Tuesday, January 11, 2011

நடக்க ஓர் இடமில்லையே...!

தலையங்கம்: நடக்க ஓர் இடமில்லையே...

First Published : 12 Jan 2011 01:29:12 AM IST
Last Updated : 12 Jan 2011 04:34:08 AM IST -பார்வைக்கு- தினமணி-

சென்னை மாநகரக் காவல்துறைத் தரப்பிலிருந்து கிடைத்த புள்ளிவிவரப்படி, கடந்த பத்து ஆண்டுகளில் சாலை விபத்தால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை பத்து மடங்காக அதிகரித்திருக்கிறது. சென்னை மாநகர மற்றும் புறநகர் காவல்துறை எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் மட்டும் கடந்த ஆண்டு 1,415 பேர் சாலை விபத்தில் பலியாகி இருக்கிறார்கள். தில்லிக்கு அடுத்தபடியாக மிக அதிகமான சாலை விபத்துகளும் மரணங்களும் இந்தியாவில், நமது சிங்காரச் சென்னையில்தான் நிகழ்கின்றன என்பது நாம் எந்த அளவுக்கு சாலைப் பாதுகாப்பில் கவனமாக இருக்கிறோம் என்பதைத்தான் காட்டுகிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் சென்னையில் வாகன எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்திருக்கிறது என்று ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. வாகன எண்ணிக்கை அதிகரிப்பு போலவே சாலைகளில் போக்குவரத்து விதிமீறல்களும் அதிகரிப்பதில் வியப்பொன்றும் இல்லை. சாலை விபத்தில் 30 சதவீதம் மதுஅருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதாலோ, சாலையைக் கடப்பதாலோ ஏற்படுவதாக ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. வீதிதோறும் "டாஸ்மாக்'கால் ஆன உதவி!
நாளொன்றுக்கு சுமார் 1,000 புதிய வாகனங்கள் சென்னை மாநகர வீதிகளில் புதிதாக வலம் வரத் தொடங்குவதாக இன்னொரு புள்ளிவிவரம் கூறுகிறது. ஆகஸ்ட் மாதக் கணக்கின்படி, சென்னை நகர வீதிகளில் புறநகர் பகுதிகளையும் சேர்த்து, 24,35,000 இருசக்கர வாகனங்கள் வலம் வந்து கொண்டு இருக்கின்றன. கார்களின் எண்ணிக்கை 5,31,000. ஆட்டோ ரிக்ஷாக்கள் 52,000. டெம்போ வேன்கள் 24,000. மாநகரப் போக்குவரத்து பஸ்கள் 3,500. பள்ளி வாகனங்கள் 2,500. இதுதவிர, தனியார் கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றுக்காக ஓடும் வாகனங்கள் என ஏனைய வாகனங்களின் எண்ணிக்கை 83,350.
இப்படி ஏறத்தாழ 31,32,000 வாகனங்கள் சென்னை மாநகரத் தெருக்களில் வலம் வரும்போது விபத்துகள் ஏற்படாமல் என்ன செய்யும்? இந்த வாகனங்களில் 70 சதவீத வாகனங்கள் காலையிலும் மாலையிலும் அலுவலக நேரங்களுக்காக சாலையை அடைத்துக் கொள்ளும்போது அதிலிருந்து வெளியாகும் புகையும், அதனால் ஏற்படும் சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளும் இன்னொரு தனிக்கதை.
நகர்ப்புற வளர்ச்சி என்பது தவிர்க்க முடியாதது என்பது மறுக்க முடியாததாக இருக்கலாம். ஆனால், ஒரு நாடு வளர்ச்சிப் பாதையில் செல்லும்போது அந்த வளர்ச்சி சமச்சீர் வளர்ச்சியாக இருப்பதையும், அந்த வளர்ச்சிக்கு ஏற்ற கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதையும் உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு. நாளைய நிலைமையை உணர்ந்து திட்டமிடத் தெரியாதவர்களின் கையில் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு, நாற்சந்தியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் பரிதாப நிலைக்கு மக்கள் இப்போது தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
