அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகதுஹு...
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....
சினிமா ஹராமா? ஆளூர் ஷாநவாஸ் கட்டுரை
அண்மையில் அம்பேத்கர் திரைப்படத்தைப் பார்த்தேன்.
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குரலாய் ஒலித்த புரட்சியாளர் அம்பேத்கர்,
தன் வாழ்க்கையின் ஒவ்வொரு அசைவுகளிலும் சந்தித்த நெருக்கடிகள், அவமானங்கள், இழப்புகள் ஆகியவற்றையும்,
எல்லா இடர்களையும் எதிர் கொண்டு அவர் எழுந்து நின்ற வீர வரலாற்றையும் துல்லியமாகப் பதிவு செய்திருந்தனர்.
இந்தியாவின் தலைசிறந்த திரைக்கலைஞரான 'மம்முட்டி' அம்பேத்கராகவே உருமாறியிருந்தார்.
அம்பேத்கரின் சாயலை ஒத்திருந்த அவரது முகத் தோற்றமும், உடல் மொழியும் அச்சு அசலாக அம்பேத்கரைப் பார்ப்பது போலவே இருந்தது.
ஒரு காட்சியில் கூட மம்முட்டி என்ற நடிகர் நம் நினைவுக்கு வராத அளவுக்கு, அம்பேத்கரை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்திய அவரது கடும் உழைப்பும், நடிப்புத் திறனும் மகத்தானது; போற்றுதலுக்குரியது.
ஆனால், படத்தின் காட்சியமைப்பில் குறிப்பாக,அதன் தமிழ் மொழியாக்கத்தில் முஸ்லிம் வெறுப்பு அப்பட்டமாகவே வெளிப்படுகிறது. கூர்ந்து கவனித்தால் அது திட்டமிட்டே திணிக்கப்பட்டது போல் தோன்றுகிறது.
வட்டமேசை மாநாட்டில் பேசும் போதும், காந்தியடிகளுடன் வாதம் செய்யும் போதும், பிரிவினை கோரும் ஜின்னாவை சந்திக்கும் போதும் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்களை அம்பேத்கர் பதிவு செய்வதைப் போல காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
இந்தியச் சூழலில், குறிப்பாக தமிழகத்தில் தலித்துகளும், முஸ்லிம்களும் இணைந்து அரசியல் சக்தியாக வடிவம் பெறுவதை பொறுத்துக்கொள்ள முடியாத ஆதிக்க சக்திகள், முஸ்லிம்களிடமிருந்து தலித்துகளையும், தலித்துகளிடமிருந்து முஸ்லிம்களையும் பிரிக்கின்ற சூழ்ச்சியைக் கையாண்டு வருகின்றனர். அத்தகைய சூழ்ச்சியின் நீட்சிதான் அம்பேத்கர் படத்திலும் எதிரொலிக்கிறது.
அம்பேத்கரை முஸ்லிம்களுக்கு எதிரானத் தலைவராக சித்தரிக்கும் செயலை இந்துத்துவ சக்திகள் நீண்ட காலமாக செய்து வருகின்றனர்.
அம்பேத்கர் மீது முஸ்லிம்களுக்கு வெறுப்பு ஏற்படவும், முஸ்லிம்களைப் பற்றி தலித்துகளிடம் தவறான எண்ணம் பரவவும் பல்வேறு அவதூறுகளை கட்டவிழ்த்து விடுகின்றனர். எந்தக் காலத்திலும் இரண்டு சமூகங்களும் சேர்ந்துவிடாமல் இருக்க, என்னென்ன வழிமுறைகள் உண்டோ அவை அனைத்தையும் அவர்கள் கையாளுகின்றனர்.
அம்பேத்கரை அரசியல் நிர்ணய சபைக்கும், வட்டமேசை மாநாட்டிற்கும் அனுப்பி வைத்து அழகு பார்த்த சமூகம் முஸ்லிம் சமூகம். ஆனால், அந்த வரலாற்றை மறைத்து விட்டு, வட்டமேசை மாநாட்டில் சென்று முஸ்லிம்களுக்கு எதிராக அம்பேத்கர் பேசுவதுபோல படத்தில் காட்சியமைக்கப் பட்டிருக்கிறது.
பாக்கிஸ்தான் பிரிவினையை ஆதரித்து முதன்முதலில் புத்தகம் எழுதியவர் அம்பேத்கர்.
ஆனால், ஜின்னாவை சந்தித்து பாக்கிஸ்தான் பிரிவினைக்கு எதிராக அம்பேத்கர் பேசுவது போல சித்திரிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம்களுக்கும், சீக்கியர்களுக்கும் இருப்பது போல எங்களுக்கும் உரிமைகளைத் தாருங்கள் என்று ஒரு முன்னுதாரணத்தைச் சுட்டிக்காட்டி தலித்துகளுக்காக கோரிக்கை வைத்தவர் அம்பேத்கர். ஆனால், 'முஸ்லிம்களுக்கு மட்டும் சலுகை காட்டுகிறார்' என்று காந்தியை அம்பேத்கர் விமர்சிப்பது போல படத்தில் காட்சியமைக்கப் பட்டிருக்கிறது.
முஸ்லிம்கள் குறித்து அம்பேத்கருக்கு சில விமர்சனங்கள் இருந்தது உண்மை. ஆனால் அதை விமர்சனமாகப் பதிவு செய்யாமல், வரலாற்றுத் திரிபு செய்து அவரை முஸ்லிம் விரோதியாக சித்தரிக்கும் போக்கு இங்கே தொடர்கிறது.
அம்பேத்கர் படத்தில்தான் இப்படி என்றால்...சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த பெரியார் படத்திலும், அதற்கு முன்னர் வெளிவந்த காமராஜர் படத்திலும் கூட முஸ்லிம்களின் நிலை இருட்டடிப்பு செய்யப்பட்டே இருந்தது. காமராஜர் படத்தில் அவரது வாழ்க்கையில் நிகழ்ந்த எல்லா முக்கியச் சம்பவங்களும் மிக அழகாகத் தொகுக்கப்பட்டிருந்தன. காமராஜரின் எளிமையையும், மக்கள் நலன் சார்ந்த அவரது திட்டங்களையும், டெல்லி அரசியலில் அவர் செலுத்திய ஆளுமையையும், அவரது சமகாலத் தலைவர்களுடனான அவரது உறவையும் தெளிவாக படம்பிடித்திருந்தனர்.
ஆனால், காமராஜரின் அரசியல் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்திய குடியாத்தம் இடைத் தேர்தலில், முஸ்லிம் லீக்கின் ஆதரவுடன் அவர் வெற்றி பெற்றது குறித்து படத்தில் எந்தப் பதிவும் இல்லை. காங்கிரஸ் எதிர்ப்பு அரசியலைத் தீவிரமாக முன்னெடுத்தபோதும், காமராஜரின் வேண்டுகோளை ஏற்று முஸ்லிம் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் அவருக்கு ஆதரவாகத் திருப்பிய காயிதே மில்லத் பற்றி எந்தக் காட்சியும் இல்லை. 'வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் முஸ்லிம் வாக்குகள் கிடைக்காமல் போயிருந்தால் நான் தோற்றுப்போயிருப்பேன்' என்று காயிதே மில்லத்தின் கரம் பிடித்து காமராஜர் நன்றி கூறிய வரலாறு, அந்தப் படத்தில் இடம் பெறவே இல்லை.
