தலையங்கம்: அடையாளத்தில் அர்த்தமில்லை!
First Publ ished : 26 Jan 2011 12:00:00 AM IST
Last Updated : 26 Jan 2011 04:54:23 AM IST தினமணி
தேசியக் கொடியை ஏற்றுவது என்பது எந்தவொரு நாட்டின் குடிமகனுக்கும் பெருமிதமான செயலாகத்தான் இருக்க முடியும். இந்துக்களுக்குப் பொங்கலும் தீபாவளியும்போல, இஸ்லாமியர்களுக்கு பக்ரீத்தும் ரமலானும்போல, கிறிஸ்தவர்களுக்கு ஈஸ்டரும் கிறிஸ்துமஸýம் போல, ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் சுதந்திர தினமும், குடியரசு தினமும் பண்டிகை நாளாக இருக்க வேண்டும் என்பதுதான், இந்திய சுதந்திரத்திற்காக உடல், பொருள், ஆவியை அர்ப்பணித்த தியாகிகளின் எதிர்பார்ப்பு.
62-வது குடியரசு தினத்தைக் கொண்டாடும் வேளையில், பாரதிய ஜனதாக் கட்சி ஒரு மிகப்பெரிய பிரச்னையைக் கிளப்ப முயற்சிக்கிறது. கொல்கத்தாவிலிருந்து கிளம்பி "பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா' என்கிற அமைப்பின் சார்பில் ஒருமைப்பாடு யாத்திரை ஒன்று ஸ்ரீநகர் லால் செüக்கை நோக்கிப் பயணித்திருக்கிறது. குடியரசு தினத்தன்று ஜம்மு காஷ்மீரின் தலைநகரமான ஸ்ரீநகரின் மையப் பகுதியிலுள்ள லால் செüக்கில் மூவர்ணக் கொடியை ஏற்றி தேச ஒற்றுமையை வலியுறுத்துவதுதான் தங்கள் நோக்கம் என்று இவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.
இந்தியாவின் எந்தப் பகுதியிலும் தேசியக் கொடியை ஏற்ற முடியவேண்டும். தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்குமே மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், இப்படி ஒரு முயற்சியை மேற்கொள்வதன் மூலம் ஒற்றுமை ஏற்படுவதற்கு பதிலாகப் பிரிவினைவாதிகளின் கரம் வலுப்படுமானால், அது அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியாக இருக்குமே தவிர, தேசப்பற்றாக இருக்க முடியாது.
"பார்த்தீர்களா, எங்களை இந்தியாவின் ஒரு பகுதியான காஷ்மீரில் தேசியக் கொடியை ஏற்ற அனுமதிக்கவில்லை, மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி' என்று இந்தியாவின் ஏனைய பகுதிகளில் பாரதிய ஜனதாக் கட்சி தனது தேசப்பற்றைப் பறைசாற்றிக் கொள்ள இப்படி ஒரு முயற்சியில் இறங்கி இருக்கிறதே தவிர, காஷ்மீரில் ஒற்றுமையை ஏற்படுத்தித் தீவிரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியாக இது இருக்கப் போவதில்லை என்பதுதான் நிஜம்.
ஸ்ரீநகர் லால் சௌக்கில் அடையாளக் கொடியேற்றம் நடத்த ஆசைப்படுபவர்கள், ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இதேபோல அடையாளத்துக்காகக் கொடி ஏற்றும் வைபவம் ஸ்ரீநகரில் கடந்த 60 ஆண்டுகளாக அரசால் நடத்தப்பட்டு வருகிறதே, பிறகும் ஏன் காஷ்மீரப் பிரிவினைவாதிகளின் கொட்டம் அடங்கவில்லை? அவர்களுக்கான ஆதரவு குறையவில்லை? இதைப்பற்றி ஏன் பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர்கள் பேசுவதில்லை?
