விலைவாசி உயர்வால் விழி பிதுங்குகிறது
சா. ஷேக்அப்துல்காதர்
First Published : 17 Jan 2011 05:18:40 AM IST http://www.dinamani.com/
விலை உயர்வைக் கட்டுப்படுத்த அமைச்சர்கள், அதிகாரிகளுடன் பிரதமர், முதல்வர் ஆலோசனை என்ற செய்திகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளது. நேற்று வரை விலைவாசி உயர்வைக் கண்டுகொள்ளாத இந்த ஆட்சியாளர்களுக்கு விலைவாசி உயர்வு இன்றுதான் கண்ணுக்குத் தெரிகிறதா என்ற குரல்கள் டீக்கடைகளிலும், பெட்டிக் கடைகளிலும் ஒலிப்பதைக் காண முடிகிறது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசு சார்ந்த நிறுவனங்களில் பணி செய்து வருபவர்களும் தங்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டங்கள் நடத்தி கைது செய்யப்பட்டனர் என்று செய்திகளையும் ஊடகங்களில் காண்கிறோம். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ், போக்குவரத்து ஊழியர்களுக்கு 40 சதவிகிதம் ஊதிய உயர்வு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை ஊதிய உயர்வு, சிறப்பு ஊதிய உயர்வு, பொங்கல் போனஸ் என பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது. ஆசிரியர்களுக்கு ரூ. 1008 ஊதியம் உயர்வு என திடீர் அறிவிப்பும் வெளியாகிறது. இருந்தபோதிலும், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய விகிதம் இன்னமும் குறைவாகவே உள்ளது என்ற புகாரும் ஓயவில்லை. ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் அரசு ஊதிய விகிதத்தை உயர்த்திக் கொண்டே போகிறது. அடித்தட்டு மக்களின் பொருளாதார நிலை குறித்து ஆட்சியாளர்கள் எண்ணுகிறார்களா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
கிலோ அரிசி ரூ. 1-க்கு வழங்குகிறோம். இலவச வீடு வழங்கும் திட்டம், நகர்ப்புற மக்களுக்கு வட்டி மானியத்துடன் வீடு கட்டுவதற்கு கடனுதவி, இலவச கலர் டிவி, காஸ் அடுப்பு, படித்த பெண்களுக்குத் திருமண உதவித் தொகை, மகப்பேறு உதவித் தொகை, மாணவர்களுக்கு இலவச சைக்கிள் என மக்களுக்கு ஏராளமான சலுகைகளை வழங்கி வருகிறோம் என்றும், ஏழை, எளிய மக்கள் இருக்கும்வரை இலவசத் திட்டங்கள் தொடரும் என்றும் ஆட்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
அதிகாலை பால் கடைக்குச் சென்றால் இன்றுமுதல் லிட்டருக்கு பால் விலை ரூ. 2 உயர்ந்திருக்கிறது என்ற முதல் தகவல் கிடைக்கிறது. அடுத்த சில மணி நேரத்தில் காய்கறிகள் வாங்கக் கடைக்குச் சென்று ரூ. 100-ஐ செலவிட்டால், கை கூட நிறைவதில்லை. அடித்துப் பிடித்து டிபன் பாக்ஸில் சாப்பாட்டை எடுத்துக்கொண்டு வேலைக்குச் செல்ல பேருந்தில் ஏறினால் தாழ்தள சொகுசு பேருந்தில் வழக்கத்தைவிட ரூ. 2, ரூ. 3 கூடுதலான பேருந்துக் கட்டணம்.
இப்படி அன்றாட வாழ்வில் ஏழை, எளிய நடுத்தர மக்கள் சந்திக்கும் பிரச்னைகள்தான் ஏராளம். குறைந்தது மாதம் ரூ. 10,000 ஆயிரம்கூட வருமானம் இல்லாமல் குடும்பத்தை நடத்துவது பெரும் கஷ்டமாக உள்ளது என்பதுதான் உண்மை.
அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். வர்த்தக பேரத்தால் எழும் விலை உயர்வைக் கட்டுப்படுத்த ஆன்லைன் வர்த்தகத்தைத் தடை செய்ய வேண்டும் என்ற கட்சிகளின் போராட்டக் குரல்களும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றன.
ஆட்சியாளர்கள் என்னதான் நடவடிக்கை எடுத்தார்கள் அல்லது அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் என்ன பலன்தான் கிடைத்து. அண்மையில் வெங்காயம் விலை கடுமையாக உயர்ந்தது. பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் என அரசு அறிவித்த சில மணி நேரங்களில் விலை குறைப்பு என்ற தகவலும் வருகிறது.
கடந்த 5 ஆண்டுகளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதியம் 30 முதல் 40 சதவிகிதம் வரை உயர்ந்திருக்க வாய்ப்புள்ளது. ஆனால், தனியார் நிறுவனங்களில் பணி செய்வோரின் ஊதிய உயர்வில் மாற்றம் இல்லை.
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 35 ஆக இருக்கும்போது நிர்ணயம் செய்த ஊதியம். இன்று பெட்ரோல் விலை ரூ. 61 ஆக உயர்ந்துள்ளது. இன்றும் அதே ஊதியத்தில் எத்தனை ஆயிரம் பேர் காலத்தைத் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.
தங்கம் விலை தினமும் உயர்ந்து வருகிறது. ஆனால், நகைக்கடைகளில் கூட்டம் குறைந்தபாடில்லை. கட்டுமானப் பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கட்டடத் தொழிலாளர்களின் ஊதியமும் பல மடங்கு உயர்ந்துள்ளது. ஆனால், கட்டுமானப் பணிகளில் தேக்கம் இல்லை. எங்கு திரும்பினாலும் புதிய கட்டங்கள் வளர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
கிலோ அரிசி ரூ. 1-க்கு வழங்குவதாலும், வேலை உறுதி அளிப்புத் திட்டத்தில் கிராமப்புற மக்களுக்கு 100 நாள்கள் வேலை அளிப்பதாலும் விவசாய வேலை, கூலி வேலை செய்வதற்கு தொழிலாளர்கள் கிடைப்பதில்லை என்ற நிலை. போதிய மழை இல்லாத காரணத்தாலும், பருவம் தவறி பெய்யும் மழையாலும் உணவு உற்பத்தியில் தேக்கம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இன்னொருபுறம், விளை நிலங்கள் அழிக்கப்பட்டு, புதிது புதிதாகக் கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. பத்து பதினைந்து ஆண்டுகளில் பல்வேறு மாற்றங்கள்.
வாகனங்களின் பயன்பாடு அதிகரித்த காரணத்தால் சாலைகளில் போக்குவரத்து நெருக்கடி. மோட்டார் சைக்கிள் பயன்படுத்தாதவர் இல்லை என்ற நிலை காணப்படுகிறது. நாம் வளர்ச்சியை நோக்கிச் செல்கிறோமா அல்லது பகட்டான வாழ்க்கை வாழ்கிறோமா?
விலைவாசி உயர்வால் சாமான்ய மக்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்குத் தீர்வுதான் என்ன? ஆட்சியாளர்கள் மாறினால் இந்த நிலை மாறுமா என்பதே இப்போதைய கேள்வி.
No comments:
Post a Comment