கலைஞர் அரசின் மானியத்துடன், கி.வீரமணியின் திராவிடர் கழகத்தால் தயாரிக்கப்பட்ட 'பெரியார்' திரைப்படத்திலும் இந்த அவலம் தொடர்ந்தது.
திராவிட இயக்கத்திற்கும், தமிழக முஸ்லிம்களுக்குமான உறவை வார்த்தைகளில் விவரித்து விட முடியாது. பெரியாரின் பகுத்தறிவுப் பிரச்சாரமும் இஸ்லாமிய நேசமும் முஸ்லிம்களிடையே மிகப்பெரும் தாக்கத்தையே ஏற்படுத்தியிருந்தது. முஸ்லிம்களின் நிகழ்ச்சிகளிலும், மீலாது சொற்பொழிவு மேடைகளிலும் பெரியார் சிறப்பு அழைப்பாளரானார். அங்கே அவர் முஸ்லிம்களின் அரசியல் பாதுகாப்பு குறித்து முழங்கினார். அது குறித்து அவரது குடியரசு ஏட்டிலும் எழுதினார்.
பெரியார் வழிவந்த அண்ணாவும், கலைஞரும் முஸ்லிம்களுடனான உறவை வலுப்படுத்திக் கொண்டனர். நீடித்து நிலைத்த அந்த உறவு அரசியல் அரங்கில் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால், இவை பற்றியெல்லாம் விளக்குகின்ற ஒரு சிறு காட்சி கூட பெரியார் படத்தில் இல்லை.
'இன இழிவு நீங்க இஸ்லாமே அருமருந்து' என்று மேடைகள் தோறும் முழங்கினார் பெரியார். மதமாற்றத்தை ஆதரித்து தீவிர பிரச்சார இயக்கத்தை முன்னெடுத்தவர் பெரியார். மீலாது விழாக்களில் பங்கேற்று 'நபிகளாரின் சிந்தனைகளும், திராவிட இயக்க சிந்தனைகளும் ஒரே சிந்தனைகளே' என்று வெளிப்படையாக அறிவித்தவர் தந்தை பெரியார். அவரது இந்த முழக்கங்கள் மருந்துக்குக் கூட அந்தப் படத்தில் இடம் பெறவில்லை.
மிக முக்கியமாக , காயிதே மில்லத் உடனான பெரியாரின் உறவு முழுவதுமாக அப்படத்தில் இருட்டடிப்பு செய்யப்பட்டிருந்தது . காயிதே மில்லத் இறந்தபோது புதுக்கல்லூரியில் வைக்கப் பட்டிருந்த அவரது உடலைப் பார்க்க, முதிர்ந்த நிலையிலும் மூத்திரச் சட்டியைக் கையில் ஏந்தியவாறு ஓடோடி வந்தவர். 'தம்பி போயிட்டீங்களா' என்று குமுறிக் கொண்டே வந்த அவர், 'நான் போயி இவரு வாழ்ந்திருக்கக் கூடாதா' என்று குலுங்கினார். உணர்வுப் பூர்வமான அந்த உறவு குறித்து பெரியார் படத்தில் எந்தக் காட்சியும் இல்லை.
பெரியார் படத்தில் ராஜாஜி வருகிறார்; அண்ணா வருகிறார்; கலைஞர் வருகிறார்; வீரமணி வருகிறார்.
ஆனால் கடைசி வரை காயிதே மில்லத் வரவே இல்லை.
தலைவர்களை புதிய தலைமுறைக்கு நினைவூட்டும் வகையில் அரசு அஞ்சல் தலைகளை வெளியிடுகிறது. காமராஜர், பெரியார், அம்பேத்கர் ஆகிய தலைவர்களின் அஞ்சல் தலைகள் வெளியிடப் பட்டுள்ளன. காயிதே மில்லத்தின் அஞ்சல் தலையும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் காமராஜரின் வரலாறும், பெரியாரின் வரலாறும், அம்பேத்கரின் வரலாறும் திரைப்படங்களாக எடுக்கப்பட்டு விட்டன.
காட்சி வடிவில் பதிவு செய்யப்படாத, எஞ்சிய ஒரே ஆளுமை நம் காயிதே மில்லத் மட்டும் தான்.
அவர் அவரது சமகாலத் தலைவர்களைப் பற்றிய படத்திலும் இல்லை; அவரைப் பற்றிய படமும் இல்லை.
காட்சி ஊடகத்தை, குறிப்பாக சினிமாவை முஸ்லிம்களுக்கு எதிரான சக்திகள் கைப்பற்றி வைத்திருப்பதும், அத்துறை சார்ந்த புரிதல் முஸ்லிம்களிடம் இல்லாமல் போனதுமே இத்தகைய அவலத்திற்கு காரணம்.
காட்சி ஊடகத்தில் முஸ்லிம்கள் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியம் குறித்து நான் தொடர்ச்சியாக எழுதியும் பேசியும் வருகிறேன். சினிமாவின் அசுர பலத்தையும், பொதுச்சமூக மத்தியில் அது ஏற்படுத்துகின்ற தாக்கத்தையும், சினிமாவில் முஸ்லிம்கள் சித்தரிக்கப்படும் விதத்தையும், சினிமாத்துறை குறித்த முஸ்லிம்களின் சிந்தனைப் போக்கையும் பட்டியலிட்டு, அத்துறையில் பங்களிப்பு செலுத்த முஸ்லிம்கள் தயாராக வேண்டும் என்று நான் பேசுகிற போது எல்லோரும் என்னை ஏற இறங்கப் பார்க்கின்றனர்.
அப்படிப் பார்ப்பவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் என்னிடம் கேட்கிற ஒரே கேள்வி..'நாம் எப்படி சினிமா எடுக்க முடியும்?' என்பது தான்.
சினிமாவைப் புறக்கணிப்பதற்கு முஸ்லிம்கள் சொல்லும் முக்கியக் காரணம் 'அது ஒழுக்கக் கேடுகள் நிறைந்த சாக்கடை. அந்தச் சாக்கடையில் நாமும் சிக்கி விடக் கூடாதே' என்பதுதான். முஸ்லிம்களின் இந்த வாதம் பலவீனமான வாதமாகும்.
மீடியாக்களின் பிதாமகனாகவும், வெகுமக்களின் சுவாசமாகவும் விளங்குகின்ற சினிமாவை விட்டு நாம் விலகி நிற்கின்றோம் என்றால், நமது வரலாறுகளை; நமது பண்பாட்டுக் கூறுகளை; நமது கலைகளை; நமது பங்களிப்புகளை; பொதுச்சமூக மத்தியில் எடுத்துச் சொல்வதில் இருந்து நாம் விலகி நிற்கின்றோம் என்றுதான் பொருள். இதனால் இழப்பு யாருக்கு என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.
சினிமா ஹராமா, ஹலாலா என்னும் மனக்குழப்பம் இன்னும் இங்கே தீர்ந்தபாடில்லை. முஸ்லிம் அறிவு ஜீவிகள் மத்தியில் கூட இந்த நிலையே நீடிக்கிறது. முஸ்லிம்களை கொச்சைப் படுத்தி வெளிவரும் சினிமாக்கள் பற்றி விமர்சனக் கட்டுரை எழுதினால் கூட எங்கே 'சினிமா விமர்சனம்' என்று கூறி சலசலப்பு ஏற்பட்டு விடுமோ என்ற தயக்கம் முஸ்லிம் பத்திரிகைகள் மத்தியில் இன்னுமிருக்கிறது.
இதெல்லாம் அறியாமையின் வெளிப்பாடே தவிர வேறில்லை.
