Wednesday, January 12, 2011

அதிகரிக்கும் வாகனங்களால் அவதிப்படும் மக்கள்

அதிகரிக்கும் வாகனங்களால் அவதிப்படும் மக்கள்
பதிவு செய்த நாள் 1/4/2011 10:19:51 AM - Dinakaran Paper-





அடுத்த 10 ஆண்டில் இரண்டரை கோடியை தொடுமாம்... மக்களின் அன்றாட பிரச்னைகளில் முதலிடத்தில் இருப்பது போக்குவரத்து நெரிசல். வீட்டில் இருந்து கிளம்பி அலுவலகம் செல்வதற்குள் போதுமடா சாமி என்கிற அளவிற்கு சாலைகளில் நெரிசல். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 10 நிமிடங்களில் சென்ற இடங்களுக்கு தற்போது ஒரு மணி நேரம் பயணம் செய்ய வேண்டியுள்ளது.

இந்த நிலையில் சாலைகள் இருக்கையில், இன்னொரு பக்கத்தில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. டெல்லி, மும்பை, சென்னை போன்ற பெரிய நகரங்களில் பல மடங்கு அதிகரிப்பதாக புள்ளிவிவரம் சொல்கிறது.

விளைநிலங்கள் எல்லாம், வீட்டுமனைகளாகவும், நிறுவனங்களாகவும் மாறி வருகிறது. எனவே மேல்படிப்பிற்காகவும், சம்பாதிக்கவும் மக்கள் தலைநகரங்களை தேடி வருகின்றனர். நிரந்தரமான வேலை, வருமானம் கிடைத்தவுடன் குடும்பத்துடன் சென்னையின் நிரந்தரவாசியாகி விடுகின்றனர்.

தலைநகரங்களில் மக்கள் தொகை அதிகரிப்பதற்கு இது ஒரு முக்கிய காரணம். எனவே 2, 3ம் தர நகரங்களில் புதிய தொழிற்சாலைகள் மற்றும் தரமான கல்வி நிறுவனங்கள் தொடங்கினால், மக்கள் ஒரே இடத்தில் குவிவதை குறைக்க முடியும். அதற்கேற்ப திட்டமிடுவதற்கும், அவற்றை நிறைவேற்றுவதற்கும் அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் மிகையாக இருந்தாலும், வாகனங்களுக்கு இடையில் மக்களை தேட வேண்டிய நிலைமை வரலாம்.

டூவிலரில் பயணிக்கும் தமிழகம்

கடந்த ஏப்ரல் மாதம் வரை நடத்தப்பட்ட வாகன கணக்கெடுப்பில் தமிழகத்தில் மொத்தம் 1 கோடியே 21 லட்சத்து 56 ஆயிரத்து 961 வாகனங்கள் இயங்குகின்றன.

சென்னையில் மட்டும் 30 லட்சத்து 77 ஆயிரத்து 568 வாகனங்கள் உள்ளன. இதுவே அடுத்த பத்தாண்டுகளில் 2 கோடியே 31 லட்சத்து 56 ஆயிரத்து 961 வாகனங்களாக அதிகரிக்கும் என அரசு மதிப்பிட்டுள்ளது. அதாவது ஆண்டுக்கு 11 லட்சம் வாகனங்கள் சராசரியாக அதிகரிக்கிறது. 2006ல் நடந்தப்பட்ட கணக்கெடுப்பு படி இந்தியாவில் மொத்தம் 8 கோடியே 96 லட்சத்து 18 ஆயிரம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதில் முதல் இடத்தில் மஹராஷ்டிரா, இரண்டாம் இடத்தில் தமிழகம் உள்ளது. இதற்கு அடுத்தடுத்த நிலையில் குஜராத், உ.பி, ஆந்திராவும் உள்ளன.

தமிழகத்தில் தற்போது தினந்தோறும் சுமார் 3815 வாகனங்கள் புதியதாக பதிவு செய்யப்படுகிறது. தினந்தோறும் 3666 பேர் லைசென்ஸ் பெறுகின்றனர். டூவிரில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது.

