Saturday, January 29, 2011

விபத்து கற்பிக்கும் பாடம்!

விபத்து கற்பிக்கும் பாடம்!

வி.குமாரமுருகன்First Published : 29 Jan 2011 01:24:03 AM IST

காவல்துறை என்றாலும், வனத்துறை என்றாலும், அறநிலையத் துறை என்றாலும், தேவஸ்வம்போர்டு என்றாலும், மொத்தமாக எத்துறை என்றாலும் அத்துறை மக்களுக்காக உருவாக்கப்பட்டதுதான் என்பதை உணர்ந்து, ஒருங்கிணைந்து செயல்படும் உன்னத நிலையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
ஜனவரி 14-ம் தேதி சபரிமலை மகர ஜோதி தரிசனத்தை முடித்துவிட்டு தங்களின் வீடுகளை நோக்கி மகிழ்ச்சியுடன் திரும்பிச்சென்று கொண்டிருந்தவர்கள் சில லட்சம் பேர். அதேசமயம், அவர்களின் வருகைக்காகத் தங்களின் வீடுகளில் காத்துக்கொண்டிருந்த குடும்பத்தினரோ பல லட்சம் பேர். ஆனால், அன்று புல்மேடு பகுதியில் ஏற்பட்ட துயரச் சம்பவத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் உயிரிழந்தது, அவர்களின் வருகைக்காக வழிமேல் விழி வைத்து காத்திருந்தவர்களின் குடும்பத்தை மட்டுமல்ல, ஒவ்வொரு தனி மனிதனின் உள்ளத்தையும் உலுக்கிவிட்டது என்பதுதான் உண்மை.
இச் சம்பவத்தின் வேதனையை உணர்ந்த கேரள உயர் நீதிமன்றம், கேரள அரசின் அலட்சியப் போக்கால்தான் இச்சம்பவம் நடந்துள்ளது எனக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், விபத்துத் தொடர்பாக உடனடியாக அறிக்கையையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது.
மேலும், சபரிமலையை நிர்வாகம் செய்து வரும் தேவஸ்வம் போர்டு, மாநில போலீஸ், வனத்துறை ஆகிய மூன்று துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படாத போக்கையும் கேரள உயர் நீதிமன்றம் கண்டித்துள்ளது. இதன் பின்னர் விபத்துக் குறித்து, குற்றப்புலனாய்வுத் துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
பொதுவாகவே, ஒரு விபத்து அல்லது விஷயம் நடைபெறும் நிலையில், அதன் தொடர்ச்சியாக விளக்கங்கள் கேட்டு, விசாரணை செய்யும் அரசுகள், சிறிது காலத்தில் அதனை மறந்து விடுவதுதான் வேதனை. உதாரணமாக, கும்பகோணம் பள்ளிச்சம்பவம் நடைபெற்ற நிலையில் அனைத்துப் பள்ளிகளும் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்துத் தெளிவாகக் கூறிய கல்வித்துறை, அவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளனவா என்பது குறித்து பள்ளிதோறும் அதிகாரிகளைக் கொண்டு ஆய்வு மேற்கொண்டது.
ஆனால், அத்துடன் ஆய்வுப்பணி நிறைவுபெற்றது. இப்போது எத்தனை பள்ளிகள் அரசு தெரிவித்திருக்கும் விதிமுறைகளைப் பின்பற்றிக் கொண்டிருக்கின்றன என கேள்வி எழுப்பினால், பதில் என்னவோ சந்தேகம்தான் என்றே சொல்ல வேண்டியிருக்கும்.
சிலர் புதிய கார்களை வாங்கிய சில நாள்களுக்கு மட்டும் அதைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக்கொள்வதுபோல, அரசும் விபத்து ஏற்பட்ட காலகட்டத்தில் மட்டுமே அதுகுறித்து சிந்திக்கிறது. மக்களின் மனநிலையும் அரசை ஒத்தே இயங்குகிறது என்பதும் உண்மை.
எந்தவொரு சம்பவத்தையும், அச்சம்பவம் அரங்கேறிய காலத்தில் மட்டும் அங்கலாய்ப்பதும், அதன்பின் அமைதியாவதுமாக தொடர்கிறது. சபரிமலை சம்பவம் அரசுக்கும், மக்களுக்கும் ஒரு பாடமாக அமைய வேண்டும். அரசை விமர்சிக்கும் ஒவ்வொருவரும் தங்களின் பாதுகாப்பிலும் கவனம் செலுத்த வேண்டும். வாகனங்களை விதிமுறைகளுக்குள்பட்டு இயக்கவும், நிறுத்தவும் பழக வேண்டும்.
சபரிமலை மட்டுமல்ல, தமிழகத்திலுள்ள சுற்றுலாத்தலங்களான குற்றாலம், கன்னியாகுமரி, ஊட்டி, கொடைக்கானல், பாபநாசம், திருச்செந்தூர், குலசேகரம், வேளாங்கண்ணி போன்ற நகரங்களில் சீசன் காலங்களில் கூடும் பயணிகள் எண்ணிக்கை சில லட்சங்களைத் தாண்டி வருகிறது. அதனால் நகரம் கட்டடங்களாகவும், உணவு விடுதிகளாகவும், தங்கும் விடுதிகளாகவும் மாறி வருகிறது. வெற்று இடங்களைத் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது.
மேலும், வருகை தரும் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால், வாகனங்களை நிறுத்த இயலாத நிலையும், வாகன நெருக்கடியும் ஏற்பட்டு வருகிறது. கன்னியாகுமரியில் ஜனவரி 16,17 ஆகிய தேதிகளில் வருகை தந்த பக்தர்களின் எண்ணிக்கை பல லட்சங்களை எட்டியதால் பல மணி நேரம் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
எனவே அரசும் சரி, அதிகாரிகளும் சரி இதுபோன்ற மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு வசதிகளைச் செய்ய வேண்டியதும், அடிப்படை வசதிகளைச் செய்ய வேண்டியதும், வாகனங்களைப் பாதுகாப்பாக நிறுத்த வழி செய்ய வேண்டியதும் அவர்களின் கடமை. இதற்கான நிதியை அரசும் பாரபட்சமன்றி வழங்க வேண்டும்.
இன்னும் சொல்லப்போனால், சபரிமலை மூலம் கிடைக்கும் வருமானத்தின் பெரும்பகுதி ஊழியர்களின் ஊதியத்துக்காகத்தான் செலவிடப்படுகிறது. அந்த வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை பொதுமக்களின் அடிப்படை வசதிக்காகச் செலவிட்டிருந்தால் இத்தனை உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருக்குமா என்பதையும் அவர்கள் சிந்திக்க வேண்டும்.
எனவே, கோயில்கள் மற்றும் சுற்றுலாத்தலங்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தின் குறிப்பிட்ட விகிதத்தை, அந்தப் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்வதற்கும், பாதுகாப்பு வசதிகள் செய்வதற்கும், அரசு பயன்படுத்த முன்வர வேண்டும். அப்படிச் செய்தால் அமைதியை எதிர்நோக்கி கோயில்களுக்கும், சுற்றுலாத் தலங்களுக்கும் செல்லும் பக்தர்களும், அவர்தம் குடும்பத்தினரும் அந்த இலக்கை அடைய முடியும். அரசு நடவடிக்கை எடுக்குமா?
The Dinamani.com

No comments:

Post a Comment