சினிமா ஒரு சக்தி வாய்ந்த ஊடகம். அது ஒரு ஆயுதம். அது மனித அறிவின், ஆற்றலின் அழகிய வெளிப்பாடு. அப்படிப்பட்ட சினிமா எப்படி ஹராமாக இருக்க முடியும்? நிச்சயமாக இங்கே சினிமா ஹராமானதல்ல. சினிமாவில் காட்டப்படுவது வேண்டுமெனில் ஹராமாக இருக்கிறது என்று சொல்லலாம்.
தவறானவர்களின் கையில் ஒரு சரியான பொருள் சிக்கியிருக்கிறது என்றால், அதை மீட்டு சரியான வகையில் பயன்படுத்த வேண்டும். அதுதான் தர்மம். அந்த தர்மத்திலிருந்து முஸ்லிம்கள் ஏன் விலகி நிற்கின்றார்கள்?
சினிமா என்னும் ஊடகத்தை முஸ்லிம்கள் புறக்கணித்துக் கொண்டிருப்பதால் ஏற்படும் இழப்புகள் அளவிட முடியாதவை. கமலஹாசன் நடித்து கடந்த ஆண்டு வெளிவந்த 'உன்னைப் போல் ஒருவன்' திரைப்படம், முஸ்லிம்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்திய படமாகும். முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகக் காட்டி, அவர்களுக்கு விசாரணைகள் அற்ற கொடூரமான தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்னும் கருத்தை வலியுறுத்திய படம்.
அந்தப் படம் வெளியானவுடன் கமலுக்கு எதிரான விமர்சன அம்புகள் புயலாய்ப் புறப்பட்டன.
பகுத்தறிவுவாதியான கமல்; முஸ்லிம்களின் தோழனாக தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் கமல்; சமரசமற்ற கலைஞனாக தன்னை முன்னிறுத்தும் கமல், இப்படியொரு அநீதியைச் செய்யலாமா? எனும் கேள்விகள் வெடித்துக் கிளம்பின.
முஸ்லிம்களை கொச்சைப்படுத்தி எடுக்கப்படும் சினிமாக்களில் 'உன்னைப் போல் ஒருவனும்' ஒன்றே தவிர அதுவே தொடக்கம் அல்ல. மணிரத்னம் 'ரோஜா' எடுத்த போதும், பின்னர் அது 'பம்பாய்' என்று பரிணாமம் பெற்ற போதும், விஜயகாந்தின் படங்கள் முஸ்லிம்களைக் குறி வைத்துக் குதறிய போதும், அர்ஜுனின் படங்கள் முஸ்லிம்கள் மீது வெறுப்பை உமிழ்ந்த போதும் முஸ்லிம்களிடமிருந்து உணர்ச்சி அலைகள் பொங்கி எழுந்திருக்கின்றன. முஸ்லிம்களைக் கேவலப்படுத்தி படங்கள் வெளிவருவதும், அவற்றுக்கு முஸ்லிம்கள் எதிர்வினை யாற்றுவதும் வழமையான ஒன்றாகிவிட்டது.
சினிமா ஒரு வலிமையான ஆயுதம் என்பது புரிகிறது. அந்த சினிமாவில் தம்மை கொச்சைப் படுத்துகின்றனர் என்பதும் தெரிகிறது. அப்படி கொச்சைப் படுத்துவதன் மூலம் வெகுமக்களிடமிருந்து தம்மை அன்னியப் படுத்தும் சதியும் கண் முன்னே விரிகிறது. அப்படியிருந்தும் முஸ்லிம்கள் ஏன் சினிமாவைப் பற்றி சிந்திக்கும் மனநிலைக்குக் கூட இதுவரை வரவில்லை?
'உன்னைப் போல் ஒருவன்' வெளியான போது கமலஹாசனை சந்தித்த சில முஸ்லிம் நண்பர்கள், படம் குறித்த தங்களின் விமர்சனங்களை அவரிடம் எடுத்துரைத்தனர். கமல் உடனான அந்தச் சந்திப்புக்கு இயக்குநர் அமீர் ஏற்பாடு செய்திருந்தார். இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில், கமலைச் சந்தித்து முறையிடக் கூடிய அந்த வாய்ப்பு கூட சினிமாவில் அமீர் என்று ஒருவர் இருப்பதனால் தான் சாத்தியமானது. அமீரும் இல்லையெனில், கமலைக் கண்டித்து போஸ்டர் ஒட்டுவதோடு நம் கடமை முடிந்து போயிருக்கும்.
பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட போது நரசிம்மராவைச் சந்தித்து அவரைக் கேள்விக் கணைகளால் துளைத்தவர் கமல். மணிரத்னம் 'ரோஜா, பம்பாய்' என்று படமெடுத்தபோது முஸ்லிம்களின் பக்கம் நின்றவர் கமல். அப்படிப்பட்ட கமல்தான் காலச் சுழற்சியில் மணிரத்னத்தை விட மோசமானவராக மாறி, உன்னைப் போல் ஒருவனை எடுத்து முஸ்லிம்களை குதறினார்.
'முஸ்லிம்களுக்கு ஆதரவான குரல்' என்று யாரை நினைத்தோமோ, அந்தக் குரல்களே நம் குரல்வளையை நெறிக்கிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை. இனி, எந்தக் களத்திலும் யாரை நம்பியும் பயனில்லை என்பதை காலம் 'துறை வாரியாக' நமக்கு உணர்த்திக்கொண்டிருக்கிறது. படிப்பினை பெறவும், மீள எழவும், இனியும் நாம் தவறினால் அதை விட அவலம் வேறு இருக்க முடியாது.
சினிமாவில் நமக்காக யாரும் பேசாதபோது, பேசுகிற ஒரு சிலரும் மோசமானவர்களாக மாறி நம்மை வஞ்சிக்கிறபோது, நமக்கான குரலாக நாம்தான் ஒலிக்க வேண்டும். காலம் கடத்தாமல் சினிமா குறித்து முஸ்லிம்கள் பரிசீலனை செய்ய வேண்டும் என்பதே இக்கட்டுரையின் பிரதான நோக்கம்.
சுமார் மூன்று மணி நேரம் தமது எல்லா அலுவல்களையும் ஒதுக்கிவைத்து விட்டு, செல்போனைக் கூட செயலிழக்கச் செய்துவிட்டு, கவனம் முழுவதையும் ஒருமுகப்படுத்தி, சுற்றத்தோடும் நட்போடும் அலையலையாய் மக்களைத் திரையரங்குகள் நோக்கி அணிதிரள வைக்கும் வல்லமை வேறு எந்த ஊடகத்திற்கும் கிடையாது. பூட்டிய இருட்டு அரங்கத்திற்குள் விரியும் வெண்திரையில் என்ன காட்டப் படுகிறதோ அதுதான் செய்தி; அதுதான் சமூக நியதி என்றாகிவிட்டது.
