Saturday, January 29, 2011

குடியரசா? "குடி' மக்கள் அரசா?

கட்டுரைகள்குடியரசா? "குடி' மக்கள் அரசா?

உதயை மு. வீரையன்First Published : 28 Jan 2011 12:24:00 AM IST

குடியரசு நாள் நாடெங்கும் கொண்டாடப்படுகிறது; "குடியரசு தினம் என்பது நாட்டுமக்கள் அனைவருக்கும் சட்டப்பூர்வமான உரிமைகள் வழங்கப்பட்ட நாள்' என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். குடிமக்கள் உரிமை பெற்ற நாள் என்று கூறலாம்.
ஆனால், இப்போது "குடிமக்கள்' என்பது அந்தப் பொருளில் வழங்கப்படவில்லை; "குடிக்கும் மக்கள்' என்பதே நடைமுறை வழக்காகிவிட்டது. அந்த அளவுக்குக் குடிக்கும் மக்கள்தொகை நாளுக்குநாள் பெருகிக் கொண்டிருக்கிறது; மக்கள்தொகைப் பெருக்கத்தைவிடவும் இது போட்டி போட்டுக்கொண்டு பெருகுவது சமுதாய அவலம்.
காந்திஜியின் அகிம்சை வழியில் நாடு விடுதலை பெற்றதாகக் கூறப்படுகிறது. அது உண்மையானால் அவர் விரும்பிய தீண்டாமை ஒழிப்பும், மதுவிலக்கும் இதுவரை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டுமே! "ஏன் அவ்வாறு செய்யப்படவில்லை?' என்ற வினா எழுகிறதல்லவா!
நாடெங்கும் 62-வது குடியரசு நாள் கொண்டாடப்படும் இந்நாளில் இதற்கு யாரும் பதில் கூறப் போவதில்லை. வினா எழுப்பியவர்கள் பதிலை எதிர்பார்த்து ஏமாற்றம் அடைவதைத்தவிர, வேறு வழியில்லை. இனிமேலாவது இது நடைமுறைப்படுத்தப்படும் என்று எதிர்பார்ப்பது நாட்டு மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்களின் நம்பிக்கை. நம்பிக்கை வீணாகலாமா?
""தீண்டாமைக்கு அடுத்தபடியாக மிகவும் கண்டிக்கத்தக்கது ஒன்று உண்டென்றால் அது குடி என்ற சாபக்கேடுதான்...'' என்றார் காந்திஜி. என்றாலும் இது தடுக்கப்படவில்லை; தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இந்தியாவை ஆங்கிலேயர்கள் 200 ஆண்டுகாலம் ஆண்டனர்; ஆனால், அவர்கள் இந்நாட்டை ஆளுவதற்காக வரவில்லை; அடிமைப்படுத்துவதற்காகவும் வரவில்லை; அவர்கள் வணிகம் செய்வதற்காகவே இந்நாட்டுக்கு வந்தனர்.
இங்கிலாந்திலிருந்து, "கிழக்கிந்தியக் கம்பெனி' என்ற பெயரில் இந்தியாவுக்குள் கால் வைத்தனர்; ஆட்சி அதிகாரத்துக்கு ராபர்ட் கிளைவ் என்பவன் "கால்கோள்' நடத்தினான்.
வணிகம் செய்யவே வந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஆட்சி செய்யவே ஆரம்பித்தனர் என்பது கடந்தகால வரலாறு.
விடுதலை பெற்ற இந்தியாவில் ஆட்சி செய்யவே வந்த அரசியல்வாதிகள் இப்போது வணிகம் செய்ய ஆரம்பித்துள்ளனர். அதுவும் மதுக்கடை நடத்துகின்றனர். "டாஸ்மாக்' என்று இதற்குப் பெயர். இதில் பணியாற்றுகிறவர்களுக்குப் பாதுகாப்பு வேண்டி தொழிற்சங்கமும் தொடங்கப்பட்டுவிட்டது என்பது இன்றைய வரலாறு.
தமிழக அரசுக்கு "டாஸ்மாக்' மூலமாக வரும் வருமானம், அரசின் மொத்த வருமானத்தில் ஐந்தில் ஒரு பங்காகும்; இந்த வருமானத்தை இழந்துவிட்டால் எப்படி ஈடுசெய்வது என்று சிலர் வினா எழுப்புகின்றனர். அரசாங்கம் என்பது நிர்வாகம் செய்ய வேண்டுமே ஒழிய, வணிகம் செய்யக்கூடாது; அதுவும் மதுக்கடைகளை நடத்தக் கூடாது என்பதே அதற்கு விடையாகும்.
""நிதிப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி, மதுவிலக்குக் கொள்கையைத் தளர்த்திவிட்டேன் என்றால் சாமானிய மக்கள் குடிகாரர்களாக மாறி, தமிழகத்தின் எதிர்காலமே இருண்டுவிடும். எனவே, அரசுக்கு நிதி கிடைக்கும் என்பதற்காக மதுவிலக்கை ரத்து செய்ய மாட்டேன்'' என்று முன்னாள் முதல்வர் அண்ணா கூறினார்.
