சீனித்துளசி: ஸ்டீவியா என்று அழைச் சர்க்கரை போன்ற இனிப்புப் பொருளை கரும்புச் சர்க்கரைக்குப் பதிலாக பயன்படுத்தலாம். இலைகளில் அதிக இனிப்புத்தன்மை காணப்படுவதால் சாக்ரின் பொருளுக்கு மாற்றாக இதை பயன்படுத்தலாம். சீனித்துளசியின் இலைகளில் 15-20 சதம் ஸ்டிவியோஸைடு உள்ளது. உலர்ந்த இலைகளில் 3-10 சதம் ஸ்டிவியோஸைடு உள்ளது. இது கரும்புச் சர்க்கரையைவிட 300 மடங்கு அதிக இனிப்புத்தன்மை கொண்டது. மிகக் குறைந்த அளவு கலோரியைக் கொண்டிருப்பதால் இதனை "கலோரி இல்லாத இயற்கை இனிப்பூட்டி' என அழைக்கிறார்கள்.
சர்க்கரை நோயால் பாதிக்கப் படுபவர்களுக்கு சீனித்துளசி இனிப்பூட்டி சிறந்ததாக அமையும். தற்சமயம் குளிர்பானம், இனிப்புகள் தயாரிப்பில் இது பயன்படுகிறது. இது 60-70 செ.மீ. உயரம் வரை வளரக்கூடியது. குறைவான பகல்நேரம் தேவை. இது ஒரு மிதவெப்ப மண்டல செடியாகும். இதன் வளர்ச்சிக்கு 30-35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அவசியம். பகல் வெப்பநிலை 40 டிகிரி செல்சியசிற்கு குறையாமலும் இரவு நேர வெப்பநிலை 10 டிகிரி செல்சியசிற்கு குறையாமலும் இருக்க வேண்டும். நல்ல வடிகால் வசதியுள்ள இடங்களில் நன்றாக வளரக்கூடியது. மண்ணில் கார அமிலத்தன்மை 6.5 - 7.5க்குள் இருக்க வேண்டும். பொதுவாக தண்டுக்குச்சிகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. இனப்பெருக்கத்திற்காக 15 செ.மீ. நீளம் உள்ள தண்டுக் குச்சிகளைப் பயன்படுத்த வேண்டும். வேர்கள் உருவாவதை அதிகப்படுத்த ஐ.பி.ஏ. என்னும் வளர்ச்சி ஊக்கியைப் பயன்படுத்தலாம். நிலத்தை நன்கு உழுது, ஏக்கருக்கு 10 டன் நன்கு மக்கிய தொழு உரம் இட்டு, மீண்டும் நன்கு உழுதுவிட வேண்டும். செடிகளை மேட்டுப் பாத்திகளிலும் வரப்புப் பகுதிகளிலும் வளர்க்க வேண்டும்.
மேட்டுப்பாத்திகளில் 30 x 40 செ.மீ. இடைவெளியில் செடிகளை நடவு செய்ய வேண்டும். வரப்புப் பகுதிகளில் நடவு செய்யுபோது 45 x 20 செ.மீ. இடைவெளி விடவேண்டும். நடவு செய்தபின் உடனடியாக நீர்ப்பாசனம் செய்வது மிகவும் அவசியம். நடவுக்கு பிப்ரவரி-மார்ச் மாதங்கள் சிறந்தவை. செயற்கை உரங்கள் பயன்படுத்துவது கிடையாது. ஒரு ஏக்கருக்கு 24:12:18 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்கள் கொடுக்கக்கூடிய உரங்களைக் கணக்கிட்டு இடுவதன் மூலம் விளைச்சல் அதிகரிப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. பாதியளவு தழைச்சத்து, முழு அளவு மணிச்சத்து, சாம்பல் சத்துக்களை அடியுரமாகவும், மீதமுள்ள தழைச்சத்தை முதல் அறுவடைக்குப் பின்னும் இடவேண்டும்.
சீனித்துளசி வறட்சியைத் தாங்காது. மண்ணின் ஈரத்தன்மையைப் பொறுத்து 3 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும். களை எடுப்பது அவசியம். மிக முக்கியமான பின்செய் நேர்த்தி, பூக்களைக் கிள்ளிவிடுதல் நடவு செய்தபின் 30, 45, 60, 70 மற்றும் 80 நாட்களிலும் மற்றும் அறுவடையின்போதும் பூக்களை அகற்றிவிட வேண்டும். போரான் நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறையைப் போக்க போராக்ஸ் 2 சதம் இலைவழி தெளித்துக் கட்டுப்படுத்த வேண்டும்.
நடவு செய்த 4-5 மாதங்களில் பயிர் அறுவடைக்குத் தயாராகிவிடும். அடுத்தடுத்து அறுவடைகள் 3 மாதங்களுக்கு ஒரு முறை செய்யலாம். 3 வருடம் வரை வயலில் வைத்திருக்கலாம். அறுவடையின்போது செடியின் அடிப் பாகத்திலிருந்து 10 செ.மீ. உயரம் வரை விட்டு மேல்பகுதியை வெட்டி எடுக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு ஒரு முறை சராசரியாக 1 முதல் 1.2 டன் வரை உலர்ந்த இலைகளை அறுவடை செய்யலாம். (தகவல்: அ.சங்கர், பா.ஆனந்த், ரா.அருள்மொழியான், தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், ஏற்காடு-636 602. 94432 06004)»
விவசாய மலர் பதிவு செய்த நாள் : ஜனவரி 26,2011,00:00 IST
http://www.dinamalar.com
No comments:
Post a Comment