Saturday, January 29, 2011

அரசு காட்டும் போலி கணக்கு!

பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் பொறுப்பிலிருந்து அரசு நழுவி 6 மாதங்கள் ஆகிவிட்டன. இந்த 6 மாதங்களில் அவ்வப்போது கண்மூடித்தனமாக பெட்ரோல் விலை பலமுறை உயர்த்தப்பட்டிருக்கிறது. எத்தனை முறை விலை உயர்ந்திருக்கிறது என்பதில்கூட நம்மால் சரியான எண்ணிக்கையைக் கூற முடியவில்லை. சில ஊடகங்கள் 6 முறை என்று கூறுகின்றன. சிலர் 5 முறை என்கிறார்கள். அந்த அளவுக்கு நினைத்த நேரத்தில் எல்லாம் பெட்ரோல் விலை உயர்ந்திருக்கிறது.
இந்த உயர்வைப் பற்றி பெட்ரோலிய நிறுவனங்களைக் கேட்டால், சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல் விலை மாற்றிமைக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள். சரி... இந்த மாற்றங்களில் ஏதாவது ஒன்றாவது விலையைக் குறைப்பதுபோல அமைந்திருக்கிறதா என்றால் இல்லை. எல்லா விலை மாற்றங்களுமே விலையை உயர்த்துவதாகத்தான் இருந்திருக்கின்றன. இந்தக் கொள்கை தொடருமானால், இன்னும் எத்தனையோ விலை உயர்வுகளை நாம் சந்தித்துத்தான் ஆக வேண்டும். இத்தனை விலை உயர்வுகளுக்குப் பிறகும் பெட்ரோலிய எண்ணெய் நிறுவனங்கள் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.1.22 வரை நஷ்டமடைகின்றனவாம். எப்படியிருக்கிறது கதை?
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து கொண்டேபோகிறது என்பது உண்மைதான். இப்போது இந்தியா ஒரு பீப்பாய்க்கு 90 டாலர்கள் வரை விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கிறது. நடப்பு நிதியாண்டில் சராசரியாக கச்சா எண்ணெயின் விலை 79.35 டாலர்களாக இருந்து வந்திருக்கிறது. இது கடந்த நிதியாண்டைக் காட்டிலும் 13.74 சதவீதம் அதிகமாகும். நடப்பு ஆண்டில் இந்த விலை 100 டாலர்களாகவும் அடுத்த ஆண்டில் 110 டாலர்களாகவும் அதிகரிக்கும் என கோல்ட்மென் சாக்ஸ் கணித்திருக்கிறது. ஆக, பெட்ரோல் விலை மேலும் மேலும் உயர்ந்து கொண்டேதான் போகப்போகிறது.
டீசல் விலையும் இந்த மாதிரிதான். பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் பொறுப்பை ஒப்படைத்தபோதே, டீசல் விலை நிர்ணயம் செய்யும் பொறுப்பும் எண்ணெய் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டது. எனினும், இப்போதைக்கு டீசல் விலையை உயர்த்துவதற்கு மட்டும் அரசின் அனுமதி பெற்றாக வேண்டும் என்கிற விதிமுறை இருக்கிறது. அதனால், அரசியல் ஆபத்து கருதி டீசல் விலை உயர்த்தப்படாமல் இருக்கிறது.
ஆனாலும், சில தனியார் எண்ணெய் நிறுவனங்கள் இப்போதே டீசல் விலையைத் தங்கள் இஷ்டப்படி உயர்த்திக் கொண்டுவிட்டன. பொதுத்துறை நிறுவனங்கள் டீசல் விலையை உயர்த்துவதற்கு அரசுக்குத் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகின்றன. ஒரு நல்ல நாளில் டீசல் விலையை நிர்ணயிக்கும் பொறுப்பிலிருந்தும் அரசு முழுமையாக விலகிக் கொள்ளப்போகிறது. அதன் பிறகு எண்ணெய் நிறுவனங்கள் பாடு கொண்டாட்டம்தான்.