பணத்துக்காகப் பாவச்செயல்களைச் செய்யக்கூடாது என்பதே அறநூல்களின் அறிவுரை. கொலை, களவு, விபசாரம், சூது, குடி என்பன பஞ்சமாபாதகங்களாகக் கூறப்படுகின்றன. இவற்றுள் இறுதியாகக் கூறப்படும் "குடி'யே எல்லாத் தவறுகளையும் செய்யத் தூண்டும் முதல் தவறாகிறது.
அண்மையில் ஐ.நா. வெளியிட்ட அறிக்கையின்படி இந்தியாவில் சுமார் 42 கோடி பேர் அடிப்படை வசதிகள் இல்லாமல் வாழ்கின்றனர். ஆனால், மதுபான உற்பத்தியில் முன்னணி நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருக்கிறது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இந்தியாவில்தான் மதுபானம் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது; இந்தியாவின் பங்கு 65 விழுக்காடு என்றால் எண்ணிப் பாருங்கள்.
"தேசப்பிதா' எனப் போற்றப்படும் காந்திஜியின் நிர்மாணத் திட்டத்தில் முக்கியமானது மதுவிலக்காகும். "மதுவிலக்கு' காங்கிரஸ் கட்சியின் முக்கியக் கொள்கையாகக் கடந்த 1920 முதல் இருந்துவந்தது. நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே அக்கட்சி ஆட்சிக்கு வந்தபோதே, மதுவிலக்கைக் கொண்டுவந்தது; ஆனால், நாடு விடுதலைபெற்ற பிறகு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த மாநிலங்களில் மதுவிலக்கு போன இடமே தெரியவில்லை. ஏன் இந்த நிலை?
இதுபற்றிக் கேட்டால் மாநில அரசுகள், மத்திய அரசின் மீதும், மத்திய அரசு மாநில அரசுகள் மீதும் பழியைப் போடுகின்றன.
மாநில அரசின் உரிமைகளையெல்லாம் அவர்களைக் கேட்காமலேயே எடுத்துக்கொள்ளும் மத்திய அரசாங்கம் இதுபோன்ற மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்குத் தம் அதிகாரங்களைப் பயன்படுத்துவதில்லை.
இந்திய அரசமைப்புச் சட்டம் (பிரிவு 47), மதுவிலக்கைச் செயல்படுத்த முயல வேண்டும் என்று அரசுக்கு அறிவுறுத்தும் பகுதியில் கூறியுள்ளது. எனினும், தம் இயலாமைக்கு மத்திய, மாநில அரசுகள் புதிய புதிய காரணங்களைக் கண்டுபிடித்துக் கூறிக் கொண்டிருக்கின்றன. உண்மையான காரணம் வேறு. குடிமக்களை இந்தப் போதை மயக்கத்தில் வைத்திருப்பதே தங்கள் ஆட்சிக்குப் பாதுகாப்பு என அவை நினைக்கின்றன.
"அரசியல் அமைப்புச் சட்டத்தின்பால் மாறாத பற்றும், நம்பிக்கையும் கொண்டு செயல்படுவோம்' என்று உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலோர் "மதுவிலக்குக் கொள்கை'க்கு ஆதரவாக இல்லை; பிறகு எப்படி இதனை நடைமுறைப்படுத்துவது? அரசியல் சட்டத்தின் இந்தப் பிரிவு வெறும் அலங்காரத்துக்காகத்தானா?
தமிழ்நாட்டில் சங்க காலம் முதல் மது அருந்தும் வழக்கம் இருந்து வந்துள்ளது. மகிழ்ச்சிக்கும், சமூகம் சார்ந்த கொண்டாட்டங்களுக்கும் அது தேவையாகவே இருந்தது. "சிறிய கள் பெறினே எமக்கீயும் மன்னே/ பெரியகள் பெறினே / யாம்பாடத் தான் மகிழ்ந்து உண்ணும் மன்னே!' என்று ஒளவையார் என்னும் புலவர் அதியமானைப் பாடிய பாடல் புறநானூற்றில் இடம்பெற்றுள்ளது.
மதுவை கள், நறவு, தேறல், பிழிவு எனப் பல பெயர்களில் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. திருவள்ளுவர் காலத்தில்தான், "மது அருந்துவது தவறு' என்ற கொள்கை உருவானது. "கள்ளுண்ணாமை' என்று ஓர் அதிகாரத்தையே இயற்றினார்.
