Saturday, January 29, 2011

ஏவ்... சிட்டி பேங்க் விவகாரம்! - சி.சரவணன்

ஏவ்... சிட்டி பேங்க் விவகாரம்!
- சி.சரவணன்

அதிக வட்டி கிடைக்கிறதா? வட்டிக் கடையானாலும் சரி, வங்கிக் கிளையானாலும் சரி... எதைப் பற்றியும் விசாரிக்காமல் கேட்காமல் கொண்டுபோய் கொட்டிவிடு! இதுதான் இந்தியாவில் பலருடைய முதலீட்டு மந்திரமாக இருக்கிறது. இதில் மட்டும் படித்தவர், பாமரர், ஏழை, பணக்காரர் என்ற எந்தப் பாகுபாடும் இருப்பதில்லை. பிரபல சிட்டி வங்கிக் கிளை ஒன்றிலும் இதுபோன்றதொரு சம்பவம் அரங்கேறியிருக்கிறது. இந்த வங்கியில் பணியாற்றும் ரிலேஷன்ஷிப் மேனேஜர் அதன் வாடிக்கையாளர்களிடமிருந்து 400 கோடி அளவுக்கு பணம் வாங்கி அதிக வருமானம் ஈட்டித் தருவதாக ஏமாற்றியிருக்கிறார். அந்த பின்னணியில் வங்கியின் அதிகாரி ஒருவரைக் கைது செய்திருக்கிறது காவல் துறை. 81 கணக்குகள் முடக்கப்பட்டிருக்கின்றன!



சிக்க வைத்த ஷிவ்ராஜ்!

ஹரியானா மாநிலம் கூர்கானில் உள்ள சிட்டி பேங்க் கிளையின் ரிலேசன்ஷிப் மேனேஜர் ஷிவ்ராஜ் பூரி. இவர், சிட்டி பேங்கில் கடந்த 10 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார். இந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கும் பெரும் கோடீஸ்வரர்களான 'ஹை நெட்ஒர்த் நபர்’கள் சிலரை அணுகி, கொள்ளை லாபம் கொடுக்கும் முதலீட்டுத் திட்டம் ஒன்று கைவசமிருப்பதாகவும், அதற்கு செபியின் அனுமதி இருப்பதாகவும் சொல்லி, சில போலியான டாக்குமென்ட்டு களைக் காட்டியிருக்கிறார். இதனால் கண்ணை மூடிக் கொண்டு ஷிவ்ராஜ் வசம் பணத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.

இந்தப் பணத்தை எல்லாம் ஷிவ்ராஜ், தன் பெயரிலும், மனைவி, தாயார் உள்ளிட்ட உறவினர்கள் பெயரிலும் கணக்குத் தொடங்கி, பங்குகளில் முதலீடு செய்திருப்பது இப்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

இந்த மோசடியில் சிக்கி ஏமாந்தது தனிநபர்கள் மட்டுமல்ல, பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களும்தான். உதாரணமாக, ஹீரோ குழுமத்தைச் சேர்ந்த சில நிறுவனங்கள் அவற்றின் உபரி நிதி சுமார் 50 கோடியை இவரிடம் கொடுத்து விட்டு இப்போது தவியாய்த் தவிக்கின்றனவாம்.

எப்படி நடந்தது மோசடி?

பன்னாட்டு வங்கிகள் மற்றும் தனியார் துறை வங்கிகளில் 'ரிலேசன்ஷிப் மேனேஜர்’ என்பவர் சர்வ அதிகாரம் படைத்தவராக இருக்கிறார். இவர் வாடிக்கையாளர்களின் 'வெல்த் மேனேஜ்மென்ட்’-ஐ நேரடியாகக் கவனிக்கும்பட்சத்தில், 'தேர்ட் பார்ட்டி செக்’குகளை வாடிக்கையாளர்கள் சார்பாகக் கொடுக்கும் அங்கீகாரமும் பெற்றிருப்பார்.மேலும், ஹெச்.என்.ஐ. வாடிக்கையாளர்கள் பிஸியானவர்கள் என்பதால் அவர்களின் கணக்குகளை இயக்க 'பவர் ஆஃப் அட்டர்னி’யையும் இந்த ரிலேசன்ஷிப் மேனேஜர்களுக்கு கொடுத்து விடுகிறார்கள். மேற் சொன்ன அனைத்தும் ஷிவ்ராஜ் விஷயத்திலும் நடந்திருப்பதாகத் தெரிகிறது.

