட்சியும் சம பலத்தில் இருக்கின்றன. இந்த இரு கட்சிகளில் ஏதேனும் ஒன்றுடன் இணைந்து செயல்படும் நிலையில் காங்கிரஸ் இருக்கிறது. இந்த மூன்று கட்சிகளுமே காஷ்மீர் வளர்ச்சிக்கு ஆற்ற வேண்டிய பணிகள் பல இருக்கின்றன.
அடுத்து வரும் பதின் ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தியும் மக்கள் ஜனநாயகக் கட்சியில் மெஹ்பூபா முப்தியும் தேசிய மாநாட்டுக் கட்சியில் ஒமர் அப்துல்லாவும் ஆக்கபூர்வமான பணிகளைச் செய்யவிருக்கின்றனர். மோதலைவிட சமரசமே சிறந்த வழி என்பதை அனைவருமே உணர்ந்து செயல்படுவது நல்லது.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் அமைதியை ஏற்படுத்த மத்திய அரசு முக்கிய பணியாற்றியிருக்கிறது. எல்லைக்கு அப்பாலிருக்கும் (பாகிஸ்தானிய) நிலைமையோடு ஒப்பிட்டால் நாம் நன்றாகவே செயல்பட்டிருக்கிறோம். பாகிஸ்தானில் சட்டம், ஒழுங்கு நிலைமை மாறிக்கொண்டே இருக்கிறது; ஒவ்வொரு நாளும் குண்டுவெடிப்புகளும் அதில் ஏராளமானோர் பலியாவதும் தொடர்கிறது. இந்த நிலையில் காஷ்மீரப் பள்ளத்தாக்கு நிலைமையை மட்டும் தனியாகப் பிரித்துப் பார்ப்பது சரியாகாது; பிரிவினைவாதிகளுக்கும் இந்திய எதிர்ப்பாளர்களுக்கும் அர்த்தமற்ற செயல்கள் மூலம் நாம் இலவச விளம்பரம் தேடித் தரக்கூடாது.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரமே தொடர்வதால் ஊழல்தான் தொடர்ந்து பேசப்படும் விஷயமாக இருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சி.பி.ஐ. இந்த வழக்கை விசாரிக்கட்டும் என்று விட்டுவிடுங்கள் என்று தொடர்ந்து எழுதுவதற்குக்கூட அலுப்பாகவே இருக்கிறது. சட்டத்தின் மாண்பை நிலைநிறுத்தும் நீதிமன்றங்களின் மீது நம்பகத்தன்மை அதிகமாகவே இருப்பதால், இந்த விவகாரத்தை அவைகளே பார்த்துக்கொள்ளட்டும் என்று நாம் ஒதுங்கியிருக்க வேண்டும்.
நம் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி வீதம் 9% என்று பேசுகிறோம்; இதனால் ஏற்பட்டுள்ள நல்லவைபற்றி பெருமிதம் கொண்டு பேசும் நாம், எதிர்மறை விளைவுகளைப் புறந்தள்ளிவிடுகிறோம்.
இந்த வளர்ச்சியின் காரணமாக பணம் நாலாபுறங்களிலும் துள்ளிப் பாய்கிறது. மாஃபியா கும்பல்களின் செல்வாக்கால், நாம் உயிரோடு இருப்பதே பெரிய பாக்கியம் என்ற நிலைமை ஏற்பட்டுவிட்டது.
இந்த நிலையில் மகாராஷ்டிரத்தின் மலேகாவோன் மாவட்ட கூடுதல் ஆட்சியர் யஷ்வந்த் சோனாவானேயை கெரசின் கலப்பட மாஃபியா கும்பல் எரித்துக் கொன்றது என்ற தகவல் நமக்கு பெரிய ஆச்சரியமாகவா இருந்துவிடப் போகிறது?
இந்தப் படுகொலை தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்கள் மீதான வழக்கு நடந்து அடுத்த பத்தாண்டுகளுக்குள்ளாவது அவர்களுக்கு மரண தண்டனை அளிக்கப்பட வேண்டும்.
ஆனால், நாடு முழுவதும் இப்படி நூற்றுக்கணக்கானவர்கள், ஆயிரக்கணக்கானவர்கள் பெட்ரோலில் கெரசினைக் கலப்பது, கள்ளச் சந்தையில் கெரசினை விற்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டுதான் இருக்கின்றனர்.
ஏழை மக்களுக்காக அரசு மானிய விலையில் ரேஷன் கடைகள் மூலம் வழங்கும் கெரசினில் 40% அளவு அவர்களை அடைவதே இல்லை என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இப்போது கைது செய்தவர்களோடு விவகாரம் முடிந்தது என்று மகாராஷ்டிர முதல்வர் விட்டுவிடக்கூடாது.
பெட்ரோலியத்துறை அமைச்சராகப் புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் ஜெய்பால் ரெட்டி நேர்மைக்குப் பெயர் போனவர். ஆனால், வெகு நிதானமாக முடிவுகளை எடுப்பவர் என்று பெயர் எடுத்தவர். இந்த விஷயத்தில் வெகு சீக்கிரமாக முடிவெடுத்து சட்டவிரோதமாக சிலர் பணம் சம்பாதிப்பதற்குள்ள வழிகளை போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு அடைக்க வேண்டும்.