தெலங்கானாவில் நான்கு பஸ்களை எரித்துக் கலவரம் மூளுகின்ற சூழ்நிலை ஏற்படுவதற்குள், மத்திய உள்துறை அமைச்சர் தெலங்கானா மாநிலம் அமைப்பது பற்றிப் பரிசீலிக்கப்படும் என்று பதறுகிறார். காஷ்மீரில் நூறுக்கும் அதிகமான இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்களே, நாம் அதற்காக ஒரு சொட்டுக் கண்ணீர் வடித்தோமா? பிரிவினை கேட்பவர்களாகவே இருந்தாலும், அவர்களை நாம் நமது இந்திய சகோதரர்களாக நினைக்கிறோமா, மதிக்கிறோமா?
சீனாவுக்குப் போக காஷ்மீரில் வாழ்பவர்கள் அனுமதிச் சீட்டுப் பெற தனியாக விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டால், காஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி என்று குரலெழுப்பிக் கண்டனம் தெரிவிக்கிறோம். ஆனால், ஒரு காஷ்மீரி இந்தியாவின் ஏனைய பகுதிகளில் உள்ளவர்களைப்போல அவ்வளவு சுலபமாகப் பாஸ்போர்ட் பெற்றுவிட முடியாது என்பது தெரியுமா?
தெருவில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஊர்வலமாக வந்து கல்லெறிந்து பிரச்னை செய்தபோது, ராணுவம் தற்காப்புக்காகத் துப்பாக்கிச் சூடு நடத்தியது. சிலர் இறந்தனர். அதை ஏற்றுக்கொள்வோம். ஆனால், சோஃபியன் என்கிற ஊரில் இரண்டு அப்பாவிப் பெண்கள் ராணுவ அதிகாரிகளால் கடத்திச் செல்லப்பட்டு கற்பழிக்கப்பட்டார்களே, அதைப்பற்றி விசாரணை நடத்த முடியாது, அந்த ராணுவ அதிகாரிகள் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்றால் அதை எப்படி ஏற்றுக் கொள்வது?
ஆந்திரத்தில் தெலங்கானா போராட்டத்துக்கும், ராஜஸ்தானில் குஜ்ஜர்கள் போராட்டத்துக்கும், அசாமில் போடோலாண்ட் போராட்டத்துக்கும் உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வு காண விழையும் மத்திய அரசும், அதைப்பற்றி அக்கறையுடன் விவாதிக்கும் இந்தியப் பொதுமக்களும், நமது நாட்டின் பிரிக்க முடியாத பகுதி என்று சொந்தம் கொண்டாடும் காஷ்மீர மக்களின் பிரச்னைகளை மட்டும் விரோதத்துடன் பார்க்கிறோமே, பிறகு ஒற்றுமை எப்படி ஏற்படும்?
சர்வகட்சி தூதுக் குழு ஸ்ரீநகருக்குப் போய் கலவரத்தில் இறந்துபோன இளைஞர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய பிறகுதான், காஷ்மீர் பள்ளத்தாக்கில் சற்று அமைதி திரும்பி இருக்கிறது. பாகிஸ்தான் அரசின் மறைமுக ஆதரவுடனும், எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சியின் நேரடி ஆதரவுடனும் செயல்படும் தீவிரவாதக் குழுக்கள் இப்போது சற்று அடக்கி வாசிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். மக்களும் சகஜ வாழ்க்கைக்குத் திரும்பி இருக்கிறார்கள். இதைத் தகர்ப்பதால் என்ன லாபம் கிடைத்துவிடப் போகிறது?
பாரதிய ஜனதாக் கட்சியின் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடந்தபோது, அன்றைய பாரதப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் செங்கோட்டையில் கொடியேற்றுவதற்குப் பதிலாக ஸ்ரீநகர் லால் செüக்கில் கொடியேற்றி இருந்திருக்கலாமே? ஒரு முறைகூட அப்படிச் செய்யவில்லையே, ஏன்?
