Tuesday, January 11, 2011

பேங்க் வட்டி?

பேங்க் வட்டி இப்னு ஹத்தாது



இஸ்லாம் வட்டியை மிகக்கடுமையாக கண்டித்துள்ளது; மறுத்துள்ளது. ஆயினும் உலகளாவிய அளவில் முஸ்லிம் நாடுகள் உட்பட வட்டியின் அடிப்படையில் பேங்குகள் செயல்பட்டு வருகின்றன. விரல் விட்டு என்னப்படும் சில பேங்குகள் அதுவும் நம் நாட்டிலில்லை. வெளிநாடுகளில் வட்டி அடிப்படை யில்லாமல் செயல்படலாம். இந்த நிலையில் வட்டி அடிப்படையான பேங்குளில் வரவு செலவு வைத்துக்கொள்ள வேண்டிய நிர்பந்த நிலயிலுள்ளவர்கள், அவர்கள் அந்த பேங்குகளில் போட்டு வைத்திருக்கும் பணத்திற்குரிய வட்டியை வாங்காமல் விட்டுவிடுவது, அந்த வட்டி சமுதாயத்திற்கு விரோதமாகவே பயன்பட உதவுகிறது.

எனவே அப்படிச் செய்யாதீர்கள் அந்த வட்டிப்பணத்தை அங்கிருந்து அகற்றி சமுதாயத்திற்கு தீங்கிழைக்க வழியில்லாத வகையில் ஹறாம், ஹலால் ஆகும் நிலையில் கடும் வறுமையில் வாடும் ஏழைகளுக்கு (அவர்கள் முஸ்லிம் அல்லாதவர்களும் இருக்கலாம்) கொடுத்துவிடுவதே பாதுகாப்பானது என்று தெளிவு படுத்தியிருந்தோம். இந்த எமது கருத்தை மறுத்து பல சகோதரர்களிடமிருந்து பலவிதமான கண்டனங்களுடன் பல கடிதங்கள் வந்துள்ளன. கண்டனக் கடிதங்களில் சில, அப்படியானால் திருடி ஏழைகளுக்கு அவற்றைக் கொடுக்கலாமா? விபச்சாரம் செய்து அந்த வருவாயை ஏழைகளுக்குக் கொடுக்கலாமா? இப்படி ஹறாமான காரியங்களைச் செய்து அவற்றிலிருந்து பெறப்படும் பணத்தை ஏழைகளுக்கு கொடுக்கலாமா? என்றெல்லாம் வினா தொடுத்துள்ளனர். பேங்கில் போட்டு வட்டிப் பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்று நாம் சொல்லவில்லை. நிர்பந்தமான நிலையில் பேங்கில் பணம் போடுகிறவர்கள் என்ன செய்ய வேண்டும் என்றே தெளிவு படுத்தி இருந்தோம்.

இந்த கடிதங்களிலிருந்து ஒன்று நமக்கு நன்கு புலப்படுகிறது. நம் சகோதரர்களின் உள்ளங்களில் வட்டியின் கெடுதி மிக ஆழமாக வேறுன்றி இருக்கின்றது. இதை அறிந்து நாம் மகிழ்ச்சியடைகிறோம். அல்ஹம்துலில்லாஹ். காரணம் 2:275,276,278,279 4:161 30:39 வசனங்களையும் மற்றும் வட்டி பற்றிய ஹதீஸ்களையும் படித்து விளங்கியவர்கள் நிச்சயமாக இப்படித்தான் வேகப்பட செய்வார்கள். இது நியாயமானது தான். இதே வேகத்துடன் இவ்வுலகில் எந்த அளவு எனக்கு கஷ்டம் நஷ்டங்கள் ஏற்பட்டாலும், வியாபாரம், தொழில் போன்றவற்றை விரிவாக பெரிதாக நடத்த முடியவில்லை என்றாலும், நான் கஷ்டப்பட்டு ஈட்டியுள்ள பணத்தை தகுந்த பாதுகாப்பு இல்லாமல் திருடர்கள் திருடிச் செல்வதால் பெரும் நஷ்டமே ஏற்பட்டாலும், அரசுகளினால் எப்படிப்பட்ட வரித்தொல்லைகள் ஏற்பட்டாலும், இப்படி எப்படிபட்ட கஷ்டங்கள் வந்து இவ்வுலக வாழ்க்கை எவ்வளவு வறுமைப்பட்டாலும், கஷ்ட நஷ்டங்களால் சிரமப்பட்டாலும் வட்டியிலான பேங்குகளை நெருங்கவும் மாட்டேன்; அந்த பேங்குகளில் சல்லிக் காசும் போடமாட்டேன் என்று அதே உறுதியுடனும் வேகத்துடனும் இருந்தால் அதை மிகமிகப் பாராட்டி நாம் வரவேற்போம்.