எனினும், பணவீக்கம் மிக அதிகமாக இருக்கும் இந்தச் சூழ்நிலையில், டீசல் விலையை உயர்த்துவதற்கு அரசால் அனுமதிக்க முடியாது. டீசலையோ, சமையல் கேஸ் போன்ற வேறு பெட்ரோலியப் பொருள்களையோ விலை உயர்த்தினால், எதிர்க்கட்சிகள் வீதியில் இறங்கிப் போராடும். தேர்தல் மேகங்கள் சூழ்ந்திருக்கும் நிலையில், இது ஆளும் தரப்புக்கு ஆதாயமல்ல.
அதற்காக, டீசல் விலையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்று அரசு விரும்புகிறது என்று நினைத்துக்கொள்ளக் கூடாது. விலையை உயர்த்த நல்ல சந்தர்ப்பத்துக்காக அரசு காத்திருக்கிறது. அவ்வளவுதான். அப்படியொரு வாய்ப்புக் கிடைத்தால், டீசல் விலையை உயர்த்த அனுமதியளிப்பதுடன், மண்ணெண்ணெய், கேஸ் போன்றவற்றுக்கான மானியத்தையும் குறைத்துக் கொள்ளும். பெட்ரோலியப் பொருள்களின் விலைகளை உயர்த்தி, தனியார் முதலீட்டை ஊக்குவிப்பதுடன், அறுவடை செய்யும் பணத்தைக் கொண்டு பட்ஜெட் பற்றாக்குறையைச் சரி செய்வதுதான் அரசின் திட்டம். இந்தத் திட்டத்தின் ஒரு பகுதிதான் எண்ணெய் நிறுவனங்கள் அடையும் நஷ்டத்தை பூதக்கண்ணாடி கொண்டு பெரிதாக்கிக் காட்டுவது.
சர்வதேசக் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில்தான் எண்ணெய் நிறுவனங்கள் அடையும் நஷ்டம் கணக்கிடப்படுகிறது. அரசும், பொருளாதார நிபுணர்களும் இதைத்தான் கூறுகிறார்கள். ஆனால், அரசு தரும் புள்ளிவிவரங்களைக் கூர்ந்து கவனித்தாலே, இந்த விலை உயர்வுகளை நியாயப்படுத்துவதற்காக அரசு கூறும் காரணங்கள் எவ்வளவு போலியானவை என்பது தெரியும்.
கடந்த நிதியாண்டில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 69.76 டாலர்களாக இருந்தது. ஒரு பீப்பாய் என்பது கிட்டத்தட்ட 160 லிட்டர்களுக்குச் சமம். அந்த வகையில் ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் விலை 0.43 டாலர்கள். அதாவது ரூ.19.62. பரீக் கமிட்டியின் அறிக்கைப்படி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களின் 90 சதவீதச் செலவு கச்சா எண்ணெய்க்கானதுதான். இதைக் கணக்கில்கொண்டால் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து வெளிவரும் கச்சா எண்ணெயின் விலை லிட்டருக்கு ரூ.21.58 ஆக இருக்கும். இது வரிவிதிப்புக்கு முந்தைய நிலை.
கச்சா எண்ணெய் விலை மட்டுமல்ல, இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வதும், தாழ்வதும்கூட எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு லாபத்தைப் பாதிக்கும். அதாவது, நாணயச் சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்தால், கச்சா எண்ணெயின் விலை குறையாவிட்டாலும்கூட, இறக்குமதியில் லாபம் கிடைக்கும்.