தமிழ்நாட்டில் மட்டுமே 24 லட்சத்து 34,375 இருசக்கர வாகனங்கள் ஓடுகின்றன. சென்னையில் மொத்தம் வாகனங்களின் எண்ணிக்கை 31 லட்சத்து 69,582. இதில் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை தான் அதிகம். தமிழகத்தில் 115 போக்குவரத்து அலுவலங்கள் உள்ளன. ஒவ்வொரு அலுவலகத்திலும் தினந்தோறும் 100க்கும் மேற்பட்டோர் புதிய வாகனங்கள் பதிவு செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் புதிய வாகனங்கள் வாங்குவோரின் எண்ணிக்கை 2 சதவீதம் அதிகரிக்கிறது.

அடுத்த 5 ஆண்டில் இது 10 சதவீதமாகலாம் என்கிறது புள்ளிவிவரம்.

தரமற்ற சாலைகளால் போக்குவரத்து பாதிப்பு

தரமற்றதாக சாலைகள் போடுவதால் விரைவில் சேதமடைகிறது. குண்டும், குழியுமாக மாறுவதால் வாகனங்கள் விரைவாக செல்ல முடியாமல் நத்தை போல் ஊர்ந்து செல்கிறது. இதுவே மழைக்காலம் என்றால் படுமோசமாகி விடுகிறது.

ஒரே சாலையில் அளவுக்கு அதிகமாக, லட்சக்கணக்கான வாகனங்களை இயக்குவது சாலைகள் விரைவில் சேதமடைவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. தரமான சாலைகளை சிறந்த தொழில்நுட்பங்களுடன் தேவையான இடங்களில் புதியதாக அமைக்க வேண்டும். நாட்டில் நெடுஞ்சாலைகளில் தான் சாலைகள் மேம்படுத்தப்படுகிறது.

பெரிய நகரங்களில் சாலைகள் சர்வதேச தரத்திற்கு மேம்படுத்தவில்லை. அதற்கான இடமும் இல்லை என்பது முக்கியமான காரணமாகவுள்ளது.

வாகன எண்ணிக்கை கட்டுப்பாடு அவசியம்

போக்குவரத்து துறையின் ஓய்வு பெற்ற அதிகாரிகள் தரும் யோசனைகள்: நெரிசலுக்கு முக்கிய காரணமாக இருப்பது மிதமிஞ்சிய வாகனங்களே. வாகனங்கள் அதிகரிப்பதை கட்டுபடுத்துவதன் மூலமே நெரிசலை குறைக்க முடியும். நகரங்களுக்குள் ஒரு குறிப்பிட்ட வாகனங்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

பெரிய வாகனங்களை நகரங்களுக்குள் அனுமதிக்க கூடாது. அதுபோல் மக்கள் ரயில், பஸ் போன்ற பொது வாகனங்களை அதிகம் பயன்படுத்த வேண்டும். ஒரு வீட்டிற்கு ஒரு வாகனம் வைத்திருக்க மட்டுமே அனுமதி வழங்க வேண்டும். அதிகமான வாகனங்கள் வைத்திருப்பவர்களுக்கு வரியை உயர்த்த வேண்டும்.

வாங்கும் வசதியும் காரணம்

தமிழ்நாட்டில் ஐடி நிறுவனங்கள் அதிகமாக உள்ளன. இதனால் அதிகம் பேர் கைநிறைய சம்பளம் வாங்குகின்றனர். ரூ.1 லட்சம் செலுத்தினாலே போதும் கார் வாங்கி விடலாம். இதற்கான கடன் வசதியை, நிறைய வங்கிகள் செய்து தருகிறது. இதனால் எளிமையாக கார் வாங்கி விடுகின்றனர்.

இதையும் தாண்டி சிலர் கவுரவத்திற்காக வீட்டில் 4 கார்களை வாங்கி வைத்துள்ளனர். நிறுவனங்களால் விடப்படும் சொகுசு பஸ்களையும் சில ஊழியர்கள் பயன்படுத்துவதில்லை. 6 கார்களில் செல்வோரின் எண்ணிக்கையை ஒரே பஸ் மூலம் சமாளிக்கலாம். இதனால் நெரிசல் குறையும், சாலை தேய்மானம் குறையும், எரிபொருள் செலவும் குறையும். இதை கருத்தில் கொண்டுதான் ஏசி பஸ் திட்டத்தை சென்னையில் அரசு அறிமுகம் செய்துள்ளது.

