Saturday, January 29, 2011

அரைவேக்காட்டு முட்டையும் அம்பையின் காஷ்மீரமும்!

தினமலர் முதல் பக்கம் » பிற இதழ்கள் » காலச்சுவடு செய்தி

அரைவேக்காட்டு முட்டையும் அம்பையின் காஷ்மீரமும்
பதிவு செய்த நாள் : ஜனவரி 10,2011,00:00 IST
கருத்தை பதிவு செய்ய http://www.dinamalar.com

தமிழகத்துக்குக் கல்வி கற்க வந்திருந்த அஸ்ஸாமிய மாணவரைச் சந்திக்க நேர்ந்தது. அவருடன் பேச்சை ஆரம்பிக்கையில் ‘அஸ்ஸாமிய தேசத்திலிருந்து வருகிறீர்களா?’ என வினவினேன். சட்டென்று பளிச்சிட்ட கண்களுடன், ‘என்ன கேட்டீர்கள்? என்றார். மீண்டும் ஒருமுறை சொன்னேன். என் இரு கைகளையும் தன் கையில் பிடித்துக்கொண்டு ‘இந்தியர் ஒருவ’ரிடமிருந்து இவ்வார்த்தைகளைக் கேட்க எவ்வளவு மகிழ்ச்சியாய் இருக்கிறது தெரியுமா? என்றார். இதுதான் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவில் நாம் கட்டிக்காத்து வரும் இந்திய ஒருமைப்பாட்டின் லட்சணம்.

இவர் வேறு யாருமல்ல. பாபர் மசூதி இருந்த இடத்தில் கட்டணக் கழிப்பறையைக் கட்டச் சொல்லி அம்பையிடம் கருத்துத் தெரிவித்த அதே இளைய தலைமுறையைச் சார்ந்தவரில் ஒருவர்தான். ஆனால் அம்பைதான் பாவம். அவரே எழுதியிருப்பது போல் ‘கடந்த காலம் என்னும் புதைகுழியில் காலைப் புதைத்துக்கொண்டு மீள முடியாமல் தவிக்கும் மூத்த தலைமுறையினரின் வழக்கமான மாரடிப்பு’ என்பது வேறு எதுவுமல்ல. அது அவருடைய இக்கட்டுரை தான். என்னதான் வெகு எச்சரிக்கையுடன் மதச்சார்பற்ற கருத்துகளை ஆங்காங்கே இட்டு நிரப்பி அக்கட்டுரை எழுதப்பட்டிருந்தாலும் கூடவே பதற்றத்துடன் ஒலிக்கும் ‘பண்டிட்’ இனக் குரலை அடையாளம் காண முடிகிறது. இவ்வகையில் பிறரால் கட்டுடைக்கப்பட வேண்டிய அவசியமில்லாமலேயே அவரே தன்னைத்தானே கட்டுடைத்துக் கொண்டுவிட்டார். மதிப்பிற்குரிய மூத்த பெண்ணியப் படைப்பாளியாகவே அவர் இருந்திருக்கலாம்.

காஷ்மீர் மக்களாகட்டும் வடகிழக்கு இந்தியப் பகுதி மக்களாகட்டும் இந்தியாவுடன் ஒட்டுறவு இன்றி வாழும் மனோபாவம் அறிய சிறுபான்மை வாழ்வுக்குரிய மனது வாய்க்க வேண்டும். நமக்கோ கற்பிக்கப்பட்ட தேசியத்தின் வழி ஒழுகும் பொது சாதாரண மனது அல்லது பெரும்பான்மை வாழ்வுக்குரிய மனது. எனவேதான் நமது ஆடிக்கேற்றவாறு அக்காட்சிகள் பிரதிபலிக்க வேண்டுமென விரும்புகிறோம். இத்தகைய ஒரு மனோநிலைதான் காஷ்மீர் மக்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதியை அவர்கள் மறந்துவிட்டு இந்தியாவின் பகுதியாக நீடிக்க வேண்டுமென விரும்புகிறது. ஆனால் காஷ்மீர் மக்கள் அதற்குத் தயாராக இல்லை என்பதையே அவர்களின் தொடர் போராட்ட நிகழ்வுகள் உணர்த்துகின்றன. அதன் நியாயத்தை உணர்ந்து அக்குரலுக்கு ஆதரவாகப் பெரும்பான்மைச் சமூகத்தில் இருந்து சார்பற்ற ஒரு குரல் ஒலிக்கும்போது அக்குரலை எதிர் இனத்தின் அல்லது மதத்தின் அல்லது குழுவின் அங்கமாக எதிர் நிலையில் வைத்துப் பார்க்கப்படும் அபாயத்தை உணர்ந்தே இங்கு செயல்பட வேண்டிய நிலை. ஆதலால்தான் தேசத் துரோகியாகவும் அருந்ததி ராய் பார்க்கப்படுகிறார்.