வடிவேலு எனும் நகைச்சுவை நடிகர், திரையில் வாய்திறந்து சொல்வதெல்லாம் தமிழ்நாட்டு மக்களின் பேச்சு வழக்காக மாறிப்போகின்ற அதிசயம் நிகழ்ந்து வருவதை நாம் அனுபவ ரீதியாக கண்டு வருகிறோம். நம் வீட்டு பிஞ்சுக் குழந்தைகள்கூட வடிவேலுவின் டயலாக்குகளைப் பேசி மகிழ்கின்றன. தீவிர மார்க்கப் பற்றுள்ள மூத்த ஆலிம் ஒருவருடன் ஒருமுறை பேசிக் கொண்டிருந்த போது, 'ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ' என்று பேச்சு வாக்கில் சொல்லிச் சிரித்தார். 'எவ்ளோ அடிச்சாலும் தாங்குறாண்டா.. இவன் ரொம்ப நல்லவன்டா' என்று பள்ளிவாசல் வராந்தாவில் நின்று கொண்டு இளைஞர்கள் ஒருவரையொருவர் கலாய்க்கின்றனர். இதையெல்லாம் நாம் எப்படி எடுத்துக்கொள்வது? பள்ளிவாசல் வராந்தா வரையிலும் வடிவேலுவைக் கொண்டு வந்துவிட்டது எது என்பதை ஆராய்ந்தால் சினிமா எத்தகைய சக்திமிக்க ஆயுதம் என்பது புலப்படும்.
''திரைப்படத்தின் முன்னேற்றம் பிரதி தினம், வாரமென்று நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.ஒரு திரைப்படத்தை லட்சக்கணக்கானோர் பார்க்கிறார்கள். வேறு எந்தக் கலைக்குமே இந்த அளவிலான பரந்து பட்ட வெளிப்பாட்டிற்கான சாத்தியப்பாடுகள் இல்லை. இது திரைப்படத்திற்கேயான மிகப்பெரிய சாதகமான அம்சமும், அனுக்கிரகமுமாகும்'' என்கிறார், உலகப் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர்
அடூர் கோபால கிருஷ்ணன்.
Adoor Gopalakrishnan
''இந்தியாவிலேயே அதிகமாக திரை அரங்குகள் இருக்கின்ற மாநிலம் தமிழ்நாடு. அதிகமான சினிமா பார்ப்பவர்கள் தமிழ்நாட்டு மக்கள்'' என்கிறார் திரைப்பட ஆய்வாளர் தியடோர் பாஸ்கரன்.
''தமிழகத்தில் தொழிற்சாலைகளைவிட திரைஅரங்குகள் தான் அதிகம் உள்ளன. இந்தியாவின் மொத்த திரைஅரங்குகளில் சுமார் 25 % க்கும் மேலான அரங்குகள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. ஒரு திரையரங்கம் ஒரு நாளைக்கு 12 மணி நேரத்தை எடுத்துக் கொள்கிறது. ஒரு திரைஅரங்கில் நான்கு காட்சிகளில் சுமார் 3000 பேர் தங்கள் பொழுதை செலவிடுகின்றனர்'' என்கின்றன புள்ளிவிபர ஆய்வுகள்.
திரை அரங்கிற்கு உள்ளே மட்டுமின்றி திரை அரங்கிற்கு வெளியேயும் சினிமாவின் ஆதிக்கமே நிலவுகிறது. செய்தி ஊடகங்கள் அனைத்தும் சினிமாவை மைய்யப்படுத்தியே இயங்குகின்றன. எந்தப் பத்திரிகையைப் படித்தாலும், எந்தத் தொலைக்காட்சியைப் பார்த்தாலும் சினிமா,சினிமா,சினிமாவே தான். நடிகர் நடிகைகளின் பேட்டிகள், இயக்குனரின் அனுபவங்கள், இசை வெளியீட்டு நிகழ்வுகள், விருது வழங்கும் விழாக்கள், பாடல்கள், காமெடிகள், திரை விமர்சனங்கள், நட்சத்திரங்களின் வீட்டு விஷேசங்கள், திரைக் கலைஞர்களின் அரசியல் நடவடிக்கைகள் என சினிமாவைச் சுற்றியே இன்றைய மின்னணு மற்றும் அச்சு ஊடகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டை ஆட்சி செய்யும் தலைமைப் பொறுப்புக்கு வரவேண்டுமெனில் திரைத்துறையில் நல்ல அனுபவமும், அங்கீகாரமும் இருந்தால் போதும் என்பதுதான் தம்மை ஆள்பவர்களுக்கு தமிழக மக்கள் நிர்ணயித்து வைத்திருக்கும் ஒரே தகுதி.
தமிழகத்தில் எம்.ஜி.ஆருக்குத்தான் பெரும் அளவில் ரசிகர் மன்றங்கள் திறக்கப்பட்டன. பின்னர் அது அரசியல் சக்தியாக வடிவம் பெற்றது. கடந்த நாற்பது ஆண்டுகளாக தமிழகத்தில் முதலமைச்சர்களாக சினிமாக்காரர்களே வர முடிகிறது. தேர்தல் வெற்றிக்கு நடிகர்களின் ஆதரவு தேவைப் படுகிறது.
ஆட்சியையே பிடிக்க உதவும் ஆயுதம் சினிமா என்றால், அதன் அசுர பலத்தை அளவிட வேறு உதாரணங்கள் தேவையில்லை. அத்தகைய சக்தி வாய்ந்த ஊடகமான சினிமாவில் தமிழக முஸ்லிம்களின் நிலை என்ன என்பது ஆய்வுக்குரிய விசயம்.
Aloor Shanavas with 'Kalaimamani' SM.Umar
தமிழ் சினிமா நடிகர்களை வியட்நாம் மொழி பேசவைத்த அதிசய மனிதர் கலைமாமணி எஸ்.எம். உமர் அவர்களில் தொடங்கி, பருத்திவீரன் மூலம் தமிழ் சினிமா உலகத்தையே தன் பக்கம் திருப்பிய இயக்குநர் அமீர் வரை, ஏராளமான முஸ்லிம்கள் சினிமாவில் ஆளுமை செலுத்துகின்றனர். ஆனால், உமரைப் போலவும் அமீரைப் போலவும் வெளிப்படையாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டவர்கள் வெகு சிலரே.
Aloor Shanavas with Director Ameer
இவர்களைத் தவிர, தமது அடையாளத்தை வெளிக்காட்டுவதற்கு கூட அஞ்சி பெயரை மாற்றிக்கொண்டு இயங்கும் முஸ்லிம்கள் பல நூறுபேர் இருக்கிறார்கள். தங்களின் உண்மையான பெயரைச் சொல்லக் கூட தயங்குபவர்கள் எப்படி கருத்தியல் ரீதியாக முஸ்லிம்களின் குரலாக ஒலிப்பார்கள்? அப்படிப்பட்டவர்கள் சினிமாவில் எத்தனை ஆயிரம் பேர் இருந்தாலும் அதனால் சமூகத்திற்கு துளியும் பயனில்லை.
முஸ்லிம் சமூகத்தின் அசலான முகத்தைப் புரிந்தவர்களை, திரைமொழி அறிந்தவர்களாக மாற்றும் போதுதான் நம்மைப் பற்றிய சினிமாவின் தவறான சித்தரிப்புகளை உடைத்தெறிய முடியும்.
சினிமா என்றாலே நடிகையைக் கட்டிப்பிடித்து குத்தாட்டம் போடுவது; குடித்து விட்டு அடிதடி செய்வது என்றே நாம் கருதுகிறோம். நாம் பார்கின்ற; நமது சூழலில் வெளிவருகின்ற சினிமாக்களை வைத்து இத்தகைய முடிவுக்கு நாம் வருகின்றோம். ஒருவகையில் இதுவும் பிழையான பார்வையே. உலகைக் கலக்கிய உன்னத சினிமாக்களைப் பற்றிய ஆழமான புரிதலும் விசாலமான பார்வையும், அவை பற்றிய குறைந்தபட்ச அறிமுகமும்கூட நமக்கு இல்லாததால் ஏற்பட்ட விளைவு இது.