இதுதவிர, உள்நாட்டிலேயே 20 முதல் 30 சதவீதம் வரை குறைந்த விலையில் கச்சா எண்ணெய் கிடைக்கிறது. இவற்றைச் சந்தைப்படுத்துவதன் மூலம் எண்ணெய் நிறுவனங்களுக்கு பல மடங்கு லாபம் கிடைக்கும். பெட்ரோல், டீசல் விலைகளைக் கணக்கிடும்போது இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதேபோல், இந்தியாவின் எண்ணெய் சுத்திகரிப்புத் திறன், உள்நாட்டு தேவையைவிட மிக அதிகம். பெட்ரோலிய அமைச்சக புள்ளிவிவரங்களின்படி, கடந்த நிதியாண்டில் 50.97 மில்லியன் மெட்ரிக் டன்(எம்எம்டி) பெட்ரோலியப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கின்றன. அதே காலகட்டத்தில் 23.49 எம்எம்டி அளவுக்குத்தான் இறக்குமதி நடந்திருக்கிறது. உள்நாட்டு நுகர்வு 138.196 எம்எம்டி. நாட்டின் இப்போதைய சுத்திகரிப்புத் திறன் 182.09 எம்எம்டி. வரும் நிதியாண்டில் இது 255.83 எம்எம்டியாக உயரும் என திட்டக் குழு மதிப்பிட்டிருக்கிறது.
இப்படி மிக அபரிமிதமாக வளர்ச்சியடைந்துவரும் ஒரு துறைக்கு, சலுகைகளையும், மானியங்களையும் கொடுத்து நஷ்டமடைந்துவிட்டதாக அரசு ஏன் புலம்ப வேண்டும்? இந்தப் புலம்பல்கள் உண்மையில்லை. அரசு நஷ்டமடையவும் இல்லை. ஏனென்றால், பெட்ரோலியத் துறை மூலம் கடந்த நிதியாண்டில் மட்டும் அரசுக்கு ரூ.1,83,860 கோடி வருமானம் கிடைத்திருக்கிறது. இதில் மத்திய அரசுக்கு ரூ.1,11,779 கோடியும் மாநில அரசுகளுக்கு ரூ.72,081 கோடியும் பங்கு.
கச்சா எண்ணெய் மீதான சுங்க மற்றும் கலால் வரிகள், ராயல்டி, நிறுவன வரி, பங்கு ஈவுத் தொகை மீதான வரி, சேவை வரி ஆகியவை உள்ளிட்ட பல்வேறு வகையில் மத்திய அரசுக்கும் விற்பனை வரி, மதிப்பு கூட்டு வரி உள்ளிட்டவை மூலம் மாநில அரசுகளும் இந்த வருவாய் போய்ச் சேருகிறது. பெட்ரோல் விலையில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக வரியாகவே வசூலிக்கப்படுகிறது. அதனால் பெட்ரோல் விலையை உயர்த்துவதால், அரசின் கஜானாவில் பணம் கொட்டப் போகிறது என்பது தெளிவு.
பெட்ரோல் விலை உயர்த்தப்படும்போதெல்லாம் மானியங்களைப் பற்றிக் கவலை தெரிவிப்பது அரசின் வழக்கம். ஆனால், கடந்த 4 ஆண்டுகளில் பெட்ரோலியத் துறைக்காக அரசு வழங்கிய மொத்த மானியமே ரூ.23,325 கோடிதான். அரசுத் தரப்பில் வெளியிடப்பட்டிருக்கும் புள்ளிவிவரங்களிலேயே இந்த விவரம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த காலகட்டத்தில் பெட்ரோலியத் துறை மூலம் மத்திய அரசுக்குக் கிடைத்திருக்கும் வருவாய் எவ்வளவு தெரியுமா ரூ.4,10,842 கோடி மாநில அரசுகளின் வருவாய் ரூ.2,63,766 கோடி. இந்த வருமானத்தில் அரசு தரும் மானியம் வெறும் 3.45 சதவீதம்தான். அதாவது கிடைக்கும் பெரிய வருவாயில் ஒரு துரும்புதான் மானியமாகத் தரப்படுகிறது. உண்மையைக் கூறினால் பெட்ரோலியத் துறை மூலம் அரசு வருமானம் பார்க்கிறது என்றுதான் சொல்ல வேண்டுமே தவிர, மானியம் அளிக்கிறது என்று கூற முடியாது. உண்மை இப்படியிருக்க, அரசு எதற்காக பொய்யான காரணங்களைக் கூறிப் புலம்ப வேண்டும்.
