Saturday, January 29, 2011

கட்டுரைகள்சலுகையா அல்லது மூளைச்சலவையா?

ஆடைகளுக்குப் போட்டியாக தினம் ஒரு மாடலில் கைகளை அலங்கரிக்கும் அந்தஸ்தை செல்போன்கள் பெற்றுவிட்டன. மனிதர்கள் வசிக்கும் தொலைவைச் சுருக்கியதுடன், முகங்களைக் கூட பத்து இலக்க எண்களாக இவை மாற்றிவிட்டன என்பதே உண்மை.
மனிதர்களின் அனைத்து அடிப்படைத் தேவைகளின் விலையும் ஏறுவரிசையில் இருக்கும் நிலையில், தொலைத்தொடர்பு சேவைக் கட்டணங்கள் மட்டுமே இறங்கு வரிசைக்கு இடம்பெயர்ந்துள்ளன.
தினம் ஒரு விளம்பரத்துடன் களமிறங்கும் செல்போன் சேவை நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பும் கட்டணக் குறைவுக்கு ஒரு காரணம்.
தனியார் நிறுவனங்களுடன் போட்டியிடுகையில் அரசுசார் நிறுவனங்கள் தோல்வியடைவது நம் நாட்டில் மட்டுமே எளிதில் சாத்தியமாகும் ஒன்று.
அந்த வரிசையில் தொலைக்காட்சி, வானொலி, போக்குவரத்து சேவைகளைத் தொடர்ந்து தற்போது பி.எஸ்.என்.எல். நிறுவனமும் சேர்ந்து வருகிறது.
பொதுவாக செல்போன் சேவையைப் பயன்படுத்துவோர் தங்கள் நிறுவனங்களைச் சேர்ந்த பிற வாடிக்கையாளர்களுடன் குறைந்த கட்டணத்தில் பேசி மகிழ பல்வேறு விதமான "பூஸ்டர்' கார்டுகள் மற்றும் சலுகைத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
பி.எஸ்.என்.எல். நிறுவனமும் இதுபோன்ற கார்டுகளையும், புதிய சலுகைத் திட்டங்களையும் வெளியிட்டுள்ளது. குறுஞ்செய்திகளுக்கான "பூஸ்டர்' கார்டுகள் தனி.
இவற்றை உபயோகப்படுத்தி தமிழகத்தின் எந்த மூலையில் இருப்பவருக்கும் 1 நிமிஷத்துக்கு 10 பைசா கட்டணத்தில்கூட பேச முடிகிறது. செல்போன் சேவையை அதிகம் பயன்படுத்துவோர் இந்தச் சலுகைத் திட்டங்களில் உடனடியாக இணைந்து கொள்கின்றனர்.
சில சாமானியர்கள் புத்தாண்டு, பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் மட்டுமே "பூஸ்டர்' கார்டுகள் மற்றும் சலுகைத் திட்டங்களின் தயவை நாட வேண்டிய சூழல் உள்ளது.
ஏனெனில், குடும்பத்தார் அனைவரும் ஒன்று சேரும் பண்டிகை காலத்தில், செல்போன் பேச்சுக்கு தற்போது பஞ்சமிருப்பதில்லை.
அதேபோல பல நாள்களாகப் பேசாமல் இருக்கும் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பண்டிகைக் கால வாழ்த்துச் சொல்லும் போதும் நட்பு புத்துயிர் பெறுவதற்கும் வாய்ப்பு உள்ளது.
குடும்பத்தாரின் மகிழ்ச்சியைப் பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்தினாலும், அதே நேரத்தில் பொருளாதாரச் சிக்கனம் கருதியும் குறிப்பிட்ட பணம் செலுத்தி சலுகைத் திட்டங்களில் சேர்பவர்கள் பலர்.
ஆனால், செல்போன் சேவை நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் திட்டமிடுதலைத் தகர்க்கும் வகையில் பண்டிகைக்கு முந்தைய நாளில் சிறப்புக் குறுஞ்செய்தியை அனுப்புகின்றன.