இன்று உலகம் முழுவதும் பேசப்படுகின்ற ஈரானிய சினிமாக்கள் நமக்கு வழிகாட்டியாய் இருக்கின்றன. ஈரானில் கேமரா என்னும் கருவியைத் தூக்கிக்கொண்டு ஈரானியப் பெண்கள் சினிமாக்களை எடுக்கின்றனர். தமது படங்களின் மூலம் ஏகாதிபத்தியத்திற்கும், உலகமயத்திற்கும் எதிராகப் போர் தொடுக்கின்றனர். உலகப்பட விழாக்களில் ஈரானியப் படங்கள் மிக எளிதாக விருதுகளை குவித்து வருகின்றன. ஈரானிய சினிமா என்றாலே இப்போது கலைஉலகம் சற்று மிரட்சியோடுதான் பார்க்கிறது.
Iranian Film Makers
யதார்த்தமான வாழ்க்கையை, ஏழையின் வலியை, காதலின் ஆழத்தை, குழந்தையின் கனவை, முதலாளித்துவத்தின் ஆதிக்கத்தை, ஏகாதிபத்தியத்தின் கொடூரத்தை என ஒவ்வொன்றையும் கலைப் பூர்வமாக உலகின் முன்னால் விரிக்கும் ஈரானியர்கள் மீது இன்று உலகின் கவனம் திரும்பியிருக்கிறது.
ஈரானியர்களுக்கு சாத்தியமானது, நமக்கு சாத்தியமாகாதா?
இந்துமதக் கோட்பாடுகளை மைய்யப் படுத்திய பக்திப்படங்களும், மூட நம்பிக்கைகளை விதைக்கும் புராணப் படங்களுமே தமிழ் சினிமா என்றிருந்த நிலையில், பகுத்தறிவுக் கருத்துக்களை விதைத்து தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றினார்கள் எம்.ஆர்.ராதாவும், என்.எஸ்.கிரிஷ்ணனும்.
வேதமந்திரங்கள் முழங்கிய தமிழ்த்திரையில் தங்களின் கூர்மையான எழுத்துக்களின் மூலம் மிகப்பெரும் வசனப்புரட்சிக்கு வித்திட்டனர் அண்ணாவும், கலைஞரும். திராவிட இயக்க கருத்துக்களைப் புகுத்தி, திரைத்துறையில் பலமிக்க சக்தியாக பரிணாமம் பெற்று, அதன்மூலம் தமிழகத்தின் ஆட்சியையே பிடிக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர்கள் அவர்கள்.
அண்ணாவுக்கும், கலைஞருக்கும் சாத்தியமானது, நமக்கு சாத்தியமாகாதா?
இயற்கை, ஈ, பேராண்மை போன்ற படங்களைத் தந்து, தமிழ் சினிமாவின் தனிப்பெரும் கலைஞனாக உயர்ந்து நிற்கின்றார் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன். 'இயற்கை' திரைப்படம் வர்க்க முரண்பாடுகளைப் பற்றி பேசுகிறது. 'ஈ' திரைப்படம் உயிரைக்காக்கும் மருத்துவத் துறையில் நடைபெறும் ஊழல்கள் பற்றியும், பன்னாட்டுக் கம்பெனிகள் இந்தியா போன்ற வளரும் நாடுகளை சோதனைக்களமாக பயன்படுத்தி வருவது பற்றியும், அவர்களின் சோதனை எலிகளாக இங்குள்ள தலித்துகளும், முஸ்லிம்களும் குறிவைக்கப்படுவது பற்றியும் பேசுகிறது.
'பேராண்மை' திரைப்படம் இட ஒதுக்கீட்டின் அவசியம் குறித்தும், முதலாளித்துவ நாடுகளின் தாக்குதல்களிலிருந்து இந்தியாவை காக்கப் போராடும் ஒடுக்கப்பட்ட சமூக இளைஞர்களின் அர்ப்பணிப்பையும் பேசுகிறது. இப்படி ஜனநாதனின் ஒவ்வொரு படங்களும் வெவ்வேறு கருத்தியலின் அடிப்படையில் கட்டப்பட்டுள்ளன. அவர் எடுத்த மூன்று படங்களுமே முத்திரை பதித்தன. 'இயற்கை' என்கிற அவரது முதல் படமே தேசிய விருதைப் பெற்றது.
Director S.P.Jananathan
ஜனநாதன், பெரியாரிய மார்க்சிய கொள்கைகளால் ஈர்க்கப் பட்டவர். இடதுசாரி சிந்தனையாளர்.
ஏகாதிபத்திய மற்றும் இந்துத்துவ பாசிச எதிர்ப்பாளர். அவர் கூறுகிறார்...''நான் எந்தக் கருத்துக்களால் ஈர்க்கப் பட்டேனோ, அதைப் படத்தில் நேரடியாகக் கையாண்டிருக்கிறேன். சமூகத்தில் அதிகமாக ஒடுக்கப்பட்ட ஓர் இளைஞனை படத்தில் நாயகனாக வைத்திருந்தேன்.'பேராண்மை' படம் என்ன சாதித்தது என்றால், தமிழ்நாடு முழுவதும் 220 தியேட்டர்களில் தொடர்ந்து நான்கு காட்சிகளாக நன்றாக ஓடியிருக்கிறது. இதன் மூலம் ஒரு நாளைக்கு நான்கு முறை பொதுவுடைமை அரசியலை மக்களிடம் கொண்டுபோய் சேர்த்திருக்கிறேன்'' என்கிறார்.
மார்க்சியக் கருத்துக்களை எடுத்தியம்பும் களமாக சினிமாவை மாற்ற முடியும் என்பதை ஜனநாதன் நிரூபித்திருக்கிறார். மக்களுக்கான சினிமாவை முன்னெடுக்கும் முயற்சியில் அவர் வெற்றியும் பெற்றிருக்கிறார். ஜனநாதனுக்கு சாத்தியமானது, நமக்கு சாத்தியமாகாதா?
'அங்காடித் தெரு' என்றொரு படம். தி.நகர் ரங்கநாதன் தெருவிலுள்ள பிரம்மாண்டமான துணிக்கடைகளில் உடலுழைப்பைச் செலுத்தி வெந்து போகும் அடித்தட்டு இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களைப் பற்றிய அற்புதமான சித்திரம். ஒடுக்கப்பட்ட சமூகத்தை சார்ந்த இளைஞர்கள் குடும்ப வறுமையினால் துரத்தியடிக்கப்பட்டு, தி.நகர் துணிக்கடைகளில் துயரப்படும் அவலங்களைத் துல்லியமாகப் பதிவு செய்திருந்தது, அந்தப் படம்.
'அங்காடித் தெரு'வில் சில்க் ஸ்மிதாவின் கவர்ச்சி இல்லை. நமீதாவின் குத்தாட்டம் இல்லை. ஆபாசமான பாடல் வரிகள் இல்லை. முஸ்லிம் தீவிரவாதிகள் இல்லை. கிறிஸ்தவ வில்லன்களும் இல்லை. வழக்கமான தமிழ் சினிமாவின் கூறுகளை உடைத்தெறிந்துவிட்டு ஒடுக்கப்பட்டோரின் வாழ்வியலைப் படம்பிடித்திருந்தார் இயக்குநர் வசந்த பாலன்.