அரசு இப்படியென்றால், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கூறும் காரணங்கள் இன்னும் வேடிக்கையானவை. பெட்ரோலியப் பொருள்களை விற்பதால் தங்களுக்கு எப்போதுமே நஷ்டம்தான் என்று அவை வருத்தப்படுகின்றன. டீசல் விலையை உயர்த்துவதற்கு அரசு அனுமதிக்க மறுக்கிறது என்று புகார் கூறிக் கொண்டிருக்கின்றன. ஒரு லிட்டர் டீசல் விற்பதன் மூலம் தங்களுக்கு ரூ.7 நஷ்டம் ஏற்படுவதாகப் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கூறுகின்றன. இதேபோல ஒரு சிலிண்டருக்கு ரூ.366-ம் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய்க்கு ரூ.19.60-ம் நஷ்டம் ஏற்படுகிறது என்பது அவர்களுடைய வாதம். பெட்ரோல் விலையை இவ்வளவு உயர்த்திய பிறகும் லிட்டருக்கு ரூ.2 நஷ்டம் ஏற்படுகிறதாம். அந்த வகையில் நடப்பு நிதியாண்டில் மட்டும் ரூ.73 ஆயிரம் கோடி ரூபாய் விலை வித்தியாச இழப்பு (அன்டர் ரெகவரி) இருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்த விலை வித்தியாச இழப்பு என்பது நஷ்டமல்ல. அரசு நிர்ணயிக்கும் விலைக்கும் எண்ணெய் நிறுவனங்கள் இறக்குமதி செய்யும் எண்ணெய் விலைக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைத்தான் இது குறிக்கும்.
எல்லாவற்றிலும் நஷ்டம் என்று புலம்பிக் கொண்டிருக்கும் இந்த நிறுவனங்களின் ஆண்டுக்கணக்கு அறிக்கையைப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும். ஏனென்றால், அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த எண்ணெய் நிறுவனங்கள் கடந்த 4 நிதியாண்டுகளில் ரூ.1.26,288 கோடி லாபமடைந்திருப்பதாக அவற்றின் ஆண்டுக்கணக்கு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இது ஒருபக்கம் என்றால், பொருளாதார நிபுணர்கள் என்று கூறிக்கொள்ளும் சிலர், ஏற்கெனவே நொந்து போயிருக்கும் மக்களை இன்னும் நசுக்குவதற்கான யோசனைகளை முன்வைக்கிறார்கள். பெட்ரோலியப் பொருள்களுக்கு அரசு வழங்கும் எல்லா வகையான மானியங்களையும் விலக்கிக் கொண்டு, சந்தை நிலவரத்துக்கு ஏற்ப விலையை நிர்ணயித்துக் கொள்ள அனுமதிக்க வேண்டுமாம். அதன் மூலம் தனியார் முதலீட்டைக் கவர்ந்து பொருளாதாரத்தை இன்னும் மேம்படுத்தலாம் என்கிறார்கள்.
ஆனால், அது கூடவே கூடாது. பெட்ரோலியத் துறை மிகவும் முக்கியமான, கவனமாகக் கையாளப்பட வேண்டிய துறை. நாடு சுதந்திரம் அடைந்ததும் நமது தொழிற்கொள்கை வகுக்கப்படும்போதே இதன் முக்கியத்துவம் உணரப்பட்டது. இன்றுவரைக்கும் அந்த முக்கியத்துவம் குறையவேயில்லை. பொருளாதார லாபத்துக்காக பெட்ரோலியப் பொருள்களின் விலையைக் கடுமையாக உயர்த்துவது நமது உண்மையான தொழிற்கொள்கைக்கு எதிரானதாகும்.
அதிக அளவில் மானியம் வழங்கப்படுகிறது என அரசும், இழப்பு ஏற்படுகிறது என பெட்ரோலிய நிறுவனங்களும் கூறிக் கொண்டிருந்தாலும், அவற்றுக்கு அதிக லாபம் கிடைத்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. அதனால், பெட்ரோலியப் பொருள்களின் விலையை உயர்த்தி ஏழை மக்களை நெருக்கடிக்கு உள்ளாக்குவது எந்த வகையிலும் நியாயமில்லை.