மது அறிவை மயக்குகிறது; உடலை அழிக்கிறது; வாழ்வைப் பாழ்படுத்துகிறது; எல்லாத் தீமைகளையும் செய்வதற்கு ஊக்கம் தந்து மனித இனத்தின் அமைதியைக் கெடுக்கிறது. இது யாருக்குத் தெரியாது? தெரிந்தும் அவனை அந்தத் தீய பழக்கத்திலிருந்து தடுக்க முடிகிறதா?
மது அருந்துபவரை அப்பழக்கத்திலிருந்து மீட்பது எளிமையான செயல் அல்ல. அவரைத் திருத்த முயல்வது தண்ணீருக்குள் மூழ்கியிருப்பவரை விளக்குக்கொண்டு தேடுவதுபோன்ற இயலாத செயல் என்று வள்ளுவர் கூறுவது, மதுவுக்கு அடிமையான மனிதரின் நிலையைப் படம்பிடித்துக் காட்டுகிறது. இது காலத்தைக் கடந்து நிற்கும் உண்மை. "மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உடலுக்குக் கேடு' என்று மதுப்புட்டியில் எழுதிவிட்டால் போதுமா? கேடு செய்வதை உற்பத்தி செய்ய அனுமதிக்கலாமா?
ஏற்கெனவே 6 சாராய ஆலைகள் அனுமதிக்கப்பட்டது போதாமல் மேலும் 8 சாராய ஆலைகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது, குடிமக்கள் மேல் உள்ள பாசத்தைக் காட்டவில்லையா? இதனால்தான் 2004-2005-ம் ஆண்டு ரூ. 5,860 கோடியாக இருந்த மதுவின் வருவாய் 2009 - 2010 -ம் ஆண்டு ரூ. 14,000 கோடியாக அதிகரித்துள்ளது. அதனால் சாலை விபத்துகளும் ஆண்டுக்காண்டு அதிகரித்துக்கொண்டே போகின்றன.
தமிழ்நாட்டில் மட்டும் எங்கும் இல்லாத மதுக்கொள்கை கடைப்பிடிக்கப்படுகிறது. இங்கு மதுவும் இருக்கிறது; மதுவிலக்கும் இருக்கிறது; வேடிக்கையாக இல்லையா?
அயல்நாட்டு இந்தியத் தயாரிப்பு மதுபானங்கள் விற்பதற்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. நம் நாட்டுக் கள்ளுக்குத் தடைவிதிக்கப்படுகிறது. மதுவிலக்கை நடைமுறைப்படுத்தினால் கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்று கூறுகின்றனர். கள்ளச்சாராயம் மிகக் கொடுமையானதாகும்; அதற்கு இந்த அந்நிய மது தேவலாம் எனக் காரணம் கூறப்படுகிறது.
"அந்நிய மதுவைவிட போதை (ஆல்கஹால்) குறைவான கள்ளுக்குத் தடைவிதித்தது ஏன்?' என்று "கள்' இயக்கத்தினர் கேட்கின்றனர். தமிழக முதல்வர் மதுவிலக்குத் தொடர்பாக, "நல்ல செய்தி வரும்' என்று குறிப்பாகக் கூறியுள்ளார். "அந்த நல்ல செய்தி எப்போது வரும்?' என்று நாட்டுநலனில் அக்கறை கொண்டவர்கள் கேட்கின்றனர்! தேர்தல் வரும் நேரத்தில் நெருக்கடி வந்தால் மதுக்கடைகள் மூடப்படலாம்; தேர்தல் முடிந்த பிறகு ஏதாவது ஒரு காரணம் கூறி மதுக்கடைகள் மறுபடியும் திறக்கப்படலாம்.
உலகத்தில் பல நாடுகளில் மது அருந்தும் பழக்கம் இப்போதும் இருக்கிறது. அங்கு மக்கள் மதுவை அருந்துகின்றனர்; ஆனால் இங்கு மது, மக்களையே அருந்துகிறது. எனவே, எத்தனை கோடி இழக்க நேர்ந்தாலும் சரி, மதுக்கடைகள் மூடப்படுவதே சாலச்சிறந்தது; மதுக்கடைகள் மூடினால், பல வீட்டுக்கதவுகள் திறக்கப்படும் அல்லவா! இதற்கு அரசாங்கத்தின் மனக்கதவுகள் திறக்கப்பட வேண்டும்.
ஓர் அரசாங்கத்தின் நோக்கம் கருவூலத்தை நிரப்புவதாக மட்டும் இருந்துவிடக் கூடாது. குடிமக்களின் நலனைப் பேணுவதாகவே இருக்க வேண்டும், மக்களின் அறியாமையையும், மதுமயக்கத்தையுமே நம்பிக்கொண்டு இருக்கும் அரசு நீண்டகாலம் நிலைக்காது. "குடியரசா? "குடி' மக்கள் அரசா?' என்ற வினாவுக்கு விடை கிடைப்பது எப்போது?http:
//www.dinamani.com/edition

No comments:

Post a Comment