ஆனால் பேங்கு வட்டியை எடுத்து ஏழைகளுக்குக் கொடுப்பதை மிகக் கடுமையாக ஆட்சேபிக்கும் சகோதரர்களும், மேலே விவரிக்கப்பட்ட தங்களின் சொந்த நலன்களுக்காக வட்டி அடிப்படையிலான பேங்குகளில் வரவு செலவு வைத்திருப்பதுதான் ஆட்சேபணைக்குரியது. பேங்கில் அவர்கள் பணத்தை போட்டு விட்டாலே அது வட்டிக்குத் துணை போகத்தான் செய்கிறது. இவர்கள் எங்களுக்கு வட்டி வேண்டாம் என்று எழுதி கொடுத்து விடுவதால், இவர்களது பணத்தை அப்படியே பொட்டலமாகக் கட்டித் தனியே போட்டு வைத்து, பின்னால் இவர்கள் போய் கேட்கும்போது அதிலிருந்து எடுத்துக் கொடுப்பதில்லை. இவர்கள் எங்களுக்கு வட்டி வேண்டாம் என்று எழுதிக் கொடுத்தாலும் இவர்களது பணத்தையும் வட்டிக்கு விடத்தான் செய்கிறார்கள். இவர்கள் பணம்தான் வட்டிக்குத் துணை போகிறது.

ஒரு யாசகனுக்கு ஒருவர் பணம் கொடுக்கிறார். யாசகம் கொடுத்தவுடன் அந்தப் பணம் அந்த யாசகனுக்குச் சொந்தமாக ஆகிவிடுகிறது. அதன் பின்னர் அவன் அந்த பணத்தை தவறான வழியில் செலவிட்டாலும் அந்தக்குற்றம் யாசகம் கொடுத்தவனைச் சாராது. அவர் தீமைக்குத் துணை போனவராக மாட்டார். இதுவே சரியாகும். ஆனால் இங்கு யாசகம் கொடுத்த அந்த மனிதர் தீமைக்குத் துணைபோனதாகச் சொல்லும் சகோதரர்கள், இவர்கள் போட்டிருக்கும் பணம் மூலம் கிடைக்கும் வட்டிக்குத் தாங்கள் பொருப்பில்லை என்று கூறுவது எப்படிப் பொருந்தும்? வட்டி வேண்டாம் என்று எழுதி கொடுத்து விடுவதால் பேங்கில் போட்டிருக்கும் பணம் இவர்களுடயது இல்லை என்று ஆகிவிடுமோ? இல்லையோ? அது இவர்கள் பணம்தானே. அப்படியானால் அந்தப் பணம் மூலம் பெறப்படும் வட்டிக்கும் இவர்கள் தானே பொறுப்பு? அந்த வட்டி மூலம் ஏற்படும் சமுதாய தீங்கிற்கும் இவர்கள்தானே பொறுப்பு ஏற்க வேண்டிவரும்? இந்த சாதாரண விஷயத்தைக் கூட விளங்க முடியவில்லையா?

நிர்பந்த நிலையில் பேங்கில் பணம் போடுகிறவர்கள் இரண்டு தவறுகளைச் செய்யும் நிலை ஏற்படுகிறது. ஒன்று தங்கள் பணத்தை தங்கள் விருப்பமின்றியே வட்டிக்கு விட்ட குற்றம். இரண்டாவது குற்றம் இவர்களது அந்த வட்டிப்பணம் நம் சமுதாயத்திற்கு எதிராகவே பயன்பட வழி வகுத்துக் கொடுப்பது.