மெட்ரோ ரயில் கை கொடுக்கலாம்

சென்னையில் ரயில் போக்குவரத்து முக்கிய பங்காக இருக்கிறது. லட்சக்கணக்கான மக்களுக்கு மின்சார ரயில்கள்தான் பேருதவி புரிகிறது. வேளச்சேரிக்கு விடப்பட்ட புறநகர் ரயில் ஆரம்பத்தில் கூட்டம் இல்லாமல், 3 பெட்டிகள் மட்டுமே இணைக்கப்பட்டு இருந்தது. தற்போது மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் கூடுதலாக 4 பெட்டிகள் சேர்ப்பட்டுள்ளது.

இப்போதைக்கு சென்னை மக்களை நெரிசலில் இருந்து காப்பாற்ற ஒரே வழிதான் உண்டு. அது வரவிருக்கிற மெட்ரோ ரயில் திட்டம்தான்.

வெளிநாடுகளில் இப்படி...

அமெரிக்கா போன்ற நாடுகளில் வேகமாக செல்வதற்கும், குறைவான வேகத்தில் செல்வதற்கும் சாலைகளில் தனித்தனி வழித்தடம் உள்ளது. இதற்கென்று சுங்கச்சாவடிகள் மூலம் தனியாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில் மற்றொரு சுவாரஸ்ய தகவல் என்னவென்றால், வேகமாக செல்லும் சாலையில் மெதுவாக சென்றால் அபராதம் வசூலிக்கப்படுகிறது.

அதுபோல் குறைவான வேகத்தில் செல்லும் சாலைகளில் வேகமாக சென்றால் சிபாரிசுகளுக்கு முக்கியத்துவம் தராமல் அபராதம் வசூலிக்கப்படும்.

திட்டம் இருக்கிறது

போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், ஒவ்வொரு நகரம் மற்றும் மாநகரங்களில் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு வாகனங்களை பதிவு செய்ய மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. உரிமையாளர் ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்களை பதிவு செய்யும் போது வாகன வரியை உயர்த்தி வசூலிக்க, மோட்டார் வாகன வரிச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்படுகிறது.

அதுபோல் முக்கிய சாலைகளை ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு ஒருவழிப் பாதையாக மாற்றியமைத்தல். மேம்பாலங்களை கட்டுதல், சாலை விரிவுப்படுத்துதல் என அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும், பொதுமக்களின் முழு ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியும் என்கின்றனர்.

அதிகரிக்கும் சாலை விதிமுறை மீறல்

சாலையில் வரிசைப்படி அந்தந்த வாகனங்கள் செல்ல வேண்டுமென போக்குவரத்து துறையால் அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் வாகன ஓட்டிகள் கடைபிடிப்பதில்லை. சாலையில் கொஞ்சம் இடம் காலியாக இருந்தாலே, அந்த இடத்தில் எல்லா வாகனங்களும் அணிவகுத்து வந்து நின்று விடுகின்றன. இதனால் பின்னால் வரும் வாகனங்கள் வரிசையாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எவ்வளவு வாகனங்கள் இருந்தாலும், வரிசையாக சென்றால் எளிதாக செல்ல முடியும். இந்த முறையை தான் இங்கிலாந்து போன்ற நாடுகளில் பின்பற்றப்படுகிறது. சாலையோர ஆக்கிரமிப்புகள் விஷயத்தில் கருணை பார்வையே கூடாது. வெளிநாடுகளில் இந்த விஷயத்தில் உறுதியான நடவடிக்கைகள் உண்டு. இங்கே அவ்வப்போது அகற்றப்பட்டாலும், மீண்டும் கடைகள் முளைத்து விடுவதுதான் ஆச்சரியம்.

No comments:

Post a Comment