இவர் பேச்சில் மயங்கி, வாடிக்கையாளர்கள் முதலீடு செய்ய, இப்படி வந்த பணத்தை பங்குத் தரகு நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கிறார்.

வங்கிகளே காரணமா?

வங்கி நடைமுறைகளும் இப்படி நடக்கக் காரணமாகிவிடுகிறது என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.

"புதிய தலைமுறை வங்கிகளைப் பொறுத்தவரை, அதன் வாடிக்கையாளர்களை வங்கிக்கு வரவே வேண்டாம் என்கிறது. சில வங்கிகள் அப்படி வந்தால் அதற்கு கட்டணமே வசூலித்துவிடுகின்றன! வங்கியின் பணியாளர்கள் வாடிக்கையாளர்களின் வீட்டுக்கே சென்று அவர்களுக்குத் தேவையான சேவையை கொடுக்கச் செய்துவிடுகிறது. இதனால் வீடு தேடி அடிக்கடி வந்து போகும் அந்த வங்கியின் பணியாளரே வங்கியின் முகமாகிவிடுகிறார். அதன்பிறகு அந்த வங்கி ஊழியர் வேலையை விட்டுவிட்டாலோ, வேறு வங்கிக்கு வேலை மாறினாலோ, அவர் சொல்லாத வரைக்கும் வாடிக்கையாளருக்கு தெரிய வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது. இதுவே பல தவறுகள் நடக்கக் காரணம்" என்கிறார்கள் அவர்கள்.

"ஒருபோதும் தூங்காத வங்கி என விளம்பரங்களில் சொல்லிக் கொண்ட சிட்டி வங்கி தூங்கிப் போய்விட்டதா! அங்கே இன்டர்னல் ஆடிட்டிங் என்ற ஒன்று நடந்ததா? அப்படி நடந்திருந்தால் முன்பே தெரிந்திருக்குமே" என்று கேள்வி எழுப்புகிறார் வங்கி நிபுணர் ஒருவர்.

இது போன்ற தவறுகள் நடக்காமல் எப்படித் தடுக்கலாம்?

தனிநபர்களுக்கான வெல்த் மேனேஜ்மென்ட் சேவையை அளித்து வரும் பேட்டர்சன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான எம். அமர்நாத்திடம் கேட்டோம்.

"போர்ட்ஃபோலியோ வெல்த் மேனேஜ்மென்டுக்காக வங்கிக்கு அல்லது பங்குத் தரகருக்கு 'பவர் ஆஃப் அட்டர்னி’ கொடுத்தாலும், அடிக்கடி அந்தக் கணக்குகளை முதலீட்டாளர்கள் செக் செய்ய வேண்டும். எப்போதும் முதலீட்டை உங்களின் பெயரில் உள்ள டீமேட் மற்றும் வங்கிக் கணக்குகளில்தான் மேற்கொள்ளச் சொல்ல வேண்டும். வங்கி அதிகாரி அல்லது தரகர் தன் பெயரில் உள்ள கணக்கில் முதலீடு செய்யும் போது, ஒரே ஒரு முதலீட்டை மேற்கொண்டு விட்டு, அதையே பலருக்கும் காட்டி அவர்களுக்கு முதலீடு செய்திருப்பதாக கணக்குக் காட்ட வழி இருக்கிறது. மிக முக்கியமாக தரகர் அல்லது வங்கி அதிகாரி பெயரில் கணக்கு இருக்கும் பட்சத்தில் உங்களால் கணக்குகளை கண்காணிக்கக்கூட முடியாது. அப்போது ஏமாற்றப்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.

எந்த முதலீட்டுத் திட்டமானாலும் அது செபி போன்ற அமைப்புகளால் அங்கீகரிக்கப் பட்டிருக்கிறதா என்பதை பல வழிகளில் உறுதிப்படுத்திக் கொண்ட பிறகே முதலீட்டுக்குச் சம்மதிக்க வேண்டும்" என்றார்.

* நாணயம் விகடன் 09-ஜனவரி-2011

No comments:

Post a Comment