கலப்பினக் கெண்டைமீன் வளர்ப்பு
நன்னீர் கெண்டை மீன் வகைகள் பலவற்றை ஒரே குளத்தில் கலந்து வளர்க்கும் முறை கலப்பின வளர்ப்பாகும். இந்த மீன்கள் ஒரு குறிப்பிட்ட அளவு வளர எட்டிலிருந்து 10 மாதங்கள் வரை நீர் தேவைப்படும். பொதுவாக மீன் வளர்ப்பு குளத்தின் அளவு ஒரு எக்டர் (இரண்டரை ஏக்கர் அல்லது 10,000 ச.மீ) ஆக இருத்தல் நல்லது. இதை ஐந்து குளங்களாக ஒவ்வொன்றும் அரை ஏக்கர் என்ற அளவில் அமைத்துக் கொளள வேண்டும். குளத்தின் வடிவம் செவ்வகமாக இருப்பின் கையாள எளிது. மீன் குள மண்ணானது மணல் 60-80%, வண்டல் 12-25% மற்றும் களிமண் 8-15% ஆகியவற்றைக் கொண்டிருந்தால் நீர் நன்கு தேங்கி நிற்கும். குளக்கரையின் சாய்வை 1:1.5 என்ற விகிதத்தில் அமைக்கலாம். உள் மற்றும் வெளிமடைகளில் தடுப்புவலை பொருத்திய 25 செ.மீ. விட்டம் கொண்ட குழாய்களை பதிக்க வேண்டும்.
மீன்குள நீரின் தன்மைகள்: மீன்குள நீரின் ஆழம் ஒரு மீட்டராக இருப்பது அவசியம். இதனால் மீன்கள் வெப்பத்தாலோ, குளிராலோ பாதிப்படையாது. மீன்குளத்தின் நீர் கீழ்க்கண்ட தன்மைகளைப் பெற்றிருக்க வேண்டும்.
வெப்பம்: 25-32 டிகிரி செ. உப்புத்தன்மை: 0-2.5 மி.கி. சோடியம் குளோரைடு/லி. கடினத்தன்மை: 20-300 மி.கி. கால்சியம், மக்னீசியம்/லி. கார அமிலத்தன்மை (பிஎச்): 6.5-9.0 நுண்ணுயிர் இருப்பளவு ஆழம்: 30-60 செ.மீ. உயிர்வளி: 5 மி.கி/லி.
மீன்களுக்கான இயற்கை உணவு பெருக ஓர் எக்டருக்கு ஒரு வளர்ப்பு காலத்திற்கு இயற்கை உரமாக மாட்டுச்சாணம் 10,000 கிலோ இடவேண்டும். ரசாயன உரங்களான யூரியா-200 கிலோ, சூப்பர் பாஸ்பேட்-250 கிலோ, பொட்டாஷ்-40 கிலோ ஆகியவற்றையும் இடலாம். இயற்கை உரத்தையும் ரசாயன உரங்களையும் 10 சம பங்குகளாகப் பிரித்து இரு வாரங்களுக்கொருமுறை மாற்றி மாற்றி இடவேண்டும். முதல் உரப்பங்கை இட்ட 15 நாட்களுக்குப்பின் நீர் பசுமையாக மாறியபின் மீன்குஞ்சுகளை இருப்பு செய்ய வேண்டும்.
மீன் வகைகளும் இருப்பு செய்தலும்: கலப்பின வளர்ப்பிற்கு உகந்த கெண்டை மீன்கள் பல உண்டு. இவை ஒன்றோடொன்று இணங்கி வாழும். வேகமாக வளரும். இந்த கெண்டை மீன் வகைகளும் இருப்பளவும் கீழே குறிப்பிட்டவாறு இருக்க வேண்டும்.
கட்லா-25%, ரோகு-15%, மிர்கால்-20%, வெள்ளிக்கெண்டை-10%, புல்கெண்டை-10%, சாதாக்கெண்டை-20%.
விரலளவு வளர்ந்த மீன்குஞ்சுகளை எக்டருக்கு 10,000 என்ற எண்ணிக்கையில் வெயில் குறைந்த நேரத்தில் இணங்கவைத்து இருப்பு செய்ய வேண்டும். மீன்குஞ்சுகள் மழைக்காலத்திற்குப்பின் அருகிலுள்ள பொரிப்பகங்களில் கிடைக்கும்.
மீன்களுக்கு உணவிடுதல்: மீன்கள் வேகமாக வளர இயற்கை உணவுடன் மேலுணவும் தருதல் அவசியம். மேலுணவாக தவிடு, புண்ணாக்கு ஆகியவற்றை 1:1 என்ற விகிதத்தில் கலந்து தினமும் உடல் எடையில் 5% என்ற அளவுக்கு தரவேண்டும். அரிசி தவிடு, கோதுமை தவிடு, கடலைப் புண்ணாக்கு, எள் புண்ணாக்கு, சூரியகாந்திப் புண்ணாக்கு, சோயா மொச்சை, குச்சிக்கிழங்கு திப்பி, பட்டுப்பூச்சி கூட்டுப்புழு ஆகியவை மீன்களுக்கு மேலுணவாகப் பயன்படும். தவிடு மற்றும் புண்ணாக்கை நீர் கலந்து உருண்டைகளாக்கி வலைத்தட்டுகளில் இட்டு தரவேண்டும். புல்கெண்டைக்கு மென்மையான எல்லாவகைத் தாவரங்களையும் தினம் உடல்எடையில் 7-8 மடங்கு உணவாக தரவேண்டும். மாதம் ஒரு முறை சோதனைப் பிடிப்பு நடத்தி உணவிடும் அளவை நிர்ணயிக்க வேண்டும்.
மீன் அறுவடை: மீன்களைப் பிடிக்க வீச்சுவலை (சோதனைப் பிடிப்பிற்கு) மற்றும் இழுவலை (அறுவடைக்கு) தேவைப்படும். நன்கு மேலாண்மை செய்த ஓர் எக்டர் மீன்குளத்திலிருந்து ஓர் ஆண்டில் உத்தேசமாக 5-7 டன் மீன் அறுவடை கிடைக்கும். இதன்மூலம் மொத்த வருமானமாக குறைந்தபட்சம் ரூபாய் ஒரு லட்சம் பெறலாம். இதில் 50 விழுக்காடு நிகர லாபமாகக் கிட்டும்.
பா.கணேஷ், எம்.எப்சி.,உதவி பேராசிரியர்,
வெ.பழனிச்சாமி, பிஎச்.டி.,
இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர்,
வேளாண் அறிவியல் நிலையம்,
குன்றக்குடி.
தினமலர் விவசாய மலர் செய்தி
பதிவு செய்த நாள் : ஜனவரி 26,2011,00:00 IST
No comments:
Post a Comment