அந்தக் குறுஞ்செய்தியில், வரும் இரண்டு நாள்களுக்கு மட்டும் நீங்கள் உபயோகப்படுத்திவரும் சலுகைக் கட்டணங்கள் நிறுத்தப்படுகிறது. மாறாக, தாங்கள் பயன்படுத்தும் சிம் கார்டின் அடிப்படைத் திட்டக் கட்டணம் வசூலிக்கப்படும் என்பதை தெரிவிக்கிறார்கள்.
இதனால் நிமிஷத்துக்கு 10 பைசா கட்டணத்தில் பேசியவர்கள் கூட, அந்த இரு நாள்களும் நிமிஷத்துக்கு ரூ. 1 வரை செலவழிக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகின்றனர். இதனால் "பூஸ்டர்' கார்டுகள் மற்றும் சலுகைத் திட்டங்கள் என்பவை உண்மையான சலுகையா? அல்லது வாடிக்கையாளர்களை வீழ்த்தும் மூளைச்சலவையா? என்ற கேள்வி எழுந்துள்ளது. லாபம் ஒன்றையே குறிவைத்து நடத்தப்படும் தனியார் செல்போன் சேவை நிறுவனங்கள் இப்படிச் செயல்படுவதில் குறைசொல்வதற்கில்லை.
நாட்டு மக்களுக்குக் குறைந்த கட்டணத்தில் தொலைத்தொடர்பு சேவை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்ட பி.எஸ்.என்.எல். நிறுவனமும் இத்தகைய நடவடிக்கையில் இறங்குவது ஏற்கத்தக்கதல்ல.
மக்களின் தேவை மிகுந்த நேரத்தில் அவர்களின் பொருளாதாரச் சுமையைக் குறைக்கும் செயல்தான் சலுகை. அதற்கு மாறாக சாதாரண காலங்களில் மட்டும் சலுகைக் கட்டணம் அளிக்கும் பி.எஸ்.என்.எல். நிறுவனம், பண்டிகைக் காலங்களில் புறமுதுகிடுவது மத்திய அரசின் கோழைத்தனத்தைக் காட்டுவது போல உள்ளது.
"ஸ்பெக்ட்ரம்' உள்ளிட்ட ஊழல்களால் நாடு சந்தித்திருக்கும் இழப்புடன் ஒப்பிடுகையில், பண்டிகைக் காலங்களில் பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் சலுகைக் கட்டணத்தில் நாள் முழுக்கப் பேசுவதால் ஏற்படும் செலவுகூட மிகச் சிறியதே.
லட்சங்களில் புரளும் தொழிலதிபர்களுக்கும், கோடிகளில் திளைக்கும் செல்போன் சேவை நிறுவனங்களுக்கும் சலுகை காட்டும் தொலைத்தொடர்புத் துறை அதிகாரிகள், ஏழைகள் மிகுந்த தமது வாடிக்கையாளர் வட்டத்தைப் புறக்கணிப்பது சரியல்ல.
முன்னோடித் திட்டங்களை முதலில் அறிவிக்க வேண்டியது அரசுசார் நிறுவனமான தமது பொறுப்பு என்பதை உணர்ந்து பி.எஸ்.என்.எல். செயல்பட வேண்டும்.
விழாக்கால "சலுகை ஏமாற்றம்' அளிக்கும் செயல்களில் மட்டும் முன்னணியில் இருக்காமல், கிராமத்துவாசிகளும் தேடிப்பிடித்து தமது சேவையைப் பயன்படுத்தும் வகையில் பி.எஸ்.என்.எல். மாறுவதற்கு முயற்சிக்க வேண்டும்.
தனியார் நிறுவனங்களுக்குப் புத்திகூறும் வகையில் இனிவரும் பண்டிகைக் காலங்களிலாவது சலுகைக் கட்டணத்தில் வாடிக்கையாளர்களைப் பேச அனுமதிக்க வேண்டும். யானை (ஊழல்) செல்வதைக் கண்டுகொள்ளாமல் எறும்பு (சலுகைக் கட்டணங்கள்) செல்வதை உன்னிப்பாகக் கவனித்துத் தடுத்து நிறுத்தும் செயலை பி.எஸ்.என்.எல். கைவிட வேண்டும் என்பதே லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு.

கோ. முத்துகுமார்
First Published : 10 Jan 2011 03:06:13 AM IST
http://www.dinamani.com

No comments:

Post a Comment