அம்பைக்கு இந்த அடையாளச் சிக்கல் ஏதுமில்லை. பெரும்பான்மைச் சமூக உணர்வுடன் அவர் குரல் வெளிப்பட்டிருக்கிறது. காஷ்மீருக்குச் சுதந்திரம் என்கிறபோது இரண்டு பெரும் நாடுகளுக்கிடையே உள்ள சிறு நிலப்பகுதி எவ்வாறு சுதந்திரத்தைச் தக்க வைத்துக்கொள்ள முடியும் என்று கவலைப்படுகிறார். ருஷ்யாவாலும் ஜெர்மனியாலும் பாதிப் பாதியாய்த் தின்னப்பட்டும்கூடத் தன்னை மீளவும் உருவாக்கிக்கொண்ட போலந்து கதைகளை அவர் மறக்கக் கூடாது. மேலும் காஷ்மீரின் சுதந்திரத்துக்கு முன்புறமாய் அசைந்தாடும் பச்சை நிற பாகிஸ்தானியக் கொடிகள் அவர் கண்களை உறுத்துகின்றன. ஆனால் காஷ்மீரிகள் விரும்புவது முழு முதலான சுதந்திரம்தான் என்பதை நம்பகமான ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அப்படியொரு சுதந்திரம் கிடைத்து அதைப் பாகிஸ்தான் ஆக்கிரமிக்கும் என்றால் இன்னொரு சுதந்திரப் போராட்டத்தை நிகழ்த்தியாவது மற்றொரு ‘பங்களாதேஷாக’த் தன்னைத் தகவமைத்துக்கொள்ளும் திறன் காஷ்மீரிகளுக்கு இருக்கும். அப்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கும் சேர்ந்ததாகவே அது அமையக்கூடும்.

அம்பை கவலைப்படும் இன்னொரு செய்தி அது மத அடிப்படை நாடாய் இயங்கினால் என்னசெய்வது? இது பிச்சைக்காரருக்கு அளிக்கப்பட்ட காசை அவர் சாப்பிடப் பயன்படுத்துகிறாரா அல்லது ‘டாஸ்மாக்’கில் செலவழிக்கிறாரா என வேவுபார்க்கும் உத்தி. அளிக்கப்பட்ட பிறகு அது நமக்குச் சொந்தமானது அல்ல என்பதாலேயே தான் கச்சத்தீவுக்குச் செல்லும் தமிழக மீனவர்கள் பிணங்களாகத் திரும்பிவருவதைப் பார்த்துக்கொண்டு வாளாவிருக்கிறோம்.

சைவ சமய விதிகளுக்கு முரண்பட்டு அக்கமாதேவியும் லால் தேத்தும் சமணத்தின் திகம்பரத்தைச் சுவீகரித்துக் கொள்கையில் அதைப் பெண்ணிய சுதந்திரமாகக் காணும் அம்பை, தங்கள் சுதந்திரம் எப்படி அமைய வேண்டும் என்பதை காஷ்மீரிகள் தீர்மானிப்பதை அங்கீகரிக்க மறுப்பது ஏன்?

நான்கு லட்சம் பண்டிட்கள் விரட்டப்பட்ட வடு அவர் மனத்தில் ஆழமாகவே பதிந்திருக்கிறது. இதற்கு ராமச்சந்திர குஹாவை ஆணைக்கழைக்கும் அவர் சதத் ஹசன் மண்டோவை மறந்தது ஏனோ? ‘திற’ கதை ஒன்று போதாதா? நமது யோக்கியதையைச் சொல்ல உண்மை என்னவெனில் பண்டிட்களாகட்டும், பாலஸ்தீனியர், இந்தியர், செவ்விந்தியர், அபாரிஜின், யூதர்கள், யாழ்ப்பாண முஸ்லிம்கள் என ஆக்கிரமிப்பால் அகற்றப்பட்ட இனங்கள் என நீண்ட வரலாறு இருக்கிறது. இதற்கு இனம், மதம், மொழி போன்ற எதுவும் ஒரு பொருட்டல்ல. அவ்வகையில் பண்டிட்களும் நமது அனுதாபத்துக்கு உரியவர்கள்தான். ஆனால் இவர்களுக்கு ஆதரவாக இந்துத்துவச் சக்திகள் வரும்போது எதிர் அணியில் அயொதுல்லா அலி கமென் வருவதை அருந்ததிராயால் எப்படித் தடுக்க முடியும்?

நடுநிலையான மனங்களில் காலியாக உள்ள நியாயமான அரசியல்வாதி என்கிற சக்தி மிக்க பிம்பம் இன்று பொய்த்துப் போயிருக்கிறது. அதை ஈடுசெய்யும் விதமாய் அக்குரலில் அருந்ததி ராய் பேசுவது படைப்பாளிகள் என்கிற முறையில் நாம் மகிழ்வடைய வேண்டிய செய்தி. ஆனால் அம்பையோ அருந்ததி ராயால் தானொரு தனிநாடாய் இந்தியாவில்தான் செயல்பட முடியுமெனக் கேலி பேசுகிறார். இவ்விடத்தில் பெரியாரைத் துணைக்கழைப்பது அம்பைக்கு ஒவ்வாமையாக அமையலாம். ஆனால் வேறு வழியில்லை. மற்ற மதங்களின் மூடநம்பிக்கைகள் குறித்து ஏதும் பேசமாட்டீர்களா என்னும் கேள்விக்குப் பெரியாரின் பதில் என்னவோ அதுவே அருந்ததிக்கும் பொருந்தும். ஏனெனில் அருந்ததி ராய் பாகிஸ்தானியர் அல்ல.

நிலோஃபரின் தந்தை அருந்ததி ராயின் கையில் அளித்த இரு அவித்த முட்டைகளும் அவர் மனம், செயல் இரண்டிலும் வேறுபாடற்று முழுவதுமாகச் சமைந்த நிலையைக் குறிப்பிடுகிறது. அதுபோல் அம்பையின் கையிலும் ஒரு முட்டை இருக்கிறது. அது பாதி சமைந்தது. சமைந்த பகுதி பெண்ணியம், சமைக்கப்படாத பகுதி ஆதிக்கச் சாதி மனம். அதாவது அது ஒரு அரைவேக்காட்டு முட்டை.

நக்கீரன் நன்னிலம்

No comments:

Post a Comment