""இந்தத் தவறுக்கு நீதான் காரணம்'' என்று குற்றம்சாட்டலாம், பரஸ்பரம் சாட்டப்படும் குற்றச்சாட்டுக்குப் பதில் அளிக்கும் வகையில், ""இதற்கு நான் பொறுப்பில்லை'' என்று மத்திய அரசும் மாநில அரசுகளும் கூறிக்கொண்டே போகலாம்; நாம் பெருமைப்பட்டுக்கொள்ளும் பொருளாதார வளர்ச்சிக்கும் மக்களுக்கு அதனால் கிடைக்கும் பலன்களுக்கும் தொடர்பே இருப்பதில்லை. எல்லாம் மாஃபியா கும்பல்களால் இடையில் பறிக்கப்பட்டு அனுபவிக்கப்படுகிறது.
கெரசின், பெட்ரோல், இரும்புத்தாது, நிலக்கரி, எரி சாராயம், சாலை அமைப்பது, கட்டட கட்டுமானத் தொழில் என்று எந்தத் துறையை எடுத்தாலும் ஒரு மாஃபியா கும்பல் இருந்துகொண்டு மக்களுக்குச் சென்று சேர வேண்டிய பலன்களை இடையிலேயே பறித்து கொழிக்கிறது.
இந்தச் சமூக விரோதக் கும்பல்களின் செயல்களை அம்பலப்படுத்த "தகவல் அறியும் சட்டம்' என்ற ஆயுதம் நமக்கு இருக்கிறது, ஏராளமான தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இருக்கின்றன. ஆனால், இந்த மாஃபியா கும்பல்கள் மீது போர் தொடுக்கும் வேலையை மத்திய அரசோ, மாநில அரசுகளோ மேற்கொள்வதே இல்லை. எனவே நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான மக்கள், "தாங்கள் கொல்லப்படுவோம்' என்று அஞ்சி இத்தகைய சமூகவிரோத சக்திகளின் செயல்களை அம்பலப்படுத்த முன்வராமல் மெüன சாட்சிகளாகப் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.
மிக மோசமாக நிர்வகிக்கப்படும் மாநிலங்களில் யார் அதிகாரத்தில் இருக்கிறார்கள், யார் உண்மையில் செல்வாக்குடன் திகழ்கிறார்கள் என்பதே தெரியாமல் குழப்பம் நிலவுகிறது. நன்றாக நிர்வகிக்கப்படும் மாநிலங்கள் என்று நாம் கருதும் தில்லி, ஹரியாணா, குஜராத், மத்தியப்பிரதேசம், ஒரிசா, பிகார் ஆகியவற்றில் நிலைமை எப்படி இருக்கிறது?
மாஃபியா கும்பல்களும் கீழ்நிலை அரசு அலுவலர்களும், நீதித்துறையைச் சேர்ந்த கீழ்நிலை ஊழியர்களும் கள்ளக்கூட்டு வைத்துக்கொண்டு செயல்படுகின்றனர். எனவே "கண்டும் காணாமலே' பலர் இருந்துவிடுகின்றனர்.
அப்படியே யாராவது அசட்டுத் துணிச்சலில் தலையிட்டால் அவர்கள் மீது ஏதாவது சட்டப் பிரிவின் கீழ் வழக்கு போட்டு அவர்களை, விட்டால் போதும் என்று கதறும் அளவுக்கு அலையவிடுகின்றனர். ஆண்டுக்கணக்கில் நீதிமன்றத்துக்கு நடக்கவும் அலைக்கழிக்கப்படவும் விருப்பம் இல்லாமலே பலர் ஒதுங்கிவிடுகின்றனர்.
இப்போது சமூகவிரோதச் செயலில் ஈடுபடும் யாருக்குமே அச்சம் என்பதே கிடையாது; சட்டப்படியான ஆட்சி என்பதெல்லாம் இல்லை. ஏதாவது ஒரு சமூகவிரோதக் கும்பலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றால் மற்றொரு சமூக விரோதக் கும்பல் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது. பொது நிர்வாகம் என்பது சீர்குலைந்துவிட்டது. எனவே, நம்முடைய உயிரை நாம்தான் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்ற நிலைமை வந்துவிட்டது.
ஆனால், நிலைமை மெதுவாக, ஆனால் உறுதியாக மாறிக்கொண்டிருக்கிறது. அநியாயத்தை எதிர்த்துப் போராடும் மக்களுக்கு ஆதரவாக ஊடகங்கள் துணை நிற்க ஆரம்பித்துள்ளன.
பெட்ரோலியத்துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி இந்த எண்ணெய் மாஃபியாக்களுக்கு எதிராக போர் தொடுப்பாரா?
நாம் என்ன செய்யப்போகிறோம்? இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து, அவர்களுடைய குடும்பத்தாருக்கு ரொக்க இழப்பீடு வழங்கி, இந்த மாதிரியான சமூகத் தீமைகளை அப்படியே விடக்கூடாது எதிர்த்துப் போராட வேண்டும் என்று பேசிவிட்டு அடுத்து இதேபோல ஒரு சம்பவம் நடந்து அதில் ஒரு அப்பாவி இறக்கும்வரை மெüனமாக இருக்கப் போகிறோமா?
www.Dinamani.com

No comments:

Post a Comment