Saturday, January 29, 2011

குமுதம் செய்திகள்:ஏன் ஏறுது காய்கறி விலை? -விலைவாசி அம்மாடி!

ஏன் ஏறுது காய்கறி விலை? -விலைவாசி அம்மாடி!

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2011,00:00 IST
கருத்தை பதிவு செய்ய

தற்போது எக்குத்தப்பாக எகிறிக் கொண்டிருக்கும் வெங்காயத்தின் விலையை விட இதன் பின்னால் ஒளிந்திருக்கும் உண்மைகள்தாம் நம்மை அதிர வைக்கிறது. வெங்காயம் மட்டுமில்லாமல் எல்லா காய்கறிகளுமே விலையேறிவிட்டன. என்ன காரணம்? இதற்கு பொதுவாய் கூறப்படும் காரணங்கள் மழையினால் உற்பத்தி குறைந்துவிட்டது, விளைச்சல் இல்லை என்பது. ஆனால் அதுதான் உண்மை நிலையா?
உற்பத்தி குறைந்தால் விவசாயிகளிடமிருந்து அதிக விலை கொடுத்துதானே வியாபாரிகள் வாங்கியிருக்க வேண்டும்.
ஆனால் விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் வாங்கும் விலை பத்திலிருந்து பதினைந்து ரூபாய் மட்டும்தான் உயர்ந்திருக்கிறது.
இருபது ரூபாய்க்கு சந்தையில் விற்பனையான ஒரு கிலோ வெங்காயத்தின் விலையோ 60 ரூபாய்க்கு மேல் எகிறியிருக்கிறது.
கொள்முதலுக்கும் விற்பனைக்கும் இடையிலேயே கிலோவுக்கு இவ்வளவு பெரிய தொகை மனசாட்சியில்லாமல் சுரண்டப்படுகிறது. இந்த நிழல் வர்த்தகத்தின் ஒட்டுமொத்த பயனாளிகளுமே வியாபாரிகள்தான்.
காய்கறி விலை ஏற்றத்தின் உண்மைப் பின்னணி குறித்து பத்திரிகையாளரும் இயற்தை விவசாயியுமான ட. செந்தமிழனிடம் பேசினோம்.
"ஆண்டுதோறும் மழைக்காலங்களின்போது செயற்கையான ஒரு தட்டுப்பாட்டை உருவாக்கி விலையை ஏற்றி கொள்ளை இலாபம் பார்ப்பதை குறியாக வைத்து இருக்கிறார்கள் வியாபாரிகள். எப்போதும்போல் எல்லா சந்தைகளிலும் வெங்காய வரத்து உள்ளது. மலைமலையாக குவித்தும் வைக்கப்பட்டுள்ளது. தட்டுப்பாடு உண்மையானால் இதெப்படி சாத்தியம்?
மழைக் காலங்களில் நன்கு விளையக்கூடிய பீட்ரூட், பீன்ஸ், கேரட், அவரை போன்ற காய்கறிகளின் விலையும் ஏன் ஏறியது என்பது இன்றைக்கும் புரியாத புதிர்தான்.
கத்திரி, வெண்டை போன்ற மற்ற காய்கறிகளையும் கிலோ ஐம்பது ரூபாய்க்கு விற்க பேராசைப்பட்டு உபரியாக உற்பத்தியாகும் பீட்ரூட், காரட், அவரை, பீன்ஸையும் நாற்பது ரூபாய் வரை விலை ஏற்றி வாங்க வைக்கின்றனர் மொத்த வியாபாரிகள். இன்று விவசாயிகள், பொதுமக்கள் என எல்லோரையும் கதற வைத்துக்கொண்டிருப்பவர்கள் இவர்கள்தான்.
ஒட்டன்சத்திரம், கோயம்பேடு போன்ற மாபெரும் காய்கறிச் சந்தைகளில் குளிர்பதன கிடங்குகள் இருக்கின்றன. ஆனால் இவை இடைத் தரகர்கள் மற்றும் பெரு வியாபாரிகளின் கட்டுப்பாட்டிலேயே சிக்கியிருக்கிறது. இவர்கள் மொத்தமாக ஆக்ரமித்ததால் விவசாயிகள் தங்களது விளை பொருட்களை உடனடியாக இவர்களிடமே விற்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள்.
விலையேற்றத்திற்கு ஆன் லைன் வர்த்தகமும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது. உளுந்து, பருப்பு போன்ற மளிகைப் பொருட்களில்தான் முதலில் ஆன் லைன் வர்த்தகத் தரகர்கள் ஈடுபட்டு வந்தார்கள். ஆனால் சமீபகாலமாக வெங்காயத்திலும் அவர்களது கழுகுப் பார்வை பதியத் தொடங்கி இருக்கிறது. அதுவும் விலையேற ஒரு காரணம். இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்.
வியாபாரிகள் பதுக்கவில்லை என்று சிலர் சொல்லுகிறார்கள். வியாபாரிகள் பதுக்குவதே இல்லை என்று சொன்னால் வாடிக்கையாளர் மற்றும் விவசாயிகளிடம் தங்களுடைய கொள்முதல் நிலையங்களைத் திறந்து காட்டலாம். ஆனால் அதைச் செய்ய மாட்டார்கள். பதுக்கி வைப்பதால் மட்டுமே பற்றாக்குறை ஏற்படும்.
வெங்காயம் பற்றாக்குறை என்றால் எதனால் என்று காரணத்தைத் தேடவேண்டும். உற்பத்தி குறைந்துள்ளதா? உபரி குறைந்துள்ளதா என ஆய்வு செய்து பார்க்க வேண்டும். மழைக்காலத்தில் உற்பத்தி குறையும். உணவுப் பொருளுக்குத் தட்டுப்பாடு வரும் என்றால் ஒரு அரசாங்கம் என்ன செய்ய வேண்டும்? எவ்வளவு தேவை இருக்கிறது... எவ்வளவு விளைச்சல் எதிர்பார்க்கப்படுகிறது... உற்பத்தி என்ன மதிப்பீடு என்ற புள்ளி விவரமெல்லாம் ஒரு அரசாங்கத்தின் கையில் இருக்க வேண்டாமா? அப்படி ஒரு புள்ளிவிவரம் இருப்பதாகத் தெரியவில்லை.
வெங்காயம் மற்றும் காய்கறி விலையேற்றம் பற்றி எதையும் கண்டுகொள்ளாமல் வேளாண் மற்றும் உணவுத்துறை நன்கு உறங்கிக் கொண்டிருப்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது.' என்கிறார் ம.செந்தமிழன்.
அவர்கள் உறங்கலாம். ஆனால் பொதுஜனமல்லவா கஷ்டப்படவேண்டியிருக்கிறது.

- இரா. கார்த்திகேயன்
குமுதம் செய்திகள்:

No comments:

Post a Comment