இப்போதும் ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை. ஸ்ரீநகர் பக்ஷி ஸ்டேடியத்தில் குடியரசு தினத்தன்று காஷ்மீர ஆளுநர் தேசியக் கொடியை வழக்கம்போல ஏற்றத்தான் போகிறார். அந்தக் கொடியேற்றும் விழாவில் பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாக்காரர்கள் கலந்து கொள்ள வேண்டாம் என்று யாரும் தடுக்கவில்லையே?
காஷ்மீர் பள்ளத்தாக்கில் வாழும் மக்கள் தாங்கள் இந்தியர்கள் என்கிற உணர்வு பெற வேண்டும். அவர்களுக்கு இந்திய அரசு தங்களையும் பிரஜைகளாகக் கருதுகிறது என்கிற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். அவர்களே மகிழ்ச்சியுடன் கலந்துகொண்டு குதூகலமாக மூவர்ணக் கொடியைப் பறக்கவிட்டு தேசிய கீதம் பாடினால்தான் அதில் அர்த்தம் இருக்கும். அதை விட்டுவிட்டு, ஏதோ அடையாளத்துக்குக் கொடியேற்றப் போகிறேன் என்று விதாண்டாவாதம் செய்தால், பிரிவினைவாதிகள் பாகிஸ்தானியக் கொடியை ஏற்றி நம்மைக் கேவலப்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இந்தியக் குடியரசின் ஐக்கியமும், ஒருமைப்பாடும் காப்பாற்றப்படும். காப்பாற்றப்பட்டாக வேண்டும் என்பதில் பாரதிய ஜனதாக் கட்சிக்கு மட்டுமல்ல, பொறுப்பான ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் அக்கறை உண்டு. ஜெய் ஹிந்த்!
1/26/2011 7:42:00 AM இதெல்லாம் அவர்களுக்கு தெரியாதது போல் உபதேசம் செய்வது சரியல்ல.தெரிந்து கலவரம் விளைவிக்க முயலும் அவர்களை இன்னும் கடுமையாக கண்டிப்பதே நடுனிலையாகும் By வாசுதேவன்.மு
1/26/2011 7:14:00 AM நல்லதொரு தலையங்கம். குறிப்பிட்டவர்களின் காதில் விழுந்து மனதில் பதிந்தால் போதும். By Ramakrishnan
1/26/2011 6:41:00
1/26/2011 9:37:00 AM பாரதிய ஜனதா கட்சியினர் ,காஷ்மீருக்குள் நுழைந்து ,குட்டி கலாட்டா செய்யாமல் இருந்தால் சரி. எரியும் நெருப்பில், எண்ணெய் ஊற்றி, எவரையும் உசுப்பி விடாதீர்கள்.அரசியல் சிக்கல் உள்ள ஒரு மாநிலத்துக்குள் சென்று, அரசியல் பண்ண நினைப்பது தேவை இல்லாதது. எவர் கொடி ஏற்றினாலும், கொடி கம்பத்தில் பறக்கத்தான் செய்யும். பறப்பது நம் தேசிய கொடி என்பதை மட்டும் நினைவில் கொண்டால் போதும். i By பி.டி.முருகன் திருச்சி
1/26/2011 9:04:00 By rc jayakumar
1/26/2011 11:44:00 AM அருமையான தலையங்கம். மூவர்ணக் கொடியை ஸ்ரீநகரில் தான் ஏற்றவேண்டும் என்பதில்லை. எங்கு வேண்டுமானாலும் ஏற்றலாம். பாஜகவின் இந்த முயற்சி நிச்சயமாக அங்குள்ள மக்களை வெறுப்பேற்றி விரோதத்தை உண்டு செய்வதற்கான முயற்சிதான். நிச்சயமாக அரசியல் ஆதாயம் தேடுவதற்கான முயற்சி தான். By முட்டாள்
1/26/2011 11:11:00 AM தினமணியின் மூலம் மனித நேயம் வெளிபடுத்த பட்ட ஒரு தலையங்கம்.. தலையங்கம் எழுதின பெரியவருக்கு ஆயிரம் சலம் - சாம் By Sham
1/26/2011 12:23:00 PM
No comments:
Post a Comment