அச்சப்படுவதுபோல 110 டாலர் அளவுக்குக் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும், அதை எளிதாகச் சமாளிக்க முடியும். 2008-ம் ஆண்டில் 148 டாலருக்கு கச்சா எண்ணெய் விற்றபோதுகூட பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்தாமலேயே அரசு சமாளித்தது. அதனால், இப்போது விலைகளை உயர்த்துவது தவிர்க்க முடியாததல்ல.
பெட்ரோல் மூலம் அரசும் எண்ணெய் நிறுவனங்களும் எந்த அளவுக்கு ஆதாயம் அடைகின்றனவோ, அந்த அளவுக்கு மக்கள் நஷ்டமடைகிறார்கள், துன்பம் அடைகிறார்கள் என்பதுதான் பொருள். மக்கள் நலன் மீது அரசுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால், மக்கள் மீது சுமையை ஏற்றாதபடி இப்போதைய பெட்ரோலியக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். சமூக நீதியைக் காப்பதாகவும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை இலக்காகக் கொண்டிருப்பதாகவும் கூறிக்கொள்ளும் நமது அரசுக்கு இது புரியாததல்ல

பி.எஸ்.எம். ராவ்

.First Published : 26 Jan 2011 12:00:00 AM IST
Last Updated : 26 Jan 2011 05:30:02 AM IST
http://www.dinamani.com
இந்த விபரங்கள் எல்லாம் இலவசத்திற்காக ஏமாறும் வாக்காளருக்கு எங்கே தெரிய போகிறது.?நடுத்தர வர்க்கம் முதலில் தவறாமல் வாக்களிக்க முன்வர வேண்டும். இதுபோன்ற விஷயங்களை விவாதித்து புரிந்து மற்றவர்களுக்கும் புரிய வைக்க வேண்டும் By ஆ.அருமை நாதன்
1/28/2011 7:26:0
மனமிருந்தால் மார்க்கமுண்டு. மத்திய அரசுக்கு மனமென்பது தனியார் பெட்ரோல் நிறுவனங்களின் வருமானத்தை உயர்த்துவது மட்டுமே. ரிலையன்ஸ் போன்ற பெட்ரோல் நிறுவனங்களின் கொள்ளை லாபக் கணக்கினை உயர்த்துவதே ஆட்சியாளர்களின் மார்க்கமாகும். நம்மைவிட ஏழைநாடான பங்களாதேஷில் 30ரூபாய்க்கும் குறைவாக கிடைக்கும் பெட்ரோல் இரு மடங்கான விலையில் இங்கு கிடைக்கிறது. அனைத்துப்பொருட்களின் விளையும் உயரும் அபாயம் தடுத்துநிறுத்தப்படாமல் தொடரவே ஆட்சியாளர்களின் செயல்கள் துணைபுரிகின்றன. தனியார்மயத்தின் கோரக்கரங்கள் ஏழை மக்களின் கழுத்தை இறுக்கி பெருமுதலாளிகளுக்கு வெண்சாமரம் வீசுகின்றன. மக்களின் வேதனை நிலையை வெளிப்படுத்தும் வெள்ளையறிக்கை தலையங்கம். By அய்யன்பேட்டை தனசேகரன்
1/26/2011 12:11:00
1/26/2011 12:11:00 PM அருமையான கட்டுரை. அரசு வியாபாரியாகி மக்களை கொள்ளையடிக்கிறது. ஆனால் இதைப்பற்றி நாடாளும் மன்றத்தில் விவாதிக்க நமது எம் பிக்களுக்கு நேரமில்லை. கட்டுரை ஆசியரின் மின்னஞ்சல் தந்தால் தொடர்பு கொள்ள வசதியாக இருக்கும். By திண்டல் சங்கர நாராயணன்
1/26/2011 11:38:00 AM

No comments:

Post a Comment