எந்தப் பத்திரிகைகள் மோசமானப் படங்களைத் தூக்கிக் கொண்டாடுகின்றனவோ; எந்தத் தொலைக்காட்சிகள் ஆபாசமான சினிமாக்களை ஆராதிக்கின்றனவோ; எந்த மக்கள் கேவலமான சினிமாக்களின் ரசிகர்களாக இருக்கின்றார்களோ; அந்தப் பத்திரிகைகள் தான் அங்காடித் தெருவை கொண்டாடின. அந்தத் தொலைக்காட்சிகள் தான் அங்காடித் தெருவை ஆராதித்தன.
அந்த மக்கள் தான் நூறு நாட்களைத் தாண்டி ஓட வைத்து, அங்காடித் தெருவை வெற்றிப் படமாக்கினர்.
வசந்த பாலனுக்கு சாத்தியமானது நமக்கு சாத்தியமாகாதா?
ராமன் என்னும் ஒரு புராணப்பாத்திரத்தை கதை நாயகனாக்கி, 'ராமாயணத்தை' இந்துத்துவ சக்திகள் படமாக்கியிருக்கின்றனர். அதை தொலைக்காட்சிகளில் தொடராக வெளியிடுகின்றனர்.
வரலாற்றுச் சான்றுகள் இல்லாத; வாழ்ந்ததற்கான சுவடுகளே இல்லாத; காட்சிப்பதிவுக்கான கூறுகள் அற்ற;
நடைமுறை வாழ்க்கைக்கு எந்த வகையிலும் பொருத்தமில்லாத; பகுத்தறிவுக்குப் பொருந்தாத வெற்றுக் கற்பனைப் பாத்திரத்தையே படம்பிடிக்க முடியுமென்றால், வரலாற்று நாயகனாய் வாழ்ந்து மறைந்த பாபரை ஏன் படம் பிடிக்க முடியாது? 'பாபர் நாமா'வை ஏன் சினிமாவாக்க முடியாது? நமக்கா கதைக்குப் பஞ்சம்?
செழுமையான வரலாற்றுப் பின்னணி கொண்ட; வீரமும் தியாகமும் நிறைந்த பாரம்பரியத்தை உடைய; அளப்பெரும் பங்களிப்புகளை உலகிற்கு அள்ளித்தந்த; இழப்புகளுக்கும் இடர்களுக்கும் இலக்காகி, துடிக்கிற நம்மிடமா கதைக்குப் பஞ்சம்?
நாடறிந்த பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன், முஸ்லிம் பக்கீர்களின் வாழ்வியலை அழகாக ஆய்வு செய்துள்ளார். அவரது ஆய்வை அடிப்படையாகக் கொண்டு பக்கீர்களின் வாழ்க்கையிலிருந்து நாம் ஏன் ஒரு திரைக் கதையை தேர்வு செய்யக்கூடாது?
இயக்குநர் ஷங்கரின் படங்கள் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளையும், அவர்களைப் பழிதீர்க்கும் ஹீரோயிசத்தையும் காட்சிப் படுத்துகின்றது. ஷங்கர் தனது படங்களில் சொன்ன விசயத்தையே திரும்பத் திரும்பச் சொன்னாலும், அவர் கதையை நகர்த்தும் தன்மையிலும் காட்சியமைக்கும் உத்தியிலும் மக்களை வெகுவாக ஈர்க்கிறார். ஊழலைப் பற்றியும், லஞ்சத்தைப் பற்றியும், ஆக்கிரமிப்பைப் பற்றியும் படமெடுப்பதற்கு ஷங்கர் தேர்வு செய்யும் கதைக் களங்களை விட, நம்மிடம் மிக வலுவான கதைக்களம் இருக்கிறது.
வக்பு நிலங்கள் கபளீகரம் செய்யப்படுவது பற்றியும், அதை அபகரித்து வைத்துள்ள அதிகாரவர்க்கம் பற்றியும், வக்பு அதிகாரிகளிடம் புரையோடிப் போயுள்ள லஞ்சம் பற்றியும் எத்தனை விறுவிறுப்பான திரைக்கதையை அமைக்க முடியும்!
விசாரணைக் கைதிகளாக சிறையிலடைக்கப்பட்டு, இளமை முழுவதையும் சிறையில் இழந்து, குற்றமற்றவர்களாக விடுவிக்கப்பட்ட , இன்னும் விடுவிக்கப்படாமல் சிறையில் வாடுகிற பல நூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லிம் இளைஞர்களின் துயரம் மிகுந்த வாழ்க்கையையும்,
அவர்களின் துடிப்பான இளமையை சூறையாடிய இந்துத்துவ அரசியலையும், அவர்களின் குடும்பங்களின் துயர அவஸ்தைகளையும், பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் விசயத்தில் அரசுகள் நடந்துகொள்ளும் பாரபட்சத்தையும் மைய்யப்படுத்தி, திரைக்கதை எழுதத் தொடங்கினால்...மக்களை உலுக்கியெடுக்கும் பல நூறு சினிமாக்களை நம்மாலும் படைக்க முடியும்.
மேலப்பாளையத்தில் பீடி சுற்றும் முஸ்லிம்களின் வாழ்வியலையும்; வட மாவட்டங்களில் தோல் தொழிற்சாலைகளில் வியர்வை சிந்தும் முஸ்லிம்களின் வறுமையையும்; சென்னையில் சேரிகளில் வசிக்கும் அடித்தட்டு முஸ்லிம்களின் அவலங்களையும்; 'முஸ்லிம்' என்ற ஒரே காரணத்திற்காகவே வாடகை வீடு கிடைக்காமல் பெருநகர வீதிகளில் அல்லல்படுபவர்களின் துயரத்தையும்;
தகுதியிருந்தும், திறமையிருந்தும் முஸ்லிம் பெயர் இருப்பதனாலேயே வேலை கிடைக்காமல் பன்னாட்டு, இந்நாட்டு கம்பெனிகளால் நிராகரிக்கப்படும் முஸ்லிம் இளைஞர்களின் வேதனையையும் என்று... நாம் படம் பிடிப்பதற்கு அடுக்கடுக்கான கதைக் களங்கள்; ஆயிரமாயிரம் கண்ணீர் கதைகள் உள்ளன.
தமிழ் சினிமாவில் காட்டப்படும் முஸ்லிம்கள் வந்தேறிகளாகவே உள்ளனர். முஸ்லிம்கள் இந்த மண்ணின் மைந்தர்கள் அல்ல எனும் விஷமக் கருத்தை நேரடியாகவும், மறைமுகமாகவும் நிறுவுகின்ற வகையில் தொடர்ச்சியாக காட்சிகள் அமைக்கப்படுகின்றன.
தமிழ் சினிமாவில் தோன்றும் முஸ்லிம்கள் தமிழுக்கு அறவே தொடர்பில்லாதவர்களாக சித்தரிக்கப் படுகின்றனர். கழுத்தில் தாயத்தும், தலையில் தொப்பியும், லுங்கியும் அணிந்து, கையில் கத்தியுடன் கசாப்புக் கடைகாரனாகவோ, பச்சைத் தலைப்பாகையுடனும் விகாரமான தோற்றத்துடனும் சாம்பிராணி போடுபவராகவோ காட்சியளிக்கும் முஸ்லிம் 'ஹரே பாய்..நம்பல் கீ' என்றுதான் பேசுகிறார்.
இதுதானா தமிழ் முஸ்லிம்களின் அடையாளம்? இதுவா நமது கலாச்சாரம்? 'நாம் இன்னும் பதிவு செய்யப்படாத சமூகம்' என்று இயக்குநர் அமீர் குறிப்பிட்டதை நாம் என்று உணரப்போகிறோம்.ஆனால், தமிழுக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் முஸ்லிம்கள் ஆற்றிய அரும்பணி பற்றியும், நடைமுறை வாழ்வில் கூட தமிழை வாழவைத்துக் கொண்டிருக்கும் முஸ்லிம்கள் குறித்தும் யார் படமெடுப்பது?