எனவே குர்ஆன்,ஹதீஸை முற்றிலும் கடைப்பிடிப்பதில் உறுதியாக இருப்பவர்கள் கண்டிப்பாக எந்த நிலையிலும், எப்படிப்பட்ட நிர்பந்தத்திலும் பேங்கில் பணம் போடக்கூடாது. முற்றிலுமாக பேங் வரவு செலவைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். பேங் வரவு செலவு இல்லாமல் யாரும் இறந்துவிடுவதில்லை. மேலதிக பணம் வரும் போதுதான் பெரும் பணம் சேர்க்கத்தான் பேங்க் வரவு செலவு வைப்பது எந்த நிலையிலும் கூடாது என்று முஸ்லிம் சகோதரர்களின் யாரும் கூறுவதில்லை. நிர்பந்தம் காரணமாக வைத்துக் கொள்ளலாம் என்றே கூறுகிறார்கள். வட்டிப் பணத்தை எடுக்கவே கூடாது என்று பிடிவாதமாக சொல்பவர்களும் பேங்க் வரவு செலவு வைத்துக் கொள்வதை மறுப்பதில்லை.

இதிலிருந்து என்ன தெரிகிறது? நம் சகோதரர்களின் தனி மனித நிர்பந்தத்தை விளக்கும் அளவுக்கு சமுதாய நிர்பந்தத்தை விளங்குபவர்களாக இல்லை. தனி மனித நிர்பந்தம் நேரடியாக தங்களைப் பாதிப்பதால் அதனை எளிதாக விளங்கிக் கொள்கிறார்கள். அதே சமயம் சமுதாய நிர்பந்தம் ஒட்டு மொத்த சமுதாயத்தைப் பாதிப்பதால், அதை அவர்களால் உணர முடிவதில்லை. வன்முறையில் பொது சொத்துக்களைச் சேதப்படுத்துபவன் அந்த சொத்தில் தனக்கும் உரிமை இருக்கிறது. தன்னையும் அங்கமாகக் கொண்ட சமுதாயத்தின் சொத்து என்பதை அவன் உணராததாலேயே சேதப்படுத்துகிறான். அதே சமயம் அந்த சொத்து தனக்கு மட்டும் என்றிருந்தால் நிச்சயம் சேதப்படுத்த மாட்டான். தனி நிர்பந்தத்தையும் பொது நிர்பந்தத்தையும் மக்கள் இப்படித்தான் விளங்கி வைத்திருக்கிறார்கள்.

தனி நிர்ப்பந்தத்துக்குப் கொடுக்கும் முக்கியத்துவம் கூட பொது நிர்ப்பந்தத்திற்கு மக்கள் காடுப்பதில்லை. ஒரு தனி மனிதனின் குறைபாடுகள் சமுதாயத்திற்கு எவ்வளவு இழப்பை ஏற்படுத்தினாலும் அது பெரிதல்ல; ஆனால் அந்தத் தனி மனிதனின் குறைபாடுகளை வெளிப்படுத்துவதன் மூலம் அவன் பாதிப்புக்குள்ளாகக் கூடாது என்று தவறாக எண்ணுகிறார்கள். இதே கண்ணோட்டத்தில் தான் தனி மனிதர்களுக்கு ஏற்படும் நிர்ப்பந்தத்தைக் காரணம் காட்டி வட்டி அடிப்படையிலான பேங்குகளில் வரவு செலவு வைத்துக் கொள்வதால், மேலும் தங்கள் பணத்தால் ஈட்டப்பட்ட வட்டியை வேண்டாம் என்று எழுதிக் கொடுப்பதால் அந்த பேங்குகளில் குவியும் அதே வட்டிப் பணத்தால் என்னென்ன கேடுகள் விளைகின்றன? நமது சமுதாயதிற்கு எப்படி எதிராகப் பயன்படுகின்றது? நமது சமூக நிர்ப்பந்தம் ஒன்று எப்படி உருவாகிறது என்பதை உணராதிருக்கிறார்கள்.