குறிப்பாக, சென்னை நகரத்தையும் அதன் புறநகர்ப் பகுதிகளையும் பொறுத்தவரை அடிப்படையாக இரண்டு முக்கியமான பிரச்னைகளில் நமது நகர்ப்புற வளர்ச்சிக் குழுமம் கோட்டைவிட்டிருக்கிறது. மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், மாம்பலம், ஜார்ஜ் டவுன் போன்ற புராதனமான சென்னை நகரின் தெருக்களை அகலப்படுத்துவது என்பது வேண்டுமானால் இயலாத ஒன்றாக இருக்கலாம். ஆனால், புறநகர்ப் பகுதிகளில்கூட குறைவான திட்டமிடுதலுடன்கூடிய நடைமேடையே இல்லாத குறுகலான சாலைகள் அமைக்கப்பட்டிருக்கிறதே, அது யார் செய்த தவறு? அதைக்கூட உறுதிப்படுத்த ஏன் நமது சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் தவறியது?
இரண்டாவதாக, தெருக்கள், சாலைகள் என்பவை வாகனங்களுக்காக மட்டும் அமைந்தவை அல்ல. சாலை அமைக்கும்போது முன்னுரிமை பாதசாரிகளுக்கு அளிக்கப்பட வேண்டும். உலகிலுள்ள வளர்ச்சியடைந்த நாடுகளில் எல்லாம் பாதசாரிகள் செல்லும் நடைமேடை குறைந்தது 10 அடி அகலமாவது இருக்கும். இங்கே ஐந்தடி நடைபாதையை ஒரு சில இடங்களில் மட்டும் அமைத்துவிட்டு அதையும் தெருவோர வியாபாரிகளும் நடைபாதைக் கோயில்களும் ஆக்கிரமித்துக்கொள்ள அனுமதிக்கிறது மாநகராட்சியும் அரசும்.
பாதசாரிகள் சாலையைக் கடக்க ஆங்காங்கே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறதா என்றால் அதுவும் கிடையாது. பாதசாரிகள் சுலபமாகத் தெருவைக் கடக்க ஆங்காங்கே சுரங்கப் பாதைகளையாவது அமைக்கிறார்களா என்றால் இல்லை.
இன்றைய வாகன ஓட்டி, நேற்றைய சாலைகளில் தனது வாகனத்தை ஓட்ட வேண்டிய அவலம். நகரின் மையப் பகுதியையும் முக்கியமான மூன்று சாலைகளையும் தவிர, சென்னைநகரத்தில் உள்ள சாலைகளின் நிலைமையை சேர, சோழ, பாண்டியர் காலத்திய சாலைகளுடன் ஒப்பிடலாம். மாட்டுவண்டிகளும், குதிரைகளும் பயணிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட சாலைகளைப் போலல்லவா மேடும் பள்ளமுமாக இவை காட்சியளிக்கின்றன. இதன் மூலம் தனியார் மோட்டார் வாகன உற்பத்தியாளர்களுக்கு உதிரி பாகங்களின் விற்பனையை அதிகரிக்க அரசு மறைமுகமாக உதவுகிறதோ என்றுகூட சந்தேகம் ஏற்படுகிறது.
தனியார் கல்லூரிகளும், தனியார் நிறுவனங்களும், தனியார் பள்ளிகளும் இயக்கும் பஸ்கள் சென்னை நகரச் சாலைகளை அலுவலக நேரங்களில் ஒட்டுமொத்தமாக ஆக்கிரமித்துக் கொண்டு விடுகின்றனவே, இவைகளை முறைப்படுத்துவது பற்றி அரசு எப்போதாவது யோசித்திருக்கிறதா? சென்னையைப் புகைமண்டலமாக்கும் இந்த வாகனங்கள் தில்லியில் இருப்பதுபோல எரிவாயுவில்தான் இயக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியமாவது ஒரு கோரிக்கை எழுப்ப வேண்டாமா?
வாகனங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும். சாலைகளின் தரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். பாதசாரிகள் நடமாடவும், சாலையைக் கடக்கவும் முன்னுரிமையுடன் வழிகோல வேண்டும். தனியார் பஸ்கள் எரிவாயுவில் இயங்குவது கட்டாயமாக்கப்பட வேண்டும். குறைந்த கட்டணத்தில் வசதிகளுடன்கூடிய பொதுப்போக்குவரத்து அதிகரிக்கப்பட வேண்டும். இதையெல்லாம் செய்தால் மட்டுமே சாலை விபத்துகளும் குறையும். சென்னையும் சிங்காரச் சென்னையாகும்!

No comments:

Post a Comment