'சாதம்' என்று உயர் சாதியினர் பேசுவது போல் அல்லாமல் 'சோறு' என்று நல்ல தமிழில் உச்சரிப்பவர்கள் முஸ்லிம்கள். குழம்பை 'ஆணம்' என்றும் பழையதை 'நீர்ச்சோறு' என்றும் தூய தமிழில் பேசுபவர்கள் முஸ்லிம்கள். சாப்பிட்டாயா என கேட்காமல் 'பசியாறினாயா' என்று கேட்பவர்கள் முஸ்லிம்கள்.
பூஜை புனஸ்காரங்கள் என்று சொல்லாமல் 'தொழுகை' என்று அழகுத் தமிழில் அழைப்பவர்கள் அல்லவா முஸ்லிம்கள். இன்னும் எத்தனை எத்தனை தகவல்கள்? இந்த உண்மைகளை யார் பதிவு செய்வது?
நாம்தானே செய்ய வேண்டும். நமக்குத்தான் நம் வாழ்வியலின் ஆழ அகலம் தெரியும்; வலியும் வேதனையும் புரியும். நமது கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியத்தின் வலிமை தெரியும்.
திரைமொழியைக் கற்றுக் கொண்டால்தான் அதை நம்மால் சாத்தியப்படுத்த முடியும்.
கேரளாவில் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி, அரச பயங்கரவாதத்தினால் தொடர்ச்சியாக வேட்டையாடப்பட்டு வருவதை உலகமே அறியும். அவர் குற்றமற்றவர் என்பதும், அரசியல் சூழ்ச்சிக்கு இரையாகியிருப்பவர் என்பதும் எல்லோரும் அறிந்த ஒன்று. குறிப்பாக, அனாதைக் குழந்தைகளுக்கு மறுவாழ்வு கொடுப்பதற்காக அன்வாருல் உலூம் என்ற பெயரில், 'அன்வார்சேரி' எனும் ஊரில் மிகப்பெரும் கல்விச்சாலையை நிறுவிய மனிதநேயர் அவர் என்பது, கேரள மக்கள் அனைவருக்கும் நன்றாகவே தெரியும்.
ஆனால், அதே கேரளாவில்தான் அண்மையில் நடிகர் பிருத்விராஜ் நடித்த 'அன்வர்' என்ற திரைப்படம் வெளியாகி, கேரள முஸ்லிம்களை தீவிரவாதியாகச் சித்தரிக்கும் வேலையை மிகக் கூர்மையாக செய்து முடித்திருக்கிறது.
'அன்வர்' என்ற படத் தலைப்பு, மதானியின் கலாசாலையான அன்வாருல் உலூமை குறிக்கும் வகையில் வைக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
இத்தனை மோசமான சித்தரிப்புகளுக்குப் பிறகும் நாம் சினிமாவை மீளாய்வு செய்யாமல் பொத்தாம் பொதுவாக, 'ஹராம்' என்று ஒதுக்கி வைத்தால் மீள முடியாத இழப்புகளுக்கு நாம் ஆளாகுவோம்.
எப்படி ஒரு காலத்தில் நாம் தொலைக்காட்சியை 'ஹராம்' என்று சொல்லி ஒதுக்கி வைத்துவிட்டு,
பின்னர் உலக அளவில் இஸ்லாமிய அறிஞர்கள் தொலைக்காட்சி மூலம் கருத்துருவாக்கம் செய்யத் தொடங்கிய பின்னர், தாமதமாகப் புரிந்து கொண்டு தொலைக்காட்சியைப் பயன்படுத்தத் தொடங்கினோமோ, அதேதான் இப்போது சினிமா விசயத்திலும் நமது நிலைப்பாடு.
இன்னும் கொஞ்ச காலத்தில் சினிமா இல்லாமல் எதுவுமே இல்லை என்ற சூழல் வந்த பிறகு, இப்போதே வந்து விட்டது. வேறு வழியே இல்லாமல் அதை எப்படி பயன்படுத்துவது என்று நாம் பரிசீலனையில் இறங்குவோம்; சோதனை முயற்சிகளில் ஈடு படுவோம். அப்போது சினிமா எங்கேயோ போயிருக்கும். அதன் தொழில்நுட்பம் கட்டற்ற வளர்ச்சியை அடைந்திருக்கும்.
அதன் எந்த அம்சத்தையும் நாம் விளங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு பரிணாமம் பெற்று நாம் தொடவே முடியாத உயரத்தில் நிற்கும். அப்போதுதான் நாம் சினிமா பற்றி 'ஏபிசிடி' கற்கத் தொடங்குவோம். அதுதானே நமது வழக்கம். தொலைக்காட்சி விசயத்தில் அதுதானே நடந்தது.
'கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்' என்பது போல், தொலைக்காட்சியை காலம் தாழ்த்திப் பயன்படுத்தத் தொடங்கியதால் தானே அதன் வளர்ச்சிக்கு நம்மால் இன்றைக்கு வரை ஈடுகொடுக்க முடியவில்லை. தொலைக்காட்சியின் தொழில்நுட்ப மொழி புரியாமல் அதில் நாம் அடித்து வரும் கூத்துக்கள் பற்றி நான் பலமுறை விரிவாக எழுதியுள்ளேன்.
எல்லா தொழில்நுட்பங்களையும், அறிவியல் வளர்ச்சியையும் 'ஹராம்! ஹராம்!' என்று சகட்டு மேனிக்கு ஒதுக்கித் தள்ளியதால் ஏற்பட்ட இழப்புகளை நாம் இன்று வரை அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். தொழில்நுட்பங்களைப் புறந்தள்ளத் தொடங்கிய நாள் முதல் நாம் வலிமை இழக்கத் தொடங்கினோம்.
நம்முடைய சாம்ராஜ்ஜியங்களை இழந்தோம்; நம்முடைய பேரரசுகள் வீழ்ந்தன; நம்முடைய நிலப்பரப்புகள் எளிதில் எதிரிகளின் சூறையாடலுக்கு இலக்காகின; நம்முடைய வளங்கள் கொள்ளையடிக்கப் பட்டன; நமது கடந்தகால வரலாறுகள் திரிக்கப்பட்டன; நம்முடைய ஆவணங்களும், அருங்காட்சியகங்களும் அழிக்கப்பட்டன; நம்முடைய வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்பட்டன; ஆதிக்க சக்திகளிடம் கை கட்டி நிற்க வேண்டிய நிலைக்கு நாம் ஆளானோம்; வீரம் செறிந்த ஆளுமைகள் வீழ்த்தப்பட்டு போலிகளும், பொம்மைகளும், கைப்பாவைகளும் அதிகாரத்தில் அமர்த்தப் பட்டார்கள்.
அறிவியலையும், வரலாற்றையும், தொழில்நுட்பத்தையும், நவீன உத்திகளையும் நாம் கையாண்ட காலம் வரை நாம் தான் உயர்ந்து நின்றோம். நாம்தான் மதிக்கப்பட்டோம், நாம் தான் முன்மாதிரியாக இருந்தோம். அந்த வரலாறுகளை நாம் மறுவாசிப்பு செய்ய வேண்டிய நேரம் இது.
நடிகையின் கவர்ச்சிப் படங்களுடன் வெளிவருவதனாலேயே, நாம் நாளிதழ்கள், வார இதழ்களைப் புறக்கணிப்பதில்லை.