பேங்க் வட்டி கண்டிப்பாகக் கூடாதுதான். அதைத் தவிர்ப்பதே முறையாகும். அப்படியானால் எந்த நிலையிலும் பேங்குகளில் வரவு செலவு வைத்துக்கொள்ளக் கூடாது. அதற்கு மாறாக பேங்குகளில் வரவு செலவு வைத்துக் கொள்வோம்; ஆனால் வட்டியை வாங்கி வறுமையின் பிடியில் சிக்கி ஹறாம், ஹலால் ஆகும் நிலையிலிருக்கும் ஏழைகளுக்குக் கொடுக்கமாட்டோம். அந்த வட்டிப் பணத்தை எடுத்து அதிகாரிகள் என்ன செய்தாலும் சரி என்று கூறுகிறவர்கள் சுயநலமிகள்;சமுதாய நலனில் அக்கறை இல்லாதவர்கள் என்றுதான் கூறமுடியும். அவர்கள்அந்த வட்டிக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என்று கூறுவது முற்றீலும் தவறாகும். அவர்களது பணத்தைக் கொண்டு பெறப்பட்ட அந்த வட்டிக்கு அவர்களே முழுப் பொறுப்பாகும்.

நிர்பந்த நிலையில் பேங்கில் வரவு செலவு வைத்திருப்பவர்கள் அந்த வட்டிப் பணத்தை எடுத்து ஏழைக்குக் கொடுத்து விட்டால் அவர்கள் ஒரே ஒரு குற்றத்திற்குத்தான் ஆளாகிறார்கள். அதாவது தங்கள் பணத்தைக் கொண்டு வட்டி ஈட்ட துணைபோன குற்றம் அது. ஆனால் அந்த வட்டிப்பணத்தை அவர்கள் எடுத்து ஆதாயம் அடையவில்லை. நன்மையையும் எதிர்பார்க்கவில்லை. நிர்பந்த நிலையில் அவர்கள் செய்த அந்த ஒரு குற்றத்தை அல்லாஹ் நாடினால் மன்னிக்கவும் செய்யலாம்.

அதே சமயம் தங்களின் சொந்த நிர்பந்த நிலையை மட்டும் பேங்கில் வரவு செலவு வைத்துக் கொண்டு, அவர்களது பணத்தால் ஈட்டப்படும் வட்டியை எடுத்து ஏழைகளுக்கு கொடுக்காமல் அந்த வங்கியிலேயே விட்டு விடுபவர்கள் மூன்று குற்றங்களுக்கு ஆளாகிறார்கள். ஒன்று பேங்கில் வரவு செலவு வைத்துக் கொள்வதால் தங்கள் பணத்தைக் கொண்டு வட்டி ஈட்ட துணைபோன குற்றம். இரண்டாவது தனது சொந்த நிர்பந்த நிலையை உணர்ந்தவர்கள், அதனால் ஏற்படும் சமூகம் நிர்பந்த நிலையை உணரத் தவறியது. மூன்று அவர்களின் பணத்திலிருந்து ஈட்டப்பட்ட வட்டிப் பணம் முஸ்லிம் சமுதாயத்திற்கு தீங்கிழைக்க உதவுவதற்கு இவர்களூம் துணை போனது ஆகும்.

ஆக நிர்பந்த நிலையில் பேங்கில் வரவு செலவு வைத்திருப்பவர்கள் ஒரு குற்றத்தோடு அல்லாஹ்வின் மன்னிப்பை எதிர்பார்ப்பது சிறந்ததா? அல்லது மூன்று குற்றங்களைச்செய்து ஏமாளியாய் அல்லாஹ்வின் தர்பாரில் நாளை நிற்பது சிறந்ததா? என்பதை சம்பந்தப் பட்டவர்களே முடிவு செய்து கொள்வார்களாக.

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த
http://www.readislam.net

No comments:

Post a Comment