எல்லா சீரழிவுகளையும் ஒன்று திரட்டித் தருவதனாலேயே, நாம் இணைய தளத்தை நிராகரிப்பதில்லை.
முறைகேடான உறவு முறைகளை போதிக்கும் தொடர்கள் வருவதனாலேயே, நாம் தொலைக்காட்சி இணைப்பை துண்டித்து விடுவதில்லை.
ஒழுக்கக் கேட்டிற்கு எளிதாக வழியமைக்கிறது என்பதனாலேயே, நாம் செல்போனை தூர எறிவதில்லை.
நாளிதழ்களும், தொலைக்காட்சியும் , இணையதளமும், செல்போனும் தொழில்நுட்பம் வழங்கிய கொடை. இவை அனைத்திலும் நன்மையும் தீமையும் கலந்தே இருக்கின்றன. எனினும் அவற்றிலிருந்து நன்மையை மட்டும் எடுத்துக் கொள்ளும் அறிவையும் பக்குவத்தையும் நாம் பெற்றிருக்கிறோம்.
ஆனால், அவைகளை விடவும் பல மடங்கு வலிமை வாய்ந்த உயரிய தொழில்நுட்பமான சினிமாவை மட்டும் நாம் ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கிறோம்.
இஸ்லாம் எதையுமே கண்ணை மூடிக் கொண்டு 'ஹராம்' என்று சொல்லியதில்லை. இஸ்லாம் ஒன்றை ஹராம் என்று தடுத்தால் அதற்கு மாற்றாக வேறொரு ஹலாலான வழிமுறையை சொல்லியிருக்கிறது.
வட்டியை ஹராம் என்று சொல்லும் இஸ்லாம், 'வட்டியில்லா வங்கி' முறையை ஹலாலாக்கி இருக்கிறது. நாம் சினிமாவை 'ஹராம்' என்கிறோம். அப்படியென்றால் அதற்கு மாற்று?
ஒரு பலம் பொருந்திய ஊடகத்தை மிக எளிதாக ஹராம் என்று நிராகரிக்கத் தெரிந்த நமக்கு,
அதே அளவு பலம் மிகுந்த ஒரு மாற்று ஊடகத்தை உருவாக்க முடிந்ததா?
இன்றைய வணிக சினிமாவிலிருந்து முரண்படும் இடது சாரிகள், தங்களின் கருத்துக்களை வெகுமக்களிடம் பரப்புவதற்காக 'முற்போக்குக் கலை' என்னும் கலை வடிவத்தை உருவாக்கி வைத்துள்ளனர்.
வைரமுத்து சொன்னதைப் போல பூட்டுகளே கதவுகளாகத் தொங்கும் கோடம்பாக்கத்தில், நுழைய முடியாத ஒடுக்கப் பட்ட தலித் மக்கள், தங்களின் வாழ்வியலை வெகுமக்களுக்குச் சொல்ல 'தலித் கலை' என்னும் கலை வடிவத்தை உருவாக்கி வைத்துள்ளனர்.
நாம் என்ன கலை வடிவத்தை உருவாக்கி வைத்திருக்கிறோம்?
சினிமா, தொலைக்காட்சி, பத்திரிகை, இணையம் என ஊடகத்தின் அத்தனை வகை பரிணாமங்களிலும் உயர்சாதியினரே கோலோச்சியுள்ளனர். எவராலும் அவ்வளவு எளிதில் அசைக்க முடியாத பலமிக்க சக்திகளாய் அவர்களே நிலைகொண்டுள்ளனர். ஆனாலும், அந்தப் பெருமிதத்தோடு அவர்கள் நிறைவடைந்து விடவில்லை. நாளுக்கு நாள் கலைஞர்களை உற்பத்தி செய்து கொண்டே இருக்கிறார்கள்.
டிசம்பர் மாதம் முழுவதும் மியூசிக் அகாடமி நிரம்பி வழிகிறது. சென்னையின் எல்லா சபாக்களும் கச்சேரிகளால் களை கட்டுகின்றன. கலாஷேத்ராவில் கலைஞர்களை வார்த்தெடுக்கும் பட்டறை நிரந்தரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்தப் பட்டறைகளிலிருந்து வெளியே வரும் உயர்சாதி கலைஞர்கள்தான், இந்திய நாட்டின் உயரிய விருதுகளான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷனுக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள்.
நாம், கலைஞர்களை தேர்வு செய்யும் இடத்திலும் இல்லை; கலைஞர்களாகவும் இல்லை.
நம்மிடம் கலைஞர்களை உருவாக்கும் பட்டறைகளும் இல்லை, கலைகளைப் பற்றிய உருப்படியான புரிதலோ, தெளிவான பார்வையோ இல்லை.
லிபியாவில் நடந்த விடுதலைப் போராட்டத்தை சித்தரிக்கும் 'ஒமர் முக்தார்' திரைப்படம் ஏற்படுத்திய அதிர்வு இன்று வரை நம் நெஞ்சை விட்டு அகலவில்லை. அந்தப் படம் ஏற்படுத்திய தாக்கத்தை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. அத்திரைப்படம் வந்தக் காலத்தில் பிறந்த ஆண் குழந்தைகள் எல்லாம் 'ஒமர் முக்தார்'கள் ஆனார்கள்.
லிபியாவின் போராட்ட வரலாற்றை புத்தகமாக்கிக் கொடுத்திருந்தால், படிக்கும் பழக்கமற்ற நம் சமூக அமைப்பில் அது எந்த, பெரிய பாதிப்பையும் ஏற்படுத்தியிருக்காது. காட்சி வடிவில் படமாக்கிக் கொடுத்ததனால்தான் அது அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடைந்தது. இது தான் அச்சு ஊடகத்திற்கும், காட்சி ஊடகத்திற்கும் இடையே உள்ள மிகப்பெரும் வேறுபாடு.
காட்சி ஊடகத்திற்கே உரிய தனிப்பெரும் சிறப்பு.
இறுதியாக இயக்குநர் சீமானின் வார்த்தைகளைச் சொல்லி முடிக்கிறேன்.
'' ஈரான், பிரான்ஸ் போன்ற உலக நாடுகள் அனைத்தும் திரைப்படங்கிற வலிமை மிகுந்த ஊடகத்தை போர்க்கருவியா பயன்படுத்தி சமூக அவலங்களை வெளிச்சம் போட்டு காட்டுறாங்க. நாம மட்டும்தான் அதை கண்ணு வழியே போதையேத்துற விபச்சார விடுதி, சாராயக்கடை மாதிரி பார்க்கறோம். காரணம் கேட்டால் ஒரே வார்த்தையில் அது பொழுது போக்குன்னு சொல்லிடுறான். இந்தியா மாதிரி நாட்டுக்கு என்ன பொழுது போக்கு வேண்டிக் கிடக்கு? பொழுதை ஏன் போக்கணும், பேசாம இருந்தா அது பாட்டுக்கு போயிடாதா? அந்தப் பொழுதை மிக நல்லப் பொழுதாக எப்படி மாத்துறதுங்கிறதைப் பத்திதான் இனி நாம யோசிக்கணும்''
இது, சீமானின் வார்த்தை மட்டுமல்ல..,
இனி நம் வாழ்க்கையும் கூட!
[சமநிலைச் சமுதாயம் ஜனவரி - 2011 இதழில், ஆளூர் ஷாநவாஸ் எழுதிய கட்டுரை.]
No comments:
Post a Comment